இரண்டு உருவப்படங்கள்

எனது அறையிலுள்ள புத்தக அலமாரியில் தஸ்தாயெவ்ஸ்கியின் உருவப்படம் ஒன்றும் ஆன்டன் செகாவின் உருவப்படம் ஒன்றும் அருகருகில் வைக்கப்பட்டுள்ளது. இன்று புத்தகம் எடுக்கும் போது இருவரது புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரெனத் தோணியது அவர்கள் வாழ்நாளில் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. அருகில் அமர்ந்ததில்லை.

லியோ டால்ஸ்டாயும் ஆன்டன் செகாவும் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன்.அதில் தந்தையும் மகனும் போலவே தோற்றம் தருகிறார்கள். செகாவின் மீது டால்ஸ்டாய் பேரன்பு கொண்டிருந்தார். டால்ஸ்டாயின் மகள் மரியா செகாவை தனது சகோதரன் போலவே கருதியதாக நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார் . டால்ஸ்டாயின் பண்ணை வீட்டிற்குப் பலமுறை செகாவ் சென்றிருக்கிறார். உரையாடியிருக்கிறார். கார்க்கியோடு அவர்கள் நிற்கும் புகைப்படமும் காணக் கிடைக்கிறது.

டால்ஸ்டாயின் எழுத்துகளைச் செகாவ் மிகவும் வியந்து பாராட்டி எழுதியிருக்கிறார். தன் அளவிற்கு யாரும் அவரை நேசிக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.

டால்ஸ்டாயின் கதையுலகம் வேறு. செகாவின் கதையுலகம் வேறு. செகாவின் கதாபாத்திரங்கள் பொதுவெளியில் நாம் காணும் மனிதர்கள். இயல்பானவர்கள். சிறிய இன்பங்களைப் பெரிதென நினைப்பவர்கள். கேலிச்சித்திர ஒவியரைப் போல அவர்களைச் செகாவ் தனது கதைகளில் உருமாற்றுகிறார். செகாவின் கதைகளில் குற்றவுலகமில்லை. சரித்திரப் பெருமைகள் இல்லை. நவீன மனிதனாக வாழ்க்கையை அணுகுகிறார். அது தான் டால்ஸ்டாயை கவர்ந்த விஷயம். தனது மூத்த மகன் செர்ஜிக்கு இருந்த இசை ஆர்வம் போலவே செகாவின் இசை மற்றும் நாடக ஆர்வத்தை டால்ஸ்டாய் காணுகிறார். இம்ப்ரஷனிஸ்டுகளைப் போலச் செகாவுக்கென எழுதும் பாணி உண்டு என்று பாராட்டுகிறார்.

ஆன்டன் செகாவிற்கும் தஸதாயெவ்ஸ்கிக்குமான உறவு அப்படியானதில்லை. செகாவை விடவும் தஸ்தாயெவ்ஸ்கி முப்பத்தியெட்டு வயது மூத்தவர். தஸ்தாயெவ்ஸ்கி இறந்த போது செகாவிற்கு வயது 21. துர்கனேவ் நாவல்கள் மீது செகாவ் கொண்டிருந்த ஈடுபாடு அளவிற்குக் கூடத் தஸ்தாயெவ்ஸ்கியை அவர் விரும்பவில்லை.

தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்களை இருண்ட எழுத்துகளாகவும் தேவையற்ற நீளம் கொண்டதாகவும் செகாவ் கருதினார். குறிப்பாகத் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தில் வெளிப்படும் நாடகத்தன்மையை அவர் விமர்சனம் செய்தார்.

தனது சமகாலத்தில் தஸ்தாவெஸ்கி சக எழுத்தாளர்களால் வெறுக்கபட்டார். விலக்கப்பட்டவர். தஸ்தாயெவ்ஸ்கியும் இலக்கிய உலகில் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளவில்லை. மீட்சி என்பது சொந்த வாழ்விலும் இலக்கியத்திலும் அவருக்குத் தேவையாக இருந்தது.

இருவரையும் ஆழ்ந்து வாசித்தவன் என்ற முறையில் எனக்கு அவர்களின் சிறப்பும் வேறுபாடும் நன்றாகவே புரிகிறது

தஸ்தாயெவ்ஸ்கியிடம் வெளிப்படும் மெய்த்தேடலும் நிராகரிப்பின் வலியும் விசித்திரக் கனவுகளும் நீதிக்கான மன்றாடலும் செகாவிடம் கிடையாது. தஸ்தாவெஸ்கி குற்றத்தை அல்ல மன்னிப்பையே விசாரணை செய்கிறார். மன்னிப்பு என்பதனை மறுவரையறை செய்கிறார். அன்பு செய்தலை மனிதனின் உயர்குணமாகக் கருதுகிறார். புறக்கணிக்கபட்டவர்களின் மௌனத்தை எழுதவே முனைகிறார். அவரது புனைவில் குற்றம் ஒரு திறவு கோலாகச் செயல்படுகிறது. அந்தத் திறவுகோலைக் கொண்டு அவர் திறக்கும் கதவுகள் பல.

செகாவ் நன்மை தீமை என உலகியல் நிகழ்வுகளைப் பிரித்துக் காண்பவரில்லை.சலிப்பும் ஆசையும் காதலும் மீறலும் அவரது கதையுலகின் முக்கிய அம்சங்கள். செகாவிடம் வெளிப்படும் கேலியை, அங்கத நிகழ்ச்சிகளைத் தஸ்தாயெவ்ஸ்கியிடம் காண முடியாது. நடன அரங்கின் குதூகலத்தைச் செகாவ் எழுதிய போது நடன அரங்கிற்குள் நுழைய முடியாமல் துரத்தப்பட்டவனைப் பற்றித் தஸ்தாயெவ்ஸ்கி எழுதினார்.

தஸ்தாயெவ்ஸ்கியை விலக்கபட்ட மதகுருவாகக் கருதுவேன். ஒரு வகையில் அவர் ஒரு கெஸ்டா பெர்லிங். செல்மா லாகெர்லாவ் மதகுரு நாவலில் உருவாக்கிய அற்புதமான மதகுரு கெஸ்டா பெர்லிங்.

செகாவ் அப்படியில்லை. அவர் தேவாலயத்தின் பியானோ இசைக்கலைஞரைப் போன்றவர். அல்லது மெழுகுவர்த்தி ஏந்தி வரும் கன்னியைப் போன்றவர். கிறிஸ்துவைப் பற்றிய தஸ்தாயெவ்ஸ்கியின் புரிதல் ஆழமானது. தன்னைக் கிறிஸ்துவைப் போலக் கருதியவர் டால்ஸ்டாய். இருவரிலிருந்தும் செகாவ் மாறுபட்டவர். அவர் ஒரு நாத்திகன்

1874 -ல் துர்கனேவ் தன் நண்பர் ஒருவருக்கு, எழுதிய கடிதம் ஒன்றில் ரஷ்ய இலக்கிய உலகில் “சராசரித்தனத்தின் ஆட்சி தொடங்கிவிட்டது” என்று குறிப்பிடுகிறார். அந்தச் சராசரிதனத்தை மீறியவர் செகாவ். அவர் பிரெஞ்சு யதார்த்தவகை எழுத்திலிருந்து உருவானவர்.

1881-ல் தஸ்தாயெவ்ஸ்கியும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு துர்கனேவும் காலமானார்கள். டால்ஸ்டாய், தனது ஆன்மீகத் தேடலின் காரணமாக, எழுத்துலகிலிருந்து விலகி செயல்பட்டார். அந்த இடைவெளிக்காலத்திலிருந்தே செகாவின் எழுத்துத் துவங்குகிறது.

செகாவ் எழுத துவங்கிய காலம் நகர்மயமாகி வந்த காலம். கிராமப்புற ஏழை விவசாயிகள் தொழிலாளர்கள் நகரங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் குடிபெயர்ந்ததால் நகர்ப்புற மக்கள் தொகை கூடியது. இதனால் வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன. பத்திரிக்கை துறை வளர்ச்சி அடைந்த காரணத்தால் நிறைய இதழ்கள் வெளியாகின. சமூக விஷயங்களை ஆராயும் அறிவுஜீவிகள் உருவானார்கள். தொடர்கதைகளை விரும்பி வாசிக்கும் தலைமுறை உருவானது. நகர வாழ்க்கை இன்பக்கனவாகச் சித்தரிக்கபட்டது.

செகாவ் தனது முன்னோடிகளிலிருந்து மாறுபட்டுத் தனக்கான கதையுலகை. கதை சொல்லும் முறையை, மொழியை உருவாக்கிக் கொண்டார். அவரிடம் முந்தைய எழுத்தாளர்களிடம் காணப்பட்டது போன்ற விரிவான வாழ்க்கை வரலாறுகள், இயற்கை ஆராதனைகள் கிடையாது. பெரிய விஷயங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பேசுவதைத் தனது எழுத்துப்பாணியாகக் கொண்டார். அதன் காரணமாக அவரை மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் மெல்லிசைப் பாடகர் என இலக்கிய விமர்சகர்கள் கண்டனம் செய்தார்கள்.

செகாவ் தனது ஆரம்பக் காலப் படைப்புகளை நகைச்சுவை இதழ்களில் எழுதினார். அது அன்றைய காலகட்டத்தில் இரண்டாம் தரமான செயலாகக் கருதப்பட்டது. , செகாவின் ஆரம்பக் கதைகளில் வெளிப்படும் நகைச்சுவை மற்றும் முட்டாள்தனமான நிகழ்வுகள் பின்னாளில் மாறத்துவங்கின. அவரது பிற்காலக் கதைகளில் வெளிப்படும் தீவிரமான தருணங்களும் துயர நிகழ்வுகளும் அவரது எழுத்தில் உருவான மாற்றத்தை அடையாளப்படுத்துகின்றன

செக்கோவியன் மனநிலை என்பது நினைவேக்கமும் அது ஒரு போதும் கிடைக்காது என்ற வருத்தமும் கொண்டது. மகிழ்ச்சியைத் தேடுவதும் எது மகிழ்ச்சி என ஆராய்வதும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதும் செகாவின் பாணியாகும்.

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி இருவரிடம் வெளிப்படும் ஆழ்ந்த தத்துவ வெளிப்பாடு செகாவிடம் இல்லை. அல்லது மிகக் குறைவாகக் காணப்படுகிறது. தனது முன்னோடிகளைப் போல அவர் பெரிய நாவல் எழுதவில்லை. ஆனால் எழுத விரும்பினார். நாவல் மாரத்தான் ஒட்டம் போல மெதுவாகவும் நீண்ட தூரம் ஒட வேண்டியதாகவும் இருந்த காரணத்தால் அவரால் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை. மாறாகச் சிறந்த குறுநாவல்களைச் செகாவ் எழுதியிருக்கிறார்.

சைபீரியச் சிறைக்குச் சென்று திரும்பிய தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தில் அந்தச் சிறைவாழ்க்கை அனுபவங்கள் தொடர்ந்து இடம்பெற்றன. ஆனால் அதே சைபீரியத் தீவிற்குக் குற்றவாளிகளின் வாழ்க்கை நிலை குறித்து ஆராயச் சென்ற செகாவ் தனது அறிக்கையை ஒரு மருத்துவ ஆய்வேடாக மாற்றினார். அவரது புனைவில் குற்றவாளிகளின் வாழ்க்கை மிகக் குறைவாகவே வெளிப்பட்டுள்ளது.

காதலை இருள் போலக் காணுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி. இருள் தேவையானது. ஆறுதல் தருவது. அடையாளங்களை அழிப்பது. நெருக்கமானது. ஆனால் செகாவ் அதை வெளிச்சமாக நினைக்கிறார். உணரச் செய்கிறார். இரண்டும் உண்மையானதே.

எனது அறையிலுள்ள தஸ்தாயெவ்ஸ்கியின் உருவப்படத்தை வரைந்தவர் ஓவியர் வாசிலி பெரோவ். இந்த ஓவியம் 1872ல் வரையப்பட்டது. ஆன்டன் செகாவின் உருவப்படத்தை வரைந்தவர் ஓசிப் பிராஸ், 1898 ல் இந்த ஓவியம் வரையப்பட்டது. ஓவியத்தில் இருவரும் சிந்தனை வயப்பட்டவர்களாக, சோர்வுற்றவர்களாகத் தோற்றம் தருகிறார்கள்.

இருவரின் கைவிரல்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எழுத்தாளனின் கண்களை விடவும் கைகளே அவனை முழுமையாக வெளிப்படுத்துகின்றன

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2026 01:37
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.