புனைவுக்குறிப்புகள் – 1

கார்லோஸ் ஃபுயென்டெஸ்

நான் ‘டெர்ரா நோஸ்ட்ரா’ நாவலை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பையும் பயன்படுத்தவில்லை. ஆராய்ச்சி எதையும் மேற்கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் அந்தக் கதை என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் சுமந்து வந்த வரலாற்று நினைவுகளால் உருவாக்கப்பட்டது.,. ஒரு மெக்சிகனாக, ஒரு லத்தீன் அமெரிக்கனாக, கரீபியன் படுகை, மெக்சிகோ வளைகுடா, மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த ஒரு மனிதனாக, நான் யாராக இருக்கிறேனோ அத்தனை அம்சங்களும் அதில் உள்ளன. அதனால், நான் ஒருபோதும் ஆய்வு செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை;

நான் என் வரலாற்றைக் கற்பனை செய்துகொண்டு, உளவியல் காரணங்களுக்காகச் சில கதாபாத்திரங்களைக் கொன்று, சிலரை புதிதாக உருவாக்கி அல்லது புத்துயிர் அளித்தால் மட்டும் போதுமானதாகயிருந்தது. ,

ஒரு எழுத்தாளராகவும் அதே நேரத்தில் அரசியல் அக்கறைகள் கொண்ட ஒரு மனிதனாகவும், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கியாம்பாட்டிஸ்டா விகோவின் எழுத்துக்களால் நான் எப்போதும் மிகவும் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், வரலாற்றை நாம்தான் உருவாக்குகிறோம் என்று சொன்ன முதல் தத்துவஞானி ஒருவேளை கியாம்பாட்டிஸ்டா விக்கோவாகத்தான் இருப்பார்.

நிஜம். நாம்தான் வரலாற்றை உருவாக்குகிறோம், அது நமது படைப்பு, அது கடவுளின் படைப்பு அல்ல. நாம் வரலாற்றை உருவாக்கியதால், நாமே வரலாற்றைக் கற்பனை செய்யவும் வேண்டும். நாம் கடந்த போன காலத்தைக் கற்பனை செய்ய வேண்டும். ‘ டெர்ரா நோஸ்ட்ரா’வைப் பொறுத்தவரை , கடந்த காலத்தைக் கற்பனை செய்வது என்பது நிச்சயமாக இன்றியமையாத ஒன்றாகயிருந்தது.. வரலாறு என்பதை ஆட்சியாளர்களின் சரித்திரம் என்பதை விட, மக்களின் வரலாறு என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த அம்சம் நிச்சயமாக’டெர்ரா நோஸ்ட்ரா’வில் இருக்கிறது.

••

ஹெரிடியா குடும்பத்தின் முழுக் கதையும் யாருக்கும் தெரியாது, எனவே யாராலும் முழுக் கதையையும் சொல்ல முடியாது. இதை எல்லாப் புனைகதைகளுக்கும் கூறலாம். புனைகதைக்கு ஒரு முடிவு உண்டு, அதற்கு ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு என்று சொல்வதே ஒரு புனைகதைதான். ஏனென்றால் அங்கே ஒரு வாசகர் இருக்கிறார். நீங்கள் ஒரு தீவிர வாசகராக இருந்தால், கதையை ஆசிரியர் முடிக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள், அதை நீங்களே முடிக்க விரும்புவீர்கள்.

**

ரோம் உலகைக் கறுப்பு வெள்ளையாகப் பார்க்கும் போக்கைக் கொண்டிருந்தது, அமெரிக்காவும் அப்படித்தான். தோல்வியால் ஏற்படும் அனுபவத்தின் மூலமாகவே உலகின் உண்மையான இயல்பைப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். மேலும் தோல்வி தரும் அனுபவம் என்பது ஒரு உலகளாவிய அனுபவமாகும்

நான் செர்வாண்டஸின் தீவிர வாசகன். டான்குவிகாத்தே நான் ஒவ்வொரு ஆண்டும் படிக்கும் ஒரு புத்தகம், அந்தப் புத்தகம் இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2026 01:46
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.