மீட்சியின் இரவு
ஒரு மழை நாளில் தேவாலயத்தின் வெளியே உள்ள அறிவிப்பு பலகையிலிருந்து துவங்குகிறது ஜான் ஹூஸ்டன் இயக்கிய ‘தி நைட் ஆஃப் தி இகுவானா’ திரைப்படம்.

பாதிரியார் ஷானான் பிரசங்கத்திற்காகத் தயாராகிறான் பதற்றமான, முகம் மற்றும் தயக்கமான குரல். சபையினை வழிநடத்துவதில் அவனுக்கு ஏதோ பிரச்சனையிருக்கிறது.
குடிகாரன் என்று குற்றம்சாட்டப்பட்ட ஷானன் தனது பிரசங்க மேடையில் திடீரென மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது திருச்சபையினரைத் தேவாலயத்திலிருந்து கோபமாகத் துரத்தும் அதிர்ச்சியான காட்சியுடன் படம் தொடங்குகிறது,
இந்நிகழ்வைத் தொடர்ந்து அவன் குற்றச்சாட்டில் தேவாலயத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான்.
சில வருஷங்களுக்குப் பிறகு ஷானான் மெக்சிகோவில் சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்கிறான். மெக்சிகோவிற்குச் சுற்றுலா வரும் பெண்கள் திருச்சபை குழுவினை ஷானான் வழிநடத்துகிறான் அவர்கள் மெக்சிகோவின் புவேர்ட்டோ வல்லார்ட்டா கடற்கரையோரத்தில் உள்ள ஒரு மலிவான தங்கும் விடுதிக்கு வருகை தருகிறார்கள். அந்த விடுதி கடலை நோக்கியதாக ஒரு குன்றின் மீது காணப்படுகிறது.
விடுதியை நடத்தும் நடுத்தர வயதுப் பெண்ணான மாக்சின் ஃபால்க் அவனுக்கு உதவி செய்கிறாள்..

பயணத்தின் நடுவே வாகனத்தை ஆற்றுப்பாலத்தில் நிறுத்தி நீச்சலடித்துக் கொண்டும், துணி துவைத்துக் கொண்டும் இருப்பவர்களை வேடிக்கை பார்க்கிறான் ஷானான்.
என்ன பார்க்கிறீர்கள் எனக் கேட்கும் வாகன ஒட்டுனரிடம் களங்கமில்லாத, முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்கும் அந்த மக்களை ரசிக்கிறேன் என்கிறான் ஷானான். அது தான் அவனது மனநிலையின் அடையாளம்.
குற்றவுணர்விலிருந்து மீள முடியாத தவிப்புக் கொண்ட ஷானான் வேட்டையாடப்படும் ஓணானைப் போலவே இருக்கிறான். படத்தில் ஒணான்களை வேட்டையாடுகிறவர்கள் அதை விளையாட்டாக மேற்கொள்கிறார்கள். சாலையோரம் பிடிபட்ட ஒணான்களுடன் நிற்கும் சிறார்களையும் காணுகிறோம். அது போன்ற ஒரு விளையாட்டு சித்ரவதையினைத் தான் ஷானானும் அனுபவிக்கிறான்
டென்னிஸே வில்லியம்ஸின் புகழ்பெற்ற இந்த நாடகத்தை ஜான் ஹூஸ்டன் சிறப்பாக படமாக்கியிருக்கிறார். அவா கார்ட்னர், ரிச்சர்ட் பர்ட்ன் இருவரும் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஜான் ஹூஸ்டன் படத்தின் கதை நடைபெறும் இடம் புதிதாக இருக்க வேண்டும் என நினைப்பவர். ஆகவே மெக்சிகோவின் சிறிய கடற்கரை பகுதியான புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் அரங்கு அமைத்துப் படத்தை உருவாக்கியிருக்கிறார். தினமும் 25 மைல் படகில் சென்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.
ஷானான் வாழ்வில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். ஒருவர் சார்லெட் என்ற பதினாறு வயது பணக்காரப் பெண். பயணக்குழுவில் இடம்பெற்றிருப்பவள். ஷானானை விளையாட்டாகக் காதலிக்கிறாள். நெருங்கிப் பழகுகிறாள். இதனை விரும்பாத பயணத்தலைவி மிஸ் ஃபெலோஸ் அவன் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டினை வைக்கிறாள். சட்டப்படி நடவடிக்கை எடுக்க முனைகிறாள். இதனை தடுப்பதற்காகப் பல்வேறு வகையில் ஷானான் போராடுகிறான்.
சிடுசிடுப்பு மற்றும் கோபத்துடன் மிஸ் ஃபெலோஸ் நடந்து கொள்ளும் முறை. ஷானானை எச்சரிக்கும் விதம், முடிவில் அலட்சியமாக வெளியேறும்விதம் கச்சிதமாக உருவாக்கபட்ட கதாபாத்திரமாக மாற்றுகிறது.
கணவனை இழந்த அழகியான மாக்சின் ஃபால்க் தனது விடுதியில் பயணக் குழுவினரை தங்க வைத்துக் கவனித்துக் கொள்கிறாள் அவளுக்கு ஷானானின் பிரச்சனைகள் வேடிக்கையாக இருக்கின்றன. மாக்சின் அவனை ரகசியமாக காதலிக்கிறாள். அதை நேரடியாக வெளிப்படுத்துவதில்லை.

இந்நிலையில் அந்த விடுதிக்கு எதிர்பாராமல் வந்து சேருகிறாள் ஓவியரான ஹன்னா ஜெல்க்ஸ், தனது 99 வயதான தாத்தாவுடன் பயணம் செய்கிறாள். தாத்தா ஒரு கவிஞர். இருவரும் வீடற்றவர்கள். இது போன்று வெவ்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து கிடைத்த பயணவிடுதியில் தங்கி ஓவியம் வரைவது. கவிதைபாடுவது என வாழுகிறார்கள். அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் வாழ்க்கையை கடத்துகிறார்கள்.
ஹன்னா ஜெல்க்ஸ் திருமணம் செய்யாத நடுத்தர வயது பெண். அவள் ஷானான் மீது பரிவு காட்டுகிறாள். அவர்கள் இணைந்து வாழ்வதாக இருந்தால் அந்த விடுதியை தந்துவிடுவதாக மாக்சின் சொல்கிறாள். ஆனால் அதில் தனக்கு விருப்பமில்லை என ஹன்னா மறுத்துவிடுகிறாள்.
99 வயது கவிஞராக வரும் ஹன்னாவின் தாத்தா அழகான கதாபாத்திரம். அவர் தனது கைத்தடியைக் கொண்டு காலத்துடன் சண்டையிடுகிறார். உறக்கத்திலும் கவிதை வாசிக்கிறார். அவரது கவிதையே படத்தின் மையக்கரு.
ஷானான் கடலில் சார்லெட்டுடன் நீந்தும் காட்சியும், மாக்சின் தனது இசைக்கலைஞர் இருவருடன் கடலில் நீந்தும் காட்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
உலகியல் இன்பங்கள் அனைத்தையும் விரும்பும் ஷானான் ஓரே நேரத்தில் மதகுருவாகவும், உல்லாசியாகவும் இருக்க விரும்புகிறான். அவனது குற்றவுணர்வின் கொந்தளிப்பை ஹன்னா புரிந்து கொள்கிறாள். ஷானானைக் கட்டிலோடு கட்டிப்போட்டு ஹன்னா செய்யும் சிகிட்சையும் அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் ஏற்படும் புரிதலும் சிறப்பான காட்சிகள்.
ஒரு நாள் இரவு சார்லெட் திடீரென்று ஷானன் அறைக்குள் வந்துவிடுகிறாள். அப்போது ஷானான் அலமாரியின் மீது இருந்த மது பாட்டிலை தட்டிவிட, தரை முழுவதும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் சிதறுகின்றன. சார்லெட்டிடம் தனது மறுப்பை விளக்கியபடி ஷானான் தரையில் முன்னும் பின்னுமாக நடக்கத் தொடங்குகிறான். காலில் ரத்தம் சொட்டுகிறது..இதைக் கண்டு சார்லெட்டும் அது போல வெறும்காலில் கண்ணாடி துண்டுகளை மிதித்து நடக்கிறாள். ஆத்திரமாகி அவளை வெளியே தூக்கிக் கொண்டு போய்ப் போடுகிறான். ரத்தம் சொட்டும் அவனது கால்களுக்கு ஹன்னா மருத்துவ உதவி செய்கிறாள். ஒரே காட்சியின் மூலம் மூன்று முக்கியக் கதாபாத்திரங்களின் மனஉணர்ச்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
படத்தின் தயாரிப்பாளர் ரே ஸ்டார்க் ‘நைட் ஆஃப் தி இகுவானா’ திரைப்படத்தை வண்ணத்தில் படமாக்க விரும்பினார் என்றும் அதை மறுத்து., ஜான் ஹூஸ்டன் கறுப்பு வெள்ளையில் படமாக்கினார் என்றும் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்கள். வண்ணப்படமாக உருவாக்கபட்டிருந்தால் இயற்கை காட்சிகளும் அதன் அழகும் படத்தின் கதையை விடவும் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கும். அது இது போன்ற கதைக்குப் பொருத்தமானதில்லை என்று ஜான் ஹூஸ்டன் மறுத்திருக்கிறார். கேமிரா கோணங்கள் மற்றும் நகர்வு கதையின் ஓட்டத்தோடு இணைந்து கதாபாத்திரங்களுடன் நாம் முழுமையாக ஒன்றிணையச் செய்கிறது.
மூன்று முக்கியக் கதாபாத்திரங்களின் கடந்தகாலமும் படத்தில் காட்டப்படுவதில்லை. மாறாகச் சொல்லப்படுகின்றன. அதிலும் மாக்சின் ஃபால்க் தனது கணவரைப் பற்றிச் சொல்லும் கதையும் ஹன்னா தனது கடந்தகால வாழ்க்கையைச் சொல்லும் விதமும் குறைவான அளவிலே வெளிப்படுகின்றன. சொல்லப்படாத அந்தக் கதையைப் பார்வையாளர்கள் தானே உருவாக்கிக் கொள்கிறார்கள்.
மலையுச்சியில் உள்ள தங்கும்விடுதி தேவாலயத்தின் மற்றொரு வடிவம் போலவே சித்தரிக்கபடுகிறது. அங்கே மீட்சிக்கான கூடுதல் நடைபெறுகிறது. ஒரு காட்சியில் தனது கழுத்தில் அணிந்துள்ள சிலுவையை ஷானான் அகற்றுகிறான். அதற்கு ஹன்னா உதவி செய்கிறாள். பொருத்தமில்லாத அவனது பிரசங்கி உடை, சிலுவையிலிருந்து விலகி அவன் புதிய வாழ்க்கையை நோக்கி நகர்கிறான்.
இலக்கியப்பிரதிகளைத் திரைப்படமாக்குவதில் ஜான் ஹூஸ்டன் திறமையானவர். ஹெர்மன் மெல்விலின் மோபிடிக்கை அவர் நேர்த்தியான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இது போலவே ஜேம்ஸ் ஜாய்ஸின் டெட் குறுநாவலைப் படமாக்கியிருக்கிறார். புகழ்பெற்ற நாடகத்தைத் திரைக்கு ஏற்ப உருவாக்கியதில் ஜான் ஹூஸ்டன் வெற்றி பெற்றிருக்கிறார். படத்தின் உரையாடல் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. திரையில் ஒரு தத்துவ விவாதத்தைக் காணுகிறோம் என்பது வியப்பளிக்கிறது
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 676 followers

