பால் செசானின் மனைவி

ஓவியர் பால் செசான் தனது மனைவி மேரி-ஹோர்டென்ஸ் ஃபிகெவை மாடலாகக் கொண்டு 29 ஓவியங்கள் வரைந்திருக்கிறார். எந்த ஓவியத்திலும் அவரது மனைவி புன்னகைக்கவில்லை. தீவிரமான முகபாவத்துடன் காணப்படுகிறார்.

பல்வேறு ஒவியர்களுக்கு மாடலாக விளங்கிய மேரி ஹோர்டென்ஸ் பாரீஸில் உள்ள ஒரு கலைப்பள்ளியில் செசானை முதன்முறையாகச் சந்தித்தார். அபபோது அவரது வயது 19. செசான் அவரை விட 11 வயது மூத்தவர். மேரியைக் காதலிக்கத் துவங்கிய செசான் அவருடன் இணைந்து வாழத் துவங்கினார்

1871 இல் பிராங்கோ-புருஷியன் போர் வெடித்தபோது, இருவரும் ஒன்றாகப் பாரிஸை விட்டு ஒன்றாக வெளியேறினார்கள். தனது பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவளுடன் செசான் வாழ்ந்து வந்தார். அவர்களுக்குப் பையன் பிறந்தான். பால் என்று பெயரிட்டார்கள்.

தனது பணக்காரத் தந்தையின் கோபத்திற்குள்ளாக வேண்டும் என்பதால் செசான் தனது மணஉறவை 17 ஆண்டுகள் மறைத்தே வாழ்ந்தார். 1886ல் அவர்கள் முறையாகத் திருமணம் செய்து கொண்டார்கள்.

அந்த மணவாழ்க்கை இனிமையாக அமையவில்லை. சிலஆண்டுகளில் மேரி செசானை விட்டு விலகித் தனித்து வாழ ஆரம்பித்தாள். ஆனாலும் அவளை மாடலாகக் கொண்டு செசான் நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

88 P

அந்த ஓவியத்தில் வெளிப்படும் அவளது முகபாவம் அவர்களின் கசந்த உறவின் அடையாளமாகக் காணப்படுகிறது.

தனக்குப் பிடிக்காத பெண்ணை ஏன் செசான் இத்தனை படங்கள் வரைந்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது.

மேரியை குறித்து ஆய்வு செய்யும் கலைவிமர்சகர்கள் அவளை மாடலாக வைத்துக் கொண்டால் பணம் தரத்தேவையில்லை என்பதற்காகச் செசான் வரைந்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அது மட்டுமே காரணமில்லை. அடக்கப்பட்ட அவளது உணர்ச்சிகளைச் செசான் வரைய முற்பட்டிருக்கிறார்.

பெரும்பாலும் அமர்ந்த நிலையில் வரையப்பட்ட மேரி ஹோர்டென்ஸ் உருவம் தனித்த ஈர்ப்புக் கொண்டிருக்கிறது. நடுவகிடு எடுத்த தலை. பெரிய கண்கள், அழுத்தமாக மூடிய உதடுகள். இறுக்கமான ஆடைகள். பின்னிய கைவிரல்கள், ஆழ்ந்த பார்வையுடன் காணப்படுகிறார்.

செசானின் ஹோர்டென்ஸ் உருவப்படங்கள், அவர் வரைந்த ஆப்பிள்களை விடக் வசீகரம் குறைந்தவை என்கிறார்கள் ஆனால் அது உண்மையில்லை. ஆப்பிளின் மௌனத்தைச் செசான் உணர்த்தியது போலவே மேரியின் மௌனத்தையும் உணர்த்துகிறார். தோற்றத்தை கடந்த உண்மையை அடையாளப்படுத்துகிறார்.

ஹோர்டென்ஸின் சொந்த வாழ்க்கை ஒரு புறம். ஓவியத்தில் காணப்படும் அவரது தோற்றம் மறுபுறம். இரண்டும் ஒன்றல்ல.  ஓவியத்தில் அவர் எதையோ சொல்ல விரும்பி ஆனால் தேவையில்லை என சொற்களை கைவிட்டவரைப் போல காட்சியளிக்கிறார். மகிழ்ச்சியற்ற உறவில் மிஞ்சுவது இது போன்ற வெறுமையே என செசான் காட்ட நினைத்தாரோ என்னவோ

செசானைப் பிரிந்து வாழ்ந்த ஹோர்டென்ஸ் பற்றி நிறையக் கட்டுக்கதைகள் உலவுகின்றன. அதில் ஒன்று அவரது பகட்டான வாழ்க்கை குறித்தது. மற்றது அவரது தனிப்பட்ட காதல் உறவுகள். இரண்டின் அறிகுறிகளையும் இந்த ஒவியங்களில் காணமுடியவில்லை.

நடுத்தர வர்க்க குடும்பத்தலைவியின் தோற்றம் கொண்டிருந்த மேரி ஹோர்டென்ஸ் உண்மையில் எப்படிப்பட்டவர். செசானுடன் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது மர்மமாகவே உள்ளது. அவர்களுக்கு இடையே எந்தக் கடிதமும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. ஆகவே உறவின் சிக்கல்களை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை

செசான் மரணத்தின் போது கூட மேரி தாமதமாகவே வந்திருக்கிறார். செசானின் சொத்துகள் யாவும் அவரது பையனுக்கு மட்டுமே உரியதாக எழுதப்பட்டிருந்தது. ஹோர்டென்ஸ்க்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை

ஹோர்டென்ஸின் உருவப்படங்களில் காலமாற்றத்திலும் அவரது உடல்வாகு மாறாமல் இருக்கிறது. அந்த நிலைகுத்திய பார்வையிலிருந்து அவர் மனதில் என்ன யோசனைகள் இருந்தன என அறிந்து கொள்ள முடியவில்லை.

செசானிற்கு மாடலாக இருப்பது சவாலானது. அவர் மிகவும் மெதுவாகவும், பொறுமையோடும் வரையக்கூடியவர். ஆகவே மணிக்கணிக்கில் அசைவற்று ஒரே நிலையில் அமர்ந்திருக்க வேண்டும். செசானை பிடிக்காத மேரி எதற்காக இதற்குச் சம்மதம் தெரிவித்தார் என்பதும் புதிரானதே.

Madame Cezanne in a Yellow Chair ஓவியத்தில் ஹோர்டென்ஸின் கைகள் பதற்றத்துடன் காணப்படுகின்றன. அவளுடைய ஆடைகளை அவளே தைத்துக்கொண்டார் என்கிறார்கள். செசான் அந்த ஆடைகளில் காணப்படும் நுணுக்கங்களைத் துல்லியமாக வரைந்திருக்கிறார்

கவிஞர் ரெய்னர் மரியா ரில்கே தனது ‘செசான் குறித்த கடிதங்களில் முதுமையில் தனித்து வாழ்ந்த செசானை கிழட்டு ஓநாயாகக் குறிப்பிடுகிறார். புறநகரில் இருந்த தனது கலைக்கூடத்திற்குச் செசான் செல்லும் வழியில், கிராமத்துச் சிறுவர்கள் அவர் மீது கல் வீசி எறிவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்

செசான் ஓவியங்களைப் புகழ்ந்து பாராட்டும் எழுத்தாளர் டி. எச். லாரன்ஸ் ஹோர்டென்ஸ் உருவப்படங்களையே செசானின் மிகவும் வெற்றிகரமான படைப்புகளாகக் குறிப்பிடுகிறார். குறிப்பாக அதிலுள்ள உறைந்த தன்மை தனக்கு வியப்பளிப்பதாகச் சொல்கிறார். அந்த அவதானிப்புச் சரியானதே.. செசான் தனது அசைவின்மை எனும் ஆடியின் வழியாக மேரியை வரைந்திருக்கிறார். அதன் காரணமாகவே அவளிடம் ஒரு புதிர்தன்மை வெளிப்படுகிறது

மேரி ஹோர்டென்ஸின் வாழ்க்கை வரலாறு விரிவாக எழுதப்படவில்லை. அவரது சொந்த வாழ்க்கை குறித்துத் தெரியாத பார்வையாளர் இந்த ஓவியங்களைக் காணும் போது அவற்றில் விசித்திர தன்மை வெளிப்படுவதை உணர்வார்கள். குறிப்பாக மேரி அமர்ந்துள்ள விதம். அவரது சிவப்பு ஆடை. மஞ்சள் நாற்காலி. இறுக்கமான உடல்மொழி.

செசான், ஹோர்டென்ஸை இளஞ்சிவப்புப் பச்சை, பழுப்பு, மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்தாலும், பிரதானமாக நீலத்தையே பயன்படுத்தியிருக்கிறார்

மேரியைப் பற்றித் தனது நண்பரான எமிலி ஜோலாவிற்குச் செசான் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவளது வருமானத்தில் தான் தனது குடும்பம் நடக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

பால் செசானின் தந்தை அவரைச் சட்டம் படிக்க அனுப்பி வைத்தார். ஆனால் அதில் நாட்டமில்லாத செசான் ஓவியம் வரைவதில் ஈடுபடத் துவங்கினார். இதைத் தனது தந்தை அறிந்தால் அவர் அனுப்பும் பணம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தில் தனது கலைஆர்வத்தை மறைத்துக் கொண்டிருந்தார். அது தான் மேரியின் விஷயத்திலும் நடந்தது என்கிறார்கள்.

மேரி ஹோர்டென்ஸ் தனது பதினாறாவது வயதில் தாயை இழந்தவர், அவர் தனது ஆறாவது வயதில் பெற்றோருடன் பாரிஸுக்கு வந்திருந்தார், புத்தகம் பைண்டிங் செய்யும் தொழிலில் ஈடுபட்ட ஹோர்டென்ஸ் தையல் வேலைகளையும் செய்திருக்கிறார்.

அந்தக் காலத்தில் பாரிஸில் தனியாக வாழ்ந்த பெரும்பாலான இளம்பெண்களும் சிறுமிகளும் தையல் வேலைகள மூலமாகவே தங்கள் வாழ்வாதாரத்தை அடைந்தார்கள். பூத்தையல் போன்ற வேலைகள் பொதுவாகக் குறைந்த ஊதியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் கொண்டவையாக இருந்தன.

ஒரு பெண் ஊசியால் செய்யப்படும் பணிகளை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள முயன்றால், அவள் ஒன்று பட்டினியால் இறக்க நேரிடும் அல்லது தெருவுக்கு வர நேரிடும். என்ற நிலை அப்போதிருந்தது. அதன் காரணமாகவே மேரி-ஹோர்டென்ஸ் ஓவியர்களுக்கு மாடலாகப் பணியாற்றியிருக்கிறார். அந்த வருமானத்தைக் கொண்டு தனியே வாழ்ந்திருக்கிறார்.

ஹோர்டென்ஸின் தோற்றம் வர்ஜீனியா வுல்ஃப்பை நினைவுபடுத்துகிறது.

ஒரு பெண்ணின் புறத்தோற்றத்தை அப்படியே வரைவதற்கு மாற்றாக அவரது ஆளுமையின் வடிவத்தை வரைவதற்கே செசான் முயன்றிருக்கிறார்.

செசானைப் பொறுத்தவரை ‘ஓவியம்’ என்பது பொருட்களின் பிரதிநித்துவத்தை அடையாளப்படுத்தும் செயல் அல்ல, மாறாக அது வண்ணத்திற்கும் ஓவியருக்கும், கருப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையிலான ஓர் நடனம்: அது ஒரு மாய நிகழ்வு, வண்ணம் கையாளப்படும் முறையின் அவசியத்தையும், ஓவியக் கட்டமைப்பையும் உணர்ந்த வரலாற்றின் முதல் நபர் ஒருவேளை செசானாகத்தான் இருப்பார் என்கிறார் கலைவிமர்சகர் லாரன்ஸ் கௌலிங். அது உண்மையான மதிப்பீடாகும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2026 04:05
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.