Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following ராஜ் கௌதமன்.

ராஜ் கௌதமன் ராஜ் கௌதமன் > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-30 of 129
“விண்ட்ஸர் அரண்மனையைப் பார்க்க வந்த கூட்டத்தில் சேலை, சுடிதார் அணிந்த பெண்களையும் இந்தி பேசிய ஆண்களையும் காண நேரிட்டது. பார்த்ததும் இவர்கள் எல்லாரும் இந்தியர்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டென்று தெரிந்தபோதிலும் வெள்ளைக்காரர்களைப் போலவே நடந்து கொண்டார்கள். குறிப்பாகத் தமிழ் பேசியவர்கள் சமீபத்தில் நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்ததுமே சிலுவை தானும் தமிழன்தான் என்று அவர்களிடம் அறிமுகமாவதைத் தவிர்த்து வந்தான். ஏனெனில் தமிழன் என்றறிருந்ததும் அடுத்து அறிய விரும்புகின்ற அடையாளம் எதுவாக இருக்கும் என்பது சிலுவைக்கு நன்கு தெரியும்.”
ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
“ஒருதடவை கிறிஸ்மஸ் சீசனில் செயற்கையாய் அலங்கரிக்கப்பட்ட மாட்டுத் தொழுவில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தை ஏசுவை ஆராதித்துப் பாடும்போது ஸ்டீபன் செய்த கூத்து கோவிலையே ஒரு கணம் அதிரவைத்துவிட்டது. சோலோ-கோரஸ் என்று தொடர்ந்து போகும் அந்த ஆராதனையில் ஸ்டீபன் சோலோ பாட மற்றவர்கள் 'வந்தாராதியுங்கள்' என்று கூட்டாகப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

'ஏவை மரி கனியை'

'வந்தாராதியுங்கள்'

'மாட்டுக் கொட்டில் பாலனை'

'வந்தாராதியுங்கள்'

'வானோ போற்றும் பாலனை'

'வந்தாராதியுங்கள்'

'வயித்தால போன பாலனை'

'வந்...'

ஒரே சிரிப்பு. கோயில் அதிர்ந்தது. குழந்தை ஏசு மட்டும் சிரிக்காமல் படுத்துக்கிடந்தார். வெளியே வந்த பிறகு 'ஏண்டா இப்பிடிப் பாடுன' என்று அவங்கிட்ட சிரிப்பு தாங்காமல் கேட்டபோது, 'ஏன் அவருக்கு மட்டும் வயித்தால போயிருக்காதா? அவரும் மனுசந்தானே? மனித சுபாவத்தில் சிலுவையில் அறையப்பட்டுச் செத்துப் போனவர், வயித்தால போகாமலா இருந்திருப்பார்?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“தப்புச் செய்தால் அதற்குரிய தண்டனையை ஒருவன் அடைந்தே ஆகணும் என்பது தகப்பனின் பிடிவாதமான கொள்கை. அந்த ஒருவன் என்பது பெரும்பாலும் சிலுவைதான். அவர் ஒருநாளும் அந்த ஒருவனுக்குள் வரமாட்டார்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“நெடுஞ்சாலையில் பஸ் பாரீஸை நோக்கிப் பறந்தது. சாலையின் இரு புறங்களிலும் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் வரும்போது நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களின் இரைச்சலைத் தடுப்பதற்கு உயரமான சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. தங்கள் மனிர்களுக்குத் தொந்தரவு வராமல் பார்த்துக்கொள்ளுவதில் பணக்கார நாடுகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுகின்றன. உலகத்தில் தாங்களே உயர்ந்த நாகரிகம் மிக்கவர்கள் என்பது அந்த நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர்களின் நம்பிக்கை. அதை மறுப்பதற்குச் சிலுவை தயாராக இல்லை; அவர்களிடையே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் தனிமனிதர்களின் வசதியையும் சுதந்திரத்தையும் நாகரீகமான முறைகளில் வளர்த்துக் கொள்ளுகிறார்கள். ஒவ்வொருவனும் இங்கே தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டான்; பிறத்தியானுடைய சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்கவும் மாட்டான். இந்தியாவில் இது தலைகீழ் விகிதத்தில் இருக்கிறது. அங்கே ஒருவன் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது தியாகம்; விட்டுக்கொடுக்காதது சுயநலம். இந்த தியாகம், சுயநலம் என்ற இரண்டு ஆயுதங்களால் யாருடைய சுதந்திரத்திலும் யாரும் தலையிடலாம்; தாக்கலாம்; நெருக்கடி செய்யலாம்; தீர்ப்புக் கூறலாம்; தண்டனை வழங்கலாம்.

சிலுவையின் இத்தகைய சிந்தனைகளை இந்தியாவில் யாரும் அறிய நேர்ந்தால் அவனுக்கு நாட்டுப் பற்று இல்லை; இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறான்; இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் சரியா அறியாத கபோதி; நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? லௌகீக நாகரிகத்தை வெறுத்து இந்திய ஆன்மீக ஒளியை நாடி வெள்ளையர்கள் இங்கே வருவது சும்மாவா? நமது தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தில் வேர் பிடிக்காத வீணர்களின் பிரதிநிதியாகச் சிலுவை மாறிவிட்டான் என்று விமர்சனங்கள் வரும். வந்தால் வரட்டும் என்று சிலுவை தனக்குள் பேசினான்.”
ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
“உடன் படிக்கிற மாணவனைத் தண்டிக்க அவளுக்கு வாய்த்த மிக மலிவான ஆயுதம் அவனது சாதியாகத்தான் இருந்தது. பெயல்கள் இப்பிடிச் சாதிப்பேரைச் சொல்லித் திட்டினால் மல்லுக்காட்டிப் புழுதியில் உருளலாம். மணிமேகலையை என்ன செய்வது? யாரிடம் புகார் சொல்வது? சொன்னால் யார் மதித்துக் கேட்கிறார்கள்?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“செமஸ்டர் லீவு முடிஞ்சு 1972, ஜனவரியில் ரெண்டாவது செமஸ்டர் தொடங்கியது. அப்போது தேசத்தில் எப்பவும்போல நெருக்கடியான விசயங்கள் நடந்துகொண்டிருந்தன. எப்பவும் தேசத்துக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த பாகிஸ்தானின் கிழக்கு ரெக்கையை ரொம்பத் துணிச்சலோடு இந்திராகாந்தி அம்மையார் வெட்டிச் சாய்ச்சாங்க. அந்தக் கிழக்கு பாகிஸ்தான் பெயர் மாறி, முஜிபுர் ரஹ்மான் தலைமையில் பங்களாதேசம்னு ஒரு புதுதேசமே உருவாகிறதுக்கு அன்னை இந்திராவின் ராஜதந்திர நடவடிக்கைதான் காரணம் என்று நாடே பாராட்டியது. கிழக்கு பாகிஸ்தானுக்குள்ளே வீர நடைபோட்ட இந்திய ராணுவத்தில் சிலுவையின் தகப்பனாரும் இருந்தது அவனுக்கு ரொம்பப் பெருமையாகயிருந்தது. டிசம்பர் லீவுக்கு அவர் வந்திருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானில் இந்திய ராணுவம் சூறையாடியதில் அவருடைய ரேங்குக்குத் தக்கபடி கிடைத்த பொருள்களைக் கொண்டு வந்திருந்தார்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“எல்லாப் பொருள்களின் விலைகளும் லண்டனில் கடைக்குக் கடை ஏறும்; இறங்கும்; வாங்கும் பொருள் மீது விலை குறிக்கவே மாட்டார்கள்; விலை குறிப்பது அந்தந்தக் கடைக்காரர்கள்தான். இதனால்தான் இங்கே ஷாப்பிங் அதிக நேரம் பிடிக்கும். பத்துக் கடைகள் ஏறி இறங்கிய எந்தக் கடையில் விலை மலிவு; எங்கே அதிக டிஸ்கவுண்ட், ஆஃபர் என்று சரிபார்த்து மீண்டும் ஒரு தடவை அந்தக் கடைக்கு வந்து பொருளை வாங்க வேண்டும். அந்தக் கடையைப் பார்த்து வைத்துக்கொண்டு ரெண்டு நாள் கழிச்சு வாங்கிக்கிடலாமென்று போனால் விலை மாறியிருக்கும்.”
ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
“அந்தக் கோடை காலத்தில் அங்கெல்லாம் பிற்பகல் ஒன்பது மணிக்குப் பிறகுதான் இருளத் தொடங்கும் என்ற தகவல் சிலுவைக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.”
ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
“காரைக்காலிலிருந்து வீடு வந்து சேர்ந்த சிலுவைக்கு அவனுடைய அம்மையின் வசவுகளும், தகப்பனின் எச்சரிக்கைகளும் பரிசுகளாகக் கிடைத்துக் கொண்டிருந்தன. தனிமைப்பட்டுப்போய் வீட்டுக்குள்ளேயே கொஞ்ச நாள்களாக முடங்கிக்கிடந்தாள். அவனிடம் இருந்த என்சிபிஹெச் சோவியத் நூல்களும், எம்.ஏ. படிச்சபோது வாங்கி வச்ச புஸ்தகங்களும், வத்ராப் நூலகத்தில் டோக்கனில் வாங்கிய ரெண்டு புஸ்தகங்களும் இருந்ததால் பைத்தியம் பிடிக்காமலிருந்தது. கார்ல்மார்க்சின் மூலதனம், அவரும் பிரடெரிக் ஏங்கல்சும் சேர்ந்து எழுதிய நூல்கள், கார்க்கியின் சுயசரிதைகள், சிறுகதைகள், செகாவ் கதைகள், கோகோல், துர்க்கனேவ், தாஸ்தாவ்ஸ்கி நாவல்கள் சில வாங்கியிருந்தான். நாலு மாசம் காரைக்காலில் வேலை பார்த்த பணத்தில்தான் வாங்கினான். புஸ்தகங்களைத் தவிர பேச்சுத்துணைக்கு யாருமில்லை. அவனும் அம்மையும் அந்த ஒரே வீட்டுக்குள் நடமாடினாலும் அந்நியர்களாத்தான் இருந்தார்கள். சிலுவை கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களோட சேந்துகிட்டு வத்ராப்ல திரிகிறதாகவும், அம்மையத் திட்டுகிறதாகவும் அவனப் பற்றி அந்தத் தெருவிலிருந்த முகம் தெரியாத உளவாளிகள் தகப்பனுக்குத் தொடர்ந்து கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியதால், இந்தியக் குடியரசைக் காப்பாற்றுவதாக நம்பிய அவர் சிலுவைக்கு மாசாமாசம் அனுப்பி வந்த முப்பது ரூபாயை நிறுத்தியதோடு, சீக்கிரம் வேலை தேடிப் போகாவிட்டால், தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்று எச்சரித்துக் கடிதம் போட்டார்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“ஒரு மூலையில் ரோட்டைக் கடந்து அடுத்த வீதிக்குள் பிரவேசித்தபோது, ஒரு ஆங்கிலேயே மாது தனது ஐந்து வயதுச் சிறுவனைக் கயிற்றில் கட்டி நடத்திக் கொண்டு போனதைச் சிலுவை பார்த்தபோது அவனது பிரக்ஞை அவனிடம் திரும்பி வந்தது. இந்த மாதிரி காட்சியை லண்டன் தெருக்களில் வைத்து ஏற்கனவே பார்த்ததுதான். அந்தச் சிறுவனின் பாதுகாப்புக் கருதி இந்த ஏற்பாடாம். தன்னையும் இப்படித்தான் தனது மனைவி நடத்திக் கொண்டிருப்பதாகச் சிலுவைக்குச் சுளீர் எனப் புரிந்தது. தான் எங்கே போனாலும் எங்கே இருந்தாலும் தன் இடுப்பில் கட்டப்பட்ட அந்தக் கயிற்றின் மறுமுனை தனது மனைவியின் கையில் இருப்பதாகச் சிலுவைக்குப் பட்டது.”
ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
“மைக்கேல் ஸார் பி.எஸ்.ஸி. பி.எட் படித்து முடித்துவிட்டுக் கலைஞர் ஆட்சியில் அரிசி கொள்முதல் செய்கிற துறையில் அரிசி தரம் பார்க்கும் ஏதோ இன்ஸ்பெக்டராக ஒரு வருசம் வேலை பார்த்ததாகச் சொல்வார். வேலையில்லாப் பட்டதாரிகளுக்குத் தற்காலிகமாக இந்த வேலை கொடுத்தார்களாம். அந்த சமயத்துலதாம் திமுக மந்திரிகள், அரசாங்க அதிகாரிகள் பத்தி நேரடியாகவும், மத்தவங்க சொல்லியும் மைக்கேல் ஸார் நெறைய விசயங்களத் தெரிஞ்சுக்கிட்டாராம். அவர் கதகதயாச் சொன்னத வச்சுப் பாத்தா அப்பயிருந்த கருணாநிதி ஆட்சி ஒரு கொள்ளக்கார ஆட்சியோன்னு யாருக்கும் சந்தேகம் வரும். சிலுவைக்கி அத நம்பக் கஷ்டமாயிருக்கும். அறிஞர் அண்ணாவுக்குப் பெறகு வந்த திமுக ஆட்சிக் காலம் தமிழகத்தின் இருண்ட காலம்னு மைக்கேல் ஸார் சொல்லுவார். சோவுக்கு மைக்கேல் பரம ரசிகர். அதுனாலதாம் இப்பிடிச் சொல்லுதாரோன்னு கூடச் சிலுவைக்கிச் சந்தேகம் வரும்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“காலம் சுருங்கி இடம் விரிந்துபோன பெரு நகரத்தில் பகுதி பகுதியான வாழ்க்கைதான் வாழமுடியும். அந்தந்தத் தேவைக்கு மட்டும் மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்ளுவதுதான் நகர வாழ்க்கையின் தர்மம்! யாரையும் முழசாப் பாக்க அவசியமில்ல, அதுக்கான நேரமும் இல்லை; சிலுவைக்கு அவன் எப்பவும் தேங்கா வாங்குகிற கடைக்காரரை ஒக்காந்த மேனிக்குத்தான் தெரியும், அவர் நிற்பதையோ நடப்பதையோ அவன் பாத்ததில்லை, அவருடைய முகம் கூட தேங்காயை வைத்துத்தான் அடையாளம் தெரியும். ஒருவரைச் சிலுவைக்குக் கழுத்துவரைக்கும்தான் தெரியும், ஸ்கூட்டர், பைக், மொபட்ல இருந்த மேனிக்குத்தான் பலரை பாத்துப் பழக்கம். இந்த வாகனங்களிலுள்ள உறுப்புகளில் ஒண்ணாத்தான் இவர்களைப் பார்த்திருக்கிறான். தோப்புக்குள்ளே சுற்றித் திரிகிற அனுபவத்தை சூப்பர் மார்க்கெட்டில் எதிர்பார்க்க முடியாதுதான். சிலுவைக்குப் பிரச்சினையே இதுதான். பாண்டிச்சேரிக்கு ஏன் வந்தோம்னு ஆச்சு!”
ராஜ் கௌதமன், காலச்சுமை [Kaala Sumai]
“புறப்படும் போது அந்த பிராமணர், லண்டனில் வாழும் தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து ஒரு தமிழ்ச் சங்கம் அமைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். 'நல்ல முயற்சிதான்' என்று சொல்லிய சிலுவை, அந்தத் தமிழ்ச்சங்கம் பிராமணாள் சங்கமாக இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான். இந்தியர்கள் எங்கே போய் வாழ்ந்தாலும் தங்களுடைய சாதி அடையாளங்களை அவர்களால் இழக்கவே முடியாது என்பதைச் சிலுவை தெரிந்து கொண்டான். எத்தனையோ பாரம்பரிய நோய்களில் இவர்களுக்குச் சாதியும் ஒரு நோயாக இருக்கலாம். வெளிநாடுகளில் தங்கி வேலை பார்க்கிற தலித் இளைஞர்கள் இந்தியர்களைக் காண்பதைத் தவிர்த்துவிடுவது ஏனென இப்போது விளங்கியது.”
ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
“எம்ஜிஆர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். கருணாநிதியோடு மோதி தனிக்கட்சி ஆரம்பிக்கும் சமயம் வந்துவிட்டதாக அவருக்கு நிச்சயமானதும், கருணைகொண்ட கலைஞரிடம் நிதி நிலைமை பற்றிக் கணக்குக் கேட்டார். கருணாநிதிக்கு அப்போ தன்ன யாராலும் அசைக்க முடியாதுன்னு அசாத்தியமான நம்பிக்கை. அசெம்பிளியில் உள்ள அவர் கட்சி எம்.எல்.ஏக்கள் எல்லோரும் ஏகமனதாக அவரைத்தான் ஆதரிச்சாங்க. எம்ஜிஆர்தான் கட்சிய ஒடச்சாருங்கிற பட்ட பெயர் வரணும்னு கருணாநிதி காத்துக்கிட்டிருந்தார். அப்பிடியே நடந்தது. ரெண்டு திராவிடக் கட்சித் தலைவர்களும் பத்திரிகைகள்ல ஒருத்தரை ஒருத்தர் தாக்கி அறிக்கைவிட்டாங்க.

மறைந்த அண்ணா அவர்கள் எம்ஜிஆரைத் தமது 'இதயக்கனி'ன்னு சொன்னதா எம்ஜிஆர் அறிக்கைவிட, அந்தக் கனியில் வண்டு தொளைச்சதால் அண்ணா தூக்கிப் போட்டுட்டாருன்னு கலைஞர் வக்கணையா பதில்கூற, வண்டு துளைத்த கனிதான் ரொம்பத் தித்திப்பாயிருக்கும்னு வாத்தியார் பதில் அறிக்கைவிட்டார். ஒரே தமாஷா போச்சு. எம்ஜிஆருக்கு அந்தக் காலத்தில் தாம் குடுத்த 'புரட்சி நடிகர்'ங்கிற பட்டத்தை அவர் இன்னும் வச்சுக்கிரலாமான்னு கலைஞர் சொல்லிக் காட்ட, அது தேவையில்லை, 'மக்கள் திலகம்' என்ற பட்டமே போதும்னு எம்ஜிஆர் அறிக்கைவிட்டார். எம்ஜிஆர் புரட்சி நடிகர் இல்லை, 'புரட்டு நடிகர்'னு கலைஞர் சொல் விளையாட்டு விளையாட, ஆமா புரட்டு நடிகர்தான். அநியாயத்தை அக்கிரமத்தைப் புரட்டும் நடிகர்னு இவர் அதே விளையாட்டு விளையாடினார். சினாமாவுல எம்ஜிஆர் - நம்பியார் மாதிரி, அரசியல்ல, ரெண்டு பேரும் வார்த்தைச் சண்டை போட்டாங்க. பத்திரிகைகளுக்கு நல்ல விற்பனை!”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“ஆனால் இந்த பிலோமினா, தன்னை மூஞ்சிக்கு நேராக அவனது சாதிப்பேரைக் குறிப்பிட்டு மிக இழிவாகத் திட்டியதைப் பற்றிச் சொன்னால் யாரும் அதை பொருட்படுத்த மாட்டார்கள் என்பது மட்டும் சிலுவைக்கு நன்றாகத் தெரியும். ராக்கம்மா பாட்டி ஒரு படிமேல் போய், 'நம்மசாதி அதுதானடா சிலுவ. இதுக்குப் போயி குதிக்கிறியே' என்று நியாயம் பேசுவாள்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“ஓனர் சம்சாரம் விசாரிக்க ஆரம்பிச்சா.

"வூடெல்லாம் புடிச்சிருக்கா?... எங்க வேலை பாக்குறீங்க? ஊருக்கு புச்சா...? சொந்த ஊரு மருதப் பக்கமா?... அப்படியா, உங்க சம்சாரங்கூட வேல பாக்குறாங்களா? நல்லது..."

இப்படி மடமடன்னு கேள்விக்கணைகளை வீசிக்கொண்டே வந்த அம்மிணி சட்டென 'நீங்க என்ன வர்ணம்'னு கேட்டுப் போட்டா. இதைச் சிலுவை எதிர்பார்க்கல. ஒரு செகண்ட் அதிர்ச்சியாயிருந்தது. பதிலை யோசிக்க ஒரு செகண்ட் தேவைப்பட்டதால், "என்ன சொன்னீங்க?" என்று கேட்டான்.

"இல்ல நீங்க என்ன வர்ணம்னு கேட்டேன்."

"நாங்க கிறிஸ்டியனுங்க."

சிலுவை பதிலைச் சொல்லிவிட்டு ஒரு கிறிஸ்டியன்போல முகத்தை வைத்துக்கொண்டான். பழைய கிறிஸ்டியன் என்பதால் அது அவனுக்கு ஈஸியாக இருந்தது. இவனது பதில் அம்மிணி முகத்தில் நிம்மதியை வரவழைத்தது. என்ன வர்ணம்ன்னு உண்மையச் சொல்லியிருந்தா அம்மிணி முகம் எப்பிடி மாறியிருக்கும்னு நெனச்சுக்கிட்டான். காரைக்கால் ஒரு பெரிய கிராமம். அதுனால இப்பிடி வர்ணத்தை முகத்துக்கு நேராகக் கேட்பது இயல்பாக இருந்தது. பெருநகரம்னா சாதியப் பத்திய விசாரணை அமுக்கடியாக இருக்கும். படிச்சவங்கன்னா சாதிய தெரிஞ்சுக்கிட 'ஓஹோ அவர் உங்க ரிலேடிவா'ன்னு கேப்பாங்க. அதுதானே நாகரிகம்!

இந்த மாதிரி வாடகைக்கு வீடு தேடும்போதெல்லாம் நீங்க என்ன வர்ணம்? என்ன சாமி? கிறிஸ்டியனா? இந்துவா? வேல பாக்குறீங்களா? வெஜிடேரியனா? நான்-வெஜிடேரியனா? எத்தினி குழந்தைக? பெரியவங்க உண்டா? என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் பதில் சொல்வதிலிருந்து தப்பிக்கச் சொந்தமா ஒரு வீடு வேணும். இப்படியே போனா கடேசியில 'நீங்க மனுசனா, இல்ல மிருகமா?'ன்னுகூட கேட்டாலுங் கேப்பாங்க!”
ராஜ் கௌதமன், காலச்சுமை [Kaala Sumai]
“கிருஷ்ணனோடு மாதவையா பற்றி தான் செய்துவந்த ஆராய்ச்சி பற்றிச் சிலுவை அவ்வப்போது விவாதிப்பதுண்டு. அப்பிடி ஒரு தடவை விவாதித்தபோது ரெண்டு பேருக்கும் சண்டை வந்தது. விசயம் இதுதான். மாதவையா நாவல்களிலும் வாழ்க்கை நோக்கிலும் ஆங்கிலேய விக்டோரிய நாவலாசான் தாக்கரேயின் பாதிப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. இதன் முதன்முதலா கண்டுபிடிச்சவர், வி.கோ. சூரியநாராயண சாஸ்திரிதான். மாதவையாவின் முதல் நாவல் 'பத்மாவதி சரித்திரம்' வெளிவந்தவுடனேயே (1898) 'தி மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேகஸின்'ல இங்கிலீஷ்ல இதுவிசயமா ரெண்டொரு வரி எழுதினார். இவரை மாதிரியே ஹாரிஸன்னு ஒரு ஆங்கிலேய விமர்சகரும் தாக்கரே தாக்கம் பற்றிப் போகிறபோக்கில் குறிப்பிட்டார். பின்னால க.கைலாசபதிதான் 'வேனிடிஃபேர்'ங்கிற தாக்கரேயின் புகழ்பெற்ற நாவல வச்சு இதை நிரூபிச்சார். சிலுவைராஜ், 'தி ஹிஸ்டரி ஆஃப் பென்டென்னிஸ்', 'தி ஹிஸ்டரி ஆஃப் ஹென்றி எஸ்மாண்ட்', 'தி நியூ கோம்ஸ்'ங்கிற தாக்கரேயோட மத்த நாவல்கள வச்சு ரொம்ப விரிவாக ஆராய்ச்சி பண்ணி நிரூபிச்சிருந்தான். இந்த நாவல்கள்ள தமக்குப் பிடித்தமான வாசகங்கள், பாத்திர விமர்சனங்கள், கருத்துக்கள், பாத்திரங்கள், நாவல் உத்திகள் எல்லாத்தையும் மாதவையா மூல ஆசிரியர் பேரக் குறிப்பிடாம 'பத்மாவதி சரித்திரத்'தில் எடுத்தாண்டிருந்தார். சில பக்கங்களைக் கொஞ்சங் கொஞ்சம் மாத்தி அப்பிடியே மொழிபெயர்த்தும் இருந்தார். என்ன இருந்தாலும் மூல ஆசானின் பேரக் குறிப்பிடாமச் சொந்தச் சரக்கு மாதிரி எழுதியது சரியில்லைங்கிறது சிலுவையின் வாதம். கிருஷ்ணனுக்கு கோபம். மொகமெல்லாம் சிவந்து போச்சு. ரெண்டு மகான்களோட சிந்தனை ஏன் ஒன்றாயிருக்கக்கூடாது. கிரேட்மென் திங்க் அலைக்... தாக்கரே மாதிரியே மாதவையாவும் சுய சிந்தனையாளர்தான்...

"அது சரிதான்... அத மறுக்கல... மாதவையா முதல் நாவல் எழுதின போது அவருக்கு வயது இருபத்தாறுதான். அவர் காலத்தில சமூகப் பிரச்சினைகள வச்சு வெளிவந்த நாவல்கள் தமிழில் இல்ல. இங்கிலீஸ்லதாம் இருந்தது. மாதவையாவுக்கு நெருக்கமா இருந்தது தாக்கரேதான். ரெண்டு பேர் சிந்தனைகளும் ஒத்துப்போச்சு. தமிழ்ல நாவல் எழுதுவது அப்ப ரொம்ப புதுசு. தம்மோட முதல் நாவல்ல தாக்கரே பாணிய எடுத்துக்கிட்டாரு... ஆனா அவரோட பேரை விட்டதுதான் சரியில்லை...'" என்று சிலுவை ஆதாரப்பூர்வமாகச் சொல்லியும் கிருஷ்ணன் ஒத்துக்கிடல. இந்த விசயத்துல ரெண்டு பேரும் கொஞ்ச நாள் டூ விட்டிருந்தாங்க. பெறகு சரியாப்போச்சு. அடுத்தடுத்து நடந்த விவாதங்கள்ள இந்த விசயத்த மட்டும் விட்டிருவாங்க.”
ராஜ் கௌதமன், காலச்சுமை [Kaala Sumai]
“எல்லோருமே சாதிய உள்நாக்குல வச்சிக்கிட்டுத்தான் பேசுறாங்க.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“நல்ல திடகாத்திரமான எளவட்டங்கள மோகினிப் பிசாசு பிடிச்சு ஒடம்ப உருக்கிவிடுமாம். அப்பிடின்னா மோகினிப் பிசாசுகளால தனக்கு ஒரு ஆபத்தும் இல்லன்னு சிலுவை சந்தோசப்படுவான்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“போதாக்குறைக்கு இந்த சாகித்ய அகாடெமி விருது வேற இவர்களைப் போட்டுப் பாடாய்ப்படுத்துகிறது. முன்பெல்லாம் வரிசையாக பிராமண வெள்ளாள படைப்பாளிகளுக்கே இந்த விருது கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போ சில வருசங்களாக மத்த சாதிக்கார ஆள்களுக்கும் கிடைக்கிறது. முற்போக்குகள் அகாடமி விருது மெம்பர்களாக ஆக்கிரமிக்கிறபோது முற்போக்கு எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. பி.ஸி. சாதிக்காரங்க ஆக்கிரமிக்கிறபோது அவுங்க சாதி ஆட்களுக்கு வழங்கப்படுகிறது. போகிற போக்கைப் பார்த்தா தலித்துக்களுக்கும் பெண்களுக்கும்கூட இது வழங்கப்படலாம்.

இந்த மகத்தான சாகித்திய அகாடமி விருது கிடைத்த பிறகு அந்த எழுத்தாளர்களுக்கு என்னமோ ஆகிவிடுகிறது. இலக்கிய நிர்வாகிகளாகவும் அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் அவர்கள் மாறிவிடுவதால் படைப்புப் பணியைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். அதுக்குப் பெறகு எழுதுவதே இல்லை. எழுதமுடியவில்லை. பரிசு கிடைத்தவுடனே சரக்கு தீர்ந்துவிடுமோ என்னவோ? ஒரு படைப்பாளியை எழுதவிடாமல் செய்ய வேண்டும் என்றால் அவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கிடணும்.”
ராஜ் கௌதமன், காலச்சுமை [Kaala Sumai]
“எறும்புகளில் எல்லா எறும்புகளும் சிலுவைக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இந்தக் கருப்பு மழை எறும்புகள் மட்டும்தான் பிடிக்கும். மனுசங்களக் கடிக்காது. கைகால், ஒடம்பு மேலே ஏறி ஓடும்போது கூச்சமா இருக்கும். அதுகளுக்குச் சித்தெறும்புக் கெணக்கா ஒரு வரிசையில் போகத் தெரியாது. ஓடையில் மந்தையாகப் போகிற ஆடுமாடுகளப் போலத்தான் திகிடு முகிடாகப்போகும்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“சிலுவைன்னு ஒருத்தன் பொறந்தான், காணாம போனான் என்பதைத் தவிர வேற ஞாபங்கள் யாருக்கும் இருக்கப் போவதில்லை. நீர்க்குமிழி உடைந்து போவதை மெனக்கெட்டு யாராவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப்பார்களா?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“சிலுவை சந்தித்த அவன் வட்டாரத்து எஸ்.ஸி ஆட்கள் குறிப்பாக அதிக சம்பளம் வாங்கும் காலேஜ் ஆசிரியர்கள் ஏதோ ஒருவிதத்தில் தங்கள் சாதியை ஒழித்தோ, மறைத்தோ, பிராமணர் மாதிரி வேசம் போட்டோ, வேற உயர் சாதி, வேற இனம் சார்ந்த பெண்களைக் கலியாணம் செய்தோ தப்பிக்கப் பார்த்தார்கள். வேலை பார்க்கிற இடத்தில் அவர்களை இன்னார் என்று பிறர்க்கு நன்றாகத் தெரிந்தாலும் குடியிருக்கிற தெருவில் அந்தச் சாதி அடையாளம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதில் விழிப்போடு இருப்பார்கள். இன்னசாதி என்பது அக்கம்பக்கம் தெரிந்துவிட்டால் அப்புறம் யாரும் பழக மாட்டாங்க. இந்தக் கவலை அவர்களைப் பெரும்பாடு படுத்தியது.”
ராஜ் கௌதமன், காலச்சுமை [Kaala Sumai]
“பிலோமினாவைச் சிலுவைக்குப் பிடிக்காமல் போனதுக்கு காரணம், சிலுவையை பிலோமினாவுக்குப் பிடிக்காமல் போனதுதான். அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போனதற்கு அவன் பிறந்த சாதி ஒரு காரணம்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“அது சாவான பாவமாகச் சொல்லப்பட்டாலும் அந்தப் பாவத்தைச் செஞ்சுதான் பிரமச்சரியத்தக் காப்பாத்த வேண்டியதாப் போச்சு.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“வயோதிகர்கள் தங்களுடைய வயோதிக மனைவிகளுடன் வெகு நேர்த்தியாக டிரஸ் பண்ணி நிதானமாக நடந்து போகிறார்கள். அவர்கள் எதையும் யாரையும் பற்றி அலுத்துக் கொள்ளுவதில்லை. உடலின் தள்ளாமையை அவர்கள் ஏற்றுக்கொண்ட போதிலும் அதனை ஒரு காரணமாகக் கொண்டு அடைந்து கிடக்கத் தயாராக இல்லை. தங்களுக்குரிய எஞ்சிய நாட்களை முடிந்த மட்டும் சந்தோஷமாகக் கழித்திடவே பிரயாசைப்படுகிறார்கள். பொது இயக்கத்திலிருந்து அவர்கள் ஆயாசப்பட்டு ஒதுங்குகிற மாதிரி தெரியவில்லை. தேவாலயங்களில் இவர்களை அதிக எண்ணிக்கையில் காணமுடியும். சிலுவையும் அவன் மனைவியும் சுற்றிப் பார்த்த வெஸ்ட்மினிஸ்டர் அபேயிலும், சென். பால்ஸ் கதீட்ரலிலும் போடப்பட்டிருந்த இருக்கைகளில் இத்தகைய வயோதிகத் தம்பதிகளைக் கணிசமாகக் கண்டார்கள். இவர்களது நல வாழ்வுக்காக, மக்களிடம் அதிக அளவில் பெறும் வரிப்பணத்தில் பெரும்பகுதியை அரசாங்கம் செலவழிப்பதாகச் சிலுவை கேள்வியுற்றான். லண்டன் நகரில் மாதச் சம்பளம் வாங்குபவர்களிடமிருந்து நாற்பது சதவிகிதம் வரியாகப் பிடிக்கும் முறை பற்றி முறையிடாத இந்திய டாக்டர்களும் இஞ்சினியர்களும் இல்லை என்றே சொல்லலாம். அந்த வரிப்பணத்தை சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், பொது போக்குவரத்து வசதி, இலவச மருத்துவம், சிகிச்சை வசதி, கல்வி வசதி... இப்படிச் சமூக நல வாழ்விற்காக அரசு வாரி இறைக்கிறது. வயோதிகர்கள் தங்களுடைய பிள்ளைகளால் சுகம் பெறுகிறார்களோ இல்லையோ, அரசாங்கத்தின் சமூக நலப் பணிகளால் பௌதீக அளவில் லௌகீக சுகம் பெறுகிறார்கள் என்று அடித்துச் சொல்லலாம். லட்சக்கணக்கில் செலவாகும் சிக்கலான பெரும் அறுவை சிகிச்சைகள் கூட இங்கே இவர்களுக்கு இலவசம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆனால் நீங்கள் இங்கே நிரந்தரக் குடியுரிமை பெற்ற பிரிட்டிஷ் குடிமக்களாக இருக்க வேண்டும்.”
ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
“சிலுவைக்கு எஞ்சிய நாட்களில் எப்பிடி வாழணும்னு ஒரு தெளிவு வந்து பத்து வருசமாச்சு. ஒடம்பு ஒத்துழைக்கிற வரைக்கும் படிக்கிறது, எழுதுறது... பெறகு? செத்துப்போறது, அவ்வளவுதான். இந்த ஒலகத்த விட்டுப் போகுறபோது விட்டகுறை தொட்டகுறைன்னு ஒண்ணும் இருக்கக்கூடாது. போகப் போறோமேன்னு வருத்தமும் கெடையாது. ஒரு விசயத்துக்காக வருத்தம் வரத்தான் செய்யும். சம்சாரத்துக்கு முன்னாடியே போயிரணும். அது ரொம்ப முக்கியம். மனுசங்களத் தவிர்த்து இந்த இயற்கையை விட்டுப்போறதுல ரொம்ப வருத்தம்தான். காலமும் இடமும் இப்படி ஈவு இரக்கமில்லாமல் ஒவ்வொரு ஜீவராசியையும் வளத்து ஆளாக்கி அனுபவிக்க வச்சு ஒரேயடியா அழிச்சுப் போடுவதப் பத்திச் சிலுவைக்குச் சங்கடம்தான். சங்கடப்பட்டு என்ன ஆகப்போகுது?”
ராஜ் கௌதமன், காலச்சுமை [Kaala Sumai]
“அந்த வருசம் காட்டாண்டி பேரனுக்கு என்ன வந்துச்சுனு தெரியல. கூட்டத்துல அவம் மட்டும் ரொம்ப வித்தியாசமாகத் திரிஞ்சாம். தலயில குளுகுளுன்னு தேச்ச தேங்காய் எண்ண மூஞ்சி செவுளெல்லாம் வடிஞ்சி ஆள் கரேர்னு தெரிஞ்சாம். டியூப் லைட் வெளிச்சத்துல அந்த மூஞ்சி 'பளிச்'னு மின்னுச்சு. அவன் தீவிரமான எம்ஜிஆர் ரசிகன் என்பதால் அவரைப்போல வெள்ளை பேண்டும் சட்டையும் போட்டு இடுப்புல கருப்பு பெல்ட் கட்டிக் கூலிங்கிளாசோடு வந்தான். ரெண்டு கைகளையும் மறக்காமல் பேண்ட் பாக்கெட்டுக்குள் செருகியிருந்தான். இம்புட்டுத் தூரம் டிரஸ் பண்ணிய பெயலுக்குச் செருப்புப் போட்டுக்கிடணும்னு தோணல. எங்கடா பேண்டு தச்சுன்னு கேட்டா சேம்ஸ்சு நாடார்கிட்டன்னு பெருமையாச் சொன்னான். அவருக்கு டவுசர் தச்சுத்தான் பழக்கம். டவுசரைக் கீழ வரைக்கும் நீட்டிவிட்டால் போச்சு என்ற நினைப்பில் பேண்ட் தச்சிருப்பாராக்கும்! பகல்லதாம் கூலிங்கிளாஸ் போடுவாங்கன்னா இவம் ராத்திரிக்காணு போட்டுக்கிட்டுத் திரியிறது சிரிப்பா இருந்துச்சு, எங்க வாங்கியிருப்பாம்? செக்கடி பஜார் கடைகள்ல அது கெடையாது. சீல்தூர்லதாம் வாங்கியிருக்கணும். இதுக்காக மெனக்கிட்டு சீல்தூர் வரைக்கும் பஸ் பிடிச்சுப் போயிருக்காம் பாரு! அடிக்கடி பீடி பத்தவச்சுப் புகைய இழுத்து இழுத்து சிகரெட் ஊதுற மாதிரி ஊதினான்.

அவனப் பாத்த பெயக மட்டுமில்ல ஊர்ப்பெரியவங்ககூடச் சிரிச்சாங்க. அவனுக்கு இதப் பத்தியெல்லாம் கவலை கெடையாது. எம்ஜிஆர்னு பெயலுக்கு நெனப்பு!

இங்க பார்ரா நம்ம காட்டாண்டிபேரம் பேண்டு போட்டிருக்காம் என்று பெரிசுகள் ரெட்டை அர்த்தத்தில் லந்து பண்ணினார்கள். ஒரு மாசமா கூலி வேலைக்கிப் போயி ஒரு சல்லிக்காசுகூட வீட்டுக்குத் தராம இப்பிடிக் கிறுக்குப்பிடிச்சு அலைவதாகப் பேசிக்கொண்டார்கள். சிலுவைக்கு அவனைப் பார்ப்பதே பெரிய பொழுதுபோக்காக இருந்தது.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“ரவி தண்ணி போட்டாம்னா தாஸ்தாவ்ஸ்கி பற்றித்தான் பேசுவான்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“எங்க சாமி படத்த ஏன் சார் இப்பிடிக் கிழிச்சீங்க. ஒங்க சாமி படத்தக் கிழிச்சா சும்மா விடுவீங்களா?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்

« previous 1 3 4 5
All Quotes | Add A Quote