Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following ஜெ. பிரான்சிஸ் கிருபா.

ஜெ. பிரான்சிஸ் கிருபா ஜெ. பிரான்சிஸ் கிருபா > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-30 of 93
“உயர் பிரியும் கணத்தில்
தம் காயங்களை
கடைசியாய் பார்வையிட்ட
மெசியாவின் கண்களை
பல நூற்றாண்டுகள் கழித்து
இன்று சந்தித்தேன்
கடற்கரையில்
மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு
மத்தியில் மல்லாத்தியிட்டு
தன் வயிற்றில் இறங்கி முழு
வட்டமடித்த கத்தியைத்
தலை தூக்கி எட்டிப் பார்த்தது
ஆமை”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“உடைமரங்களுடே நெளிந்து சென்ற ஒற்றையடிப் பாதை முடிந்து வெளி விஸ்தீரணமடைந்த போது திடீரென்று கடல் எதிரே விரிந்து கிடந்தது. மிக அமைதியாக, சிறு முணுமுணுப்பும் செய்யாமல். சில நிமிடங்கள் அந்த இடத்திலேயே பிரமித்து வியப்பில் சிலையாகி நின்றுவிட்டான். ஒடுக்கமான கரை இரு பக்கமும் நீண்டு சென்று வளைந்தது. வகுப்பறையில் கலகலப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் வாத்தியார் வந்ததும் அடங்கிப் போகுமே அப்படி கடல் அடங்கிப் போய் செயற்கை அமைதியைச் சேர்த்துக்கொண்டது போலிருந்தது. நீலமும் பச்சையும் கலந்த அதன் நிறம் மிக அழகாகக் கண்களைக் கவர்ந்தது. அதே நேரம் பெரும் அச்சத்தையும் அவசர சந்தேகங்களையும் உண்டாக்கியது. கரையில் ஆள் நடமாட்டமே இல்லை. கடலில் ஒரு அலை கூடத் தென்படவில்லை.

தேரித்துறை கடல் அலைகளால் ஆனது. சதா இரைச்சலிட்டுக் கொண்டே இருக்கும். திரள் திரளாய் நுரை புரளும் அதைப் பார்க்க பயம் தோன்றுவதில்லை. ஆனால் கல்லுளிமங்கனாகக் கிடக்கும் இந்தக் கடல் அவன் முகத்தை வியர்க்கக்கூட வைத்தது. சீக்கிரமே அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட்டான். சில எட்டுகள் நடந்த பிறகு நின்று தலையைத் திருப்பிக் கடலைப் பார்த்தான். அது முன்பு போலவே 'உம்' மென்றிருந்தது. தூரதொலைவில் கூட அலைகளுக்கான அறிகுறிகளைக் காணோம். பள்ளியில் பரிட்சைக்கு லீவு விட்டதுபோல கடலில் அலைகளுக்கும் லீவு விட்டிருப்பார்களோ என்று நினைத்துக்கொண்டான். அப்பாவிடம் விசாரித்தபோது 'அது பெண் கடல்' என்றார்.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“நீ பிறந்த நாளை எடுத்து
திருத்தமாக உடுத்திக்கொண்டு
பின்தொடரும் என் நிழலை
திரும்பித் திரும்பிப் பார்த்து
திசை யூகித்து வருகிறேன்”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“மரம் ஒருபோதும் தன் நிழலை உணர்வதில்லை.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“நீ பிறந்த நாளை எடுத்து
திருத்தமாக உடுத்திக்கொண்டு பின்தொடரும் என் நிழலை
திரும்பித் திரும்பிப் பார்த்து
திசை யூகித்து வருகிறேன்.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“சீத்தா பாத்தா கூத்துரு கூத்துரு என்பதற்கு என்ன அர்த்தம் என்று பல நாள் பல சந்தர்ப்பங்களில் பாண்டி பலரிடமும் கேட்டுப்பார்த்தான். யாருக்குமே தெரியவில்லை.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“சொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி இது”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“உயிர் பிரியும் கணத்தில் தம் காயங்களைக் கடைசியாய் பார்வையிட்ட மெசியாவின் கண்களை பல நூற்றாண்டுகள் கழித்து இன்று சந்தித்தேன். கடற்கரையில் மடித்த கைப்பைகளுடன் சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு மத்தியில் மல்லாத்தியிட்டு தன் வயிற்றில் இறங்கி முழு வட்டமடித்த கத்தியைத் தலைதூக்கி எட்டிப் பார்த்தது ஆமை.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“வீட்டுல கோவுச்சுட்டு வெளியே வந்துல என்ன கத்துக்கிட்டீங்க?"

"வீட்டுக்குள்ளயே ஒரு உலகமிருக்கு. அதுக்குள்ள வாழப் பழகிக்கிட்டா பாதகமில்லை. உலகத்தையே ஒரு வீடாக்க பிரயாசைப்பட்டா அலைக்கழிவுதான்.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“தலையிலிருந்து கொட்டும் குட்டி அருவிபோல நரைத்த தலைமுடியும் தாடியும் மீசையும்.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“இறப்பதுபோல் எல்லோரும் காண்கிறார்கள்
ஏறக்குறைய இரண்டு கனவுகளேனும்
பிறப்பதுபோல் வந்திருக்குமா
யாருக்கேனும் ஒன்று”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“எட்டுக் கொலைகளை ஒரே நேரத்தில் செய்துவிட்டுத் தன் நெற்றிப்பொட்டை அலட்சியமாகச் சரி செய்யும் கொலைகாரியைப் போல் பயங்கரம் தோன்ற நடந்து வந்தாள்.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“நம்மாள ஏன்ட மட்டும் பாடுபாப்போம். குணமடைஞ்சா கடவுள் சித்தம். அவருக்கும் சம்மதமில்லனா சோத்துல எதையாவது கலந்து கொடுத்துர வேண்டியதுதான்." குரலில் எந்தப் பதற்றமுமின்றிக் கூறினாள் சித்தி. அவள் வார்த்தைகள் குட்டிகளைத் தின்னத் துரத்தும் சர்ப்பங்களாக நெளிந்தோடின. பதிலேதும் கூறாமல் செல்வம் சித்தியின் முகத்தை ஏறிட்டாள். இறந்து பல நாளான ஒரு மனுசியின் கண்களை அங்கே கண்டாள்.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“சாப்பிடு ஜிம்மி சாப்பிடு”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“யாரோ ஆள் வருவது போல அணக்கம் ஏற்பட்டது. சிரமத்தோடு இமைகளை விரித்துப்பார்த்தான்.

பிய்ந்துபோன அவித்த முட்டையை பற்தடம் பதியாமல் வாயில் கவ்வித் தூக்கிக் கொண்டுவந்து அவன் உணவுத் தட்டில் வைத்துவிட்டு வந்த வழியே திரும்பிப் போனது ஜிம்மி.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“வீட்டுக்குள்ளயே ஒரு உலகமிருக்கு. அதுக்குள்ள வாழப் பழகிக்கிட்டா பாதகமில்லை. உலகத்தையே ஒரு வீடாக்க பிரயாசைப்பட்டா அலைக்கழிவுதான்.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“கல்லெறியும் தூரத்தில் இருந்த குளத்துக் கரையை அடைந்த போதுதான் தெரிந்தது அது ஒரு ரயில் சாலை என்று. அதன்மீது ஏறி நின்று தலையை வட்டமடித்துப் பார்த்தான். ரயில் சாலை அதன் போக்கில் இரண்டு பக்கமும் நீண்டு போய் தொலைவில் ஓடுங்கியது. ரயில் சாலையில் மிக நீளமான ஏணியொன்று கிடத்திப் போடப்பட்டிருந்தது. அந்த ஏணியில் ஏறிச் செல்வதென்று முடிவெடுத்து கவனமாக ஏறிச் சென்றான். அது ஒன்றும் பெரிய சிரமமாக இல்லை. தரையில் சமனமாக நடப்பது போல்தானிருந்தது. படிக்கட்டுகள் ஏற்படுத்தும் களைப்பை அவை உண்டாக்கவில்லை.

குனிந்து கைநிறைய ஜல்லிகளை அள்ளினான். ஒவ்வொன்றாய் இலக்கின்றி உயரே வீசியெறிந்தான். ஜிவ்வென்ற ஓசையெழும்பியது. இரண்டு கற்கள் மீதமிருந்த நிலையில் எதிரே தூரத்தில் ரயில் சாலையில் சதுரமாக ஏதோ தென்பட்டது. கருகிய செங்கல் போலத் தோற்றமளித்தது. புகை புறப்பட்டு உயரே செல்வதை கவனிக்க முடிந்தது. ரயில்தான் வந்து கொண்டிருந்தது. ரயில் இச்சந்தர்ப்பத்தில் மிக அநாகரிகமாக நடந்துகொள்வதாக அவனுக்கு மனத்தாங்களும், கோபமும் மூண்டது. ஒரு மனிதன் அதிலும் பல விசித்திர சக்திகள் நிறைந்த வீரன் இந்த ஏணியில் ஏறி வந்துகொண்டிருக்க ரயிலுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் அதே ஏணியில் இறங்கி வரும்? அதன் பணிவற்ற செயலால் இன்னும் சில நிமிடங்களில் யார் யாருக்கு வழிவிடுவது என்ற மானப் பிரச்சனை தேவையின்றித் தோன்றப் போகிறதே! சும்மா விடுவதாக இல்லை இந்த ரயிலை. அது தன் வாழ்க்கைப் பயணத்தில் முதல்முறையாக சரியான, அதே நேரத்தில் என்றென்றைக்கும் மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறது. அது பயணிகள் ரயிலா சரக்கு ரயிலா என்பதை தூரத்திலிருந்து அறிந்துகொள்ள முடியவில்லை. அது பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. நியாயத் தீர்ப்பு பொதுவானது. பாரபட்சமற்றது. ஒருவேளை இந்த ரயிலுக்கு நல்ல காலமிருந்தால் அதன் மூளை வேலை செய்யலாம். பாதையிலிருந்து இறங்கி ஏணியைவிட்டு விலகி அவனைக் கடந்துபோய் சாமர்த்தியமாக மீண்டும் இந்த மேட்டுப் பாதையை அடையலாம். தவறினால் அதற்கு ஐயோ... கேடுதான்.

பறவைக் கூட்டம் நிகழப்போகும் விபரீதத்தை உணர்ந்து வினோதமான குரல்களில் அலறியது. நாராசமான கூக்குரலில் எச்சரிக்கை பகிரங்கமாக வெளிப்பட்டது. ஐயோ... ஒரு பரிகாசக் கூட்டத்தை வெயிலை விரித்து தரையோடு தரையாக உருகியோடச் செய்த இந்த மனிதனிடம் இந்த எளிய ரயில் வசம்கெட்டுச் சிக்கிச் சின்னாபின்னமாகிச் சீரழியப் போகிறதே என்று அவை பரிதாபப்பட்டன.

அவன் ரயிலை எதிர்கொண்டு வேகமாக நடந்தான். ரயில் முரட்டுக் குருடனைப்போல சிறிதும் யோசிக்காமல் அதே கதியில் வந்து கொண்டிருந்தது. அதன் சிக்குபுக்கு சப்தம் தெளிவாகக் கேட்கும் தொலைவுக்குள் நுழைந்தது. முதுகெலும்பையுடைத்து தலையை நசுக்கி பாதையோரத்தில் அடித்துக் கொன்று போடப்பட்ட ஒரு பாம்பின் சித்திரம் அவனுக்குள் தோன்றி மறைந்தது. ஆனாலும் சிறிதளவும் அவன் மனத்தில் கருணை சுரக்கவில்லை. விதிபோல் நடக்கிறது. வேறு வழியில்லை. இருப்பது ஒரு வழி. இருவருக்குமாக ஒரே ஒரு வழி. தெளிவற்ற குரலில் ரயில் பணிவாக ஊளையிட்டது அவன் காதுகளில் விழுந்தது. கேட்டும் கேட்காததுபோல் தலையைக் கவிழ்ந்தவண்ணம் உறுதியோடு நடந்தான். ஊளைச் சத்தம் இன்னும் உரத்தொலித்தது. இப்போது அதன் குரல் அழுவதற்குத் தயாராக உடைந்திருந்ததை அவன் கவனித்தான். இருப்பினும் பிடிவாதமாக நிமிர்ந்து பார்க்காமலிருந்தான். நிமிர்ந்து முகத்துக்கு முகம் பார்த்தால் எதிர்பாராமல் இரக்கமுண்டாகி விடலாம். அது நல்லதல்ல. குற்றத்தை, தவறை ஊக்குவிக்கும் செயலில் சென்று அது முடியலாம். அது தவிர்க்கப்பட வேண்டும். இன்று விட்டுவிட்டால் இன்னொரு நாளும் இதே தப்பிதத்தை அது செய்யலாம். எனவே இந்தப் பிரச்சனை இன்றே தீர்வுக்கு வந்தாக வேண்டும். இந்தப் பிரச்சனை ஊளை ஒலமாக மாறி மிக நெருங்கி விட்டிருந்தது. பீதியில் ரயில் கதறியழுதது. 'என்னை மன்னியுங்கள் என்னை மன்னியுங்கள். உங்கள் வழியில் தெரியாமல் வந்துவிட்டேன். என்னைப் பொறுத்து என்னைக் காப்பாற்றுங்கள்' என கையெடுத்துக் கும்பிட்டு அது கெஞ்சுவதை மனக்கண்ணில் கண்டான். வைராக்கியத்தை இளகவிடவில்லை. இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள சில அடி தூரங்களே இடையிலிருந்தபோது ரயில் மிகப் பெரிய அலறலோடு கண்களை இறுக மூடிக்கொண்டது. நிலத்தில் நடுக்கம் பரவியது. அச்சமயத்தில் பின்னேயிருந்து இரண்டு கைகள் அவன் இடைப்பகுதியில் நுழைந்து 'கிச்சலம்' காட்டிற்று. அவன் கூச்சத்தில் நெளிந்து துடித்து காற்றில் எகிறித் தெறித்து பாதையோரம் விழுந்தான். ரயிலுக்கு எத்தப் பங்கமுமில்லாமல் பாதை கிடைத்தது. முழுமூச்சோடு உச்சபட்ச வேகத்தில் அது தப்பி ஓடியது. கடந்து செல்லும் அதன் பெட்டிகளை வெறித்தான். ஆபத்து முற்றிலும் விலகியிராததையுணர்ந்த அவை கடும் குளிருக்குள் சிக்கிய பூஞ்சையுடல் போலப் பயந்து கிடுகிடுத்தன.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“அமலா அக்கா முதல்முறையாக புது சைக்கிளை ஒட்டிக்கொண்டு பாண்டி வீட்டுக்குத்தான் வந்தாள். ஜிம்மி முன்னால் கூடையில் இருக்க தெருக்களை வலம் வந்தாள். வேகமாகத் தான் பறப்பதைக் கண்டு ஒன்றும் புரியாமல் செல்லக் குரலில் 'வள் வள்' என்றது. பழகியபின் அதுக்கு உற்சாகம் தோன்றியிருக்கவேண்டும். ஆட்கள் எதிர்ப்படும் போதெல்லாம் குரைத்துத் தன் இருப்பைத் தெரிவித்தது.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“பருத்துத் திரண்ட கரும்பட்டைகள் அடர்ந்த மரத்தின் தொப்புள் துவாரத்தின் விளிம்பில் ஒரு குருவி.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“கைதேர்ந்த மீனவனின் தந்திர வலைக்குள் சிக்கி வெளியேறும் விதியற்று கடலின் பெரும் கவலைகளை மேஜை மீதிருந்து மென்குரலில் காற்றோடு புலம்பியிருந்த வெண்சங்கை தூவானம் தெறித்திருக்கும் ஜன்னலருகே இடம் மாற்றி வைத்தேன். நெரிந்திருந்த குரல்வளைக்குள் மடங்கிக் கிடக்கும் சொற்கள் நிமிர்ந்து கிசுகிசுப்பான குரலில் கதையாடத் தொடங்கியது அது.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“பட்டப் பகலுடுத்திப் பவள ஒளி தெறிக்க நிலத்தில் நடந்து செல்லும் முதல் நிலவு நீயென்றால் இல்லை இல்லையெனப் பதறி நீ மறுக்கலாம். என்றாலும் சின்னச் சின்ன நடையிட்டு அள்ளித் தின்னும் ருசியோடு மண்ணைச் சமைக்க உன்னால் மட்டும்தான் முடிகிறது.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“அவளது நீளமான சுருள்முடியில் ஒன்றைப் பிடுங்கி, விரல் திண்ணம் ஆலம் விழுது நறுக்கி துண்டங்களாகாமல் அதை நேர்பாதியாக வகிர்ந்து அதற்குள் முடியை நேராக வைத்துக் கட்டி தாயத்தில் அடைத்து தலையணைக்கு அடியில் பதுக்கி வைத்துவிட்டால் பன்னிரண்டு நாட்கள் உறங்கி எழுந்தபின் வரும் அவளை அடையும் பொறுமை அவர்களிடமில்லை.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“பஸ் நிறுத்தங்களில்
காத்திருக்கும் பார்வையில்
எந்த கணம் எவளை
எப்படி பேரழகியாக்கும்
என்பது நிச்சயங்களற்றது”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“எறும்புக்கூட்டம்போல் கண்ணீர்த் தாரை ஊர்ந்து காதுக்குள் நுழைந்து பாண்டியின் தலையை 'திம் திம்'மென அதிர வைத்தது. நஞ்சின் வீரியத்தால் குடல் கொடிகள் அறுபடுவதுபோல் இருந்தன. கண்கள் பீதியில் வெளிப்பிதுங்கின. கன்னங்களும் காதுகளும் மண்ணில் சிராய்ந்து புண்ணாகி எரிந்தது.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“மழையறுத்த மண்நொடியில் இறங்கி ஏறியபோது முன்சக்கரம் பிணங்கிக் கொள்ள சைக்கிள் இடப்பக்கமாய்ச் சரிந்தது.

கையைத் தட்டி விட்டுக்கொண்டு எழுந்தாள்.

"விடுக்கா. நீ உக்காரு" என்று பாண்டி சைக்கிளை ஏற்றெடுத்தான். ஏறி அமர்ந்து ஓட்டினான்.

"என்னால் தாவி ஏற முடியாதுடா"

"முன்னால வாரயா?"

சைக்கிள் நகர்ந்தது. பாய் இறக்கிய வள்ளத்தைப்போல மெதுவான சீரான கதியில் மிதந்தது.

"இன்னைக்குத்தான்டா முன்னாடி உக்காந்து பாக்குறேன்."

மணியை 'டிரிங்' என அடித்தாள். பண்ணைப்புதூருக்கு மேய்ச்சலுக்குப் போகும் மருதகுளச் செம்மறி மந்தை நாணத்தில் தலைகவிழ்ந்து நடந்தது. ரெஜினா டீச்சர் தோட்டத்து கற்றாழை வேலியோரம் இரை பொறுக்கிய கதுவாலிகளைக் கண்டதும் மீண்டும் மணியோசை. அவை கலைந்து கால்களால் ஓடிப் பின் பறவைகளாயின.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“படுக்கையறையைக் கடந்த போது அதன் வாசலில் தோரணமாகக் கட்டப்பட்டிருந்த சின்னச் சின்ன மணிகளின் நாவுகள் காற்றில் குழறின.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்பவர் சற்றே தேர்ந்த பிறகு பின்னால் பிடித்துக்கொண்டு ஓடு பவர் அவ்வப்போது விட்டுப் பிடிக்கவேண்டும். "தம்பி விட்டுறாத விட்டுறாத" என்று அவள் வேண்டிக்கொண்டே இருப்பாள் "பிடிச்சிருக்கேன், பிடிச்சிருக்கேன் என்று அவளுக்கு நம்பிக்கையூட்டிக்கொண்டே வருவான். அவன் விட்டுப் பிடிக்கும் சமயங்களிலும் அவள் அதையே வலியுறுத்துவாள். சைக்கிளை பிடிக்காமலே பின்னால் ஓடிக்கொண்டே "பிடிச்சுருக்கேன் பிடிச்சிருக்கேன்" என்று பொய் சொல்வான். சந்தேகம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கம் திருப்பிப் பார்ப்பாள். பார்த்த கணமே முன் சக்கரம் மடங்கி 'ஏசுவே' என்று கீழே விழுவாள். சமாதானப்படுத்தி மீண்டும் அவளை சைக்கிள் ஓட்ட வைப்பதற்குள் கண்ணில் தண்ணீர் வந்துவிடும்.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“கோவிலிலிருந்து திரும்பி வரும்போது வளையல் கடைப் பக்கம் ஒதுங்கினாள். கலைந்து பறக்கும் கூந்தலுக்கு ஒரு கிளிப் வாங்கி மாட்டி காற்றை ஏமாற்றினாள்.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
“வெளி நதியில்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டுகொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“முதலில் மாப்பிள்ளை வீட்டார் பந்தி முடிந்து புறப்பட்டார்கள். பின்னர் உள்ளூர் பந்தி ஆரம்பித்தது. பிரியாணி வாசனையின் காரணமாகவோ என்னவோ பாண்டிக்கு விஷேசமாக பசித்தது. ஆனாலும் முண்டியடித்துக்கொண்டு பந்திக்கு முந்த விருப்பமில்லை. கூட்டம் குறையட்டுமென்று ஓரமாய் கிடந்த மடக்கு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் வரிசை தனித்தனியாக பரிமாறி இரண்டோ மூன்றோ பந்திகள் முடிந்திருந்தபோது மேற்குத் தூண் ஆண்களின் வரிசையில் பாதி இடம் காலியாக இருந்தது. சாப்பிடக் காத்திருந்த இளம்பெண்கள் ஆண்கள் பாதி உள்ள பந்தியில் தொடர்ச்சியாக அமர வெட்கப்பட்டனர். வயதுக்கு வந்த ஆண்களையும் பெண்களையும் இணைக்க இடையே ஒரு சிறுவனோ சிறுமியோ தேவை.

நாற்காலியில் அமர்ந்து பராக்கு பார்த்துக்கொண்டிருந்த பாண்டியின் முன் வந்து நின்ற பிரேமா ராணி அக்காள் "பாண்டி சாப்பிட்டாச்சா" என்று கேட்டாள். இல்லை என்ற தலையாட்டினான். "வாடா தம்பியாபிள்ள சாப்பிடுவோம்" என்றவள் பாண்டி நிதானிக்கும் முன் அவன் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று, ஆண்கள் வரிசையில் அவனை அழுத்தி உட்கார வைத்து அவனருகே அவளும் அமர்ந்துகொண்டாள். அவளைத் தொடர்ந்து மற்ற பெண்களும் வெட்கமும் வேகமுமாக வந்து அமர்ந்தார்கள். பாண்டி சங்கோஜத்தில் நெளிந்தான். என்னதான் அவன் அரை டவுசர் அணிந்திருந்தாலும், அவர்கள் எடை போடும் அளவுக்கு தன்னை அவன் சின்னப் பையனாகக் கருதவில்லை. ஆண்கள் பெண்கள் வரிசையை இணைக்கும் இந்த ரெண்டும்கெட்டான் பதவியை, பந்தியில் அவனுக்கு நேர்ந்த பயங்கரமாகவே எண்ணி மனம் கூசினான். அங்கிருந்து எழுந்துவிடலாம் என்ற முடிவுக்கு அவன் வருவதற்குள் இலை போட்டு தண்ணீர் வைத்து விட்டார்கள். முகம் வாடியது. தலை தொங்கிவிட்டது. 'இவ்வளவு சின்னப் பயலுக்கெல்லாம் எதுக்கு சிக்கன் பிரியாணி' என்ற வெறுப்பில் பசியும் ஒதுங்கிச் சென்றுவிட்டது.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni

« previous 1 3 4
All Quotes | Add A Quote
Kanni(கன்னி) Kanni
51 ratings