கை உள்ள Guy = செந்தில்! (செந்து+இல்)

#dosa365 வாசக அன்பர்கள், என்னை மன்னிக்க!

என்ன தான் “தினம்” ஒரு சங்கத் தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும்…

கடந்த இரு வாரங்களாக, இங்கு பதிவுகள் வரவில்லை;


இந்தியப் பயணம்; முக்கியமான கால் சிகிச்சை இருந்தாலும் கூட என்னால் எழுதியிருக்க முடியும்;

முன்னொரு முறை அப்படி எழுதி/scheduled செய்தும் உள்ளேன்;

உண்மையான காரணம் அதுவல்ல! அவன்! = எவன்?


[image error]அலைகள் வாய்க்கும் செந்தூர் முருகவன்;

மூச்சே விட முடியாமல், நிறைந்து கொண்டான் பாவி:)

அவனைச் சுற்றிச் சுற்றி ஏதோவொரு ஞாபகம்;

சென்று வந்த பின்பும்…செந்தூரைச் சுற்றியே நினைவுகள்; கனவுகள்!


எந்த வேலையும் உருப்படியாப் பண்ண முடியல; கிளம்பும் போது Flight Return Journey பயணச் சீட்டு எடுத்துக்கிடாம, Onward Journey சீட்டு எடுத்துக்கிட்டு கிளம்புறேன்;

Egmore கிட்டக்க வந்த போது தான் உறைக்குது; வண்டியை மறுபடியும் வீட்டுக்கு விடு; அப்பா கிட்ட செம திட்டு:) தங்கச்சிக்கோ அந்தத் திட்டே லட்டு:)


ஒரு வழியா, அந்தச் செந்தூரை வச்சே, மீண்டும் Dosa-வில் துவங்குறேன்! நாளிடைப் பட்டமைக்கு மன்னிக்க!



ஒங்களுக்குத் தெரியுமா? செந்தூர் முருகன், கடலுக்கு அடியில் தான் இருக்கான்; How many hands he has?

மேலே வாசிங்க!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் -ன்னு பேச்சு; அப்பறம் எப்படிய்யா கடலோரம்?:)


பத்துப் பாட்டுள் = முதல் பாட்டாய்த் திருமுருகாற்றுப்படை-யை வைத்துள்ளார்கள்;

நக்கீரர் எழுதியது; அந்தக் கால வழக்கத்துக்கு வித்தியாசமாய் எழுதியது;

நாடாளும் மன்னனிடம் ஆற்றுப்படுத்தாமல், மனசாளும் மன்னனிடம் ஆற்றுப்படுத்தும் நூல்!


அது கடைச் சங்க காலத்தின், கடைக் காலம்;

வடமொழிக் கலப்பு, அரசியல் ரீதியாக நன்கு நிகழ்ந்து விட்ட காலம்;

கந்து-நடுகல்-பெருந்தெய்வமான தமிழ் முருகன்…

இயற்கைக்கு மாறாய், 6face/12hands என்றெல்லாம் புராணம் கலந்து விட்ட காலம்!


[image error]ஆனால், நக்கீரர், இரண்டையும் ஒளிக்காது மறைக்காது காட்டுகிறார்;

* மறைக் காதுள்ள அந்தணர் உள்ள சுவாமிமலையும் காட்டுவாரு

* மறைக்காது, ஆடு பலி குடுத்துப் பூசிக்கும் பழமுதிர்சோலையும் காட்டுவாரு


முன்பே ஒரு முறை, முருகாற்றுப்படையை #dosa வில் பார்த்துள்ளோம்..

வெள்ளை அலைகள் வந்து தாலாட்டும் காட்சி!

இன்று தாலாட்டும் காட்சி அல்ல, கருவறைக் காட்சி; This song is all about hands = கை உள்ள Guy!



நூல்: திருமுருகாற்றுப்படை (Lines 104-118)

கவிஞர்: நக்கீரர்

திணை: பாடாண்

துறை: ஆற்றுப்படை


(திருச் சீர் அலை வாய்)


ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்

செம் பொறி வாங்கிய, மொய்ம்பின் சுடர் விடுபு

வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு நிமிர் தோள்:


விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது

ஒரு கை; உக்கம் சேர்த்தியது ஒரு கை;

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை;

அங்குசம் கடாவ ஒரு கை; இரு கை

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒரு கை


மார்பொடு விளங்க, ஒரு கை

தாரொடு பொலிய; ஒரு கை

கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப; ஒரு கை

பாடு இன் படு மணி இரட்ட; ஒரு கை

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய; ஒரு கை


வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட;

ஆங்கு, அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி



உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்

அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே. அதாஅன்று



செந்தூர் – ஆலயக் குறிப்பு:


குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்; அப்பறம் எப்படிக் கடலோரம்?:)

குறிஞ்சி = மலை; முல்லை = காடு

இந்த ஆதி மக்கள், இடம் பெயர்ந்து விளைநிலமும் (மருதமும்), கடல்செல்வமும் (நெய்தல்) கண்டார்கள்; அப்படி இடம் பெயர்ந்த போது, தங்கள் தொன்மங்களையும், உடன் எடுத்தே சென்றார்கள் – முருகன் (எ) தொன்மத்தையும்; Thus he came, from mountains to sea…


இன்று நாம் காணும் திருச்செந்தூர் = மாட மாளிகை கூட கோபுரம்;

ஆனா, சங்க கால/ சிலப்பதிகாரக் காலத்துச் செந்தூர் = எளிமையான கோட்டம்!


[image error]கோபுரமெல்லாம் 19th CE-இல், மூவர் சாமிகள் முயற்சியெடுத்துப் பெருசாக் கட்டியது; அதுவும் இன்னிக்கி பூட்டியே தான் வச்சிருக்காங்க;

அதுக்கு முன்னாடியெல்லாம் செந்தூர் = ஒரு வீடு போலத் தான்;

கோட்டம்! = பனை மரங்கள் சூழ், அலை வாய்ச் செந்தூர்க் கோட்டம்;


[image error]கடலில் இருந்து 100 மீட்டர் கூட இருக்காது, அவன் இருக்கும் இடம்!

கடல் பொங்கினா முங்கிற வேண்டியது தான்!


செந்தூர்க் கருவறை = கடல் மட்டத்தை விடக் கீழே, பள்ளத்தில்!

ஞாபகம் வச்சிக்கோங்க; நீங்களும் கடலுக்கு அடியில் தான்:)  Over head Water Tank – Sea Tank:)


அவனை இறங்கித் தான் பாக்கணும்;

பார்த்த பின், நம்மை, மேலே ஏற்றி விடுவான்:)


செம்பாறைச் சந்தன மலையைக் குடைந்து கட்டிய அறை; குளு குளு -ன்னு அலை வாய்;

இன்னிக்கி மலை இருக்கும் இடமே தெரியாது பொடி ஆக்கியாச்சு; சேயோனை ஒட்டி இருக்கும் மாயோன்/திருமால் ஆலயத்தில்… மலையின் கொஞ்சமே கொஞ்சம் மிச்சப் பகுதியைப் பார்க்கலாம்;


[image error]ஒரு வீடு போல எளிமையான கோட்டத்தில்…

புராணங்களும்/ போத்தி (எ) பூஜா பரம்பரைக்காராளும் புகுந்து கொண்டு,

தமிழ் முருகனைச், “சுப்ரமணிய ஸ்வாமி” ஆக்கி விட்டனர்;


(உண்மை கசப்பினும் உண்மையே; எவரேனும் வருந்தினால் மன்னிக்க; இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்)

எனினும், அவன் பண்டைத் தமிழ் அடையாளங்கள் தேய்ந்து விடாமல்…

இலக்கியத்திலும்/பதிவிலும்… தமிழோடு ஒன்றியே நின்று வருகின்றான்!


கையில் மலர் ஏந்திய ஒரே முருகன் ஆலயம் = செந்தூர்;


அவன் மேனி, கரும் பாறையாய் இல்லாது…

வெண்மை-கருமை கலந்த, மாக்கல் போல் வரி வரியாய்… திருமுழுக்கிலே காணலாம்;

* ஒரு கையில் தாமரை மலர், இன்னொரு கை ஒய்யாரம்!

* பின் கையில் குறு வேற் படையும், மணி மாலையும்!


அவன் முகமும் முறுவலும், அவன் மார்பும் மறைப்பும்..

பிறந்த மேனியாய் நிற்கும் காதலனைக் கண்ட பின்..

என் அமுதினைக் கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே!



காபி உறிஞ்சல்:



(மேலே சொன்ன கருவறைக் காட்சி, இந்தப் பாடல் வரிகளில் தெறிக்கும்;

All about hands – கை உள்ள Guy)


[image error] ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்

செம் பொறி வாங்கிய, மொய்ம்பின் சுடர் விடுபு


ஆரம் என்னும் கழுத்து மாலை தாழ்வாத் தொங்கும் பகட்டு மார்பு;

அது என்ன பகட்டு? = “ஷோக்கு”ப் பேர்வழியா அவன்?:)

பகடு = எருது; மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் -ன்னு குறள்; அப்படி ஏறு போல் மார்பு!

ஒரு பொண்ணு, காதலன் முகத்தைக் கண்ட பின், மார்பையே காண்பாள் – அதிலே தலை சாய்க்க!


செம் பொறிகள் திட்டுத் திட்டா அவன் ஒடம்பு முழுக்க! அதனால் என்ன? அதில் தான் அவன் வலிமை சுடர் விடுது;


வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு, நிமிர் தோள்:

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை


[image error]வண் புகழ் = வள்ளல் புகழ்!

செல்வத்தைக் கூட குடுத்துருவான் மனுசன்;  ஆனா, தன் புகழை இன்னொருத்தருக்குக் குடுத்துற மனசு வரவே வராது;

ஆனா இவன் குடுப்பான் = வண் புகழ்/ புகழ் வண்


அப்படிக் குடுப்பதால், வசிந்து = வளைந்து, வாங்கி = நிமிர்ந்து…

ஒரே சமயத்தில் வளைந்தும் + நிமிர்ந்தும் உள்ள தோள்கள்;

திருமுழுக்கில், கிட்டக்க அவன் மேனியைப் பார்த்தா அந்த Bend தெரியும்!


விண் செல்லும் மரபு = மேல் உலகம் செல்லும் நன்னெறி

ஐயர் = ஐயன்/ ஐயா என்பதின் பன்மை; (சாதி அல்ல)

அப்படி, விண்ணுலகம் செல்லும் நெறியில் உள்ளவர்க்காக ஏந்திய மணிமாலைக் கரம்!


[image error]உக்கம் சேர்த்தியது ஒரு கை;

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை,


குறங்கு = தொடை!

ஒரு கை = தொடையில் அசையுதாம்:)

ஒரு கை = உக்கத்தில் (பக்கத்தில்) வைத்து,

கலிங்கம் = ஆடை/வேட்டி; தொடையில் உள்ள வேட்டியை adjust பண்ணிக்கறானோ மாப்பிள்ளை?:)


அங்குசம் கடாவ ஒரு கை; இரு கை

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; 


[image error]யானை, மயில், ஆடு = மூன்றும் முருகனுக்கு ஊர்திகள்;

யானை = குறிஞ்சி; மயில்/ஆடு = முல்லை

குறிஞ்சித் தலைவன், கையில் அங்குசம் ஏந்தியுள்ளான், யானை அடக்க!


ஐ இரு வட்டம் = வியப்பு + கருமை + வட்ட நுனி = வேல்

எஃகு வலம் திரிப்ப = அந்த வேலை வலமாய் ஏந்தி இருக்கான்

கருப்பான எஃகு வேலே முருகன் வேல்;

தங்க வேல்/வைர வேல் எல்லாம் சும்மா ஆடம்பரம்-அலங்காரம்;


ஒரு கை மார்பொடு விளங்க,

ஒரு கை தாரொடு பொலிய; 


[image error]ஒரு கை = மார்பில்

ஒரு கை = மாலையில்!


ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப,

ஒரு கை பாடு இன் படு மணி இரட்ட; 


ஒரு கை = கீழே விழுவது போல் இருக்கும் தொடி (வளையல்-Bracelet);  கல கல சத்தம் எழுப்புறான்

ஒரு கை = வளையில் உள்ள மணிகள்; அதை இரட்டிக், கல கலக்குறான்!


[image error] ஒரு கை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய,

ஒரு கை வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட;

ஆங்கு, அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி


ஒரு கை = நீல வான மேகத்தை உலுக்குறான், மரத்தில் பழம் உலுக்குவது போல்; மழைத் துளி கொட்ட..

ஒரு கை = வான் அர மகள், அவளுக்கு மாலை சூட்டுறான்!


வானர மகள் = குரங்குப் பொண்ணு -ன்னு எடுத்துக்கக் கூடாது; அதான் பதம் பிரிச்சிக் குடுத்துள்ளேன்;

வான் அர மகள் = யாரு?

வான்-ன்னா மேகம்; அர-ன்னா அரவம் (பாம்பு);

பாம்பிலே படுத்துள்ள கருமேகம்; பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்!

அந்த கருப்பன் = மாயோன்; அவன் மகள், அதே கரிய வள்ளி; Family Color:)


இப்படி, பன்னிரு கையும் (அ) பல் இரு கையும்;

இந்தப் பாட்டில் சொன்ன இத்தனை கையும் ஏதோ type type-ஆ ஆயுதம் ஏந்திக் காட்டலை நக்கீரரு; வேட்டி சரி செய்து கொள்ளல் போன்ற இயற்கையான செயலாவே காட்டுறாரு;


அதான் பல+இரு+கை

பல இரு கை = கைகளால், பலப்பல செய்து காட்டும் செந்தூர் முதல்வன் – செந்தில்!


செந்து + இல் = செம்மை + அகம் = Good Heart!

* இயேசு நாதப் பெருமானை Good Shepherd என்பது போல்,

* முருகப் பெருமானை Good Heart = செந்து+இல் = செந்தில்!


…..

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்

அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே. அதாஅன்று


சீர் = புகழ்!

ஓங்கு + உயர் + விழு = மூனும் ஒரே பொருள் தான்; ஒரு பொருள் மும் மொழி:)

ஒவ்வொன்னாப் போட்டுப் பாக்குறாரு நக்கீரர்; ஆனா எவ்வளவு அடைமொழி போட்டாலும் அடைக்க முடியலை; அடையா அழகன்; நெஞ்சுக்குள் அடைவான்!


[image error]அலைகள் வந்து வந்து வாய்க்கும் = அலைவாய்;

தி்ரு+சீர்+அலை+வாய் = திருச்செந்தூர்

நிலைஇய பண்பே = அலைவாயில் நிலையா நிக்குறான்;


[image error]கடைசி வரியை…

அலைவாய்ச் சேறல் நிலைஇய பண்பே -ன்னு படிக்காம, ஒன்னாக் கூட்டிப் படிங்க…

ஓங்கு+உயர்+விழு…

“சீர்+அலைவாய்”ச் சேறலும்… நிலைஇய பண்பே!


முன்பு… சொன்ன சொல்லு மாற மாட்டான்;

முன்பு… பழகின பண்பு மாற மாட்டான்;

= நிலைஇய பண்பே!

= என், அவன் அவன் அவன்!

= செந்தூர் முருகவா சேர்த்துக் கொள்!


dosa 101/365


(குறிப்பு: செந்தூர்க் கருவறையில், ஓதுவாரோடு அதிக நேரம் கண்ட காட்சி ஆதலால்,

காணாதவர்க்கும் அக் காட்சி இன்பம் கிட்ட, இந்த வருணனை என்றேனும் பயன்படக் கடவது…)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2012 01:45
No comments have been added yet.


Kannabiran Ravishankar's Blog

Kannabiran Ravishankar
Kannabiran Ravishankar isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Kannabiran Ravishankar's blog with rss.