ஒரே ஒரு சிறுகதை - விட்டல்ராவ் உரையாடல்கள் - புதிய புத்தகத்தின் முன்னுரை
ஒருநாள்நண்பரொருவரைச் சந்திப்பதற்காக வெளியே சென்றிருந்தேன். இருவரும் ஒரு பூங்காவில்உட்கார்ந்து இரண்டுமணி நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். பிறகு அவரைஅனுப்பிவைத்துவிட்டு, வீட்டுக்குத் திரும்புவதற்காக பேருந்துநிறுத்தத்துக்கு வந்தேன். நீண்ட நேரமாகியும் எங்கள் குடியிருப்பு வழியாகச்செல்லக்கூடிய பேருந்து வரவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக மழை வந்துவிட்டது.
தூறலாகத்தொடங்கிய மழை சட்டென வலுக்கத் தொடங்கியது. பேரோசையுடன் தரையை மோதித் துளைப்பதுபோலமழை பொழிந்தது. பேருக்குத்தான் அது பேருந்துநிறுத்தமே தவிர, அங்கு நிழற்குடைஎதுவும் இல்லை.. பக்கத்திலேயே ஒரு வணிகவளாகத்தின் முன்புறத்தில் மழையில்நனைந்துவிடாதபடி தற்காத்துக்கொள்ள ஒரு சிறிய இடம் இருந்தது. அடுத்த கணமே பேருந்துக்குக்காத்திருந்தவர்கள் அனைவரும் அங்கு ஓட்டமாக ஓடி நின்றோம்.
மழையாகஇருந்தபோதும் வெயில் வெளிச்சமும் விசித்திரமான வகையில் நீடித்திருந்தது.மழைக்குரிய இருளே இல்லை. ஆயினும் மழை கொட்டியது. மழையின் சத்தத்தைக் கேட்டபடி,கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து அருவி மாதிரி விழுந்து வழிந்தோடும் நீர்ப்பெருக்கைவேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன்.
எதிர்த்திசையில்ஒரு பெரிய பங்களா இருந்தது. கண்ணாடி மாளிகையைப்போல பளபளவெனக் காணப்பட்டது. புதிதாகக்கட்டப்பட்ட கட்டடம். முகப்பிலேயே அதன் பெயர் பெரிய எழுத்துகளில் விளக்குகளாலேயேவடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருவர் கூட அந்தக் கட்டடத்தின் அருகில் ஒதுங்கிநிற்கமுடியாதபடி மதில் மறைத்து நின்றது..
“இந்தஇடத்துலதான் ஒரு காலத்துல பெரிய தோப்பு இருந்திச்சி. நான் சின்ன பிள்ளையா இருந்தசமயத்துல நானும் கூட்டாளிங்களும் இங்க வந்து சடுகுடு விளையாடுவோம். கொய்யா மரம்,பலாமரம்லாம் நிறைய இருக்கும்….” என்று ஒரு பெரியவர் தனக்கு அருகிலிருந்த ஓர்இளைஞனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவனுக்குஅந்த உரையாடலில் எவ்விதமான ஆர்வமும் இல்லை. ஆயினும் வெளியே மழைபொழிந்துகொண்டிருந்தபடியாமல் அவர் சொல்வதைக் கேட்டு தலையசைத்தபடி இருந்தான். நான்அப்படி ஒரு தோப்பை அந்த இடத்தில் பார்த்ததே இல்லை. நான் பார்க்காத செய்தி என்பதால்மிகுந்த ஆர்வத்துடன் அவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினேன்.
”ஸ்கூல்விட்டதும் இங்க வந்துதான் நாங்க எல்லாரும் விளையாடுவோம். நான் படிச்சி முடிச்சிவேலைக்குப் போகறவரைக்கும் கூட அந்தத் தோப்பு இருந்தது. அதுக்கப்புறம் யாரோ ஒருபணக்காரன் அந்தத் தோப்பை வாங்கி தோப்புல இருந்த எல்லா மரங்களையும் வெட்டிட்டு, ஆதர்ஷான்னுஒரு பெரிய தியேட்டரு கட்டினான். தெலுங்கு, தமிழ், கன்னடம்னு எல்லா மொழிப் படங்களையும்காட்டி பணம் சம்பாதிச்சான். எல்லாப் பக்கத்துலேர்ந்தும் படம் பார்க்கறதுக்கு ஜனங்கவந்து கூட்டம் கூட்டமா நிப்பாங்க…..”
நான்அவர் குறிப்பிட்ட தியேட்டரைப் பார்த்திருக்கிறேன். அத்தியேட்டரில் திரைப்படங்களும்பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு இருந்த தோப்பைப்பற்றி எதுவும் தெரியாது. அதனால்அந்தப் பெரியவர் விவரிப்பதைக் கேட்க எனக்கு ஆர்வமாக இருந்தது. அவர்சொல்வதையெல்லாம் சின்னப்பிள்ளை மாதிரி வாயைப் பிளந்தபடி கேட்கத் தொடங்கினேன்.
“தனியார்சேனல் வந்து டிவியில படம் காட்ட ஆரம்பிச்சதும் தியேட்டர்ல நடமாட்டம் குறைஞ்சி போச்சி.எவ்ளோ காலத்துக்கு நஷ்டத்தைத் தாங்கிகிட்டு அவனும் தியேட்டர் நடத்துவான்? அதான்,வந்த விலைக்கு தியேட்டர வித்துட்டு போயிட்டான்.”
அவர்சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த இளைஞனின் முகத்தில் எவ்விதமான எதிர்வினையும்தெரியவில்லை. ஏதோ கதை கேட்பதுபோல ஒப்புக்கு ம் ம் என்று தலையை அசைத்தபடிஇருந்தான். “காலம் மாறமாற ஒன்னொன்னும் அப்படி மாறித்தானே ஆவணும். வேற என்ன வழிஇருக்குது?” என்று நானாகவே அவரைப் பார்த்துக் கூறிக்கொண்டே உரையாடலுக்குள் நுழையமுயற்சி செய்தேன்.
அவர்அப்போதுதான் என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். நானும் அவர் சொன்னதையெல்லாம்கேட்டுக்கொண்டிருந்ததை அவர் உணர்ந்துகொண்டார். “நம்ம கையில எதுவும் இல்லைங்கறதுதான்உண்மை. நாம எதையும் நிறுத்தமுடியாது. எல்லாத்தயும் நாம வேடிக்கைதான்பார்க்கமுடியும்” என்றார்.
என்குறுக்கீட்டை அவர் விரும்பவில்லையோ என எனக்குச் சங்கடமாக இருந்தது. அவர்முகக்குறிப்பிலிருந்து எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. “இந்தக்கட்டடமும் இந்தத் தொழிலும் இன்னும் எத்தனை நாளுக்கு ஓடும்? அதிகபட்சமா அதுவும்இன்னும் ஒரு நாற்பது வருஷம் தாங்கும். அவ்வளவுதான். அதுக்கப்புறம் இதைமுழுங்கிட்டு இன்னொன்னு புதுசா வரும்” என்றார். பிறகு தன் பொக்கைவாயைத் திறந்துபுன்னகைத்தபடியே “நம்ம வாழ்க்கையே இங்க நிரந்தரமில்லை. இதுல கட்டடத்து ஆயுளைப்பத்தி சொல்ல என்ன இருக்குது?” என்றார்.
அந்தஉரையாடலின் நிறைவான வாசகத்தைப்போல அவர் அந்த வாக்கியத்தைச் சொன்னார். எதைச் சொல்லிஅடுத்த உரையாடலைத் தொடங்குவது என நான் நினைத்துக்கொண்டிருந்தபோதே எங்கள்குடியிருப்புக்குச் செல்லும் பேருந்து வந்துவிட்டது. எனக்கு வேறு வழி தெரியவில்லை.அந்தப் பெரியவரிடம் விடை பெற்றுக்கொண்டு, அங்கிருந்து வெளியேறி ஓடி பேருந்தில்ஏறிவிட்டேன். அவர் சொன்ன ஆயுள் என்ற சொல் என் மனத்தில் பசைபோல ஒட்டிக்கொண்டது.
பேருந்துப்பயணம்முடியும் வரையில் அந்தப் பெரியவரின் சொற்களே மனத்தில் சுழன்று சுழன்று வந்தன.மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதுதானே வரலாறு. ஆனால் ஒரு சமூகத்தில்எழுதப்படும் வரலாற்றில் இந்த அம்சங்கள் இருப்பதில்லை. ஒரு நகரத்தில் மின்சாரநிலையம் எப்போது வந்தது, மின்சார ரயில் எப்போது வந்தது என்பதற்கெல்லாம் இடமிருக்கும்.ஆனால் அந்த நிலையங்களுக்காக தம் வசிப்பிடங்களைக் கொடுத்துவிட்டு வெளியேறியவர்களின்வாழ்க்கையைப்பற்றிய குறிப்புகளுக்கு அதில் இடம் இருப்பதில்லை. ஆனால் அத்தகு குறிப்புகளை,பேருந்துநிறுத்தத்தில் நின்றிருந்த பெரியவரைப்போல யாரோ ஒருவர் எங்கோ இன்னொருவரிடம்தம் உரையாடல் வழியாக எடுத்துரைத்தபடி இருப்பார். அச்சிட்ட எழுத்து வரலாறுக்குஇணையானதாக இந்த உரையாடல் வரலாறுக்கும் இச்சூழலில் இடமிருக்கிறது. ஒவ்வொருவிடுபடலும் இன்னொருவரால் நிரப்பப்பட்டபடியே இருக்கும்.
விட்டல்ராவின்உரையாடல்களிலும் வரலாற்றின் ஒழுக்கில் விடுபட்டுப்போனவர்களின் வரலாறு அடங்கியிருக்கிறதுஎன்பதை எப்படியோ நான் தொடக்கத்திலேயே உணர்ந்துகொண்டேன். ஒரு குறிப்பிட்ட காலம்வரைக்கும் நான் அவரோடு உரையாடி, அந்நினைவுகளை என் நெஞ்சில் சுமந்துகொண்டு திரும்பிவருபவனாகவே இருந்தேன். ஏதோ ஒரு நேரத்தில்தான் அவற்றையெல்லாம் பதிவுசெய்துவைக்கவேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணத்தை இன்றுவரை நிறைவேற்றி வருகிறேன்.
அவருடையஉரையாடல்கள் ஒரு நூலகத்துக்குச் சென்று புத்தகத்தைஎடுத்துப் படிக்கும் அனுபவத்துக்கு நிகரானது. அவர் உரையாடத் தொடங்கினால் எண்ணற்றதகவல்கள் வந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டும் ஆற்றல்அவருக்கு உண்டு. அவர் வழியாக நான் எண்ணற்ற மனிதர்களைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.இலக்கியம் சார்ந்தும் வாழ்க்கைப்போக்கு சார்ந்தும் ஏராளமான தகவல்களையும் தெரிந்துகொண்டேன்.பிறருடன் பகிர்ந்துகொள்ளும் தோறும் அந்த அனுபவம் விரிவடைந்தபடியே செல்லும். காலம்கடந்த பிறகும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
விட்டல்ராவும் நானும் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் உரையாடுவதுவழக்கம். அந்த உரையாடல் சிற்சில சமயங்களில் ஐந்து பத்து நிமிடங்களிலும் முடிந்ததுண்டு.சிற்சில சமயங்களில் ஒருமணி நேரம் வரைக்கும் நீண்டதுமுண்டு. அன்றன்றைக்கு அமைகிற சூழலைப்பொறுத்தது அது. அத்துடன் மாதத்தில் இரண்டு மூன்று முறையாவது விட்டல்ராவின் வீட்டுக்குச்சென்று அவரோடு உரையாடிக்கொண்டிருப்பதும் உண்டு. பல நேரங்களில் நானும் நண்பர் திருஞானசம்பந்தமும்சேர்ந்து செல்வோம். அவர் ஊரில் இல்லாத நேரங்களில் நான் மட்டும் சென்று பேசிக்கொண்டிருந்துவிட்டுத்திரும்புவேன்.
சமீபத்தில் ஓர் உரையாடலில் எங்கள் ஆரம்பப்பள்ளி நாட்களின்நினைவுகளை மாறிமாறிப் பேசிக்கொண்டோம். நான் படித்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்மூன்றாம் வகுப்பு வரைக்கும் எனக்கு வகுப்பாசிரியையாக இருந்தவர் நவநீதம் டீச்சர். கண்டிப்பானவர்.அதே சமயத்தில் சிறார்கள் மீது பாசம் கொண்டவர். ஒருமுறை எனக்குக் காய்ச்சல் வந்து மூன்றுநாட்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லவில்லை. மூன்றாவது நாள் சாயங்காலம் பள்ளிக்கூடம்விட்டதும் பிற பிள்ளைகள் புடைசுழ எங்கள் வீட்டுக்கு வந்து என் நலம் பற்றி விசாரித்துவிட்டுச்சென்றார்.
நான் அந்த நிகழ்ச்சியை விட்டல்ராவிடம் சொன்னபோது, அவர் தன்னுடையபள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்த யூசுப்கான் என்னும் ஆசிரியர் மீது பிள்ளைகள் கொண்டிருந்தபாசத்தையும் பிள்ளைகள் மீது அவருக்கு இருந்த பாசத்தைப்பற்றியும் பகிர்ந்துகொண்டார்.ஓவியப்பாடத்துக்கு மதிப்பெண் இல்லை என்பதால் ஓவிய வகுப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தபிள்ளைகளுக்கு யூசுப்கான் சார் ஓவியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பிள்ளைகளின்கவனத்தைத் திசைதிருப்பப் பாடுபட்டதையும் யூசுப்கான் சார் ஒவ்வொரு நாளும் ஒட்டுப்போட்டுதைத்த கோட்டை அணிந்துகொண்டு வருவதைப் பார்த்து மனம் பொறுக்கமுடியாத பிள்ளைகள் ஆளுக்குக்கொஞ்சம் பணத்தைப் போட்டு அவருக்குப் புதிதாக ஒரு கோட்டு வாங்கிவந்து கொடுத்ததையும்சொன்னார்.
அவருடைய காலத்தில் யூசுப்கான் சார் போலவும் என்னுடைய காலத்தில்நவநீதம் டீச்சர் போலவும் இன்றைய காலத்திலும் யாரோ ஒருவர் எங்கோ இருக்கக்கூடும். நீண்டுசெல்லும் கனிவென்னும் ஒரு சரடு காலத்தை ஊடுருவிக்கொண்டு சென்றபடியே இருக்கிறது என்பதையேஅன்றைய உரையாடல் வழியாக நான் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்று புரிந்துகொண்டேன்.
விட்டல்ராவின் உரையாடல்கள் வெறும் தகவல்கள் அல்ல. அக்காலத்துவாழ்வியல் சூழ்நிலைகளையும் மனிதர்களையும் புரிந்துகொள்ள அந்த உரையாடல்கள் ஒரு வாசலாகஅமைந்திருக்கின்றன. உரையாடி முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய பிறகு அல்லது ஏதோஓர் அனுபவத்தின் தொடர்ச்சியாக ஒரு மீள்நினைவாக அவருடைய உரையாடல்களை அசைபோட நேரும்போதுஉருவாகும் மனஎழுச்சி மகத்தானதொரு அனுபவம். அப்போது அனைத்தையும் தொகுத்து யோசிக்கும்தருணத்தில் திரண்டுவரும் கேள்வி அல்லது விடைஒரு கவித்துவமான அனுபவம். அவற்றை உணர்த்தவேண்டும் என்பதற்காகவே அவருடன் நிகழ்த்திய உரையாடல்களைத் தனித்தனி கட்டுரைகளாக எழுதவேண்டும்என்ற எண்ணம் எழுந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய அந்த எண்ணத்தின் விளைவாகஅத்தகு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வெளிவந்தன. இது மூன்றாவது தொகுதி. தன்னுடைய எண்பத்துநான்காவதுவயதில் மின்னிதழில் ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரையைத்தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் அவருடைய உற்சாகத்தைக் கண்டு நானும் உற்சாகமடைகிறேன்.இத்தொகுதி அவருக்கு நான் அளிக்கும் அன்புப்பரிசு. இத்தொகுதியை மிகச்சிறந்த முறையில்நூலாக வெளிக்கொண்டு வந்திருப்பவர் நண்பர் நடராஜன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இத்தொகுதியில்அடங்கியுள்ள எல்லாக் கட்டுரைகளையும் ஒரு தொடர் போல ஒவ்வொரு மாதமும் அம்ருதா இதழ் வெளியிட்டுவாசகர்களிடையில் விரிவான வகையில் அறிமுகம் கிடைக்க உதவியது. எழுத்தாளர் திலகவதிக்கும்தளவாய் சுந்தரத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடித்ததுமேவழக்கம்போல முதல் வாசகியாகப் படித்து வந்தவர் என் மனைவி அமுதா. விட்டல்ராவின் உரையாடல்கள்அவருக்குப் புதிதல்ல. விட்டல்ராவ் எங்கள் வீட்டுக்கு வரும் சமயங்களில் அவரும் உரையாடல்களில்பங்கெடுத்துக்கொண்டதுண்டு. அவர் விவரிக்கும் அனுபவங்களை அவரும் நேரிடையாகவே கேட்டிருக்கிறார்.என்னுடைய எல்லா முயற்சிகளிலும் எனக்கு உற்ற துணையாக இருக்கும் அமுதாவுக்கு என் இனியஅன்பு.
என் மனைவியைப்போலவே எல்லாக் கட்டுரைகளையும் தொடர்ச்சியாகவாசித்தவன் என் நெருங்கிய நண்பன் பழனி. பல கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் விட்டல்ராவின்இளமைக்காலத்துச் சித்தரிப்புகள் பல நேரங்களில் எங்கள் பள்ளிக்கால அனுபவங்களை அசைபோட்டுஉரையாட ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கின்றன. பழைய நினைவுகளை அசைபோடும்போது நெஞ்சில்நிறையும் இனிமைக்கு அளவே இல்லை. அவனுக்கும்என் அன்பு.
இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஒருகணம்என் மனத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் முகம் எனக்குள் திரண்டு வந்து நின்றது.அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரைச் சந்தித்து பலமுறை உரையாடியிருக்கிறேன். அவையனைத்தும்என் வாழ்வில் இனிய கணங்கள். அவரோடு உரையாடிய அனுபவங்களின் அடிப்படையில், அவரும் விட்டல்ராவைப்போலவேதன் இளமைக்காலத்து அனுபவங்களையும் பழகியவர்களின் நினைவுகளையும் கூர்மையான அவதானிப்புடன்பேசுபவர் என்பதை இப்போது ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்கிறேன். அந்தப் புரிதலின்அடிப்படையிலேயே அவரைப்பற்றிய நினைவு வந்துவிட்டது. அசோகமித்திரனின் நெஞ்சில் நடிகர்திலீப்குமார் பற்றிய நினைவுக்கும் இடமிருந்தது. எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றியநினைவுக்கும் இடமிருந்தது. அவரே பல தருணங்களில் ஏராளமான அத்தகு நினைவுக்குறிப்புகளை சின்னச்சின்ன கட்டுரைகளாகஎழுதி வெளியிட்டார்.
விட்டல்ராவும் அசோகமித்திரனும் நெருங்கிய நண்பர்கள். இருவருமேமிதிவண்டிகளில் பயணம் செய்து பல திரைப்படங்களுக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாகச்சென்று வந்தவர்கள். அதைப்பற்றி விட்டல்ராவே பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவருடையநெஞ்சில் அசோகமித்திரனுக்கென ஒரு தனியிடம் உண்டு என்பதை நான் அறிவேன். நண்பர் விட்டல்ராவும்நானும் நிகழ்த்திய உரையாடல்கள் இப்படி நூல்வடிவம் பெறுவதைப் பார்க்க நேர்ந்தால் அசோகமித்திரன்என்ன நினைப்பார் என்பது எனக்குள் சுவாரசியமான ஒரு கேள்வியாக இருக்கிறது. ஒரு சின்னபுன்முறுவலோடு “நல்லா செஞ்சிருக்கே, இவனே” என்று சொல்லியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.இப்படியெல்லாம் நினைத்துக்கொள்வதை நான் விட்டல்ராவிடம் தெரிவித்தேன். ஒருகணம் கூட யோசிக்காமல்அவரும் “ஆமாமாம். அப்படித்தான் சொல்லியிருப்பார். அப்படி சொல்றதுதான் அவர் பாணி” என்றார்.விட்டல்ராவுக்கும் எனக்கும் நண்பரான மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு இப்புத்தகத்தைச்சமர்ப்பணம் செய்வதில் மிகவும் மனநிறைவடைகிறேன்.
Paavannan's Blog
- Paavannan's profile
- 4 followers

