அழகர் கோயில் Quotes

Rate this book
Clear rating
அழகர் கோயில் அழகர் கோயில் by தொ. பரமசிவன்
73 ratings, 4.16 average rating, 7 reviews
அழகர் கோயில் Quotes Showing 1-22 of 22
“திருக்கானப்போர் இன்று சிவகங்கை வட்டத்தில் காளையார் கோயில் என்ற பெயரோடு விளங்குகிறது.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“கருப்பசாமி சன்னிதியில், வழக்குகளில் சத்தியப் பிரமாணம் செய்வது வழக்கமாகவுள்ளது. இதன்படிப் பிரமாணம் செய்பவர் சத்திய வாக்கை ‘வாங்கிய பணத்தை நான் கொடுத்துவிட்டேன்’, ‘திருடப்பட்ட பொருளை நான் எடுக்கவில்லை’ என்பதுபோல சொல்லி, சந்தனக்கதவு வழியாக உள்நுழைந்து, பதினெட்டுப் படிகளையும் தாண்டிக் கோபுரவாசற் கதவு வழியாக வெளிவருதல் வேண்டும். ‘இத்தெய்வத்தின் முன் ஒருவரும் பொய் சொல்லவும் துணிய மட்டார்கள். ஆகையால் பெரிய வழக்குகள், வியாஜ்ஜியங்கள் முதலியவற்றில் உண்மையறிய, வியாஜ்ஜியக்காரர்களைக் கோர்ட்டார் கடைசி நேரத்தில்கூட இக்கருப்பணசாமி சன்னிதியில் பிரமாணம் செய்யச்சொல்லி உண்மையைக் கண்டுபிடித்துக்கொள்வார்கள்’ என்று கோயில் வரலாறு விளக்குகிறது.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“கோயில்களில் உயிர்ப்பலித் தடைச்சட்டம் வருமுன்னர் கருப்பசாமி சன்னிதி முன் ஆடுகள் வெட்டப்பட்டன. தற்போது வெளிக்கோட்டைப் பகுதியில் வெட்டப்படுகின்றன. அடியவர்கள் கத்தி, சுக்குமாந்தடி (கதை) முதலிய ஆயுதங்களையும், சிலர் புதிய செருப்புகளையும் தருகின்றனர்.

கருப்பசாமிக்குத் தனித் திருவிழா ஏதுமில்லை. ஆடி மாதம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில், மதுரையைச் சேர்ந்த இடையர் சாதியினரான இரண்டு குடும்பத்தவர் இக்கதவுகளில் சந்தனம் சார்த்தி வழிபடுகின்றனர். அவர்கள் முன்னோரான சுப்பக்கோன், பச்சக்கோன் என்ற இருவர் இக்கதவுகளைச் செய்தமைத்த செய்தி, சந்தனம் சாத்தும் நிகழ்ச்சியினை வருணிக்கும் நாட்டுப்பாடலால் உறுதிப்படுத்தப்படுகிறது.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“இக்கோபுர வாசல் அடைக்கப்பட்டது குறித்து மக்களிடத்தில் ஒரு கதை வழங்கிவருகிறது:

“ஒரு காலத்தில் மலையாளத்திலிருந்து பதினெட்டு லாடர்கள் இக்கோயில் இறைவனின் ‘களை’யை (இறைவனின் அருளொளி Spiritual essence) திருடிச்செல்லத் திட்டமிட்டுவந்தனர். அவர்கள் மந்திர தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள். ஒரு மந்திர மையைக் கண்ணில் தடவிக்கொண்டால் அவர்கள் பிறர் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். அந்த மையைத் தடவிக்கொண்டு அவர்கள் கோயிலுக்குள் புகுந்துவிட்டனர். இரவு நேரங்களில் கருவறையிலுள்ள இறைவனின் களையை மந்திர வலிமையால் இறக்கித் தாங்கள் கொண்டுவந்திருந்த கும்பத்துக்குள் அடக்கிவிடுவர். இவ்வாறு கொஞ்ச கொஞ்சமாகச் சில நாட்கள் வரை இறைவனின் களையை இறக்கிக்கொண்டே வந்தனர். இறைவன் ஒருநாள் கோயில் பட்டரின் கனவில் தோன்றி, இச்செய்தியைத் தெரிவித்துவிட்டார். பட்டரும் மறுநாள் நாட்டார்களைத் திரட்டி இச்செய்தியைச் சொன்னார். அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி மறுநாள் பட்டர் வழக்கம்போல் கருவறையைத் திறந்து பூசைகளைச் செய்து, பின் மிக அதிகமாக ஆவி பறக்கும் சுடுசோற்றை இறைவனுக்குப் படைத்துவிட்டு வெளியில் வந்து திடீரெனக் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டார்.

சுடுசோற்றிலிருந்து எழும்பிய ஆவி மந்திரக்கார லாடர்களின் கண்ணில் இருந்த மையைக் கரைத்துவிட்டது. இப்பொழுது அவர்கள் பிறர் கண்ணுக்குத் தெரியும்படி ஆனார்கள். கோயிலைச் சுற்றி முன்னரே தயாராக இருந்த நாட்டார்கள் கதவைத் திறந்து பதினெட்டுப் பேரையும் பிடித்துக்கொண்டார்கள். வெளியில் கொண்டுவந்து பதினெட்டுப் பேரையும் வெட்டி அவர்கள் தலைகளைக் கோயில் கோபுரவாசல் அடியில் புதைத்துவிட்டனர். அவர்களோடு துணையாக வந்திருந்த கருப்பசாமி என்ற தெய்வம் மட்டும் ‘என்னை விட்டு விடுங்கள். நான் இந்தக் கோபுரவாசலில் இருந்து இனிமேல் இக்கோயிலைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கெஞ்சியது. அதை மட்டும் அப்படியே விட்டுவிட்டனர்.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“தமிழ்நாட்டுப் பெருந்தெய்வக் கோயில்களில் அழகர் கோயில் சில தனித்த நடைமுறைகளையுடையது. அவற்றுள் ஒன்று இக்கோயிலின் தலைவாசல் (ராஜகோபுர வாசல்) எப்பொழுதும் அடைக்கப்பட்டிருப்பதாகும். சிறுதெய்வங்களில் ஒன்றான பதினெட்டாம்படிக் கருப்பசாமி என்ற தெய்வம் இக்கோபுர வாசலில் உறைகின்றது. எனவே இக்கோபுர வாசல் ‘பதினெட்டாம்படி வாசல்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

“அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படிக் கதவுகளுக்குச் சந்தனம், குங்குமம், கற்பூரம் முதலியவை பூசி, மாலை, புஷ்பம் முதலியவற்றால் அலங்கரித்துப் பூஜை செய்வார்கள். இப்பதினெட்டாம்படிக் கதவு பிரம்மோத்ஸவ காலத்தில் (ஆடி மாதம்) சக்கரத்தாழ்வார் வருவதற்காக மட்டும் வருஷம் ஒருமுறை திறக்கப்படும். சில சமயங்களில் ஏதாவது பிரமாணம் செய்ய விரும்புபவர்களுக்கு அது திறக்கப்படும். ஆகையால் அழகர் கோயில் பிரதான வாசலாகிய இப்பதினெட்டாம்படி வாசல் சாதாரணமாக மூடப்பட்டே இருக்கும். இதற்கு வடக்கே உள்ள வண்டிவாசல் என்பதுதான் கோயிலுக்குள் போகும் வழி” என்று ஸ்ரீகள்ளழகர் கோயில் வரலாறு கூறுகின்றது.

“சந்தனம் சாத்தப்பெறும் கதவில் உறைகின்ற தெய்வமே பதினெட்டாம்படிக் கருப்பசாமியாகும். இவருக்கு இங்கே உருவம் இல்லை. இங்கு பதினெட்டாம்படிக் கோபுரக் கதவுகளையே இத்தெய்வமாக எண்ணிப் பூஜைகள் நடக்கும். மற்ற இடங்களில் இவர் கையில் ஒரு கொக்கியும் (அரிவாளும்), கதாயுதமும், ஈட்டி முதலியவையும் இருக்கும். காலில் செருப்பு அணிந்திருப்பார். இவரது தரிசனம் பயங்கரமாகவும் யுத்தபாவனையிலும் இருக்கும்” என்றும் கோயில் வரலாறு கூறுகின்றது.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“இக்கோயிலில் பரம்பரையாகப் பணிசெய்யும் பிராமணப் பணியாளரில் ‘அமுதார்’ என்ற பிரிவினர், பிராமணர்களில் ‘சாமானியர்’ எனப்படும் பிரிவினைச் சேர்ந்தவர்கள், ஏனைய பிராமணப் பிரிவினர் சாமானியரை இழிந்த பிராமணராகக் கருதுவர். தமிழ்நாட்டில் வேறெந்த வைணவக் கோயிலும் சாமானியர் பணியாளராக அனுமதிக்கப்படுவதில்லை. பஞ்சாங்கம் கணித்துச் சோதிடம் கூறுவதும், பிராமணரல்லாத சாதியாருக்கு ‘புரோகிதம்’ செய்வதும் சாமானியப் பிராமணரின் குலத்தொழிலாகும்.

இக்கோயில் உயர்பிரிவினைச் சேர்ந்த சோழியப் பிராமணப் பணியாளர்கள், சாமானியர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கின்றனர். ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ உரையில் இது பற்றிய ஒரு குறிப்பு காணக்கிடைக்கிறது. குறும்பு செய்த கண்ணனை அசோதை ஒரு சிறுகயிற்றாலே உரலோடு சேர்த்துக் கட்டினாள். அவள் கட்டியபோது முரடனான கண்ணன் இதற்கு இணங்கியவன்போல, எதிர்ப்பேதும் காட்டாது இருந்தான். “இவன் ‘சாமான்யன் என்று இடும் ஈடெல்லாம் இடுங்கோள்’ என்றிருந்தான்” என்பது உரைப்பகுதியாம். இதன் தொடர்பாக வைணவர்களிடம் வழங்கிவரும் கதையினைப் புருஷோத்தம நாயுடு விளக்குகிறார்.

“அழகர் திருமலையிலே சாமான்யர், சோழியர் என்று இரு வகைப் பிரிவினர் இருந்தனர்; அவ்விருவகைப் பிரிவினர்களுள் எப்போதும் விரோத உணர்ச்சி உண்டு; அதனால் சோழியர் எல்லாரும் சாமானியரைக் கண்டால் அடித்துத் துன்புறுத்துவது என்ற எண்ணம் கொண்டிருந்தனர். ஒருநாள் இரவிலே சோழியர்களிலே ஒருவன் தனியே வர, அவனைச் சாமானியன் என நினைத்துச் சோழியர் அனைவரும் ஒருங்கு திரண்டுவந்து அடிக்க, அடிபடுகிற அவன், ‘நான் சோழியன். என்னை ஏன் அடிக்கிறீர்கள்?’ என்ன, ‘ஐயோ உன்னைச் சாமானியன் என்று நினைத்து அடித்துவிட்டோமே, என்ன, ‘அப்படியானால் இன்னம் அடியுங்கோள், குத்துங்கோள்’ என்று சாமானியன் மேலே உள்ள பகை உணர்ச்சியால் தான் அடிபடுகிற நோவும் தோற்றாமல் சொன்னான் என்பது ஐதிஹ்யம்”. ”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“திருமலைநாயக்கரே விசயநகரப் பேரரசிலிருந்து முதலில் பிரிந்த மதுரை நாயக்க மன்னராவார். எனவே பாண்டிய நாட்டின் பழைய அரசியல் சுதந்திரத்தை அவர் மீண்டும் நிலைநிறுத்த வேண்டியிருந்தது. எனவே தன் நாட்டில் ‘தர்மம்’ தழைக்க மன்னர் இது போன்ற திருவிழாக்களை நடத்தியிருக்கலாம் என்கிறார் அட்சன்.

இதனை விளக்குகையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டதனால் பிற என்னதான் இருப்பினும் ஓரளவு மதுரைக்குத் தாம் அன்னியர் என்பதனால், பழந்தமிழ்நாட்டின் மன்னர் எனத் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் (to legitimize himself) இத்திருவிழா திருமலைநாயக்கருக்கு வழி வகுத்திருக்கலாம் என்கிறார்.

அட்சன் தரும் இந்த செய்தி ஏற்றுக்கொள்ளக்கூடியதே. திருமலை நாயக்கருக்குப் பின்னரும், ‘மொழியால் நாம் மதுரைக்கு அன்னியர்’ என்ற உள்ளுணர்வு மதுரை நாயக்க மன்னர்களை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த அழகர் கிள்ளைவிடு தூது நூலின் தலைவி, “கிளியே, நீ செல்லும்போது திருமாலாகிய அழகர் தன் தேவியரோடு இருப்பின், அவர்கள் கோபம் கொள்ளாதவாறு என் நிலைமையினை வடுகிலே (தெலுங்கிலே) சொல்” என்கிறாள். ‘திருமாலின் தேவியர்க்குத் தெலுங்கு மொழி தெரியாது. திருமாலாகிய அழகர் தெலுங்கு மொழி தெரிந்தவர்’ என்னுங் கருத்து ‘தெலுங்கர்க்கும் தமிழர்க்கும் அழகர் பொதுவானவர்’ என விரிந்து, தமிழர்களுக்குத் தெலுங்கர்களிடம் நேச உணர்வினை வளர்க்கப் பயன்பட்டிருக்கிறது. எனவே அட்சன் தரும் செய்தி ஏற்புடையதே என்று கொள்ளலாம்.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“அழகர் கோயில் தேரோட்டத்தில் தேர் இழுக்கும் பொறுப்பு நாட்டுக் கள்ளர் கிராமங்களுக்கு உண்டு. முதல் வடம் வெள்ளியக்குன்றம் ஜமீன் கிராமங்களுக்குரியது. பிற மூன்று வடங்களை இழுக்கும் பொறுப்பு முறையே தெற்குத்தெரு, வடக்குத்தெரு, மேலத்தெரு ஆகிய கிராமப் பிரிவுகளுக்குரியது. இத்தெருப் பிரிவுகள் நாட்டுக் கள்ளர்க்குரியது என்று முன்னர் கண்டோம். ஒவ்வொன்றும் சில ஊர்களை உள்ளடக்கிய இப்பிரிவுகளை, கோயில் அப்படியே ஏற்றுக்கொண்டு தேரிழுக்கும் பொறுப்பைத் தந்திருப்பதாகவே தெரிகிறது.

கள்ளரின் சமூக, பொருளாதார அமைப்பில் இக்கோயிலின் செல்வாக்குக்கு மேலும் ஒரு சான்றுண்டு. தேரிழுக்கும் முன்னர் இம்மூன்று பிரிவைச் சேர்ந்தவர்களும் தேருக்கு முன் ஒன்றுகூடி ‘கூட்டம்’ நடத்துகின்றனர். ‘நாட்டார் கூட்டம்’ எனப்படும் இக்கூட்டத்தில் தங்கள் ஊர்களுக்கிடையிலுள்ள தகராறுகளைப் பேசித் தீர்வு காண்கின்றனர், பின்னரே தேரோட்டம் தொடங்குகிறது.

இப்பொழுது பெரும்பாலும் இத்தகராறுகள் ஏதேனும் ஒரு பிரிவினருக்குள் அந்த ஆண்டுக்குக் கோயில் மரியாதையினைத் தங்களில் யார் பெறுவது என்பதாகவே இருக்கின்றன. அருகருகே உள்ள இரண்டு கிராமத்தார்களுக்குள் கண்மாய்களில் மீன்பிடிக்கும் அல்லது ஏலம் எடுக்கும் உரிமையும் அடிக்கடி சிக்கலுக்குப் பொருளாகிறது. வைகைக்கால் சீரமைப்புக்குப் பின் வயலுக்கு நீர் இறைக்கும் உரிமை தொடர்பான சிக்கல்கள் வருவதில்லை என முதியவர்கள் கூறுகின்றனர்.

1978ஆம் ஆண்டு தேரோட்டத்திற்குக் குறித்த நன்னேரம் தவறியும், மேலத்தெருக்காரர்களுக்குள் கோயில் மரியாதை தொடர்பாக ஏற்பட்ட தகராறினால் தேர் புறப்படவில்லை.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“உறியடி உற்சவம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வைணவக் கோயிலிலும் வெவ்வேறு நாட்களில் நடைபெறும். அழகர் கோயிலில் ஆவணி மாதம் வளர்பிறை எட்டாம் நாளில் (சுக்கிலபட்ச அட்டமி) நடைபெறும்.

ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் உறியிலிருந்து வெண்ணெய் திருடி உண்ட நிகழ்ச்சியினை இத்திருவிழாவன்று நடத்திக்காட்டுவர். ஓர் உயரமான மரத்தை வெட்டிக்கொண்டுவந்து நட்டு அதில் உறியினைத் தொங்கவிட்டு இறைவனை அதன் முன் எழுந்தருளச் செய்வர். உறியில் வெண்ணெய், தேங்காய் முதலியன வைக்கப் பெற்றிருக்கும். பரம்பரை உரிமை உடைய ஒருவர், ஒரு கோலினால் இரண்டு மூன்று முறை அவ்வுறியினை வீழ்த்த முயல்வதுபோல் நடித்துப் பின்னர் அவ்வுறியினை அக்கோலினால் வீழ்த்திவிடுவார். இதனையே ‘உறியடித்தல்’ என்பர். அழகர் கோயிலில் பரம்பரைக் கொத்தர்கள் உறியடிக்கின்றனர்.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“ஆடி மாதத்துப் பூர நட்சத்திரத்தினை எல்லா வைணவக் கோயில்களிலும் ஆண்டாளின் திருநட்சத்திரமாகக் கொண்டாடுவர். இத்தலத்திறைவனான அழகரை ஆண்டாள் மணாளனாகக் கருதி மனமுருகிப் பாடியிருப்பதால் இங்கு இத்திருவிழா வைணவ அடியார்களால் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. சித்திரைத் திருவிழாவில், திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்து வரவிட்டமாலையினை அழகர் அணிவதும் அழகர் கோயிலுக்கும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குமுள்ள உணர்வுப் பிணைப்பினைக் காட்டும்.

தமிழ்நாட்டு வைணவத்தில் ஒவ்வொரு தலத்திறைவனுக்கும் ஆண்டுக்கு ஒரு நாள் அத்தலத்திறைவனின் திருநட்சத்திரமாகக் கருதப்பெறும். அழகர் கோயிலில் இறைவன் திருநட்சத்திரமாக ஆடி மாதத்து உத்திராட நாளைக் கருதுவர். இந்நாள் அழகர் கோயிலில் கொண்டாடப் பெறுவதுபோலவே திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் கொண்டாடப்பெறுவதே இதன் சிறப்பாகும். திருவில்லிபுத்தூர் கோயிலில், ஆண்டாள் சப்பரத்தில் எழுந்தருளிக் கோயிலுக்குள்ளே ஒரு மண்டபத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து இத்திருவிழாவினைக் கொண்டாடுவது வழக்கமாகும். அழகர் கோயிலில் இந்நாளில் இறைவனுக்குப் புத்தாடை அணிவிப்பர்.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“இவ்வசந்த மண்டப மேற்கூரையில் (Ceiling) நாயக்கர் ஆட்சிக்கால இராமாயண ஓவியங்கள் தீட்டப்பெற்றுள்ளன.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“தொழில், சுதந்திர அட்டவணையும், கோயில் வரலாறும் குறிப்பிடாத ஒரு திருவிழா ஆடி அமாவாசையாகும். பெருவாரியான கிராமத்து மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்வதை ஆய்வாளர் மூன்றாண்டுகளாகத் (1977, 78, 79) தொடர்ந்து காண முடிந்தது.

இத்திருவிழா இக்கோயில் இறைவனுக்காக எடுக்கப்படும் திருவிழா அன்று; கோயில் பிராமணப் பணியாளர்க்கும் இதில் தொடர்பில்லை. இது கோயில் கோபுரவாசலில் உள்ள பதினெட்டாம்படிக் கருப்பசாமிக்குரிய திருவிழாவாகும். கருப்பசாமியாகக் கருதப்பெறும் இரட்டைக் கதவுக்கு இந்நாளில் சந்தனம் பூசப்பெறுகிறது. இச்சன்னிதியில் கருப்பசாமிக்குச் சிலையுருவம் இல்லை. சந்தனம் பூசப்பெறும் இக்கதவிலேயே கருப்பசாமி உறைவதாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர். இந்தக் கதவுகளை நாட்டி வைத்ததாகக் கருதப்படும் குடும்பத்தினர் ஆடி அமாவாசையன்று சந்தனக்குடம் கொண்டுவந்து இக்கதவுகளுக்குச் சந்தனம் பூசுகின்றனர். எனவே இத்திருவிழா இக்கோயில் இறைவனான அழகரின் திருவிழாவாக அல்லாமல், கருப்பசாமியின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. சந்தனம் பூசும் உரிமையுடைய குடும்பத்தினர் கோனார் சாதியினராவர். இத்திருவிழா கோயில் ஆட்சி மரபில் சேரவில்லை. எனவே மேற்குறித்த இரு நூல்களும் இதனைக் குறிக்கவில்லை.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“எங்கே அநீதியும் அடக்குமுறையும் உள்ளனவோ அங்கே அவற்றிற்குப் பலியானவர்கள், நாட்டுப்புறப் பண்பாட்டியலில் தங்களுக்கு வடிகால் அமைத்துக்கொள்வதைப் பார்க்கலாம். அச்சமூட்டும், ஆனால் எதிர்க்க இயலாத தனியாரையோ நிறுவனத்தையோ நோக்கிய நாட்டுப்புற மக்களின் கோபமானது கேலிகள், பாடல்கள், பழமொழிகள் இவற்றின் மூலமாக வெளிப்படுகிறது” என்பர் ஆலன் டண்டீஸ் (Alan Dundees).”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“தென்னிந்தியாவில் பிராமணர் வருகைக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட சாதியினராக இன்று கருதப்படும் சில இனத்தவரே பிராமணர்கள் பெறும் இடத்தினைப் பெற்றிருந்தனர் என அறிஞர் சிலர் கருதுகின்றனர்.

“பிராமணர் வருகைக்கு முன்னர் தென்னிந்தியாவில் இன்று அடிமைச் சாதியாராகக் கருதப்படுவோர் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர் என்பது தெரிந்த செய்தியே. அவர்களே நிலஉடைமையாளராக இருந்தனர். அவர்கள் பெற்றிருந்த உயர்வுகள் வினோதமான தொல்லெச்சங்களாக, சில ‘தனிஉரிமை’களின் வடிவில் இன்றும் காணப்படுகின்றன. அவற்றின் தோற்றம் மறக்கப்பட்டுவிட்டதால் அவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன” என்று கூறும் வாலவுஸ் (Walhouse) மதுரை மாவட்டத்தில் சல்லிக்கட்டு விழாக்களில் கள்ளர் சாதியினரே பூசாரியாகவும், தெய்வவாக்கினைத் தெரிந்து சொல்பவராகவும் உள்ளதையும், திருவாரூர்க் கோயில் திருவிழாவில் ஒரு பறையர் யானை மீதேறி வருவதையும், சென்னையைச் சேர்ந்த வாணிகச் சாதியினர் சிலரும், வீட்டுத் திருமணங்களுக்குத் தாழ்ந்த சாதியாரிடம் சென்று அனுமதி பெறும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்ததனையும் எடுத்துக்காட்டுகிறார்.

“தமிழ்நாட்டில் மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் பறையர்களே அத்தேவதையின் மணமகனாகக் கருதப்படுகிறார்கள்” எனக் கூறும் அனுமந்தன், தென்னிந்தியாவில் பிராமணர் வருகைக்கு முன்னர் பறையர், அரசர் ஆதரவும் சமயத் தலைமையும் பெற்றிருந்ததாகக் கூறுவர்.

கேரளத்தில் பகவதி கோயில்களில் சாமியாடும் தாழ்ந்த சாதியாரான வெளிச்சப்பாடுகளைப் பற்றி எழுதும்போது, “ஆரிய பிராமணர் வருகைக்கு முன்னர் பகவதி கோயில்களில் அவர்களே பூசை செய்வோராக இருந்திருக்க வேண்டும்” என்று கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

திருமணத்தன்று மணமக்களுக்கு பிராமணப் புரோகிதர் கட்டும் காப்புநாணை, மறுநாள் நாவிதர் சாதியினர் புரோகிதர்க்குரிய மரியாதையினைப் பெற்று அறுப்பது, தென்மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியாரிடம் நடைமுறையில் இருந்துவருகிறது. “பாப்பானுக்கு மூப்பு பறையன், கேப்பார் இல்லாமல் கீழ்சாதியானான்” என்னும் வழக்கு மரபு தென்மாவட்டங்களில் பெருக வழங்குகிறது. தாழ்த்தப்பட்ட சாதியார் பெற்றுள்ள தனி உரிமைகள் பிராமணர்கள் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டில் அவர்கள் பெற்றிருந்த உயர்ந்த இடத்தை உணர்த்துகின்றன.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“சங்க இலக்கியத்தில் பெயர் சுட்டப்பெறும் ஒரே ஒரு வைணவத்தலம் இதுவேயாகும். பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் இத்தலத்தினை ‘மாலிருங்குன்றம்’ என்று குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரம் இக்கோயிலமைந்த மலையினை ‘திருமால் குன்றம்’ என வழங்குவதோடு, இக்கோயிலினையும் குறிப்பிடுகின்றது.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“இத்தலம் குறித்த நம்மாழ்வாரின் பாசுரத்தில் வரும், ‘நங்கள் குன்றம்’ என்ற சொல் இக்கோயிலின் கருவறைக்குப் பெயராக வழக்கில் இருந்துவருகிறது. ‘நங்கள் குன்றம்’ என்பது ‘நம்முடைய குன்றம்’ என உரிமை சுட்டும் பெயராக அமைந்திருப்பது சிந்திக்கத் தகுந்தது. தவிரவும், கோயிலின் கருவறைப் பகுதிக்கு மட்டும் தனியே ஒரு பெயரிட்டு அழைப்பது தமிழ்நாட்டு சைவ, வைணவக் கோயில்களில் வழக்கத்தில் இல்லை. இக்கோயிலில் மட்டும் அமைந்திருப்பது விதிவிலக்கான ஒரு செய்தியே.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“சீனி.வே.யின் கருத்தினை மனத்தில் இருத்தி இத்தலம் குறித்த பரிபாடலை நோக்க வேண்டும். “பகைவர்களை வெற்றி கொண்டவனுடைய இருங்குன்றத்திற்கு மனைவியோடும், பெற்றாரோடும், பிறந்தாரோடும், உறவினரோடும் செல்லுங்கள்” என்பது இப்பாடல் தரும் செய்தியாகும். சங்க இலக்கியத்தில், ‘இக்கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்’ என்னும் பிரச்சாரப் போக்கில் அமைந்த பாடல் இது ஒன்றேயாகும். இருங்குன்றம் சமயப் போராட்டக் களமாக விளங்கிய குறிப்பும், இக்கோயிலுக்கு மக்கள் ஆதரவினைத் திரட்ட வைணவம் முயன்றதும் இப்பாடலில் புலப்படுகின்றன.

இத்தலம் குறித்த பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரின் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், ‘இம்மலை திருமாலுக்குரியது; இக்கோயில் திருமாலுக்குரியது’ என்னும் கருத்து பேசப்படுகிறது. இக்கருத்து மீண்டும் பேசப்படுவதற்குரிய காரணம் சிந்தனைக்குரியது.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“இக்கோயிலில் மூலத்திருமேனியாக விளங்கும் திருமால், கையில் சக்கரத்தை, சுற்றிச் செலுத்தும் நிலையில் (பிரயோக நிலையில்) வைத்துள்ளார். வழிபடும் அடியார்க்கு அருள் சுரக்கும் இறைவன், எதிரிகளை அழிக்கச் செலுத்தும் சக்கரத்தை ஆயத்த நிலையில் வைத்திருப்பது யாரோ ஒரு பகைவனை அழிப்பதற்காகவே இருக்க முடியும். பொதுவாக, வைணவக் கோயில்களில் திருமாலின் கையில் சக்கரம் அணியாகவே விளங்கும்; செலுத்தும் நிலையில் இருப்பதில்லை. இக்கோயிலில் இது ஒரு விதிவிலக்கான செய்தியே.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“சமணக் கோயில்களையும் பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும் போது முதலில் நரசிங்கமூர்த்தியை அமைப்பது வழக்கம்.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“வைணவப் பகைவனாக விளங்கிய இரணியனை அழிப்பதே நரசிம்ம அவதாரத்தின் நோக்கமாகும். எனவே புறமதத்தவர்களை எதிர்க்க முற்படும் போதெல்லாம், நரசிம்மமூர்த்தத்தினை வைணவர் நிறுவி வழிபடுவது பொருத்தமுடையதே. அழகர் கோயிலிலும் நரசிம்ம வழிபாடு தனித்தன்மையுடன் விளங்குவதன் காரணம் புறமத எதிர்ப்பே என்று கொள்ளலாம்.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“இக்கோயிலின் தோற்றம் குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி ஒரு கருத்தினைக் கூறுகின்றார். “அழகர்மலை என்று வேறு பெயருள்ள இந்த இடம் (திருமாலிருஞ்சோலை) இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகையில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரிலுள்ள குளம் ஆராமத்துக்குளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆராமம் என்பது சங்காராமம், அஃதாவது பௌத்த பிட்சுகள் வசிக்கும் இடம். அன்றியும் இக்கோயிலின் பழைய ஸ்தல விருக்ஷம் போதி (அரச) மரம் என்று கூறப்படுகிறது. இக்குறிப்புகள் யாவும் இக்கோயில் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததென்பதைக் காட்டுகின்றது”.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்
“இக்கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுக்களில் இக்கோயிலின் தோற்றம் குறித்து அறிவதற்கான சான்று(கள்) ஏதும் இல்லை. இலக்கியச் சான்றுகளை நோக்குமிடத்து, பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார், இம்மலையில் திருமாலும் பலராமனும் இணைத்து வழிபடப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றார். ஆனால் இத்தலம் குறித்தெழுந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இங்கு பலராம வழிபாடு நிகழ்ந்த செய்தியோ குறிப்புகளோ காணப்படவில்லை. ஆழ்வார்களின் காலத்தில் இங்கு பலராம வழிபாடு மறைந்துவிட்டது போலும். எனவே இளம்பெருவழுதியாரின் பரிபாடல் ஆழ்வார்களின் காலத்திற்கு முற்பட்டது எனக் கொள்ளத்தகும். அப்பாடலில் இக்கோயிலின் தோற்றம் குறித்த செய்தி ஏதும் காணப்படவில்லை.”
தொ. பரமசிவன், அழகர் கோயில்