கர்னலின் நாற்காலி Quotes

Rate this book
Clear rating
கர்னலின் நாற்காலி கர்னலின் நாற்காலி by S. Ramakrishnan
7 ratings, 4.00 average rating, 1 review
கர்னலின் நாற்காலி Quotes Showing 1-4 of 4
“ருசி நாக்கில் படிந்தவுடன் அது நினைவாகிவிடுகிறது. நல்ல நினைவுகள் ஒரு நாளும் அழிவதேயில்லை. எத்தனை வயதானாலும் நல்ல சாப்பாட்டிற்கு ஏங்குவது அந்த நினைவால் தான்.
பசியைக் கடந்து செல்பவர்களின் கைகளுக்குத் தான் ருசி சாத்தியப்படும் போலும்.”
S. Ramakrishnan, கர்னலின் நாற்காலி
“நண்பர் கேட்டார்,
“அமெரிக்காவிலிருந்து அங்குப் போய்ச்சேர எவ்வளவு நாட்களானது”
ஜோன்ஸ் சொன்னார்,
“இங்கிருந்து சான்டரெம் வரை ஒன்பது மணி நேர விமான பயணம். பின்பு அங்கேயிருந்து படகில் ஆறு மணி நேரப்பயணம். ஒரு படித்துறையில் இறங்கி அங்கே ஜீப்பினை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தேவையான பொருட்களுடன் இன்னொரு ஐந்து மணி நேர பயணம். ஜகீராசிங்கா என்ற இடத்தில் பழங்குடிகள் வசிக்கிறார்கள். அங்கே போவதற்குப் பழங்குடி மக்களில் எவரேனும் நம்மைக் காட்டினுள் அழைத்துப் போக வேண்டும். அது வரை ஒரு பாலத்தில் காத்திருக்க வேண்டும்”
“எவ்வளவு நேரம்” எனக்கேட்டார் நண்பர்
“சில நாட்கள் அல்லது சில வருஷங்கள்” என்று அமைதியாகச் சொன்னார் ஜோன்ஸ்.
“பழங்குடி மக்கள் அழைத்துப் போக ஒத்துக் கொண்டுவிட்டால் எவ்வளவு நேரம் காட்டினுள் பயணிக்க வேண்டும்” எனக்கேட்டார் அந்த நண்பர்.
“அது மழையின் கையில் இருக்கிறது. மழை நம்மை அனுமதித்தால் இரண்டு நாட்களில் காட்டினுள் போய்விடலாம். அனுமதிக்காவிட்டால் வழியிலே சாக வேண்டியது தான்.”
“அவ்வளவு சிரமமா” என வருத்தப்பட்டபடியே நண்பர் கேட்டார்.
“ஜகீராசிங்காவில் எவ்வளவு காலம் ஆய்வு செய்தீர்கள்”
“பழங்குடியின் மொழியை அறிந்து கொள்ள மூன்று ஆண்டுகள். அவர்கள் மௌனத்தை அறிந்து கொள்ள முப்பது ஆண்டுகள் போதவில்லை”.
“ஏன் அவர்கள் மொழியில் காலத்தைக் குறிக்கும் சொற்கள் இல்லை”
“காலமும் எண்ணிக்கையும் அதிகாரத்தின் அடையாளம். எல்லையில்லாத ஒரே காட்டில் வேறு வேறு இடங்களில் வசிப்பது போலவே முடிவற்ற ஒரே காலம் இருப்பதாகக் கருதுகிறார்கள். காலத்தைப் பிரிக்காவிட்டால் நம் இருப்பு தண்ணீரைப் போலாகிவிடும். தண்ணீருக்குக் கடந்தகாலமில்லை. எதிர்காலமில்லை”
S. Ramakrishnan, கர்னலின் நாற்காலி
“மனிதர்கள் தராத ஏதோவொரு அன்பை, நெருக்கத்தைப் பொம்மைகள் தருகின்றன. மனக்குழப்பம் கொண்டவர்களால் பொம்மைகளைத் தேர்வு செய்ய இயலாது. பொம்மைகள் களங்கமின்மையின் அடையாளம். மௌனத்துணை.
பொம்மைகள் வழியாகவே சிறுவர்கள் தங்களைப் பெரியவர்களாக உணருகிறார்கள். அதனால் தான் பொம்மைக்கு ஒரு சிறுமி சோறு ஊட்டுகிறாள். தூங்க வைக்கிறாள். அன்னாகரீனினா பொம்மை கடையிலிருந்த விதவிதமான பொம்மைகளைப் பார்த்தபடியே இருந்தாள். பொம்மைகளின் கண்கள் உயிர்ப்பற்றவை. பொய்யான சிரிப்புக் கொண்ட பொம்மைகளின் முகம் செயற்கையானது. .. அடியும் வலியும் பொம்மைகளை ஒன்று செய்யாது. பெரியவர்களுக்குப் பொம்மை என்பது விலைக்கு வாங்கப்படும் பொருள். சிறார்களுக்கோ பொம்மைகள் கோபத்திற்கும் ஆசைக்குமான வடிகால்.
காலம் சிலரைப் பொம்மையாக்கித் தானே உருட்டி விளையாடுகிறது உண்மையில் அன்னா தன்னையே ஒரு பொம்மையாக்கி மகனிடம் தரவே விரும்பினாள். எந்தப் பொம்மையும் அன்னையாக முடியாது தானே.”
S. Ramakrishnan, கர்னலின் நாற்காலி
“நம் எல்லோரின் மனதிலும் பால்ய வயதின் ஏதோவொரு புகைப்படம் அழிவற்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்துடன் ரகசியமாக உரையாடுகிறோம். எதிர்காலக் கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். சோர்வடையும் போது உத்வேகம் கொள்கிறோம்.
சிரிப்பை மறந்த சிறார்களின் புகைப்படங்கள் இந்த உலகிற்கு எதையோ சொல்கின்றன. புகைப்படத்தின் எடை என்பது அதிலிருக்கும் சந்தோஷத்தின் பொருட்டே அமைகிறது என்கிறார்கள்.
புகைப்படம் நம்மோடு பேசும் மொழி நாம் மட்டுமே அறிந்தது. ரகசியமானது. ஆறுதல் தரக்கூடியது.
உலகம் அதைப் பொருட்படுத்துவதேயில்லை.”
S. Ramakrishnan, கர்னலின் நாற்காலி