Jeyamohan's Blog
November 22, 2025
ஆலயக்கலை அறிமுக வகுப்புகள்
ஜெயக்குமார் நடத்திவரும் ஆலயக்கலை அறிமுகப் பயிற்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று ஓர் இயக்கமாகவே ஆகியுள்ளன. ஆலயக்கலைப் பயிற்சியுடன் அவர் ஆலயங்களுக்கான பயணங்களையும் ஒருங்கிணைக்கிறார். அவருடைய மாணவர்கள் பெரிய திரளாக மாறியுள்ளனர்.
ஆலயங்களை அறிவது என்பது பக்தி, வழிபாடு என்றவகையில் முக்கியமானது. ஆலயம் என்பது ஒரு நூல் போல.ஆலயக்கலை அறியாதவர் அந்நூலின் முன் எழுத்தறியதவராக நின்றிருப்பவர். இப்பயிற்சி அந்நூலை வாசிப்பதற்கான எழுத்தறிவித்தல்கல்வி போன்றது.
ஆலயங்களை அறிவது என்பது மதம்சாராதவர்களுக்கும் முக்கியமானது. அது ஒரு பண்பாட்டுப் பயிற்சி. நம் மரபின் கலையும், இலக்கியமும், வரலாறும் ஆலயங்களிலேயே உள்ளன. ஆலயம் என்பது நம் ஆழ்மனம் போல. இப்பயிற்சி அதை அறிவதற்கானது.
பயிற்சி நாட்கள் டிசம்பர் 5,6 மற்றும் 7
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள். இடமிருப்பவை
நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி
ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.
இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.
ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.நாள் நவம்பர் 28 29 மற்றும் 30
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்
யோகப்பயிற்சி- முதல் நிலை
எப்போது வாகனப்போக்குவரத்தும் நாற்காலியும் கண்டடையப்பட்டதோ அப்போதே சில நோய்கள் தொடங்கிவிட்டன என்பார்கள். சென்ற நூறாண்டுகளில் உருவான சோம்பலான வாழ்க்கைமுறை உடலை செயற்கையான நிலைகளுக்கு பழக்கப்படுத்தி பலவகையான உடற்சிக்கல்களை உருவாக்கிவிட்டது. நம் உள்ளுறுப்புகள் எல்லாம் எப்படி இயல்பாக அமைந்திருக்கவேண்டுமோ அப்படி இன்று அமைந்திருக்கவில்லை. அவற்றைச் சீரமைக்க, சரியாக இயங்கச் செய்ய யோகாவே உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படும் முதன்மையான வழிமுறையாக உள்ளது. யோகா இன்று ஓர் உலகப்பேரியக்கம்.
சௌந்தர் சர்வதேச அளவில் புகழ்பெற்றுவரும் யோகப்பயிற்சியாளர். சென்ற மூன்றாண்டுகளாக அவர் தொடர்ச்சியாக எங்கள் அமைப்பில் யோகப்பயிற்சி அளிக்கிறார். இதன் வழியாகவே அவர் சர்வதேச அளவில் அறியப்படத் தொடங்கினார். யோகப் பயிற்சியை எவரும் பெறலாம். ஆனால் சரியான ஆசிரியருன் வழிகாட்டலில் சரியான பயிற்சியை அடைவது மிக முக்கியமானது. நமக்கான யோகமுறையை அவர் தனிப்பட்ட முறையில் அளிக்கவேண்டும். தொடர்ச்சியாக வழிகாட்டவேண்டும்.
யோகப்பயிற்சிகளை தனியாகச் செயபவர்கள் தொடர்ந்து செய்வதில்லை. அதை தொடர்ந்து செய்வதற்கான வழிமுறை என்பது அதற்கான நண்பர்களின்குழுமத்துடன் இணைவதுதான். அவர்களுடன் நேரிடையான அறிமுகம் அடைவது. அதற்காகவே யோகப்பயிற்சிக்கான தனியான இடம், தனியான சூழல் தேவை எனப்படுகிறது. இயற்கையான அழகான மலைப்பகுதியில் நிகழும் இப்பயிற்சி பலநூறுபேரின் வாழ்க்கையின் திருப்புமுனை ஆகியுள்ளது.
நாள் டிசம்பர் 12 13 மற்றும் 14
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
தாவரங்கள்- வனம்: அறிமுக வகுப்பு (குழந்தைகளுக்காகவும்)தாவரவியல் பேராசிரியை முனைவர் லோகமாதேவி நடத்தும் தாவர அறிமுக வகுப்புகள் பெரியவர்களுக்காகவே திட்டமிடப்பட்டன. ஒவ்வொருவரும் தங்களைச் சூழ்ந்திருக்கும் நூறு தாவரங்களையாவது அறிந்திருக்கவேண்டும் என்பதே நோக்கம். அதற்கான தேவை என்ன? முதன்மையாக மூன்று.
தாவரங்களை அறிவது சூழலுணர்வை உருவாக்கி அன்றாடவாழ்க்கையில் சிறுசிறு இன்பங்களை உருவாக்குகிறது. இன்றைய சலிப்பூட்டும் அன்றாடச்சுழற்சி கொண்ட வாழ்க்கையில் அது மிகப்பெரிய விடுதலை.நாம் உண்ணும் உணவு, நம் சூழல் ஆகியவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்குகிறது. அறிவியல்பூர்வமாக நம் வாழ்க்கையை வாழ்வதற்கான வழியக் அறிமுகம் செய்கிறது.யோகம், தியானம் பயில்பவர்கள் இயற்கையுடனான அன்றாட உறவைக்கொண்டிருக்கவேண்டும். அதை தாவர அறிமுகம் உருவாக்குகிறது.ஆனால் நாங்கள் எண்ணியிராதபடி அவ்வகுப்பு குழந்தைகள் நடுவே புகழ்பெற்றது. இதுவரை நிகழ்ந்த வகுப்புகளில் குழந்தைகள் பேரார்வத்துடன் கலந்துகொண்டனர். குழந்தைகள் கலந்துகொள்வதன் அவசியம்.
இன்றைய கணினி அடிமைத்தனம், செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகளை நேரடியாக இயற்கை நோக்கிக் கொண்டுவருகிறது. இயற்கையுடன் இருப்பதும், செயலாற்றுவதுமே இன்றைய ‘தகவல்தொழில்நுட்ப அடிமை’ மனநிலையில் இருந்து மீள்வதற்கான வழி.பறவைகளைப் பார்த்தல் இளையோருக்குரிய உயர்நிலை கல்வி- பொழுதுபோக்கு. தாவரங்களை அவதானித்தல் அதனுடன் இணைந்து செய்யப்படவேண்டியது.இளமையிலேயே குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய ஓர் அறிவுத்துறை அறிமுகமாகி அதில் ஈடுபாடு உருவாவது வாழ்க்கை முழுக்க உருவாகும் பல்வேறு திசைதிரும்பல்களை தவிர்க்கும்.இது நுணுக்கமான செய்முறைகளுடன் இணைந்த நிகழ்ச்சி. ஆகவே ஒரு விடுமுறை கொண்டாட்டமும்கூட.வரும் டிசம்பர் விடுமுறையில் மீண்டும் லோகமாதேவியின் வகுப்புகள் நிகழ்கின்றன.
நாள் டிசம்பர் 26, 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு. கிறிஸ்துமஸுக்கு மறுநாள் முதல்)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
We have been conducting Indian philosophy classes for over three years, with around 500 to 600 people having completed the first level across nine batches. Further-level classes are currently ongoing.
Many aspirants have expressed interest in attending these classes in English. As a result, we are launching the same classes in English for those who are not proficient in Tamil.
This class offers a thorough introduction to Indian philosophy, serving as the foundational starting point for advanced courses. The instruction will be conducted in English.
Date: January 2, 3, and 4 (Friday, Saturday, and Sunday), 2026
Venue: Nityavanam, at the hill station Vellimalai, near Erode.
For contact programsvishnupuram@gmail.com
நம் பிள்ளைகளிடம் சொல்லவேண்டியது…
நம் பிள்ளைகளிடம் பொருளியல் பற்றிப் பேசுகிறோம். ‘ஜாக்ரதையா இரு’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அதைவிட முக்கியமாக நாம் அவர்களுக்குச் சொல்லவேண்டிய ஒன்று உண்டு. அது என்ன?
நீலகண்டம் – சுக்கிரி உரையாடல் – இன்று மாலை
அன்புள்ள ஜெ,
கடந்த அக்டோபர் 13 அன்று சுக்கிரி நண்பர்கள் சார்பாக பழனி ஜோதி எழுத்தாளர் சாம்ராஜின் ‘கொடைமடம்‘ பற்றிய தன் வாசிப்பை முன்வைத்தார். ஒரு சமகால நாவலின் கூறுமுறையும், முன்னும் பின்னும் கலைந்து அடுக்கப்படும் வரலாற்றுச் சம்பவங்கள் நாவலில் ஒன்றுக்கொன்று இணையும் விதத்தையும் பழனி தன் உரையில் விளக்கினார்.
அதன் பின் நண்பர்கள் தங்கள் வாசிப்பையும் கேள்விகளையும் எழுப்ப, ஆரம்பம் முதலே ஸூம் இணைப்பில் இருந்த சாம்ராஜ் அதற்கான தன் கருத்துகளையும் பதில்களையும் கூறினார். நாற்பதுபேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் இணைந்த எழுத்தாளர் சாம்ராஜுக்கும், அந்த நிகழ்வின் விவரங்களை தளத்தில் வெளியிட்ட உங்களுக்கும் நன்றி. அந்த இணைய நிகழ்வின் பதிவையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
நவம்பர் மாதத்திற்கான நாவல் சுனில் கிருஷ்ணனின் ‘நீலகண்டம்‘. வாசிப்பைப் பகிர்பவர் கொரியாவில் வசிக்கும் நண்பர் சதிஷ். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அழைப்பிதழில் உள்ள ஸூம் இணைப்பைப் பயன்படுத்தி ஆர்வமுள்ள நண்பர்கள் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு பங்கேற்க வேண்டுகிறேன். கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
***
ZOOM Meeting link:
https://us02web.zoom.us/j/81824287154?pwd=VlVEOEpZNFUrMFUwWlAzMS8yeGdJdz09
Meeting ID: 818 2428 7154
Passcode: 197116
அக்டோபர் 12, ஞாயிறு மாலை 5 மணி (இந்திய நேரம்)
***
சுக்கிரி சிறுகதை கூட்டுவாசிப்பு – சனிக்கிழமை, மாலை 5 மணி (இந்திய நேரம்)
***
அன்புடன்,
ராஜேஷ்.
அரசியலின்மைதான் காரணமா?
அன்புள்ள ஜெ,
மதிப்புறு முனைவர் பட்டம் பெறுவதற்கு வாழ்த்துக்கள். கல்வித்துறை பொதுவாக தீவிர நவீன எழுத்தாளர்களை அகற்றி வைத்திருப்பதற்கான காரணங்களைச் சொன்னீர்கள். முதன்மையான காரணம் என எனக்குப் படுவது நவீன எழுத்தாளர்கள் சமகாலச் சிக்கல்களை எழுதுவதில்லை என்பதும், அவர்கள் தனிமனித அக அலைச்சல்களை மட்டுமே எழுதுகிறார்கள் என்பதும்தான். அவர்கள் அரசியலை புறக்கணிக்கிறார்கள். சமகாலத்தையும் புறக்கணிக்கிறார்கள். கல்வித்துறையானது சமூகவியல், வரலாறு ஆகிய துறைகளைச் சார்ந்தே படைப்புகளைப் பற்றிப் பேச முடியும். தனிமனித அக ஓட்டமாக உள்ள படைப்புகள் அதற்கு அன்னியமானவை. இதுவும் ஒரு காரணம் அல்லவா?
முனைவர். அ.நாகராஜன்
அன்புள்ள நாகராஜ்,
தமிழ் நவீன இலக்கியவாதிகள் ‘மக்களால்’ ஏற்கப்படாமலிருப்பதற்கும், கல்வித்துறையால் மதிக்கப்படாமலிருப்பதற்கும் காரணம் தமிழ் நவீன இலக்கியத்தில் உள்ள ’அரசியலின்மை’ அல்லது ’அரசியல் எதிர்ப்பு மனநிலை’யே என்றும், அவர்களிடமுள்ள சமகாலத்தை புறக்கணிக்கும் தன்மையின் விளைவாக நவீனப்படைப்பாளிகள் ‘மக்களிடமிருந்து அன்னியமானார்கள்’ என்றும் இன்று சிலர் பேசி நிறுவ முயல்கிறார்கள். இன்று திராவிட கட்சியரசியலுக்குள் தலையைவிட்டு சில்லறைகளுக்காக ஏங்கும் கோஷ்டி அதை மேடைமேடையாகச் சொல்கிறது.
ஆனால் இதை நேற்று இடதுசாரி எழுத்தாளர்கள் இதைவிட மூர்க்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். அதன்வழியாக இலக்கியச் சாதனையாளர்களை மக்கள் விரோதிகள் என்று வசைபாடிச் சிறுமை செய்தனர். நவீன இலக்கியத்தையே குறுங்குழு இலக்கியம் என்று முத்திரை குத்தினர். இன்று அவர்களால் அன்று வசைபாடப்பட்ட ஒவ்வொருவரையும் இலக்கியச்சாதனையாளர்கள், முன்னோடிகள் என்று சொல்லி உரிமை கொண்டாடுகின்றனர்
நவீன இலக்கியவாதிகளை மக்கள்விரோதிகள், குறுங்குழுவினர் என்றெல்லாம் பேசிய எவரும் இன்று எங்கும் இல்லை. நேற்று இதே குரலில் இலக்கிய முன்னோடிகளை தாக்கிக்கொண்டிருந்த முதன்மை ஆளுமை இளவேனில் என்பவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் எல்லாம் இருந்தார். எவருக்காவது தெரியுமா அவரை? இவர்கள் எப்போதும் இருப்பார்கள்.
’மக்களுடன் நின்று பேசுதல்’ என்பதை ஒரு பெரிய அளவுகோலாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுடன் நிற்பது என்று இவர்கள் சொல்வது என்ன? இவர்களின் பார்வையில் இவர்கள் சார்ந்துள்ள கட்சிதான் மக்களின் மெய்யான பிரதிநிதி, ஆகவே இவர்களின் கட்சியுடன் நிற்பதுதான் மக்களுடன் நிற்பது. அப்படி நிற்காத அனைவருமே மக்கள் விரோதிகள். எழுத்தாளன் இவர்களுடன் இணைந்திருந்தால் மட்டும்போதாது, இவர்களின் தலைமை சொல்வனவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு திரும்பச் சொல்லவேண்டும், இல்லையேல் அந்த எழுத்தாளன் துரோகி ஆகிவிடுவான். இந்த மொண்ணைத்தனத்தை இலக்கியத்திற்கு எதிரான ஒரு பெரிய அறிவார்ந்த நிலைப்பாடாக சித்தரிக்கும் முயற்சியில் இன்று முதிரா அறிவுஜீவிகள் சிலரும், கலையுணர்வு அற்ற எழுத்தாளர் சிலரும் ஈடுபட்டு இருக்கிறார்கள் ஆனால் இது எந்த வாசகனுக்கும் புரியும் எளிமையான அடிப்படை விஷயம்தான்.
இலக்கியம் என்பது ஒரு தனி மனிதனின் அகநிலைப்பாடாகவே முதன்மையாக கருதப்படுகிறது. அவன் தன்னுடைய ஆழுள்ளத்தை, தன்னுடைய கனவை மொழியினூடாக வெளிப்படுத்துவதற்குப் பெயர்தான் இலக்கியம். அது சமூகத்தின் ஆழுள்ளத்தின் வெளிப்பாடு கூட. ஏனெனில் அவன் எழுதும் போது தன்னுள் ஆழ்ந்து சென்று சமூகத்தின் ஆழுள்ளத்தையே தன்னுடைய கனவாக வெளிப்படுத்துகிறான். ஒரு படைப்பாளியின் தவம் என்பதே தான் என அவன் உணரும் பிரக்ஞையைக் கடந்துசென்று, ஒட்டுமொத்த மானுடத்தின் பிரக்ஞையின் ஒரு துளியாக ஆவதுதான். அப்படி அவன் ஆகும்போது மட்டுமே உயர்படைப்பு வெளிப்படுகிறது. இதை எல்லா படைப்பாளிகளும் சொல்லியிருப்பார்கள். ஒரு பேட்டியில் தேவதச்சன் தன் வயது பல ஆயிரம் ஆண்டுகள் என்கிறார்.
ஒரு படைப்பாளியை அளவிடும் இலக்கணம் என்பது முதன்மையாக அவன் அவனுடைய காலகட்டத்தின் குரலாக தன்னியல்பாக எப்படி ஒலிக்கிறான் என்பதுதான். அவனை அறிந்தால் அப்பண்பாட்டை அறிவதுதான். அந்த சமூகத்தின் ஆழ்மனதை அறிவதுதான். தகழியும், பஷீரும், எம்.டியும்தான் கேரளப்பண்பாட்டை அறிவதற்கான வழிகள். புதுமைப்பித்தனும், சுந்தர ராமசாமியும், ஜெயகாந்தனும், கி.ராவும்தான் தமிழ்ப்பண்பாட்டை அறிவதற்கான உண்மையான வழிகள். ஆனால் மக்களைத் திரட்டி, அவர்களின் பொது அம்சத்தை ஆராய்ந்து அறிந்து, அதை தன்னுடைய படைப்புகளின் ஊடாக ஒருவன் திட்டமிட்டு முன்வைப்பான் என்றால் அவன் மக்களின் ஆழத்தின் பிரதிநிதி அல்ல. அவன் உண்மையில் மக்களின் மேலோட்டமான உணர்வுகளையே வெளிப்படுத்துகிறான். பெரும்பாலும் திரளுணர்வுகளை. அதையே இதழியலும், அரசியலும் வெளிப்படுத்துகின்றன. அது இலக்கியத்திற்கு எந்த வகையிலும் முக்கியம் அல்ல. இலக்கியத்தின் நோக்கம் அதைச் சொல்வது அல்ல. மக்களால் அறியப்படாத மக்களின் ஆழம் வெளிப்படும் போது இலக்கியம் முக்கியமாகிறது. அதை இலக்கியவாதி தன் அறியாத ஆழத்தில் இருந்துதான் எடுக்க முடியும். அதை மொழிவழிக்கனவாகவே சென்றடையமுடியும். அவதானித்து ஆராய்ந்து தொகுத்து வகுத்து அதைச் சென்றடைய முடியாது. ஆகவே தான் மாபெரும் அரசியல் தலைவர்கள், உண்மையான மக்கள் தலைவர்கள் எழுதுவது கூட பெரும்பாலும் இலக்கிய படைப்புகளாக கருதப்படுவதில்லை. சத்யமூர்த்தியோ, ராஜாஜியோ,ஈ.வெ.ராவோ, சி.என்.அண்ணாத்துரையோ, ஜீவாவோ எழுதியவை இலக்கியம் அல்ல. அவற்றுக்கு கருத்து மதிப்பு உண்டேஒழிய இலக்கியப் படைப்பு என்னும் மதிப்பு இல்லை.
இவ்வாறு ஓர் எழுத்தாளர் தனித்துச் செயல்படுவதனால், தன் உள்ளத்தை மட்டுமே தன் வெளிப்பாட்டுக் களமாக கொள்வதனால் அவனால் எந்த அமைப்பு சார்ந்தும் செயல்பட முடியாது. அரசியல் கட்சிகள் எதிலும் அவனால் முழுமையாக ஒன்ற முடிவதில்லை. எந்த ஒரு இயக்கத்தின் ஒரு உறுப்பாகவும் அவனால் பொருந்த முடிவதில்லை. எந்த அமைப்புக்கும் விசுவாசத்தை அளிக்க முடிவதில்லை. வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் மெய்யான இலட்சிய வேகத்துடன் அரசியல் இயக்கங்களை சார்ந்து செயல்பட்ட படைப்பாளிகள் கூட அதிலிருந்து விலகிவிட்டிருப்பதைக் காண்கிறோம். அவர்கள் முரண்பட்டு, மெல்ல தங்கள் சொந்தக்குரலை கண்டடைந்து முன்னகர்கிறார்கள். மாக்ஸிம் கார்க்கி முதல் அதற்கு ஏராளமான உதாரணங்கள். காந்திய இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்ட கா.சி.வேங்கடரமணி, சி.சு.செல்லப்பா போன்றவர்களும் அதனுடன் முரண்பட்டு விலகினார்கள். இடதுசாரி இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்ட சுந்தர ராமசாமியும், கி.ராவும், ஜி.நாகராஜனும், ஜெயகாந்தனும் அவ்வாறு விலகினார்கள். அதை தவிர்க்கவே முடியாது.
இலக்கியவாதி சமகாலத்தை பிரதிபலிக்கவில்லை. சமகாலத்தின் ஆழத்தை மட்டுமே பிரதிபலிக்கிறார். அவன் இதழியல் யதார்த்தத்தை எழுதுவதில்லை. வரலாற்று யதார்த்தத்தை எழுதுவதில்லை. அகயதார்த்தைதை மட்டுமே எழுதுகிறான். ஆகவே சமகாலத்து எந்த அமைப்புமே அவனுக்கு ஒரு வகையில் பின்தங்கியதாகவும் அவன் முரண்படக்கூடியதாகவும் இருக்கிறது. அவனுடைய கனவு என்பது எதிர்காலம் நோக்கியதாக இருக்கிறது. ஒரு பண்பாட்டின் வளரும் முனை என்று அவனைச் சொல்லலாம். சமூகத்தின் வளர்ந்த விளிம்பில் இருந்து அடுத்த கட்டத்திற்கு தளிர்விட்டுக் கொண்டிருப்பவன் அவன். அவனுடைய தாகங்களும் அவனுடைய கனவுகளும் நாளைக்கானவையாக இருக்கின்றன. சமகாலத்திலேயே நின்றுவிட்ட எவராலும் நவீன இலக்கியத்தை உள்வாங்க முடியாது. அமைப்புகளும் அரசியலும் இலக்கியவாதிக்கு அந்நியமானவையாக இருப்பது இதனால்தான்.
நவீன் இலக்கியம் அரசியலை மறுக்கவில்லை. தமிழ் நவீன இலக்கியத்தின் முதன்மை ஆளுமைகள் அனைவருமே வெவ்வேறு அரசியல் களங்களின் செயல்பாடுகளுடன் இணைந்திருந்தவர்கள்தான். அந்த இணைப்பு தற்காலிகமானது என்பதுதான் உண்மை. நவீன இலக்கியத்தில் பதிவான அளவிற்கு சமகாலம் வேறெந்த களத்திலும் பதிவானதில்லை. அரசியல்வாதிகளின் நினைவுக்குறிப்புளில் சமகாலம் மிக மங்கலாகவும், அவர்கள் நோக்கில் வளைக்கப்பட்டும், அவர்களை மட்டுமே மையமாக்கியும் மட்டுமே பதிவாகியுள்ளது. தமிழக வரலாற்றை அறிய உண்மையில் இலக்கியம் அன்றி வேறு வழியே இல்லை.
உதாரணமாக இன்று ஒருவர் விடுதலைப்போர் பற்றி படிக்கவேண்டும் என்றால் கா.சி.வேங்கடரமணியின் தேசபக்தன் கந்தன், ந.சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் முதல் சி.சு.செல்லப்பாவின் சுதந்திரதாகம் வரை பல படைப்புகள் உள்ளன. நெருக்கடி நிலை பற்றி தமிழில் ஏதேனும் படிக்க வேண்டும் என்றால் தமிழ் நவீன இலக்கியமே ஒரே வழி. பொன்னீலனின் புதியதரிசனங்கள், அசோகமித்திரனின் இன்று என மிக நுணுக்கமான பதிவை அவர்கள் பெறலாம். திராவிட இயக்கம் உருவான விளைநிலத்தை அறிய விரும்புபவர் வாசிக்கவேண்டிய நூல் பாவை சந்திரனின் நல்ல நிலம்தான்.
நவீன இலக்கியத்தில் இருப்பது அரசியலின்மை அல்ல. அது கலைஞனின் அரசியல். திரளின் பார்வையோ அமைப்பின் பார்வையோ இலக்கியத்தில் இல்லை, கலைஞன் வழியாக வெளிப்படும் பண்பாட்டின் ஆழத்தின் பார்வை மட்டுமே உள்ளது. அது எளிய சமகால அரசியல் அல்ல, காலம்கடந்த அரசியல். ஆகவே அது நடைமுறை அரசியலைப் பேசுவதில்லை. மானுட அரசியலைப் பேசுகிறது. அதைப்பேசினால்தான் அது இலக்கியம். ஏதேனும் அதிகாரத்தரப்பின் குரலாக ஒலிப்பது கலையின் பணி அல்ல. அதைச் செய்பவர்கள் அதற்கான லாபத்தை அடையலாம், கலைஞன் என்று சொல்லிக்கொள்ளக்கூடாது. அது எந்தத்தரப்பானாலும் சரி.
நம் கல்வித்துறையின் பிரச்சினை அதில் இலக்கிய வாசகர்கள் இல்லை என்பது மட்டும்தான். நம் மக்களின் பிரச்சினை அவர்கள் இலக்கியத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை, ஆகவே படிப்பதே இல்லை என்பதுதான். நம் மக்களுக்கு முதன்மை ஆர்வம் சினிமா (அதன் உள்ளடக்கம் காமம்), அதன்பின் அரசியல் (அதன் உள்ளடக்கம் சாதி), அதன்பின் சாப்பாடு, வேறேதுமில்லை. அந்த மூன்றுமே அடிப்படை விலங்கு இச்சைகளின் வெளிப்பாடுகள். இலக்கியத்தை வாசிக்க, கலைகளை ரசிக்க தமிழ்ச்சூழலில் எந்த அறிமுகமும் கிடைப்பதில்லை. எந்தப் பயிற்சியும் எங்கும் அளிக்கப்படுவதில்லை. இதுதான் பிரச்சினை. இதை மறைத்து பழியை இலக்கியம் மீதும், கலைகளின் மீதும் போடுவது மக்களை இந்த விலங்குநிலையிலேயே வைத்துக்கொள்ள விரும்பும் அதிகார அரசியல்வாதிகளின் பேச்சுமட்டுமே.
ஜெ
மாயாவி
தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். கலைமகள், கல்கி ஆகிய இதழ்களில் தொடர்கதைகளாக அவை வெளிவந்தன. பெரும்பாலும் குடும்பப்பின்னணி கொண்ட உணர்ச்சிகரமான கதைகளை எழுதினார்
நாவலை அறிதல் – பாலாஜி ராஜு
I have been watching your philosophy and Vedanta videos. For the past 20 years, I have taken Vedanta classes from various teachers. However, their responses to our questions frequently fall short of our expectations. They typically choose texts like the Gita or Brahma Sutra and examine them for detailed explanations.
Vedanta without Bhakti
அமெரிக்காவில் மற்றுமொரு அழகிய இலையுதிர் காலம் உங்கள் வருகையால் அர்த்தத்துடன் கடந்திருக்கிறது. தத்துவ வகுப்புகள் முடிந்து கொலம்பஸ் திரும்பிய இரண்டு நாட்களிலேயே நாவல் பயிற்சி வகுப்புக்காக மீண்டும் மலைகளினூடாக ஏழுமணிநேர சாலைப் பயணம். இடம் – ஹெர்ன்டன், விர்ஜீனியா மாகாணம்.
நாவல் பயிற்சி- பாலாஜி ராஜுஅஞ்சலி ஈரோடு தமிழன்பன்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார். பாரதிதாசன் பரம்பரையினரின் மரபிலக்கியத்தில் இருந்து புதுக்கவிதைக்கு வந்தவர். வானம்பாடி கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அஞ்சலி
தமிழன்பன்
November 21, 2025
விஷ்ணுபுரம் விருது விழா – நண்பர்கள் வேண்டி.
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து விஷ்ணுபுர விழாக்களும் நண்பர்களின் ஆர்வமான பங்கேற்பின் மூலமாகவே நடைபெறுகிறது. கோவையில் நடக்கவிருக்கும் விஷ்ணுபுர விருதுவிழாவிற்கு தங்கும் இடம், உணவு, மேடை அமைப்பு பின்னர் இதர உதவிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் பல நண்பர்கள் முன்னரே வந்து உதவி செய்கின்றனர். ஆர்வமுள்ள புதிய நண்பர்களை சேர்த்துக்கொண்டு தொடர்கிறோம். இந்த முறை கூடுதலாக 10 பேர் தேவைப்படுகிறார்கள். வெள்ளியன்று வர முடிந்த ஆர்வமுள்ள நண்பர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
கோவையில் வசிக்கும் நண்பர்கள், கோவை நகரில் இடம் தெரிந்தவர்கள் என்றால் மிக உதவியாக இருக்கும்
நன்றி
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
விஷ்ணுபுரம் விருது விழா – நண்பர்கள் வேண்டி.
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து விஷ்ணுபுர விழாக்களும் நண்பர்களின் ஆர்வமான பங்கேற்பின் மூலமாகவே நடைபெறுகிறது. கோவையில் நடக்கவிருக்கும் விஷ்ணுபுர விருதுவிழாவிற்கு தங்கும் இடம், உணவு, மேடை அமைப்பு பின்னர் இதர உதவிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் பல நண்பர்கள் முன்னரே வந்து உதவி செய்கின்றனர். ஆர்வமுள்ள புதிய நண்பர்களை சேர்த்துக்கொண்டு தொடர்கிறோம். இந்த முறை கூடுதலாக 10 பேர் தேவைப்படுகிறார்கள். வெள்ளியன்று வர முடிந்த ஆர்வமுள்ள நண்பர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
கோவையில் வசிக்கும் நண்பர்கள், கோவை நகரில் இடம் தெரிந்தவர்கள் என்றால் மிக உதவியாக இருக்கும்
நன்றி
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா – 2
முனைவர் பட்டம் என்பது இன்று சாதாரணமாக மாறி உள்ளது. அதற்குக் காரணம் கல்லூரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாக முனைவர் பட்டம் ஆகிவிட்டது என்பதுதான். முன்பு முதுகலைப் பட்டமே கல்லூரி ஆசிரியர் பதவிக்குச் செல்வதற்கான தகுதியாக இருந்தது. புகழ்பெற்ற பேராசிரியர்களான எம்.வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் போன்றவர்கள் ஏறத்தாழ பணி ஓய்வு நிலையில்தான் முனைவர் பட்டம் பெற்றனர். அவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்தனர். பெரும்பேராசிரியரான ஜேசுதாசன் முனைவர் பட்டமே பெறவில்லை.
முனைவர் பட்டம் ஓர் அடிப்படைத் தகுதியாக ஆனவுடன் முனைவர் பட்டத்தை பெறுவதற்கான முயற்சிகள் பெருகின. அதற்கான குறுக்கு வழிகள் உட்பட அனைத்தும் உருவாகி, முனைவர் பட்டமே மிகச் சாதாரணமாக ஆகிவிட்டது. தமிழில் முதுகலை படித்து முனைவர் பட்டமும் முடித்தவர்கள் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய மிக எளிய அறிமுகம் கூட இல்லாமல் இருப்பதை தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்று முனைவர் பட்டத்திற்கு மதிப்பு என்பது ஒரு சில ஆய்வுத்துறைகளில் மட்டுமே உள்ளது. அதுவும் எந்த பல்கலை கழகம், எந்த வழிகாட்டி என்பதை ஒட்டியே அந்த மதிப்பு அளவிடப்படுகிறது.
மதிப்புறு முனைவர் பட்டம் என்பதும் அவ்வாறே தன்னுடைய மதிப்பை இழந்துவிட்ட ஒன்றுதான். நெடுங்காலத்திற்கு முன்பு கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் என்ற ஒருவர் தன் சட்டைப் பையிலையே ஒரு பல்கலைக் கழகத்தை வைத்திருந்தார் என்று சொல்வார்கள். எல்லாவிதமான ஆவணங்களையும் முறையாக உருவாக்கிக் கொண்டு, சட்டபூர்வமான ஒரு பல்கலைக்கழகத்தை அவர் நடத்தினார். ஆனால் கட்டிடமோ கல்வி முறையோ ஆசிரியர்களோ மாணவர்களோ இருக்கவில்லை. மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குவதற்கு மட்டுமே நடத்தப்பட்ட பல்கலைக்கழகம் அது. அன்று அவர் கோவி.மணிசேகரன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை அள்ளி வழங்கி இருக்கிறார். அவர்கள் எல்லாம் அந்த பட்டங்களை தங்கள் பெயருடன் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
பின்னர் பல்கலைக்கழகம் என்ற பெயரை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதை பல்கலைக்கழக மானிய குழு சட்டபூர்வமாக தடைசெய்து, அதற்கான நிபந்தனைகளை உருவாக்கியது. இன்று ஒரு பல்கலை தொடங்குவது என்பது மிகப்பெரும் பொருட்செலவு, மிகப்பெரிய அமைப்பு வல்லமை கொண்ட ஒரு செயல். அதற்கான அனுமதி பெறுவதற்கும் பல ஆண்டுகாலம் ஆகும். பெரிய அளவிலான வைப்புநிதியும் தேவை. ஆயினும் இன்று வளரும் இந்தியாவில் கல்வி என்பது வளர்ச்சியடைவதனால் தனியார் பல்கலைகள் பெருகியும் வருகின்றன.
அண்மைக்காலங்களில் சில தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைகள் அரசியல் சார்ந்தவர்களுக்கும் திரைத்துறை சார்ந்தவர்களுக்கும் மதிப்புறு முனைவர் பட்டங்களை எந்த வகையான கணிப்பும் இல்லாமல் அள்ளி வழங்குகின்றன. மிகச் சாதாரணமான திரைத்துறை சார்ந்தவர்களுக்கும், தங்களுடைய கல்லூரிக்கு விருந்தினராக வர ஒப்புக்கொண்ட பிரபலங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்குவதனூடாக தங்களுடைய மதிப்புறு முனைவர் பட்டத்தின் கவுரவத்தையே அழித்துக் கொள்கின்றனர்.
ஆனால் அதேசமயம் தமிழகத்தின் ஒரு பல்கலையில் இருந்து ஒரு நவீனப்படைப்பாளிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிப்பதென்பது சாமானியச் செயல்பாடு அல்ல. அதற்கு ஆயிரம் பல்லாயிரம் தடைகள். கி.ராஜநாராயணனுக்கு ஒரு கௌரவ முனைவர் பட்டம் வழங்க பலமுறை முயன்று தோற்றதை பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல்கலை சம்பந்தப்பட்டவர்களுக்கு இலக்கியவாதி எந்த வகையிலும் பொருட்டாகத் தெரிவதில்லை என்பதே காரணம்.
இச்சூழலில் தக்ஷசிலா பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் எனக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது முதலில் எழுந்தது ஒரு தயக்கம்தான். ஏனெனில் அது ஓர் எழுத்தாளராக எனக்கும், என்னுடைய முன்னோடிகள் என்று நான் எண்ணும் பெரும் படைப்பாளிகளுக்கும் மதிப்புக் குறைவானதாக ஆகிவிடுமோ என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது.
ஏறத்தாழ ஒரு மாத காலம் அந்தப் பல்கலை பற்றி நண்பர்களிடம் விசாரித்த பின்னரே பட்டம் பெற ஒப்புக்கொண்டேன். இவ்வளவிற்கும் திரு.தனசேகரன் அவர்கள் என் வாசகர். இதை முன்னர் பெற்றவர் எவர், எவர் என்னுடன் பெறப்போகிறவர் என்ற இரு கேள்விகளையும் முன்வைத்தேன். தக்ஷசிலா பல்கலையின் முதல் மதிப்புறு முனைவர் பட்டம் இது என்றும், என்னுடன் பி.டி.உஷா மட்டுமே விருதுபெறுகிறார் என்றும் அறிந்தபின் ஒப்புக்கொண்டேன்.
இந்த கவனமும் தயக்கமும் என்னுடைய ஆணவம் அல்ல என்பது எனது வாசகருமான திரு.தனசேகரன் அவர்களுக்குத் தெரியும். நான் என்னை தமிழின் மகத்தான நவீன இலக்கிய மரபின் அடையாளங்களில் ஒன்றாகவே நினைக்கிறேன். தமிழ் நவீன இலக்கியத்தை உலக அரங்கிற்குக் கொண்டுசெல்லும் கனவுடனும் இருக்கிறேன். உலகளாவிய என் வாசகர்களின் திரள் என்பது என் எழுத்தால் நான் உருவாக்கிக்கொண்டது. அவர்களே இன்றைய தமிழின் தலைசிறந்த வாசகச் சமூகம். ஆகவே என் தகுதி என்பது நவீன இலக்கியத்தின் தகுதியே. அதை எங்கும் எவ்வகையிலும் குறைத்துக்கொள்ள நான் ஒப்ப மாட்டேன்.
‘நான்’ என்று சொல்லும்போது எப்போதும் இந்த கூட்டு அடையாளத்தையே சொல்கிறேன். ஒரு செயலை நாம் செய்யும்போது நம் ஆணவம் பெருகுகிறது, அச்செயல் மெய்யாகவே வளரும்போது நம் ஆணவம் குறையத்தொடங்கி அச்செயல் நம் கண்முன் பெருகி நின்றிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நாம் நம்மை உணர்கிறோம்.
முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு என்பது மேலே நாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்து சடங்குகளை உருவாக்கிக் கொண்டது. ஏனெனில் அவ்வாறு ஒரு வழக்கம் இங்கில்லை. மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் அவற்றின் அனைத்துச் சடங்குகளையும் ஐரோப்பிய அரசவைகளில் இருந்து உருவாக்கிக் கொண்டன. ஐரோப்பிய அரசவைகளின் நிகழ்வுகள் ரோமாபுரியின் அவைகளில் இருந்து வந்தவை. அவையே கத்தோலிக்கக் கிறிஸ்தவ அமைப்புகளின் சடங்குகளாகவும் நீடிக்கின்றன. ஆகவே இங்கே இன்று அவற்றைப் பார்க்கையில் ஒரு கத்தோலிக்க அவைநிகழ்வு என்ற எண்ணம் வரக்கூடும்.
முனைவர் பட்டம் வழங்கப்படுவதற்கு உள்ளது போலவே முனைவர் பட்டத்தை பயன்படுத்துவதற்கும் நிறைய மரபுகள் வெளிநாடுகளில் உள்ளன. ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர்களும், மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர்களும் மட்டுமே தங்கள் பேருடன் முனைவர் (Dr) என்று போட்டுக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் தங்கள் பெயருடன் Dr என்று போட்டுக்கொள்ள கூடாது. அவர்கள் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே- ஆய்வாளர்களோ அறிஞர்களோ அல்ல.
முனைவர் பட்டம் வாங்கியவர்களும் கூட அப்பட்டத்தை பெயர்களுடன் எப்பொழுதும் போட்டுக் கொள்ளக் கூடாது. கல்வித்துறை சார்ந்த செயல்பாடுகளுடன் இணைந்து மட்டுமே அப்பட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். இது சட்டம் அல்ல, வழக்கம். கௌரவ முனைவர் பட்டம் என்பது ஓர் ஏற்பு மட்டுமே. எதற்கும் ஓர் அடையாளம் அல்ல.
என் வரையில் இந்த ஏற்பு நான் கல்வித்துறை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு உதவியாக அமையும். உதாரணமாக, அண்மையில் தெற்கு கலிஃபோர்னியா பல்கலை உட்பட பல பல்கலை நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். அங்கே என் பெயர் முன்மொழியப்படும்போது இந்த பட்டம் உதவிகரமாக அமையும். அது நான் செய்யவிருக்கும் பணிகளுக்கான ஒரு தொடக்கவிசையை அளிக்கும்.
அக்கார்ட் விடுதியில் நவம்பர் 19ஆம் தேதி காலை 8 மணிக்கே நானும் அருண்மொழியும் சித்தமாகிவிட்டோம். விடுதியின் முகப்புக்கு வந்தோம் அங்கு லேய்மா போவே வந்திருந்தார். அவருடன் பேசிக்கொண்டு காத்திருந்தோம். பிற நண்பர்கள் நேரடியாகவே பல்கலைக்கழகத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். நாங்கள் புதுச்சேரியில் இருந்து கிளம்பி காலை 10 மணிக்கு தக்ஷசிலா பல்கலையை அடைந்தோம். மிகப் பெரிய வளாகம் கொண்டது. ஏராளமான கட்டிடங்கள் தொடர்ந்து கட்டுப்பட்டு கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள் பெரும்பாலும் தொடக்க நிலையிலே இருக்கின்றன.
அங்கே எங்கள் வண்டி நுழையும்போதே செண்டை தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. எங்களை பல்கலை வேந்தர் தனகரன், இணைவேந்தர் ராஜராஜன், இணைவேந்தர நிலா, பல்கலைக்கழக துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சார், பதிவாளர் செந்தில் ஆகியோர் வாசலில் வரவேற்று மலர்க்கொத்து அளித்தனர். வேந்தரின் அறைக்குள் சென்று அமர்ந்து தேநீர் அருந்தினோம். பி.டி.உஷா சென்னையில் இருந்து வந்து சேரவில்லை. பிஜியின் துணைத்தூதர் ஜகன்னாத் சாமி வந்திருந்தார்.
பத்தரை மணிக்கு கலைகழ்ச்சிகள் தொடங்கின. இந்திய மரபிசையை மேலையிசையுடன் இணைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தும் வீணைக் கலைஞராகிய புண்ணியா சீனிவாசன் மற்றும் அவர் கணவர் சீனிவாசன் நிகழ்த்திய இசை நிகழ்வு. கர்நாடகப் பாடல்களை புண்ணியா வீணையில் வாசிக்க, கூடவே மின்னணுத்தாளமும் கீபோர்டும் இணைந்து ஒலித்தன. அதன்பின் மாணவர்களின் மரபுசார் நடன நிகழ்ச்சி.
பி.டி.உஷா வந்து சேர்ந்தார். பல்கலையின் புதிய வளாகத்தை அவர் திறந்து வைத்தார். பி.டி.உஷாவை பார்த்தபோது நான் ஒரு விவாதத்தை நினைவுகூர்ந்தேன். உஷா தங்கம் வென்றபோது ஊடகங்கள் அவரைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தன. முதிய விமர்சகரான எம்.கிருஷ்ணன்நாயர் அதை கடுமையாகக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதினார். உடல்சார்ந்த ஒரு வெற்றியை கொண்டாடும் சமூகம் உளம்சார்ந்த, ஞானம் சார்ந்த சாதனைகளை குறைத்து மதிப்பிடுகிறது, அது ஒரு வீழ்ச்சி என்று குறிப்பிட்டார்.
அதை மறுத்து கல்பற்றா நாராயணன் ஒரு கவிதை எழுதியிருந்தார். ’உஷா ஓடும்போள்’ என்னும் அக்கவிதையில் ஒவ்வொருவரும் அவரவர் இறுதி எல்லைக்கு அப்பால் வைக்கும் ஒரு காலடி என்பது மானுடகுலத்தின் சாதனையே என்று எழுதியிருந்தார். அது உஷாவால் உடலால் நிகழ்த்தப்படுகிறது. கலைஞனால் கலையில் நிகழ்த்தப்படுகிறது. எல்லா வெற்றிகளும் மானுடவெற்றிகளே என அக்கவிதை சொன்னது.
சென்னையிலிருந்து அஜிதன், சைதன்யா, அஜிதனின் மனைவி தன்யா, அவர்களின் குடும்ப நண்பர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீன், அவர் மனைவியும் மானசா பதிப்பக பங்குதாரருமான கிருபாலட்சுமி, மானசா பதிப்பகத்தின் முதன்முகமான மானசா ஆகியோர் வந்திருந்தார்கள். நாங்கள் ஒரு அறையில் பேசிக் கொண்டிருந்தோம் மானசாவிடம் நான் டாக்டர் ஆகிவிட்டதாக நவீன் சொல்லி இருந்தார். ‘ஜெயமோகன் தாத்தா ஊசி போடுவாங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அதை இந்த பட்டத்திற்கான ஓர் ஏற்பு என்றுதான் சொல்ல வேண்டும். அறைக்குள் பலர் இருப்பதும், அவர்கள் தன்னை கவனிப்பதும் மனசாவை உற்சாகப்படுத்தியது. புதிதாக கற்றுக் கொண்ட சொற்களை நான்கு பக்கமும் சிதறடித்துக் கொண்டிருந்தாள். அவள் என்ன செய்தாலும் கூடவே சொற்களும் கசிந்தன.
எனக்கு ஒரு பதற்ற நிலை இருந்தது. ஒரு நாடகம் தொடங்க இருப்பது போல. நான் என்ன பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். பெரும்பாலும் இத்தகைய தருணங்களில் என்னால் நீண்ட நேரம் பேச முடிவதில்லை. எவர் கவனிக்கிறார்கள், என்ன கவனிக்கிறார்கள் என்று தெரியாத ஓர் அவை என்பது எனக்கு மிகவும் அந்நியமான ஒன்று. சடங்குசார்ந்த உரையை ஆற்ற முடிவதே இல்லை. நான் என்ன பேசப்போகிறேன் என்று எனக்குத்தெரியவில்லை.
என்னுடைய ஆடையை கொண்டு வந்து தந்தார்கள். ஆழ்ந்த சிவப்பு நிறம் கொண்ட, தோளிலும் விலாவிலும் பெரிய சுருக்கங்கள் கொண்ட பெரிய ‘கவுன்கோட்டு’ இது பிரிட்டனில் அரசகுடிகளுக்கு அரசவைக்கு வகுக்கப்பட்ட நிறம். பிரிட்டிஷ் அரசு அளிக்கும் சர் உள்ளிட்ட பட்டங்களை பெறுபவர்கள் Aristocracy எனும் தகுதிக்குள் நுழைகிறார்கள் என்பதை காட்டுவது இது. அந்த நிகழ்வின் ஒவ்வொரு ஆடை வண்ணத்துக்கும் அதற்கான பொருள் உண்டு. பல வண்ணங்கள். கரிய நிறம் என்பது அரச சபையில் தோன்றுவதற்கான அடிப்படை வண்ணம்.
நிகழ்ச்சி தொடங்கியது. எங்களை அந்த ஆடையுடன் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். நிகழ்வுடன் நேரடி தொடர்புடையவர்கள் மட்டுமே அங்கிருந்தனர். பல்கலை வேந்தர், துணைவேந்தர், இணைவேந்தர்கள், பல்கலை பதிவாளர் மற்றும் துறைத் தலைவர்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய வண்ணங்களில் சாட்டின் துணியாலான அலங்கார மேல்சட்டைகள். அவர்கள் ஒவ்வொருவரும் சடங்குமுறைப்படி வந்து அமர்ந்தார்கள்.
பதிவாளர் நிகழ்ச்சியை அறிவித்தபின் துணைவேந்தர் எனக்கும் பி.டி.உஷாவுக்கும் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க இருப்பதாகவும், மற்றும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க இருப்பதாகவும், அதற்கான அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தனித்தனியாக கோரிக்கையை வாசிக்க அதற்கு வேந்தர் ஏற்பை வாசித்தார். முறையான சொற்றொடர்கள் தேவை என்பதனால் எல்லாமே எழுதி வாசிக்கப்பட்டன.
கௌரவ முனைவர் பட்டம் ஒருவரின் சட்டபூர்வமான அசல்பெயருக்கே வழங்கப்பட முடியும். அந்த அசல்பெயருடன் மட்டுமே அதைப் போட்டுக்கொள்ளவும் முடியும். புனைபெயருடன் முனைவர் முன்னொட்டை இணைக்கக்கூடாது, அது மரபல்ல. அதாவது என் பெயர் ஜெயமோகன், ஆனால் அதனுடன் முதலெழுத்து இல்லை என்பதனால் அது புனைபெயர்தான். ஆகவே நான் ‘டாக்டர் ஜெயமோகன்’ அல்ல. நான் எப்போதுமே ஜெயமோகன் என்று மட்டுமே போட்டுக்கொள்வதனால், என் பெயருடன் எப்போதுமே முனைவர் பட்டம் இணைக்கப்பட வாய்ப்பில்லை.
என் தந்தை பெயரை நான் என் பெயரிலிருந்து விலக்கியது நன்கு எண்ணிச் செய்யப்பட்டதுதான். என் அடையாள அட்டைகளில் நான் என் தந்தை பெயருடனேயே இருக்கமுடியும், அது என் பிறப்பின் இன்றியமையாமை. என் நூல் அட்டைகளில் நான் என் பெயருடனேயே இருக்கவேண்டும் என எண்ணினேன். எழுத்தாளனாக நான் என் ஆசிரியர்களின் நீட்சியே ஒழிய, என் தந்தையின் வாரிசு அல்ல.
என் சட்டபூர்வப்பெயருடன் முனைவர் பட்டம் முறையான சொற்றொடர்களில் அறிவிக்கப்பட்டது. அதாவது என் பாஸ்போர்ட் பெயர், ஜெயமோகன் பாகுலேயன் பிள்ளை. பரவாயில்லை, பிள்ளைவாள் பெயருடன் முனைவர் சேர்ந்துகொண்டது என எண்ணி புன்னகைத்துக் கொண்டேன். என்னை வசைபாடும்போது “ஆமா, இவன் பெரிய பிஎச்டி” என்று சொல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. இப்போது என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை.
முடிவெடுக்கும் சடங்கு முடிந்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு வேந்தரின் அடையாளத்துடன் ஒருவர் முன்னால் செல்ல, அவரைத் தொடர்ந்து பட்டமளிப்பு ஊர்வலம் நிகழ்ந்தது. இந்த ஊர்வலமே சர் பட்டம் அனைத்திற்கும் பிரிட்டனின் அரசில் வழக்கம். அரசரின் தனியறையில் இருந்து அவைக் கூடத்திற்கான வருகை அது. இத்தகைய நிகழ்வை வெண்முரசில் வெவ்வேறு வகையில் சித்தரித்திருக்கிறேன். ஆனால் இது மகாபாரதக் காலத்திலேயே இருந்தது என்பது என்னுடைய கற்பனைதான். ஏனெனில் இதை நமது நூல்கள் பெரும்பாலும் குறிப்பிட்டதில்லை. ஆனால் இந்த ஊர்வலம் என்பது ஐரோப்பிய அரச சபையில் மிக முக்கியமான ஒன்று. அப்போது அவை எழுந்து நின்று வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்பது மரபு. பிரிட்டனின் சபையில் அதற்கான வாழ்த்துரைகளுமே முறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஊர்வலத்தில் எவர் முன்பு செல்ல வேண்டும் எவர் பின்னால் செல்வார்கள் என்பதற்கும் நெறிமுறைகள் உண்டு. அந்த வரிசையில் மேடையில் அமரவேண்டும். மதிப்புறு முனைவர் பட்டம் பெறுபவர்கள் இறுதியாக வர வேண்டும். மேடையில் அமர்ந்த பிறகு முறையான நிகழ்ச்சிகள் தொடங்கின. பல்கலை பதிவாளர் பேரா.செந்தில் விழா தொடங்குவதை அறிவிக்க வேந்தர் ஏற்பு அளித்தார். வரவேற்புரை வழங்கினார். துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சார் அவர்கள் பல்கலைக்கழகத்தின் சாதனைகளை, கனவுகளை பற்றிய அறிக்கையை அளித்தார்.
முதலில் பி.டி.உஷா அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. விருது அளிக்கப்பட்ட பின் அவர் ஓர் ஏற்புரை வழங்கினார். என் பெயர் சொல்லப்பட்டு எனக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிப்பது அறிவிக்கப்பட்டது. அதற்கு வேந்தர் ஏற்பு தெரிவித்தார்.
பட்டத்தைப் பெற்றபின் அதன் பிறகு நான் ஒரு சிறு உரை ஆற்றினேன். இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினேன். மிகச் சுருக்கமாக நான் ஓர் இலக்கிய மரபின் உறுப்பினராக அங்கு வந்திருப்பதாகவும், அந்த மரபுக்கு கிடைத்த ஏற்பு என அந்த பட்டத்தை கொள்வதாகவும், பொதுவாக நவீனத் தமிழ் எழுத்து என்பது தமிழ்ச் சூழலில் அமைப்பாலோ கல்வித்துறையாலோ ஏற்கப்படாத ஒன்றாகவே இருக்கின்றது என்றும், அந்த மரபு உடைக்கப்பட்டு அதற்கு ஏற்பு அமையத் தொடங்குவதற்கான ஒரு புள்ளியாக அதை எடுத்துக் கொள்வதாகவும் சொன்னேன். என் முன்னோடிகள் கவுரவிக்கப்படவில்லை, ஆனால் என் வழித்தோன்றல்கள் கல்வித் துறையால் ஏற்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டேன்.
பொதுவாக ஒரு தத்தளிப்பு எனக்கு இருந்தது. நீண்ட நேரம் நடந்த நிகழ்வு என்பதனால் மட்டும் அல்ல. அந்த அதை ஒரு வகையில் உணர்ச்சிகரம் என்றுதான் சொல்ல வேண்டும். நேரடியான உணர்ச்சிகர நிலைகள் எனககு வழக்கமில்லை. பொதுவாக மலையாளிகளே உணர்ச்சிகரமற்றவர்கள் என்பதுண்டு, இருக்கலாம். என் முன் திரண்டிருந்த என் நண்பர்கள், நான் அந்த தருணத்தை நவீன இலக்கியத்தின் ஒரு விரிந்த பரப்பில் வைத்துக்கொண்டது என பல காரணங்கள் இருக்கலாம்.
உண்மையில் மிகக் குறைவாகவே தமிழ்நாட்டில் நான் கௌரவிக்கப்பட்டிருக்கிறேன் – நான் பிறரை கௌரவிக்கிறேன் என்பது வேறு விஷயம். என் அறுபதாம் ஆண்டு நிகழ்வுக்குப்பின் இது என் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கு ஒரு முக்கியமான நிகழ்வு. ஆகவே அவர்களின் உணர்வுநிலைகள் உச்சத்தில் இருந்தன.
வேந்தர் தனசேகரன் மகாலிங்கம், மகன் ராஜராஜன், மகள் நிலா மற்றும் மருமகள்வேந்தர் தனசேகரன், இணைவேந்தர்கள் ராஜராஜன் மற்றும் நிலா ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர். பிஜி தீவின் துணைத்தூதர் ஜெகன்னாத் சாமி பேசினார். லெய்மா போவேயின் உரை மிகத் தீவிரமான ஒன்றாக இருந்தது. அதை ஒரு வகையான ஒரே நிகழ்த்துகலை என்றுதான் சொல்ல வேண்டும். இரு கைகளையும் அசைத்தும், அவையை நோக்கியும் மேடை நோக்கியும் நாடகீயமாகத் திரும்பியும், கணீரென்ற குரலில் உற்சாகம் ததும்பும் பாவனைகளுடன் அவர் பேசியது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சிற்றுரைகளில் ஒன்று.
மிக எளிய ஒரு நிலையில், ஓர் ஊக்கம் மட்டுமே தொடக்கமாகக் கொண்டு பெருஞ்செயல்கள் பிறக்க முடியும் என்றும்; தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் செய்யப்படும் செயல்களே வெற்றி நோக்கிச் செல்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். அதைச் சொல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் கொண்டவர் அவர். வரலாறு என்பது முதல் காலடியில் இருந்து தொடங்குகிறது. வரலாறு என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் வைத்துக் கொண்டே இருக்கும் தொடர்காலடிகளின் வழியாக நிகழ்கிறது என்பதற்கு அவரே உதாரணம்.
அருண்மொழி பிறகு என்னிடம் “என்ன உரை! என்ன உரை! ஒரு கணம் கூட அவர்களிடமிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை!” என்று சொன்னாள். நான் சொன்னேன் “தன்னந்தனிப் பெண்ணாக ஒரு நாட்டில் ஒரு பெரிய மக்கள் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். மக்களைத் திரட்டுபவர்கள் மாபெரும் பேச்சாளர்கள்தான். ஆக்கத்துக்கும் சரி, அழிவுக்கும் சரி”
இரண்டரை மணிக்கு தொடங்கிய விழா ஐந்தரை மணிக்கு முடிவடைந்தது. விழா முடிவை பதிவாளர் அறிவிக்க மீண்டும் ஒரு சிறு ஊர்வலம் நடந்தது. அவைக்கு வந்தது போலவே அதன் எதிர்த் திசையில் திரும்பி அவை நீங்கினோம். வேந்தரின் அறைக்குச் சென்று சேர்ந்ததும் விழா நிறைவுற்றது. ஒரு மூன்றரை மணி நேர மாபெரும் நாடகத்தின் முடிவு போல தோன்றியது.
என்னுடைய நண்பர்கள் என்னை பார்க்க விரும்பினார்கள். ஆகவே அங்கு சிற்றவைக்கூடத்தில் நான் அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொருவரும் எனக்கு பொன்னாடை போர்த்தி, கட்டித் தழுவி வாழ்த்துக்கள் சொன்னார்கள். பாவண்ணன், பவா செல்லத்துரை, கண்டராதித்தன், முகையூர் அசதா என எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். வாழ்த்துக்களும், முத்தங்களும், கேலிகளும், சிரிப்புகளும் என நாள் நிறைவடைந்துகொண்டே இருந்தது. முந்தைய நிகழ்வின் நீண்ட சம்பிரதாயத் தன்மையை ஒட்டுமொத்தமாக தலைகீழாக்கி ஒரு தன்னிச்சையான கொண்டாட்டத்தை அந்த சந்திப்பு உருவாக்கியது. அங்கே அவர்கள் நடுவே நிற்கையில் நான் ஈட்டிக்கொண்ட செல்வம் இது என்று பெருமை எழுந்தது.
வேந்தரும், துணைவேந்தரும், இணைவேந்தர்களும் வந்து வழியனுப்பினர். அனைவரிடமும் விடை பெற்று கிளம்பி மீண்டும் அக்கார்ட் விடுதிக்கு வந்தோம். அருண்மொழி களைப்புடன் அப்படியே நாற்காலியில் அமர்ந்தாள். நான் அருகே அமர்ந்தேன். ஓர் இழப்புணர்வு. எந்த எய்துதல்களும் உடனடியாகக் காலத்தில் பின்னகர்கின்றன, எய்தப்பட்டவை இயல்பாக ஆகிவிடுகின்றன. அந்த இழப்புணர்வை வெல்ல ஒரே வழிதான். அடுத்த செயல். என் அடுத்தகட்ட பணிகள் பற்றிய மின்னஞ்சல்கள் காத்திருந்தன. ஒவ்வொன்றுக்காக பதில் எழுத ஆரம்பித்தேன். அரைமணி நேரத்தில் முழுமையாகவே வெளியே வந்துவிட்டேன். அடுத்த பயணம் இன்னும் ஐந்து நாட்களில் பிரிட்டனுக்கு. அடுத்த பணிகள்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

