அருண்மொழி நங்கை's Blog

June 30, 2022

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – கடிதங்கள்

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கடிதம்

வணக்கம் அருண்மொழி,

உங்கள் ’நிலத்தினும் பெரிதே’ கட்டுரையை படித்தேன். நான் தொடங்கும் போது ஏழு, எட்டு பக்கமிருக்கும் என நினைத்தேன். என்னால் யோசிக்கவே முடியவில்லை. அறுபத்தி மூன்று பக்கம் எழுதியிருக்கிறீர்கள். அதனை தொடங்கிய பிறகு கீழே வைக்க முடியவில்லை. அப்படியே ஒரே இடத்திலிருந்து அதனைப் படித்து முடித்துவிட்டு தான் அடுத்த வேலை பார்த்தேன். நீங்கள் இதனையே பிடித்துக் கொள்ளுங்கள், அருமையாக இருந்தது, அற்புதமாக இருந்தது. இந்த எழுத்தை தான் நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல வடிவாக, நல்ல லாவகமாக வருகிறது.

நீங்கள் ஆரம்பித்த விதம், ஆற்றூர் ரவிவர்மாவிடம் போனது அதில் தொடங்கி அதிலிருந்து உங்கள் கல்லூரி வாழ்க்கைக்குள் செல்கிறது. 1990 ஜூன் அதிலிருந்து உங்கள் கல்யாணம் வரை சிறப்பாக சொல்லியிருந்தீர்கள். எழுத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் இடையிடையே நீங்கள் சொல்வது போலிஸ்காரர்கள் கடிதங்களை எடுத்து சென்றுவிட்டார்கள் எனச் சொன்னதும் உங்களது கடிதங்கள் அவங்க கையில கிடைக்க போகுது என நீங்கள் பதறும் இடம் நன்றாக வந்திருக்கிறது. அணில் பாய்ந்த போது இருவருக்குமான நெருக்கம், நீங்க வடநாடு போன போது என எல்லா இடங்களும் நன்றாக வந்திருக்கிறது.  இதே மாதிரி எழுதுங்கள்.

You have got it. இனி உங்களுக்கு ஒருவித பிரச்சனையும் இல்ல. You are a Senior Writer. உங்கள் எழுத்து அவ்வளவு முதிர்ச்சியாக இருந்தது. இதில் முக்கியமான விஷயமென்றால் சுவாரஸ்யம், எடுத்து படிக்கத் தொடங்கின உடனே கடைசி வரைக்கும் உங்கள் எழுத்துக் கொண்டு போறதுயிருக்கில்ல அது ரொம்ப முக்கியம். தொடர்ந்து செய்யுங்கள். பெரிய வாழ்த்துக்கள். அவரது பிறந்தநாள் பரிசாக இதை கொடுங்கள். பெரிய சந்தோஷமாக இருக்கு, நல்லது. இதே போல் எழுதுங்கள். வணக்கம்.

உங்கள் காதல் கதை உலகையே சுற்றிவருகிறது. சுனாமி அலையாக மற்ற எல்லாவற்றையும் அடித்துவிட்டது.

அ. முத்துலிங்கம்,

டொராண்டோ

***

பெருநியதி என்னிடம் மிகுந்த கருணையோடிருந்தது, கருணையோடிருக்கிறது, கருணையோடிருக்கும். ஆம், அது அவ்வாறேயிருக்கும். அது அவ்வாறே இருக்க வேண்டும், அருணா. இருக்கும்.

படித்து முடித்தவுடன் மனதில் ஒரு இனம் புரியாத அமைதி.

வெகு நாட்களுக்குப் பின் இப்படியொரு காதல் கதையை வாசிக்கிறேன்.

நன்றி.

இனி எல்லோரும் பனி உருகுவதில்லையை மறந்துவிட்டு, இந்தக் கதையை பற்றிக் கொள்வார்கள்.

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்,

கோவை

***

கட்டுரையைப் படித்தேன். சிறப்பாக உள்ளது. தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் மாயஜாலம் உங்கள் விரல்களுக்கு உண்டு போலும். அங்கதம் என்கிற நவரத்தினங்களை பதித்து கட்டுரையை மேலும் அழகூட்டியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

உங்கள் கட்டுரை தொடர் இரண்டு படித்தேன். போகிற போக்கைப் பார்த்தால் பனி உருகுவதில்லை நூலை விஞ்சி விடும் போல தெரிகிறது இந்தக் கட்டுரைத் தொடர். நன்றி. வாழ்த்துகள்.

அரிய படங்கள் கட்டுரைக்கு வலு சேர்க்கின்றன. உங்கள் இருவரையும் குற்றாலம் பட்டறையில் தான் முதலில் பார்த்தேன். அப்போது அஜி நான்கைந்து மாத கைக்குழந்தை. நீங்கள் இப்போது பகிரும் படங்கள் அதற்கு முந்தியவை.

ஒரு வரியைக் கூட உதறியெடுக்க முடியாது. அத்தனை துல்லியம். உங்கள் உரையாடலை போல அத்தனை வேகம். உங்களால் சிறந்த பயணக்கட்டுரையையும் எழுத முடியும். இன்று நீங்கள் ஆதர்ச தம்பதிகள் தான். நீங்கள் இனி எழுத்தை நிறுத்த முடியாது. அந்த நிர்பந்தத்தற்கு உள்ளாகி விட்டீர்கள். வாழ்த்துகள். ஜெயமோகனிடம் சஷ்டி பூர்த்தி வாழ்த்துகளைக் கூறுங்கள். அவர் பல்வேறு பணிகளில் இருப்பதால் அழைக்கவில்லை.

நிர்மால்யா,

ஊட்டி

***

மிக உணர்ச்சிகரமாக அன்று நடந்ததை இன்று போல் ஆற்றொழுக்காய் சொல்ல முடிந்த கட்டுரை.இன்றும் அந்தச் சுடர் தொடர்ந்து மேலும் மேலும் பிரகாசித்து எரிவதை சொற்களின் மூலம் கடத்த முடிந்திருக்கிறது.

எழுத்தாளர் போகன்சங்கர்

***

ஜெயமோகனின் உடல்மொழியைத் துல்லியமாக அறிந்தவன், நான். (அருண்மொழிக்கு அடுத்துதான்) இந்த எழுத்தில் ஜெயமோகனை நான் பார்த்தேன். அருண்மொழியையும்.. நல்ல எழுத்தின் வெற்றி இதுதான்.. என்னைப் பொருத்தவரை மோகன் கலப்பில்லா அசடு.. எழுத்தாளர் ஜெயமோகனைச் சொல்லவில்லை.. அவர் வேறு ஆள்.. எனக்குத் தெரிந்த மோகனைச் சொல்கிறேன். ஆனால் அருண்மொழியைக் காதலித்த காலத்தில் மோகன் இத்தனை ஸ்மார்ட்டாக இருந்திருக்கிறார் என்பதை நம்பமுடியவில்லை. புன்னகையுடனேதான் படித்தேன். இன்னும் எழுதுங்கள்.. எழுதுவீர்கள்..

எழுத்தாளர் சுகா

***

காட்சிப் படுத்துதலில் ஒரு தேர்ந்த புனைவுக்கு ஈடாக நிற்கிறது. ஒரு மாபெரும் கலைஞனின் காதல் வாழ்க்கை அவ்வளவு அழகாக எழுதப்பட்டுள்ளது. வாசிக்க வாசிக்க அப்படியே இழுத்துக்கொண்டுபோய் கட்டுரைக்கு உள்ளே செருகிவிட்டது.

ஒரு நல்ல குறுநாவல் போல விறுவிறுப்பாக போகிறது. புனைவுக்கு மிக நெருக்கமான படைப்பு. இதனை வாசிக்கும்போது வீட்டம்மணியிடமிருந்து கொஞ்சம் இடையூறு உண்டானது. எனக்குக் கோபம் வந்தது. ஒரே மூச்சில் வாசிக்கக்கூடிய வசீகரம் நிறைந்த ஈர்ப்பான எழுத்து நடை.

ஜெயமோகனின் இளவயது துள்ளல் நேர்த்தியாகப் பதிவாகியிருக்கிறது. காதல் மனங்களின் அலைக்கழிப்பு கோர்வையாக வந்திருக்கிறது. உங்களின் அந்தப் பரபரப்பான இளவயதின் ஒரு துண்டு வாழ்க்கையை இலக்கியமாக்கியிருக்கிறீர்கள் திருமதி அருணா. சுவாரஸ்யம் எந்த இடத்திலும் குறையவில்லை. awesome.

எழுத்தாளர் கோ. புண்ணியவான்

***

மேடம்,

தந்தி கொடுக்கும் இடம் வந்தவுடனேயே இது ஒரு வாழ்வனுபவ கட்டுரை அல்ல என்றாகியது. சம்பவங்கள் அதன் போக்கில் எடுக்கும் ரூபங்கள் நமக்கு ஆச்சர்யம் அளிப்பவை, இவையே நம் வெற்று வாழ்க்கையை ருசிமிக்கதாக்குகிறது. தந்தி கொடுக்கும் யோசனை என்பது அக்கணம் தோன்றும் வரை நீங்களே எண்ணி இராதது. ஒரு பெரும் கலைஞன் இன்னும் கூடுதல் இன்னும் கூடுதல் என வாழ்வை முடுக்கி அந்த விசையை உங்களுக்கு அளிக்கிறான். ஒரு ஓட்ட வீராங்கனை கோட்டு முனையில் தயார் நிலையில் நிற்பது போல நின்று இருந்துள்ளீர்கள். ஜெயமோகன் எழுதிய முதல் காதல் கடிதம் ஒரு துப்பாக்கி இழுப்பு, வெடிச் சத்தம் கேட்டது தான் தாமதம் அடுத்து நிகழ்ந்தது மின்னல் வேக ஓட்டம். இன்றுவரை தொடர் கம்பை கைமாற்றி கைமாற்றி ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள்.

“நிலத்தினும் பெரிதே..” எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்த திரைப்படம் போல இருந்தது. நான் சிறு வயதில் மெல்லிய மின்சாரம் உமிழும் வயரை நுனி நாவால் தொடுவேன், உப்புக் கரிக்கும். சிறு விதிர்ப்பு தரும் திகில் எனக்குப் பிடிக்கும். நீங்கள் உங்கள் தம்பியிடம் தர்மபுரி, ஜெயமோகன் என சில சொற்களை கசிய விடுதல் அவ்வாறு தான். காதலின் உச்சம் மரணத்தின் வெகு அருகே நிற்கும் அனுபவம். ஒரு அடி பிறன்றால் மரணம் என்கிற விளிம்பில் நின்று விளையாடும் போதை அது. பின்னர் ஒவ்வொரு நாளும் உங்கள் தம்பி உங்களை காட்டிக்கொடுக்கும் தருணத்தை பயந்தே நாளைத் தள்ள வேண்டும். ஒரு உயர் கட்டிடத்தின் விளிம்பில் ஒற்றைக் கால் நிற்பு. இந்த உச்ச கணங்களை வெகு சாதாரணமாக ஆனால் வெகு அழுத்தமாக விவரித்து இருந்தீர்கள். ஒரு மௌனமான கூர்வாள் போல குத்திட்டு நிற்கிறது அது.

கண்ணை மூடிக்கொண்டு தலை கீழ் பக்கத்தில் விரல் தொடுதல் தெய்வத்தின் பகடை வீச்சு, விழுந்தது முழு பனிரெண்டு. இது போன்ற ஒரு காதலின் துவக்கத்தை நேரில் பார்த்தால் கூட ஒரு நாடகம் என்பேன். இடியட் டில் மிஷ்கின் தன் காதலியை பார்ப்பதற்கு முன் அவள் ஓவியத்தைப் பார்ப்பது போல. காதல் தன் எண்ணிலா கரங்கள் அனைத்தையும் கோர்த்து உங்கள் இருவரையும் தழுவிக் கொண்டுவிட்டது.

உணர்ச்சி பூர்வமாக எழுந்த கட்டுரை வளர்ந்து வளர்ந்து திடீரென ஒரு எதார்த்த நடைக்கு சென்றது ஒரு நிபுணனின் ஓவியத் தீற்று. ராஜீவ்காந்தி கொல்லப்படுத்தல், திருட்டு தனமாக வெளியேறுதல், சேலம் தர்மபுரி, திருமணம் பின் சமாதானம் எல்லாமே துல்லிய விவரணையுடன் மிக மெது நடையில் செல்கிறது. இதைப் படிக்கும்போது நம் நிஜ வாழ்விலும் மாய எதார்த்தம், மீ எதார்த்தம், இயல்புவாதம் என புனைவின் அனைத்து உத்திகளும் இடம்பெற்று இருக்கிறது என முதல் முறை உணர்கிறேன். இவையெல்லாம் இதுபோன்ற வாழ்வோட்டத்தில் இருந்து தான் பிறந்து இருக்கிறது.

இது நாள் வரை தன் வாழ்வின் இந்தப் பகுதிகளை ஜெயமோகன் எழுதவில்லை
“சுனைவாய்ச் சிறுநீரை எய்தா.. பிணை மான்” என நின்றுவிட்டார். எழுதினாலும் இந்த வண்ண ராட்டினம் இதே விசையில் சுழன்று இருக்குமா என உறுதிபட கூற இயலாது.

இவ்வளவு ஆண்டுகள் சுனையில் அருந்தியது ஒருவர் மற்றொருவரை.

கிருஷ்ணன்,
ஈரோடு.

***

Just finished reading. தம்பி திரும்ப வந்தானா சொல்லலையே. Art of loving author and the other person – இந்த details உங்க intelligence ஐ பறை சாற்றுது. ப்ச் எல்லா கடிதமும் வாரிட்டு போயிட்டாங்க…. உயிர் பிடுங்கி போன மாதிரி படிக்கறதுக்கே வலிக்குது இன்னும் பல நூறாண்டுகள் நீங்க மகிழ்ந்திருக்க காரணங்கள் பல பெருகட்டும் அன்பு😍😘.

அந்த பஸ் ஸ்டாண்ட் மிஸ் ஆகி அவர் பரிதவிச்சது ரொம்ப பாவம் மழை வேற … பஸ்சும் சீக்கிரம் வரவே…. சரி எப்படியோ எல்லாம் சுபம். Chain போட்டுட்டு வராதே சொன்ன அவரும் அதக் கழட்டி வச்சா சந்தேகம் வரும்னு நீங்க போட்டுட்டு வந்ததும். அந்த நெடும்ம்ம் பயணம். அவர் உங்க அப்பாவுக்கு பொறுப்பா கடிதம் எழுதினார் பாருங்க ❤😍

பாத்திமா பாபு

***

Amma. Just finished reading.

Brilliant, powerful, moving. You have exceeded appa in this article.

Had tears in many places, had laughs. I saw myself in both of you.

I’m blessed to born of such love.😢😢

அஜிதன்

***

படிச்சாச்சு. பெரும் காதல் நாவலை படித்த உணர்வு

அற்புதம்

💐 💐 💐

செங்கதிர்.

***

மேற்பார்வைக்கு அருணா, வெகுளியாக, சிறுமியாக, எதையும் தீர யோசித்து முடிவெடுக்கும் நபராக இல்லாதவராக தோன்றினாலும் அவரது உள்ளுணர்வை நம்பி அதன் வழியில் செயல்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. பெரும்பாலோனார்க்கு அந்த வயதில் உள்ளுணர்வைப் பற்றிய சிறு அறிதல் கூட இருக்காது.
அந்த உள்ளுணர்வு தவறாக இருக்க வாய்ப்பு குறைவு. ஏனெனில் காதல் வாசிப்பை, எழுத்தை அடிப்படையாக வைத்தே பெருந்தேனாக பொங்கியிருக்கிறது.
மிகப்பொருத்தமான நெல்லிக்கனியாக ஜெவும் அருகில் வந்தமர்ந்து, ஒரு பக்கம்,இளம் வயதிற்குரிய காதலுக்குரிய உணர்ச்சி தீவிரங்களுடன் இருந்தாலும் இன்னொரு பக்கம் மிகப்பொறுப்பாக திருமண வாழ்வினைப்பற்றிய மிகத்தெளிவுடனும் இருந்திருக்கிறார்.
இன்னொரு முறை அல்லது எத்தனை முறை சாக்கை உதறிக்கட்டினாலும் இவ்விரு நெல்லிக்கனிகளுமே எப்படியாவது அருகில் அமர்ந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது!

எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி

***

ஜெ-யின் வாசகர் ஒருவர் , மருத்துவர், உங்கள் காதல் சொட்டும் கட்டுரைகளை வாசித்துவிட்டு எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. //நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – அருண்மொழிநங்கை படிக்க ஆரம்பித்து அலைபேசியை கீழே வைக்க இயலவில்லை. காதலே ஒரு வரம், அதிலும் ஆசிர்வதிக்கப்பட்ட காதல். ஆசான் அவதாரமான கதை. ஜெவின் வெற்றியின் ரகசியத்தை கண்டுகொண்டோம் இன்று 🙏//

* நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 1 * ஜெ -யின் எழுத்தின் மூலமே உங்களை நான் அறிவேன். எனக்குத் தெரிந்த அருண்மொழி அந்தச் சங்கப் பாடல்களில் தொடங்குவார். பனி உருகுவதில்லை மூலம் உங்களின் சிறு பிராயத்தையும் தெரிந்துகொண்டேன். இதைவிடச் சிறந்த காதல் கதை இனி இவ்வுலகில் இல்லை. காதல் என்றால் கத்தரிக்காய்தான் என பதின்மவயதிலேயே ஞானம் பெற்றவன் நான். அதை உடைத்த நான்கு ஐந்து ஜோடிகளில் நீங்கள் உண்டு.

வாழ்க பல்லாண்டு!

உங்கள் கட்டுரையை வாசித்துவிட்டு எங்கள் மகள் சுபாங்கி ( niece) எழுதியதை அனுப்புகிறேன்.

A too good one daddy ! And this is a must read for youngsters today . I get scared seeing many of my friends and classmates getting into toxic relationships and end up depressed and lost . If everyone of 2k generation could read this , we would know what love actually is ! Most of the people of my age I see around me get lost in colour , money which weren’t at all a point of serious consideration in this beautiful life story ! I could witness falling rising in love . More than that I could feel the magic of friendship !

உங்கள் இருவரின் உரையாடலில் வாய்விட்டுச் சிரித்தேன். தம்பி காணாமல் போனபோது, என் சகோதரிகள் என்னை எப்படிப் பார்த்துக்கொள்வார்கள் என்று தெரியும். ஆதலால், சகோதரியின் அன்பில் நெகிழ்ந்தேன். நான் தம்பியாக மாறிக்கொண்டேன் (வயதில் நான் உங்களுக்கு அண்ணன்தான்).

இப்படியே போன கதை சரித்திரக்கதையாவது உச்சம். நான் இந்தக் காதல் கதையை மட்டும் பிரசுரம் செய்யும் உரிமையை வாங்கிகொள்ளப்போகிறேன் 😄 அவ்வளவு அழகாக சொல்கிறீர்கள். காதலர்கள் கொஞ்சுவதல்லாமால், அரசியலும், குடும்ப விஷயமும் பேசுவார்கள் எனும் பொருளில் நான் காதல் கவிதைகள் எழுதிய காலம் உண்டு. நீங்கள் அதன் உதாரண புருஷர்கள். நான் என் சகோதரியின் காதலை நானாக கண்டுபிடித்து, இரு வீட்டாரிடமும் பேசி கல்யாணம் செய்து வைத்தேன். அப்பொழுது என் வயது 23. அக்காக்கள் தம்பிகளை ஏமாற்ற முடியாது. 😀 இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது என் பொறுப்பு. தயவு செய்து வேறு யாருக்கும் அந்த உரிமையை கொடுக்காதீர்கள்.

ஜெ-யின் காதலை, ஞானத்தை, கோபத்தை, சமுதாய அக்கறையை உங்கள் பார்வையில் வாசிக்க நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். எல்லோரையும் பற்றி அவர் எழுத, அவரை சரியாக கணித்து சொல்ல ஓர் ஆளுமை தேவை. இந்தக் கட்டுரை காதலாக மட்டுமல்லாமல், இன்னொரு ஆளுமையை உலகுக்கு எடுத்து வைக்கும் கட்டுரையாக சரித்திரமாகிறது.

இன்று முழுக்க தம்பியாக நீங்கள் அக்காவாக, நான் கிண்டல் செய்யப்போகிறேன். கவலையாகவும் உணர்கிறேன். என்னடா இந்தப் பையன் விடுதலைப் புலிகள் பற்றியெல்லாம் கட்டுரை எழுதுகிறார். நம் அக்காவை வைச்சுக் காப்பாத்துவாரா இப்படி. அந்தக் காலத்தில் இருந்து அப்படியே யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

விருவிருப்புக் குறையவே இல்லை. நான் பயந்ததுபோல் இல்லை. மாப்பிள்ளை நல்ல பையன்தான் போல. மூன்று பவுன் நகை, கரும்பச்சை கலரில் பட்டுப்புடவை, உங்களுக்காக வந்து காத்திருப்பது என கொஞ்சம் நம்பிக்கையை வரவைத்துவிட்டார். அவர் கட்டுரையை நீங்கள் வாசிக்கவில்லை என்று சீண்ட, அவர் முகம் வாட, அப்புறம் உண்மையை சொன்ன தருணங்கள்.😍💐

ஆஸ்டின் சௌந்தர்.

***

பெருநியதி இன்னுமின்னும் உங்கள்ட்ட கருணையோட இருக்கனும்… 🥰❤
கள்ளமற்ற உங்கள் உள்ளத்தின் பொருட்டு அந்த பெருநியதி உங்களுக்கு இனியும் கருணையோடு அமையும் அருணாம்மா… ❤🥺 லவ் யூ… 😚😚🤗🤗🤗

அந்த ஆதர்ச தம்பதிகளான தாத்தா பாட்டி போல… நீங்க இருப்பீங்க கடைசி வரை…சுத்தி போட்டுடுங்க இரெண்டு பேருக்கும்… ❤❤

உங்கள் கடிதத்தில் எனக்குப் பிடித்த இடங்களை இதனுடன் இணைக்கிறேன்.

//அதில் பற்றியெரியும் உணர்ச்சிகரத்துக்கு இடமில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அது நேர் எதிர்நிலைக்கும் செல்லும். காதலிக்கும் ஆரம்ப நாட்களில் அது உணர்ச்சிகரமானதுதான். முதன்முதலாக இன்னொரு மனதை, ஆளுமையை நுணுகி அறிவதன் பரவசம். நாள் போகப் போக அது சமனப்படவேண்டும். சுயநலவாதிகளால் ஒருபோதும் காதலிக்க முடியாது. தன்னைப் பற்றியே சிந்திப்பவர்களுக்கும் அது வாய்க்காது. காதல் ஒருவித சமர்ப்பணமும் கூட. உன் அகந்தையை, அறிவை, தன்னிலையை ஒருவரிடமாவது கழற்றி வைக்க வேண்டும் என்கிறார் ஃப்ராம். ஒருவரிடம் காதல்கொள்ள நீ ஒட்டுமொத்த மனிதகுலத்தையே நேசிக்க வேண்டும். இரண்டும் வேறு, வேறல்ல.//

//காதலின் பித்துநிலை என்பது இதுதானா? எந்த தர்க்கங்களையும், ஒழுங்குகளையும் கைக்கொள்ள மறுக்கிறது அது. ஒப்பிட நான் கொஞ்சம் தரையில் நின்றிருக்கிறேன் எனத் தோன்றும். அவர் பிடிவாதத்தை உள்ளூர ரசித்தேன்.//

//உண்மையில் நான் ஜெயனின் பொருட்டு பெருநியதியுடன் எந்த ஆட்டத்தையும் ஆடத்துணியவில்லை. அதன் காலடியில் என்னை முழுவதும் அர்ப்பணித்து சரணடையவே விழைந்தேன். ஆற்றூர் சொன்னது போல் அந்த இரு நெல்லிக்காய்களும் அருகருகே அமைவது பெருநியதியின் பெருங்கருணையால் நிகழ்வதே. வாழ்வெனும் மாபெரும் புதிரான சதுரங்க ஆட்டத்தில் விழும் பகடைகளின் நிகழ்தகவுகள் நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை, எண்ண ஒண்ணாதவை, எண்ணில் அடங்காதவை. ஆனாலும் பெருநியதி என்னிடம் மிகுந்த கருணையோடிருந்தது, கருணையோடிருக்கிறது, கருணையோடிருக்கும். ஆம், அது அவ்வாறேயிருக்கும்.//

ரம்யா

***

வணக்கம் அக்கா,

இப்போதுதான் நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 1 வாசித்தேன். வாசிக்க வாசிக்க நேரில் நடப்பது போல் இருந்தது. கடைசி வரை மாறாத புன்னகையுடன் வாசிக்க முடிந்தது. இவ்வளவு காதல் அதுவும் முதல் சந்திப்பில் 😍.சங்கச்சித்திரங்கள் ல சார் நீங்க கொன்றை மரப்பூக்களை உயர எழும்பி புத்தகத்தை வைத்து தட்டி உதித்ததாக கூறியிருந்தார் அது என் மனதில் ஒரு ஓவியம் போல பதிந்து விட்டது. சந்தோசமா இருந்தது அக்கா. என்றும் இதே மாறாத காதலுடன் இருக்கணும்.ஆனால் சார் மாதிரி அறிவுஜீவி கிட்ட இவ்வளவு காதல் உணர்வுகளோ உரையாடல்களோ எதிர்பார்க்கல.அதுவும் “டி” போட்டு பேசும் அளவிற்கு. ஆனா நமக்கு பிடித்த ஆளுமை ,தோழன், குரு இப்படி அனைத்து விதத்திலும் ஆக்கிரமித்தவரின் இந்த காதல் உணர்வுகள் இந்த நாளை தித்திப்பாக்கியது.

அழகான , பிரேமையான கட்டுரை. எப்படா நாளைக்கு 2ஆம் பகுதி வரும்னு இருக்கு.லவ் யூ அக்கா❤ வாசித்து முடித்தாயிற்று.எரிக் ஃ ப்ராம் ல இருந்து தம்பி ஓடிப்போனது ,கல்யாண முடிவு, ராஜிவ் கொலை வரை👌 எப்படிக்கா இவ்வளவு துல்லியமா சம்பவங்களை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் எனக்கு ஆச்சரியமான ஆச்சர்யம். சாரும் நீங்களும் திருப்பத்தூர் வழியா போனது எனக்கு ஏதோ கிரீடம் வைத்தது மாதிரி இருந்தது. மறுபடியும் தொடரும் நாளை வரை காத்திருக்கணும் 😍

அக்கா நேற்றிலிருந்து உங்கள் கட்டுரைகள் எல்லாம் நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.எங்க வீட்ல அவர் ஏன் எந்நேரமும் ஏதோ நெனச்சு சிரிச்சிட்டே இருக்கன்னு கேட்டார்🤩 நீங்க அனுப்புறதுக்கு முன்னாடியே லிங்க் கெடச்சி வாசிக்க ஆரம்பித்து முடித்தாயிற்று(காத்துக்கிட்டுள்ள கிடந்தோம்)இன்னிக்கு பயங்கர நெகிழ்ச்சியாக இருந்தது.சிறு வயதில் ஊரில் யாராவது வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டால் எப்படி பிளான் செய்து எங்கு தாலி காட்டுவார்கள் தெரியாத ஊர்ல எப்படி இருப்பாங்கன்னு அவங்க அம்மா அப்பாவை விட நான் அதிகம் யோசிச்சு கலங்குவேன் .இன்னிக்கு அதை அப்படியே கற்பனையில் பார்த்தேன்.🤩

அக்கா //லலிதாங்கிக்காக மரமல்லி அடியில் காத்து நிற்கும் பித்துநிறைந்த திருவடியேதான்.] //இதுக்கு மேல பித்து நிலையை சொல்லிட முடியுமா. வாசிக்க வாசிக்க நிறைவா இருந்தது அக்கா.ஆனா பனி உருகுவதில்லை கட்டுரை வாசிச்சிட்டு இந்த கட்டுரை வாசிக்கும்போது எப்படி இந்த குடும்பத்தை விட்டு பிரியும்போது எவ்வளவு கலங்கியிருப்பீர்கள்ன்னு புரிந்து கொள்ள முடிந்தது. கடைசி பாரா மனதை விட்டு நீங்கவில்லை. சார் எவ்ளோ பிளான் பண்ணி கரெக்ட்டா முடிச்சிருக்கார் .மறக்க முடியாத வாழ்வனுபவங்கள் இப்போது எங்களுக்கும்.என்றும் இதே மனமொத்த தம்பதிகளாக இருக்க பிராத்தனைகள். love &hugs அக்கா😍

கவிதா,

சென்னை.

***

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு இரண்டு பாகங்களும் படித்தேன். கவிதை சிறுகதை குறுநாவல் வாழ்க்கை அனுபவ கட்டுரை என எல்லா வகைக்குள்ளும் பொருந்தும் எழுத்து.

முதல் பாகத்தில் நிரம்பி வழியும் காதலை தர்கங்களுக்கு அப்பாற்பட்ட உன்னத உணர்வை பூர்ணமாக உணர்ந்தேன். (நானும் மனைவியை சந்தித்து காதலை வெளிப்படுத்திய 15 தினங்களுக்குள் பெண் வீட்டாரை எதிர்த்து திருமணமே செய்து விட்டேன்). உங்கள் வீட்டினுடைய சூழல் ஆற்றூர் சுரா ஆசானின் அண்ணா, கல்லூரி சூழல் அக்காலத்திய தமிழகம் இந்தியா மனிதர்கள் பற்றி மிகக் குறைவான வார்த்தைகளில் ஆனால் முழுதுமாக காட்சிப் படுத்தும் வகையில் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

ஆசானை தொடர்ந்து வாசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இது மிகவும் அந்தரங்கமான ஒரு அனுபவம். உங்கள் இருவரைப் பற்றியும் எதுவுமே தெரியாத ஒருவர் இதை படித்தாலும் சிறந்த படைப்பை படித்த நிறைவையே உணர்வார்.

உங்கள் இயல்பான அதிவேகமாக பேசும் தன்மை எழுத்திலும் இருக்கிறது. கொஞ்சம் மூச்சு இழுத்து விட்டுக் கொண்டு தான் படிக்க முடியும் நடையின் வேகமும் துல்லியமும் அப்படி. ஏனெனில் உங்கள் காதலைப் போலவே இன்றும் ஆசானை அதே தீவிரத்துடன் நானும் காதலிக்கிறேன்.

சில நாட்களுக்கு முன் என் போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த மனைவி சண்டைக்கு வந்தார் போனில் இருக்கும் படங்களில் மனைவி குழந்தைகளில் விட ஆசானின் படம் தான் அதிகமாக இருக்கிறது.இந்த நிகழ்வுகளை ஆசான் வெவ்வேறு இடங்களில் எழுதியுள்ளார் நேர்ப்பேச்சில் கூறியிருக்கிறார் முதல் சந்திப்பில் இருந்து திருமணம் வரை ஒரே தொகுப்பாக படிக்கக் கிடைத்தது அதுவும் ஆசானின் அறுபதாம் அகவை நிறைவு படிக்க வைத்தது உண்மையிலேயே என் மனதிற்குள் ஒரு தித்திப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஆம் நிரம்பி வழியும் பெருந்தேன் உறவுதான்
இது.

அந்த நியதி உங்கள் மீது எப்போதும் கருணையோடே இருக்கட்டும் 🙏

கதிர்,

கோவை

***

உங்க லவ் ஸ்டோரி ல தமிழ் இலக்கிய உலகம் மொத்தமும் கிறங்கி கிடக்கே அக்கா. பெரும்பாலான எழுத்தாளர்கள் கட்டுரையை வாசிச்சு ஏதோ ஒண்ணு சொல்லிருக்காங்க. எனக்கு பிடிச்சது இது…

அருண்மொழி எனும் தேவதை சுட்டுவிரல் கொண்டு ஜெயமோகன் எனும் பெயரை தொட…

அப்பெயர் உயிர் கொண்டு உரு கொண்டு வந்து அந்த தேவதையை கூட்டி சென்று விடுகிறது எனும் தேவதை கதை போன்ற வாழ்க்கை தருணம்😊

கடலூர் சீனு

***

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு …

ரொம்ப பிரமாதமாக இருந்தது…. வாத்தியார் சொல்லி சில நிகழ்ச்சிகள் கேட்டிருந்தாலும்… நீங்க ரொம்ப அற்புதமாக விவரித்து இருந்தீங்க… என்றும் வரலாற்றில் நிற்கும் … ரெண்டு நாளா உங்க கட்டுரைகள்தான் முகநூலில் ட்ரெண்டிங்…. ஜெ -60 .. உங்கள் இந்த கட்டுரைகளும் .. அஜியின் முதல் நாவலை வாத்தியாருக்கு அர்ப்பணித்ததுதும்தான் மிகப் பெரிய பரிசு அவருக்கு பெரும் சந்தோசத்தை அளித்திருக்கும்….. ஆயிரக்கணக்கில் இணைந்து சமூக வலைதளங்களையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு வாத்தியாரின் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது… நீங்க அசால்டா தட்டி தூக்கி விட்டீர்களே..😀… ரொம்ப சந்தோஷமா இருக்கு..😍😍🙏

விஜயசூரியன்

***

முதல் காதல் கடிதம் கண்டவுடன் பிரவகித்தெழுந்த காதல் பரவசம் நடுக்கம் எல்லாம் படிக்கும்போதே மனத்தைத் தொட்டு சிலிர்க்கவைத்தது.

உரிமையில் எடுத்துக்கொண்ட சின்னச் சின்ன கோபங்களில் அத்துணை அழகு.

அவர் எழுத்துக்களை (காகிதத்தில் ) குத்தி வைத்திருந்தது.”கருங்குருவி என்று எழுதியிருந்தால் அப்படியே திரும்பிப் பார்க்காம போயிருப்பேன்…”என்றது அந்த நண்பியின் ( கலை) கோபத்தில் கூட அவ்வளவு அழகிருந்தது.

அவரின் காதல் கவிதையில் கூட அவருக்கிருந்த பழைய பாணி புதிய பாணி எனும் கறார் தன்மை ….” இது காதல் கவிதையா…அன்பே அழகே தானே…ஒரு சிறு பெண்ணிண் காதலை பரசமூட்டும் ….வெகு நாளாகிவிட்டது…இது போன்றொரு காதலைப் படித்து …..

கன்னியாகுமரி கவிதை முகாம் – ல் பார்த்த அந்த.மாபெரும் ஆளுமை இணையின் பிம்பம் மறைந்து கணங்களில் ஒரு இளம் காதலர்கள் கண்களில் நிறைகிறார்கள்…

தொடரட்டும் காதலும் பரவசமும்….❤❤

என்ன படித்தாலும் எதனை உள்வாங்கிக்கொண்டாலும் முணுமுணுப்பிடையே ஒருவித புன்னகை இதழில் மிதந்துகொண்டே இருக்கின்றது .படித்து முடித்த பிறகு காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் காதலின் வேலைதான் அது.

காலத்தால் உடலைத்தான் பழசாக்க முடிகிறது.மனத்தை அல்ல.மனம் நிகழ்காலத்திலேயேதான் இருக்கின்றது.எப்போதும் புத்தம் புதிதாக அதில் மலர்ந்திருக்கின்ற காதலால்.அந்தப் புன்னகை இதன் காரணமாகவே குண்டுவெடிப்பைப் படிக்கும்போதுகூட நகர மறுக்கின்றது.

“காடு”நாவல் எந்தப்பக்கம் திரும்பினால் மீண்டும் எப்போது நீலியை நோக்கித் திரும்பும் என்கின்ற எதிர்பார்ப்பு வாசிக்கும்போது இருக்கும்.ஒரு மனம் “இது சில்லியாக இல்லையா?”என்று கேட்கும்.””அதனாலென்ன…”என்று
இன்னொரு மனம் அதற்கு வக்காலத்து வாங்கி ஆசுவாசிக்க வைக்கும்.

காதலிக்கும்போதும் காதலைப்படிக்கும்போதும் இப்படி எண்ணற்ற மனங்கள் உலவித்திரியும் உடலெங்கும்.இவ்வெழுத்தெங்கும் அப்படியொரு காதல்..!!

“சீனியாரிட்டி பிரகாரம் சூ.ரா வைப்ப் படித்தேன் என்று சீண்டிவிட்டு ரயில் ஏறியதும் உங்களைத்தான் படித்தேன்”
என்று சொன்னது கவிதை…கவிதை…

என்றைக்கோ நிகழ்ந்து முடிந்த ஒரு காதல் நினைவுகளைக் கிளர்த்தி இன்றைக்கு நடந்ததுபோல நெகிழ வைத்ததது.

காதல் நிறைந்த ஒரு சிறு பெண்ணின் நெடிய பேருந்துப் பயணமும் பேருந்து நிலையத்தை நனைத்து ஈரப்படுத்திய அந்தி மழையும் இருவேறு காதல் மனங்களின் அன்றைய நாளின் அவஸ்தையான காத்திருப்பும் தேடலும் மனத்தை அழுந்தப் பற்றிக்கொண்டன.

கொஞ்சநேரமே வந்தாலும் மனதை நிறைத்தார் அந்தத் “தம்பி”.

காதலில் வாழ்வையும்
வாழ்வில் காதலையும் …வாசித்து மகிழ்ந்தேன்

சுஜய் ரகு

***

ஆற்றூர் ரவிவர்மா சொன்னதுபோல ஒரு ‘நிகழ்தகவு ‘ ! ❤ லட்சத்தில் ஒருவருக்கு நடப்பது.,கிடைப்பது.நீங்கள் அதிர்ஷ்டக்காரர். தொண்ணூறுகளில் இலக்கிய விஜாரங்களுடன் ,சிற்றிதழ்களுக்கு சந்தா கட்டி, தனக்கான பிருத்வி ராஜன் ஜோல்னா பையுடன் வருவான் என கனா கண்டு கொண்டிருந்த பெண்களை நினைவுபடுத்துகிறது. முப்பது + வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை வார்த்தை வார்த்தையாக எழுத முடிகிறதெனில் அந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள காதலில் ,பிரியத்தில் ஒருசொட்டு கூட குறையவில்லை என்று அர்த்தம் . உங்கள் எழுத்து அற்புதம்.தஞ்சையின் மகிமை. உங்களின் திருமணம் நடைபெற்றதை நானறிவேன்.ஜெயமோகனோடு பாலகோட்டில் பணிபுரிந்தவர் .தருமபுரி யில் என் தோழியின் உறவினர்.கணையாழியில் அவரின் கதை வந்த போது முகவரியை பார்த்து தெரிந்து கொண்டு அவ்வப்போது அவரிடம் விசாரிப்பேன்.அவரின் ‘ சவுக்கு’ கதை யில் தருமபுரி யின் நகராட்சி பூங்கா வரும்.அதை கடந்து போகும் போதெல்லாம் நினைத்துக்கொள்வேன்.உங்களோடு ஓரிரு முறை பஸ்ஸில பயணித்திருக்கிறேன்.நீங்கள் அப்போது நிறை சூலி. தருமபுரி-நல்லம்பள்ளி .உங்களோடு பேச கூச்சம் . உங்கள் எழுத்து என் மனசோடு பேசுகிறது.வாழ்த்துகள்.உங்கள் ஜெயனுக்கும் சற்றே தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.💐

சரஸ்வதி காயத்ரி

***

///////”காதல் எப்படிப்பட்ட ஒரு உணர்வு. மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரங்களில் முதன்மையானது . மனிதனுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட தேன். அதைப் பருகாதவர்கள் துரதிருஷ்டசாலிகள்///// Universal Truth. 👌

இரண்டு பாகமாக வந்ததை அனைத்தையும் படித்து முடித்தபின் தோன்றியது. இந்த பிரபஞ்ச பேரிருப்பான இறையின் அருள் உங்கள் இருவரின் காதலுக்கும் பூர்ணமாக இருந்திருக்கிறது. இருந்துகொண்டிருக்கிறது.

மிக ஆத்மார்த்தமான சரளமான நடையில் காதலின் அந்தரங்கங்களை அனாயசமாக சொல்லிசென்றிருக்கிறீர்கள். காதலை தம் வாழ்வில் உணர்ந்தவர்கள் நனவோடையில் நினைத்து அசை போடவைக்கும் எழுத்து. 👌🙏

விஜயராகவன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2022 11:31

May 31, 2022

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 1

மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவின் வீட்டிற்கு நானும் ஜெயனும் பலமுறை சென்றிருக்கிறோம். அவர் ஜெயனுக்கு குருவும் தந்தையுமானவர். கேரளத்தில் திருச்சூரில் இருந்தார். எங்களுக்கு திருமணமாகி நான்கைந்து வருடங்கள் கழித்து ஒருமுறை அங்கு சென்றபோது, அவர் வீட்டு முற்றத்தில், மாமரத்தடியில் அமர்ந்து அவருடன் தனியே பேசும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. அப்போது ஆற்றூர் என்னிடம் ஜெயன் பற்றி ஏதோ கேட்டார். நான் என் வழக்கப்படி உணர்ச்சி பரவசத்துடன் பதில் கூறினேன்.
அப்போது அவர் “மலையாளத்தில் ’பிரகாசம் பரத்துந்ந பெண்குட்டி’ என்றொரு சொற்பிரயோகம் உண்டு. நீயும் ஜெயமோகனும் உங்கள் திருமணம் நடந்த மறுநாள் இங்கு வந்து பத்து நாட்கள் போல தங்கினீர்கள். .அப்போது உனக்கு சிறிதும் மலையாளம் தெரியாது. எனக்குத் தெரிந்த குறைந்தபட்ச தமிழில் உன்னுடன் உரையாடுவேன். நீ பேசும் அதிவேகமான தமிழை நான் உன் கையசைவை வைத்து ஓரளவு புரிந்து கொள்வேன். அப்போது தோன்றிய அந்த எண்ணம் இப்போது வரை எனக்கு அப்படியே உள்ளது. நீ உன்னைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவள்” என்றார்.

எனக்கு அப்புகழ்ச்சி பிடித்திருந்தாலும் கூச்சமாக இருந்தது. அவர் அப்படி உணர்ச்சிகரமாக பேசுபவரே அல்ல. அவர் கவிதைகள் கூட மலையாள உரத்த கவிதைகளுக்கு மத்தியில் அடக்கப்பட்ட உணர்வு வெளிப்பாடும், ஒரு முரண் நகைச்சுவையும் அமையப் பெற்றவை.

நான் உடனே ”எனக்கு எப்போதும் இந்த சந்தேகம் வரும். எப்படி சிலர் வாழ்வில் மட்டும் இந்த இயற்கையின் நியதி சற்று கருணையோடிருக்கிறது என்று? ஒத்த ரசனையுள்ள, மனமொத்த தம்பதிகளை நான் மிக அரிதாகவே கண்டிருக்கிறேன். திருமணம் குறித்த அச்சம் என்னை வெகுவாக ஆட்டிப் படைத்து ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் மிகச் சராசரியான, உலகியல் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் ரசனையற்ற மனிதன் ஒருவன், எனக்கு அமைந்து விட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதே என்னால் தாள முடியாததாக இருந்திருக்கிறது . ஆனால் என்னிடம் அந்த நியதி அளவுகடந்த கருணை காண்பித்திருக்கிறது என்று தோன்றும். அந்த வியப்பு எனக்கு இன்றும் தீரவில்லை. எது எங்களை ஒன்றிணைத்தது?” என்றேன் அடங்கிய குரலில்.

நான் அறிந்தவர்களிலேயே மிகச் சிறந்த ஆசிரியர் ஆற்றூர். நீட்டி முழக்கி எதையும் விரிவாக போதிக்க மாட்டார். அவர் எனக்கு சொல்லித் தந்த சாக்ரடீஸின் ’கேவ் அலிகரி’யை இப்போது முப்பது வருடம் கழித்தும் என்னால் துல்லியமாக நினைவுகூர முடிகிறது. அவர் எதையும் எப்போதும் காட்சிகளாலோ படிமங்களாலோ தான் விளக்க முற்படுவார். சிறிதுநேரம் கண்மூடி யோசித்துவிட்டு இவ்வாறு கூறினார்.

“அருண்ண்மொழி, ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மூட்டை முழுவதும் நிறைய நெல்லிக்காய்கள் இருக்கின்றன. அவற்றில் இரு நெல்லிக்காய்கள் அருகருகே உள்ளன. அந்த மூட்டையை உதறிவிட்டு வேறொரு சாக்கில் எல்லா நெல்லிக்காய்களையும் திரும்பவும் போட்டு கட்டுகிறார்கள். அப்போது முன்பு அருகருகே அமைந்த அந்த நெல்லிக்காய்கள் இரண்டும் மீண்டும் அதேபோல் அமையப் பெற என்ன நிகழ்தகவு [probability] உண்டோ அதுபோல் தான் ரசனையொத்த தம்பதிகள் அமைவது” என்றார். புன்னகையுடன் தலையசைத்தேன். அவரும் புன்னகைத்தார்.

நம் வாழ்வில் புனைவை மிஞ்சும் தருணங்கள் எப்போதாவது நிகழ்வதுண்டு. என் வாழ்விலும் அப்படிப்பட்ட தருணம் ஒன்று நிகழ்ந்தது. எந்த சந்தர்ப்பத்தில் நினைத்துக் கொண்டாலும் புன்னகையை வரவழைப்பது அது. எல்லா விதிகளுக்கும் ஒரு தேவதை உண்டு என்பார் என் பாட்டி. உதாரணமாக விளக்கு வைத்தபின் அபசகுனமாக பேசக்கூடாது .அது அந்த தேவதை காதில் விழுந்து பலசமயங்களில் நடந்துவிடும் என்பார்.

1990 ஜூனில் நான்காம் வருடம் கல்லூரி திறந்ததிலிருந்து நானும் கலைச்செல்வியும் பல முயற்சிகள் வழியாக சிற்றிதழ்களை சந்தா கட்டி வரவழைக்க தொடங்கி விட்டோம். கணையாழி, நிகழ், முன்றில், கல்குதிரை போன்றவற்றையும், ஓரளவு தீவிர இலக்கிய ஆசிரியர்களையும் படிக்க ஆரம்பித்து விட்டோம். அசோகமித்ரன், லா.ச.ரா, மௌனி, வண்ண நிலவன், ஆதவன், இப்படி…. கலைச்செல்வி என் உற்ற தோழி. என் தம்பிக்கு புரட்சிக்கனலை ஊட்டியது போலவே அவளுக்கும் இலக்கிய ஆர்வத்தை ஊட்டியிருந்தேன். அவளும் என் நிழலாக எப்போதும் என்னை வழிபடும் மனநிலையுடன் அலைந்தாள். சேர்ந்து படித்தோம். விவாதித்தோம்.

ஆனாலும் நிறைய கிளாசிக்குகள் என்று எல்லோராலும் அடிக்கடி குறிப்பிடப்படும் படைப்புகளோ, நாவல்களோ பொதுவெளியில் கிடைக்காமல் இருந்தன. மதுரையில் பல கடைகளில் ஏறி இறங்கியும் அ.மி யின், சு.ரா. வின் நாவல்கள் கிடைக்கவில்லை. அது எங்களுக்கு கோபத்தை வரவைத்தது. இவர்கள் ஏன் இவ்வாறு பொதுவெளிக்கு வரமறுக்கிறார்கள். நம்மை தவிக்க வைக்கிறார்கள் என்று.

அப்போது சிறுபத்திரிகை எழுத்தாளர் யாரிடமாவது இதை எழுதிக் கேட்டால் என்ன என்று எங்களுக்கு ஒரு எண்ணம் வந்தது. அதுவரை முகவரி ஏதும் கிடைக்காததால் எங்கள் கோபத்திற்கு ஒரு வடிகால் அமையவில்லை. எதேச்சையாக கணையாழி பத்திரிகை குறுநாவல் போட்டி ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரியோடு பிரசுரித்திருந்தது. அதில் தமிழில் அப்போது எழுதிக் கொண்டிருந்த நான்கு பேரின் முகவரிகள் தரப்பட்டிருந்தன.

நான் கலையிடம் சொன்னேன் ‘ இவர்களில் யாருக்காவது எழுதி நம் சந்தேகத்தைக் கேட்டால் என்ன’ என்று. ’சரி, எழுதலாம்’ என்று முடிவு செய்து யாருக்கு எழுதுவது என்று தீர்மானிக்க ஒரு யோசனை செய்தோம். ’கண்ணை மூடிக்கொண்டு நான் தொடுகிறேன். யார் வருகிறதோ அவருக்கு எழுதலாம்’ என்றேன். அவள் உடனே’ கண்ணை மூடு’ என்றவள் கணையாழியை கவிழ்த்து பின் நிமிர்த்தி விரித்தாள். அதாவது நாம் வழக்கமாக படிக்கும்படி இல்லாமல் அது தலைகீழாக திரும்பியிருந்தது.

கண் திறந்து பார்த்தால் நான் தொட்டிருந்த பெயர் ஜெயமோகன். அப்போது காதலின் தெய்வம் புன்னகையுடன் ’உனக்கு இவன் வேண்டுமா? நான் தருகிறேன்’ என்று நினைத்திருக்கக் கூடும் என்று நான் கற்பனை செய்து கொள்வேன். அது எப்போது நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பையும் பெரு நியதி ஒன்றின்மேல் நம்பிக்கையையும் ஏற்படுத்துவது.

கடிதம் சேர்ந்தே எழுதினோம். அடக்கப்பட்ட கோபம் வார்த்தைகளில் வெளிப்பட எழுதிய கடிதத்தில் ’ஏன் சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் அனைவரும் இந்த 300 பிரதிகள் என்ற எண்ணிக்கையை வைத்துள்ளீர்கள்.? நிறைய பேரிடம் இலக்கியம் செல்ல வேண்டாமா? நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இதைக் கண்டுபிடித்தோம், தெரியுமா?. இன்னும் அனேக எழுத்தாளர்களின் படைப்புகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நீங்கள் ஏதாவது விசேஷ குறுங்குழுவா? நக்சலைட் இயக்கம்போல்?’ என்றெல்லாம் எழுதியிருந்தோம். கீழே இருவரும் கையெழுத்திட்டு அனுப்பிவிட்டு காத்திருந்தோம்.

டிசம்பர் பாதியில் எழுதிய அக்கடிதத்துக்கு ஜனவரி முதல்வாரம் வரை பதில் ஏதும் வராததால் நாங்கள் நம்பிக்கை இழந்தோம். நம் கடிதம் வழக்கம்போல் குப்பைத் தொட்டிக்கு போயிருக்கும். எழுத்தாளன் என்றால் தன்னைச் சுற்றிலும் கசக்கி எறிந்த காகித குப்பைகளுக்கு மத்தியில் அமர்ந்து எழுதுபவன் என்ற ஒரு பிம்பம் நம் திரைப்படங்கள் வழியாக கட்டமைக்கப் பட்டிருந்தது. அதை நாங்கள் நம்பினோம். நாமும் அடக்க ஒடுக்கமாக எழுதாமல் கோபமாக எழுதியது அவர் கோபத்தை தூண்டியிருக்கலாம். அதனால் அவர் அதை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருப்பார் என்று நினைத்துக் கொண்டோம்.

இதற்கிடையில் மதுரை சர்வோதய இலக்கிய பண்ணை புத்தகக் கடையில் அவரது ரப்பர் நாவல் வந்திருந்தது. வாங்கி வந்து படித்தோம். முதலில் அந்த வட்டார வழக்கு சற்று புரியாவிட்டாலும் போகப் போக நாவல் எங்களை உள்ளிழுத்துக் கொண்டது.

ஜனவரி இரண்டாம் வாரத்தில் எங்களுக்கு ஒரு பெரிய கடிதம் வந்தது. முகவரியில் என் பெயரும், கலையின் பெயரும் இருந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தோம். ஜெயமோகன், தொலைபேசி நிலையம், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம். இருவரும் பரபரப்புடன் படித்தோம். கிட்டத்தட்ட இருபது பக்கங்கள். அன்புள்ள அருண்மொழி, கலைச்செல்வியையும், கடைசி வரியையும் எடுத்து விட்டால் அப்படியே தினமணி தமிழ்மணியில் பிரசுரிக்கத் தகுந்த கட்டுரை அது. கல்கி தொடங்கி தமிழில் உள்ள கேளிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட வணிக எழுத்துக்கும் புதுமைப் பித்தன் தொடங்கி இன்று வரை தொடரும் சீரிய இலக்கிய எழுத்துக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டி விரிவான தரவுகளுடன் எழுதப்பட்டிருந்தது. எங்களுக்கு ஒருவாறு விளங்கியது.

கடைசி வரியில் ’டிசம்பர் இரண்டு வாரங்களாக ரப்பர் வெளியீடும், கூட்டமும் நடந்தது. அதற்கு சென்னை, கோவை சென்றிருந்ததால் பதில் எழுதத் தாமதம். உங்கள் இருவருக்கும் தூய அழகிய தமிழ்ப் பெயர்கள். என் பெயரின் அந்நியத்தன்மை குறித்து எனக்கு எப்போதுமே மனக்குறைதான்’, என்று எழுதியிருந்தார்.

நாங்கள் இதற்கு பதிலாக நன்றிசொல்லி எழுதிவிட்டு ரப்பர் பற்றிய எங்கள் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்திருந்தோம். அதற்கு ’நாவலின் சாரத்தை நெருங்கிவிட்டீர்கள். மொழி கொஞ்சம் முதிர்ச்சியற்று இருக்கிறது. எழுத எழுத சரியாகும்’ என்று பதில் வந்தது. இப்படியாக கடிதங்கள் எழுதிக்கொண்டோம். எல்லாமே ஒரு ஆசிரியரிடம் நாம் கேட்கும் சந்தேகங்கள், வினாக்கள், விளக்கங்கள்.

’ஃபிப்ரவரி இரண்டாம் வாரம் எனக்கு மதுரையில் ஒரு கூட்டம் நடக்கிறது. அதற்கு வருவேன். நீங்கள் இருவரும் வர இயலுமா?’ என்று எழுதியிருந்தார். நாங்கள் ’வார இடைப்பட்ட நாட்களில் எங்களுக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. மாதத்தில் இரு வியாழன் மட்டுமே அதுவும் மாலைகளில் அனுமதிப்பார்கள்’ என்று எழுதினோம். ’சரி, முடிந்தால் நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்’ என்று எழுதினார்.

நாங்கள் ஃபிப்ரவரி இரண்டாம் வாரம் அவர் குறிப்பிட்ட தேதியை ஆவலுடன் பார்த்திருந்தோம். அன்று எங்களுக்கு மிட்டெர்ம் எனப்படும் இடைத்தேர்வு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை. அதில் அக்ரிகல்ச்சுரல் எகனாமிக்ஸ் அன்றைய தேர்வு. அந்தப் பாடத்தில் தியரி அதிகம் படிக்க இருக்காது. கணக்குகள் போல பாலன்ஸ் ஷீட் டாலி செய்வதுதான் இருக்கும். எனக்கு அது மிக எளிதான பாடம். ஆகவே புத்தகத்தை ஒப்புக்கு வைத்துக் கொண்டு காதைத் தீட்டிக்கொண்டு அறையில் இருந்தேன். கலைச்செல்வி வேறு அறை.

எங்கள் விடுதியின் பெயர் மரியக்குழந்தை இல்லம். மூன்றாம் வருட, நான்காம் வருட மாணவிகள் அதில் இருந்தோம். ஐம்பது அறைகள் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடம். ஒரு அறையில் மூவர். வசதியான அறை . அனைவருக்கும் தனித் தனி கட்டில், மேஜை, நாற்காலி, அலமாரிகள் உண்டு. வார்டன் எப்போதும் இங்கு இருக்கமாட்டார். இரண்டு, மூன்று ஹாஸ்டலுக்கு அவர் மட்டுமே என்பதால் அவ்வப்போது வருவார். மீதி நேரங்களில் எங்களை கவனித்துக் கொள்ள ஒரு வயதான அம்மாள் உண்டு. அவரை நாங்கள் எல்லோரும்’ மாமி’ என்று அழைப்போம். அவர் ஒரு பிராமண விதவை.

காலை பதினொரு மணி இருக்கும். மாமி என் அறை வாசலில் வந்து நின்று “ அருண்மொழி, ஒன்னப் பாக்க ஒத்தர் வந்துருக்கார். யாரோ ஜெயமோகனாம்” என்று சொன்னாள். நான் புத்தகத்தை வைத்து விட்டு வாசலை நோக்கி விரைந்தேன். மாமி காரிடாரில் என் வேகத்துக்கு இணையாக நடந்துகொண்டே ”அவர் பாட்டுக்கு நேரே உள்ள வர்ரார். நான் இது லேடிஸ் ஹாஸ்டல். இப்டி வரப்படாதுன்னு தடுத்து நிறுத்தி வெளிய நிக்க சொன்னேன். நீ சொல்ல வேண்டாமோ” என்றாள்.
நான் சமாளிக்கும் புன்னகையுடன் ”அவர் புதுசு, மாமி. இதெல்லாம் தெரியாது. நான் சொல்லிடறேன்” என்று கிட்டத்தட்ட ஓடினேன். பார்த்தால் வாசலில் கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்து ஸ்டைலாக நின்று கொண்டிருந்தார். லைட் வயலட் நிற உயர்தர சட்டை, பிஸ்கட் நிற பேண்ட் அணிந்து அழகாக இன் செய்து, உயர்தர காலணிகளுடன், செக்கச்சிவந்த நிறத்தில் ஏதோ மலையாள நடிகர் சாயலில் இருந்தார். கலைந்த தலையும், ஜோல்னாப் பையும், ஒருவாரத் தாடியுமாய் இருப்பார் என்று எண்ணிய எனக்கு அதிர்ச்சி. நான் ஏதோ சுமாரான புடவையுடன் இருந்தேன்.

படிகளில் இறங்கியபடியே “ வாங்க… ஹாஸ்டல் கண்டுபிடிக்க கஷ்டமாயிருந்துச்சா?’’ என்று முகமன் கூறினேன். அவர் என்னைப் பார்த்துக் கொண்டே ”நீங்க…அருண்மொழி?” என்றார்.

”ம்ம்… கலை வருவா. மாமி, கலையை வரச் சொல்லுங்க” என்றேன்.

மாமி கலையை கூப்பிடச் சென்றாள். நான் வாசலுக்கு நேராக நிற்காமல் கொஞ்சம் தள்ளிவரச் செய்தேன். என்ன பேசுவது என்று தெரியாமல் வழக்கமான சொற்றொடர்களே மனதில் வந்தன. அவர் பேசாமல் நின்றிருந்தார். நான் ”நேத்து மீட்டிங் நல்லா நடந்துச்சா?’’ என்றதற்கு” ம்ம்..” என்றார்.

கலை வந்தவுடன் அவளையும் அறிமுகம் செய்து பக்கத்தில் இருந்த விசிட்டர்ஸ் ஹாலில் அமரலாம் என்று அங்கு அவரை கூட்டிச் சென்றோம். மூவரும் நாற்காலிகளில் அமர்ந்ததும் இயல்பானார். கூலிங்கிளாசை கழட்டினார். அப்பாடா என்றிருந்தது. அதுவரை தோன்றிய அந்நியத் தன்மை மறைந்து ஒரு அணுக்கம் உண்டானது.

அவர் கையில் வைத்திருந்த பத்திரிகையை சுட்டி ’என்ன’ என்று கேட்டேன். அவர் ’சுபமங்களா என்று ஒரு நடுவாந்தர இலக்கிய பத்திரிகை. கோமல் சுவாமிநாதன் ஆரம்பித்திருக்கிறார். என் சிறுகதை ஒன்று இதில் பிரசுரமாயிருக்கிறது” என்றார்.

அதைப் பார்க்க விழையும் என் ஆவல் அவருக்கு புரிந்திருக்கவேண்டும். என்னிடம் நீட்டினார். நான் வாங்கி உள்ளே பொருளடக்கத்தை புரட்டினேன். அதில் ஜெயமோகன் சிறுகதை’ ஜகன்மித்யை’ என்று இருந்தது. படபடவென்று பக்கத்தை புரட்டி கொஞ்சம் படிக்க ஆரம்பித்தபின் தான் எனக்கு உறைத்தது. மூடிவிட்டு நிமிர்ந்தேன். முதல்முறையாக புன்னகைத்தார். நாங்களும் சிரித்தோம். ’’நான் வேற காப்பி வாங்கிக்கிறேன்” என்றார்.

பின் தயக்கம் குறைந்து நன்றாக பேசினோம். வழக்கம்போல் எவ்வாறு ஆர்வம் வந்தது என்றும் புத்தக வேட்டை நிகழ்த்திய கதைகளையும் பகிர்ந்து கொண்டோம். அவரும் அவரது சிறுவயது வாசிப்பனுபவம் குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டார். அவருடைய உச்சரிப்பு மலையாள உச்சரிப்பு கலந்து இருந்தது. மதியம் ஒன்றரை மணிக்கு நாங்கள் உண்டுவிட்டு தேர்வுக்கு செல்ல வேண்டியிருப்பதை சொன்னோம். அவரும் கிளம்பினார். மாலை நான்கு மணிக்கு தேர்வு முடிந்துவிடும் என்றோம். மாலை ’முடிந்தால் வருகிறேன்’ என்றார். மாலையும் வந்தார்.

மாலையில் எங்களிடம் உள்ள புத்தக சேகரிப்புகள் அனைத்தையும் காட்டி உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் விடுதிக்கு பக்கவாட்டில் உள்ள மிகப் பெரிய வாகைமரத்தடியில் நாற்காலியிட்டு அமர்ந்து கொண்டோம். அவருடைய விரிந்து பரந்த அறிவும், புத்திகூர்மையும், சரளமான உரையாடலும் எங்களுக்கு வியப்பையும், மதிப்பையும் ஏற்படுத்தின. தேனீர் நேரம் நெருங்கியது. தேனீர் எடுத்துவர கலை விடுதிக்குள் சென்றாள். உரையாடல் நின்று அமைதி நிலவியது. என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் எதையாவது சொல்லி அந்த மௌனத்தை கடக்க யோசித்தேன். ஒன்றும் தோன்றவில்லை.

நான் மரத்தின் உச்சியைக் காட்டினேன். அது மிகுதியாக பறவைகள் கூடடையும் மரம். ”அப்பா, எவ்வளவு சத்தம்” என்றார். நான் உடனே ”அதுங்களோட லேடீஸ் ஹாஸ்டல்” என்றேன். ரசித்து சிரித்தார். நானும் ’அப்பாடா, ஜோக் சொல்லி சிரிக்கவைத்து விட்டோம்’ என்று மகிழ்ந்தேன்.

பிறகு நேரமானதும் கிளம்பினார். நாங்கள் பிரதான நுழைவாயில் வரை போய் பஸ் ஏற்றிவிடச் சென்றோம். விடுதியிலிருந்து ஒரு சாலை, விரிவுரையாளர்கள் குவார்ட்டர்ஸிருந்து வரும் ஒரு சாலை , பிரதான நுழைவாயிலை நோக்கி செல்லும் ஒரு சாலை மூன்றும் இணையும் இடத்தில்தான் எங்கள் கல்லூரியின் முக்கிய கட்டிடம் இருந்தது. சாலைகளின் இருபுறமும் மஞ்சள் கொன்றை மரங்களும், வாகை, தூங்குமூஞ்சி மரங்களும் நிழல் பரப்பி நின்றுகொண்டிருக்கும். நான் பார்த்த கல்லூரிகளிலேயே மிக அழகானது எங்கள் கல்லூரி.

விடுதிச் சாலையிலிருந்து மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரங்கள் இருபுறமும் அணிவகுத்த சாலை வழியே வரும்போது, சங்கப் பாடலில் ’பூ உதிரும் ஒலியைக் கேட்டவாறு தலைவனை நினைத்துக் கொண்டே துயிலாமல் இருந்ததாக’ தலைவி கூறியதை சொல்லிக் கொண்டே வந்தார். நான் அப்போதுதான் எம்பி ஒரு கிளையை புத்தகத்தால் தட்டினேன். பூக்கள் உதிர்ந்தன. பிற்பாடு இந்த தருணத்தை பல இடங்களில் ஜெயன் சொல்லியும், எழுதியும் உள்ளார்.

பஸ் ஏற்றிவிட்டு திரும்பும்போது நிறைவாக உணர்ந்தோம். ”பந்தாவா டிரெஸ் பண்ணாலும் பந்தா காட்டல, இல்லடி?. நல்லா பேசினார் இல்ல, எவ்வளவு விஷயங்கள் ” என்று பேசியபடியே திரும்பினோம்.

நாலைந்து நாட்கள் கழித்து ஒரு சிறிய கடிதம். ’நான் மதுரையிலிருந்து கிளம்பி சு.ரா வைப் பார்த்துவிட்டு, அப்படியே திருவனந்தபுரம் போய் பி.கெ. பாலகிருஷ்ணனை சந்தித்து விட்டு பாலக்கோடு வந்து சேர்ந்தேன். உங்களை சந்தித்ததும், உரையாடியதும் நல்ல அனுபவங்கள்.’ என்று எழுதியிருந்தார்.

ஒருவாரம் கழித்து ஒரு மதிய உணவு இடைவேளையின் போது கலையின் சைக்கிள் ஏதோ பஞ்சர் என்று அவள் அதை சரிசெய்யப் போனாள். எங்கள் கல்லூரி வளாகம் முந்நூறு ஏக்கர்கள் கொண்ட விரிந்த பரப்பு. ப்ராக்டிகல்ஸ் எனப்படும் நடைமுறை வகுப்புகள் பெரும்பாலும் காலை வேளைகளில் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ப்ளாக்கில்[block] இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இடையே மூன்று, நான்கு கிலோமீட்டர் தொலைவு. ஏ, பி,சி, டி, ஈ பிளாக் என்று ஒவ்வொரு ஏரியா. அனைவருக்கும் சைக்கிள் கட்டாயம். நான் மட்டும் மதிய உணவுக்காக விடுதி வந்தேன். 12.45 முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை. மீண்டும் இரண்டு மணிக்கு தியரி வகுப்புகள் பிரதான கட்டடத்தில் இருக்கும்.

பன்னிரெண்டரை மணிக்கு மாமி கடிதங்களைக் கொண்டு வந்து விடுதியின் முகப்பறையில் உள்ள மேஜையில் வைப்பாள். நாங்கள் அவரவருடையதை எடுத்துக் கொள்வோம். அன்றைக்கு சைக்கிளை வெளியில் நிறுத்திவிட்டு விரைந்து படிகளில் ஏறி அவசரமாக கடிதங்களை ஒரு பார்வை பார்த்தேன். பெரும்பாலும் எல்லோருக்கும் அதிகமாக வருவது இன்லேண்ட் கடிதங்கள் தான். சிலருக்கு போஸ்டல் என்வலப் வரும். என் அப்பா, அம்மா இருவரும் இன்லேண்டில் தான் எழுதுவார்கள். அம்மாவின் கடிதம் வந்திருந்தது. தடித்த பழுப்பு உறையைப் பார்த்ததும் ஜெயமோகன் கடிதம் என்று ஆவலுடன் எடுத்தேன். இரண்டு கடிதங்கள் போட்டிருந்தார். ஒன்றில் வழக்கம்போல் என் பெயரும், கலை பெயரும். மற்றொன்றில் அருண்மொழி நங்கை[ personal ] என்று முகவரி எழுதப்பட்டிருந்தது.

அதை கையில் எடுத்ததும் ஒருகணம் எனக்கு கண் இருண்டு, கை வியர்த்தது. வேகமாக எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தேன். அறையில் அமுதா இருந்தாள். அங்கு வைத்துப் படித்தால் சிக்கல். எப்படியும் கலை அவள் அறைக்குப் போகும் முன் சாப்பிட அழைக்க என் அறைக்கு தான் வருவாள். அமுதாவிடம் ”கலை வந்தால் சாப்பிட மெஸ்ஸுக்கு போகச் சொல்.நான் பிறகு வருவேன் என்று சொல்”. என்று சொல்லிவிட்டு குளியலறை நோக்கி சென்றேன். அதில் ஒன்றில் நுழைந்து தாழிட்டு நடுங்கும் கைகளுடன் பிரித்தேன்.

அன்புள்ள அருண்மொழி, அதற்குப் பிறகு வரிகளில் என் கண் போகிறது. மனதிற்குள் ஒன்றும் அர்த்தமாகவில்லை. படபடப்பு, நிற்க முடியாமல் என் கால்கள் துவள்கின்றன. அங்கிருந்த அலுமினிய வாளியை கவிழ்த்துப் போட்டு அமர்ந்து கொண்டேன்.

’உன்னைச் சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு வந்த உணர்வுகளை திரும்பிப் பார்க்கிறேன். அவற்றை நான் எவ்வளவு தர்க்கம் கொண்டு விளங்கிக் கொள்ள முயன்றாலும் அதற்குள் சிக்க மறுக்கின்றன. என் உணர்வுகளின்மேல் எனக்கு இருந்த கட்டுப்பாடு முற்றிலும் அறுந்துவிட்டது. ஆம், என் மனதை பூரணமாக நீ எடுத்துக் கொண்டுவிட்டாய். உன் நினைவுகளே என்னை முழுதும் ஆள்கின்றன. என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. இதை எழுதி உனக்கு தெரிவிக்காவிடில் என் தலை சுக்குநூறாகி விடும் போல் தெறிக்கிறது. நான் இதை தபாலில் சேர்ப்பேனா என்று கூடத் தெரியவில்லை. நான் என்னை மிகுந்த தர்க்க பூர்வமான அறிவுஜீவி, இந்த உணர்வுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

உன்னை சந்தித்துவிட்டு மதுரையிலிருந்து நாகர்கோவில் சு.ரா. வீடு போகும் வரை ஒரு கணம் கூட இடைவெளியின்றி நீ பேசிய தருணங்களை மீட்டி மீட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். விலக்க விலக்க ஆவேசமாக வந்து மூடும் குளத்துப்பாசி போல் உன் நினைவுகள் என்னை சூழ்ந்து மூடிக்கொள்கின்றன. உன் கண்கள், உன் முகம், உன் அசைவுகள், உன் சிரிப்பு, உன் மாநிறம், உன் துள்ளல் நிறைந்த பேச்சு… இவையேதான் திரும்பத் திரும்ப. நான் உன்னைக் காதலிக்கிறேன் அருணா. உன்னை மணம் செய்துகொள்ள விரும்புகிறேன். ஒரு பெண்ணும், ஆணும் இணைந்து வாழ, திருமணம் தவிர வேறு எந்த வகையான உறவையும் நம் சமூகம் அனுமதிப்பதில்லை.

இக்கடிதம் உன்னைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். நிதானமாக யோசி. யோசித்து விட்டு சொல். நான் இப்போது ஒரு மத்திய அரசு கிளரிக்கல் வேலையில்தான் இருக்கிறேன். மேலும் பரிட்சைகள் எழுதி பிரமோஷனில் செல்லமாட்டேன். சிறு பத்திரிகைகளில் மட்டும் தான் எழுதுவேன். இதில் பெரும்புகழோ, வருமானமோ கிடைக்காது. இதையும் நீ கணக்கில் எடுத்துக் கொள். உன் பதிலுக்கு காத்திருக்கும் ஜெயமோகன்.’’

படித்து முடித்து வெளியில் வந்தபோது என் கால்கள் துணியாலானவை போல் இருந்தன. கீழே ஊன்ற முடியவில்லை. வியர்வை ஊறிப் பெருகியது. என் இதயத் துடிப்பு எனக்கே பெரும்சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது. பயம், படபடப்பு, குழப்பம், இவற்றையெல்லாம் மீறி அது சந்தோஷமா, துக்கமா? இல்லை இரண்டும் ஒன்றுதானா? எனக்கு எதையும் இனம் பிரிக்க இயலவில்லை.

போய் கட்டிலில் கண்மூடி படுத்துக்கொண்டேன். படுக்கவும் தோன்றவில்லை. உடனே எழுந்தேன். தொண்டை வறண்டு, ஒரு ஜாடி தண்ணீர் முழுவதையும் பருகினேன். கை நடுங்கி உடையை நனைத்துக் கொண்டேன். திடீரென்று நினைத்துக் கொண்டு மெஸ்ஸுக்கு போனேன். இல்லையென்றால் கலை கேள்விகளால் துளைப்பாள். சாப்பிடத் தோன்றவில்லை. கையால் அளைந்து கொண்டிருந்தேன். என் முகத்தைப் பார்த்து ”ஏண்டி, என்னமோ மாரி இருக்க?” என்றாள். ”ஒண்ணுல்ல, தலவலி.” என்றேன்.

மதியம் வகுப்புக்கு சென்றேன். விரிவுரையாளர் எடுக்கும் பாடத்தை கவனிக்கவோ, அதை எழுதி எடுக்கவோ என்னால் முடியவில்லை. கையிலும் அதே படபடப்பு, நடுக்கம். பின்வரிசையில் அமர்ந்திருந்தேன். ஒரு கையால் தலையைத் தாங்கியபடி நோட்டுப் புத்தகத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்.

ஒருகணம் ஜெயமோகனின் முகம் என் நினைவில் புன்னகையுடன் மின்னி மறைந்தது. உடனே உடலெங்கும் ஒரு பரவசமும், கூச்சமும், நடுக்கமும் ஒருங்கே எழுந்தது. ஒரு இனிமை உடல், மனம் முழுவதையும் தழுவிச் செல்வதை உணர்ந்தேன். ஆம், அது எப்படி என்றால் விரல்நுனி வரை பரவும் இனிமை. நிரம்பி வழிந்து என்னால் தாள முடியாமல் ஆகியது. அய்யோ, எத்தனை பெரிய பரவசத்தை நான் வைத்திருக்கிறேன். ஒரு மாபெரும் பொக்கிஷப் புதையல் போல. இவர்கள் யாரும் இதை அறியமாட்டார்கள். என் உடல் அதைத் தாளாமல் நடுங்கியது.

இரவு அமுதா உறங்கியதும் கடிதம் எழுதத் தொடங்கினேன். என் பதிலுக்காக ஒரு இதயம் அங்கே துடித்து காத்திருக்கிறது. ‘’அன்புள்ள ஜெயமோகன், எனக்கு என் உணர்வை முதலில் அனுமானிக்க இயலவில்லை. நான் உங்களை ஒரு குருவின் பீடத்தில் வைத்திருக்கிறேன். என் அறிவும், அகங்காரமும் முற்றிலும் பணிந்தது உங்களிடத்தில் தான். இதுவரை நான் யாரிடமும் தாழ்வாக உணர்ந்ததேயில்லை. உங்கள் கடிதம் படித்ததும் எனக்கு வந்த முதல் எண்ணம் நான் உங்களுக்கு பொருத்தமானவள்தானா? என்று. நான் முதிர்ச்சியற்ற ஒரு வாசகி மட்டும்தான் .உங்கள் அறிவுத் தளத்தில் நீங்கள் புழங்கும் எல்லோரும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் இல்லையா? நான் எப்படி அச்சூழலில் பொருந்துவேன்? நிறைய சந்தேகம், பயம் வந்தது எனக்கு. என்னை மிகையாகக் காட்டிகொண்டு விட்டேனா?.

ஆனால் ஆயிரம் திரையிட்டு மறைத்தாலும் என் உள்ளே உங்கள் மேல் தீராத விருப்பம் இருந்திருக்கிறது. அதை நான் எந்தத் தயக்கமும், வெட்கமுமின்றி ஒப்புக்கொள்கிறேன். மனம் முழுவதும் இனித்து நிறைந்து வழிகிறது .நானும் உங்களை மனப்பூர்வமாக விரும்புகிறேன். திருமணம், அப்பா, அம்மா, கலை எனக்கு இதெல்லாம் எப்படி நிகழும் என்று சஞ்சலமாயிருக்கிறது. அதை உங்கள் கைகளில் விட்டுவிடுகிறேன். இதை நாளை சனியன்று தபாலில் சேர்ப்பேன். உங்கள் கைகளில் திங்கள்தான் கிடைக்கும். உங்கள் அருணா.

மறுநாள் அக்கடிதத்தை தபாலில் சேர்த்தேன். என் மனம் அடங்கவில்லை. அய்யோ, அவர் வியாழன் போட்ட கடிதம். என் பதிலுக்கு அவர் மூன்று நாட்கள் தவித்துக் கொண்டிருப்பாரே என்று மனம் பதறியது. என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒரு யோசனை உதித்தது. எங்கள் வளாகத்திலேயே ஒரு சிறிய அஞ்சலகம் உண்டு. அங்கு போய் ஒரு தந்தி கொடுக்கலாம் என மதிய இடைவேளையில் சென்றேன். படிவத்தை வாங்கி நிரப்பினேன். ’ஆம். எனக்கும் அதே உணர்வுநிலை தான். உங்கள் அருண்மொழி.’ படிவத்தை வாங்கிப் பார்த்த அந்த அலுவலர் என்னை குழப்பத்தோடு பார்த்தார். ”தெளிவா இல்லயேம்மா” என அவர் சொல்ல நான் ”புரிஞ்சுப்பாங்க, எப்போ போகும்?’’ “ சாயந்தரம் நாலு மணிக்குள்ள கிடச்சிடும்”.என்றார்.
இப்போது மணி ஒன்றரை. எனக்கு ஆசுவாசமாக இருந்தது. மறுநாள் ஞாயிறு முழுவதும் கனவில் மிதந்து கொண்டிருந்தேன். திங்கள் காலை அவருக்கு என் கடிதமும் கிடைத்திருக்கும். என்ன பதில் எழுதுவார்? திங்கள் காலை எங்களுக்கு ’ப்ளாண்ட் பேத்தாலஜி’ ப்ராக்டிகல் வகுப்பு. லேபில் இருந்தோம். ஏதோ ஒரு ஃபங்கஸின் குறுக்குவெட்டுத் தோற்றம் எடுத்து ஒவ்வொருவரும் நுண்ணோக்கியின் கீழ்வைத்து பேராசிரியரை அழைத்து காண்பிக்க வேண்டும். எனக்கு அன்று மிக எளிதாக அழகிய குறுக்குவெட்டுத் தோற்றம் வந்துவிட்டது. நான் பேராசிரியரை அழைத்து காண்பித்து விட்டு விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனம் தெரிந்ததுபோல் மகிழ்ச்சியில் இருந்தேன்.

சும்மா பக்கவாட்டு ஜன்னல் வழியாக கொன்றைமரத்தின் உச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். பொன்னிறப் பூக்கள் அடர்ந்திருந்தன. சட்டென்று ஜெயமோகன் நினைவும் அவர் சொன்ன சங்கக் கவிதையின் நினைவும் வந்து யாருக்கும் தெரியாமல் புன்னகைத்துக் கொண்டேன். அட்டெண்டர் ஒருவர் வந்து எங்கள் பேராசிரியரிடம் ஏதோ சொல்ல அவர் ”அருண்மொழி, யூ ஹாவ் எனி ரிலேட்டிவ்ஸ் இன் தர்மபுரி? யூ ஹாவ் அ ட்ரங்க் கால் ஃப்ரம் தேர்.” என்றார்.

எனக்கு திக்கென்றது, ‘’யெஸ் சார்” என்றேன் பலகீனமாக. என் கண்கள் சட்டென்று கலையை தொட்டு மீண்டன. அவள் என்னை குழப்பத்துடனும், புதிருடனும் பார்த்தாள். பொதுவாக யாருக்குமே கல்லூரிக்கு ஃபோன் வருவதில்லை. ஹாஸ்டலுக்கு தான் வரும். அதுவும் பெரும்பாலும் லோக்கல் கால். ட்ரங்க் கால் செலவு மிக்கது. நான் விரைந்து மாடிப்படிகளில் இறங்கி வந்து முகப்பின் விரிந்த வராண்டாவில் இருந்த அந்த ஃபோன் கேபினுக்குள் புகுந்து கொண்டேன்.

”ஹலோ, யார் பேசுறது?’’

”அருணா, நாந்தான் ஜெயமோகன். ஒன் லெட்டர் கெடச்சுது. இப்பதான் உயிர் வந்துச்சு எனக்கு. சனிக்கெழம தந்தி வேற கொடுத்திருக்க. எப்டி ஐடியா வந்துச்சு?

அதுவந்து… நீங்க மூணுநாள் தவிச்சு போய்டுவீங்கன்னு நெனச்சேன்.

ஆமா… நான் ரெண்டு வாரமா தவிச்சுட்டுதான் இருந்தேன். இங்க ஆஃபிஸ்ல ஒரே கலாட்டா, தெரியுமா? டிரீட் கேக்குறாங்க”.

எதுக்கு?

லவ் சக்ஸஸ் ஆனதுக்கு. ஆஃபீஸ்ல எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.

அய்யோ… எப்டி? நீங்கதான கையெழுத்து போட்டு வாங்கிருப்பீங்க.

ஆமா, நம்ம ஊர்ல தந்தின்னாலே கெட்ட சேதிதான. என் ஃப்ரெண்ட் ரமேஷ் ஓடிவந்து வாங்கி படிச்சான். ’லவ் பண்றேன்னு தந்தி கொடுத்த ஒரே ஆள் ஒன் ஆள்தாண்டான்னு நக்கல் வேற. எவ்ளோ நாசுக்கா சொல்லியிருக்கா பாரு ‘ன்னான்.

ப்ச்.. தப்பாயிடுச்சு. நான் அவசரபட்டுருக்கக் கூடாது.

ஏய்…அருணா. இதெல்லாம் எனக்கு ஜாலியா இருக்கு. பெருமயா இருக்கு. அப்றம் ஒரு விஷயம்…

நான் சீக்கிரம் போகணும்.

ஏன்?

ட்ரங்க் கால் இவ்ளோ நேரம் யாரும் பேச மாட்டாங்க.

அது இருக்கட்டும். எங்களுக்கு ஒரு நாளைக்கு ரெண்டு ஃப்ரீ கால் உண்டு. இத பார். லெட்டர்ல என்ன பூசி மெழுகி விரும்புறேன்னு எழுதுறே. லவ் யூ ந்னு எழுதுனா கொறஞ்சு போய்டுவியா?

அதில்ல… வெக்கமா இருந்துச்சு.

இப்ப சொல்லு. என் காதுல சொல்ற மாதிரிதான்.

நா மாட்டேன். நேர்ல சொல்றன்.

சொல்லுடி… ப்ளீஸ்.

ஒங்க காதுக்கு வரதுக்கு முன்னாடி இங்க குறுக்கால ஒருத்தர் இருக்கார். அவர் காதுல தான் விழும்.

யார் அவர்?

எல்லா டிபார்ட்மெண்ட் ஃபோனுக்கும் இந்த ஃபோனுக்கும் கனெக்‌ஷன் கொடுப்பார். இங்க ஒரு கண்ணாடி ரூம்ல ஒக்காந்துட்டு ஒரு ஆள். இப்ப கூட அவர் என்ன மொறச்சு பாக்குறமாதிரி இருக்கு.

ஓ, அப்பசரி. வர ஞாயித்துக்கெழம வருவேன். சொல்லணும்.

இந்த சண்டேயா?

ஏன்? எனக்கு இப்பவே வரணும் போல இருக்கு.

சரி, போதும். வைக்கிறேன்.

ஏய்… வைக்காத. இத எதிர்பார்த்திருந்தியா அருணா. நான் இப்டி எழுதுவேன்னு.

’’ஆச்சரியமா இருந்துச்சி. ஆனா ரொம்ப ஆச்சரியமா இல்ல. சரி, போதும். நான் வைக்கிறேன்.’’ வைத்துவிட்டேன். துள்ளிக் குதித்து கும்மாளமிட்டது மனம்.

மதியம் சாப்பிடப் போகும்போது கலை முறைத்துக் கொண்டே இருந்தாள். முடித்து வந்தபின் “கால் பண்ணது யாரு, ஜெயமோகனா”? என்றாள்.

ஆமா, கலை. அதுவந்து…

நீ ஒண்ணும் சமாளிக்க வேண்டாம். எனக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு.

சொல்றத முழுசா கேளுடி, அவர் என்ன மனப்பூர்வமா விரும்புறார். நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.

கல்யாணமே வேண்டாம்னு சத்தியம் பண்ணியிருந்தோமே ரெண்டுபேரும். அதெல்லாம் காத்துல பறக்க விட்டுட்டியா?

அது அப்ப… இப்ப எனக்கு ஆச வந்துருச்சி. எனக்கு அவர ரொம்ப ரொம்ப புடிச்சி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2022 11:31

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு

May 14, 2022

பனி உருகுவதில்லை ஒலி வடிவில்

என் பனி உருகுவதில்லை நூலின் ஒலி வடிவத்தினை ’கதை ஓசை’ தீபிகா அருண் செய்துள்ளார். இந்த ஒலி வடிவத்தினை அமேசான் கிண்டில் ஒலி வடிவிலும் (Audible), யூடியூபிலும் கேட்கலாம்.

தீபிகா ’கதை ஓசை’ என்னும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். தமிழ் இலக்கியம், வணிகக் கதைகள் எனத் தமிழின் முக்கியமான கதைகள் அனைத்தையும் அவர் பக்கத்தில் ஒலி வடிவில் மாற்றியிருக்கிறார். ஜெயனின் “யானை டாக்டர்”, “டார்த்தீனியம்” கதைகள் முன்பே இத்தளத்தில் வந்தன. மேலும் புதுமைப்பித்தன், கு.ப.ரா, லா.ச.ரா, கல்கி, சாண்டில்யன், நா. பார்த்தசாரதி கதைகளை ஒலி வடிவில் கொடுத்திருந்தார்.

தீபிகா கதை ஓசை.காம் என்ற வலைதளமும் வைத்துள்ளார். இவ்வலைதளத்தைப் பார்த்தேன், இது மற்ற வலைத்தளம் போல் இல்லாமல் ஒலி வடிவத்திற்கான பிரத்யேக வலைத்தளமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான் முன்பே அவர் குரலில் யானை டாக்டர் கதையைக் கேட்டிருக்கிறேன். அவர் குரலில் கதையை வாசிக்கும் கணீர் தன்மையும், அதற்கான ஏற்ற இறக்கங்களும் இயல்பில் அமைந்திருக்கிறது. இப்போது பனி உருகுவதில்லை மொத்த நூலையும் ஒலி வடிவில் கொண்டுவந்துள்ளார்.

தீபிகாவிற்கு என் அன்பும், நன்றியும்.

யூடியூபில் கேட்க:

அமேசான் கிண்டில் உள்ளவர்கள் அதன் ஆடிபில் செயலில் கேட்க:

https://www.audible.in/pd/B09V2X347K?source_code=ASSOR150021921000O

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2022 11:31

April 30, 2022

நடவுகால உரையாடல் – சக்குபாய்

எழுத்தாளர் அம்பை

ஆதிவாசிக் குடும்பங்களில் வீட்டிலுள்ள உணவுத் தானியங்கள் தீர்ந்து போய்விட்டால், தங்கள் சிறுமிகளை வேறு வீடுகளுக்குக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்புவார்கள்; இதற்குக் கூலியாகத் தானியம் கிடைக்கும். சக்குபாயும் சிறுவயதில் இந்த வேலைக்கு அனுப்பப்பட்டாள். சிறுமியான அவளால் குழந்தையைத் தூக்கக்கூட முடியாது; அவளால் முடிந்ததெல்லாம் தொட்டிலை ஆட்டுவதுதான். ஏன், எதற்கு என்று உணராமலேயே வாழ்க்கையின் பல அனுபவங்களினுள் தள்ளப்பட்டிருக்கிறாள் சக்குபாய். ஆனால் இவற்றிலிருந்து ஒரு போராளியாக சக்குபாய் மீண்டு வந்திருக்கிறார். `கஷ்டகரி சங்கட்டனா’வின் உறுப்பினர் என்ற நிலையில் இன்று அவரால் எதையும் தைரியமாகக் கேள்விக்குள்ளாக்கவும் எல்லாவிதமான சுரண்டல்களையும் எதிர்த்துப் போராடவும் முடிகிறது. தான் தாக்கப்படலாம் என்றோ, சூனியக்காரி என்ற பழி தன்மேல் விழும் என்றோ, சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்படலாம் என்றோ சில நேரம் அவருக்கு அச்சம் தோன்றாமலில்லை. என்றாலும், தான் தனித்துப் போராடவில்லை என்று அவர் அறிந்திருப்பதால், போராட்டத்தை இன்னும் தொடர்கிறார். வரலாற்றின் ஒரு பகுதி சக்குபாயின் வாழ்க்கை. நாம் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

முன்னுரை

ஆதிவாசி சமூகத்தவரான சக்குபாய் காவித் தஹானு தாலுகாவிலுள்ள பந்த்கரைச் சேர்ந்தவர். சிறு விவசாயிகளுக்காகவும் நிலமற்ற கூலித்தொழிலாளர்களுக்காகவும் போராடி வரும் கஷ்டகரி சங்கட்டனா (பாட்டாளிகள் சங்கம்) என்ற மக்களமைப்போடு கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவரது கிராமத்தில் `சங்கட்டனா’ உருவாகுவதற்கு சக்குபாய்தான் ஊர் மக்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தார். கடினமான வாழ்க்கை அவருடையது. ஆனால் அந்த வாழ்க்கை அவரை மன உறுதியுள்ளவராக்கியிருக்கிறது. ஜூலையில் நடக்கவிருந்த வாய்மொழி வரலாற்றுப் பயிலரங்கில் பங்கேற்கும்படி அழைப்பதற்காக நாங்கள் பந்த்கர் சென்றபோது அவர் நடவு வேலையில் மும்முரமாக இருந்தார். முதலில் சிறிது தயங்கிய அவர் ஷிராஸ் பல்ஸாராவும் மீனா தோதடேயும் அவரோடு உரையாடப் போகிறார்கள் என்று சொன்ன பிறகு வருவதற்குச் சம்மதித்தார்.

ஷிராஸ் பல்ஸாரா பல வருடங்களாக கஷ்டகரி சங்கட்டனாவின் செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்று வருபவர். ஷிராஸ் மற்றும் கணவர் பிரதீப் இருவரின் பொறுப்பில் வளர்ந்தவர் மீனா தோதடே. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கல்வி பெறுவது மிகக் கஷ்டமான விஷயம். ஜில்லா பரிஷத் பள்ளிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான். மேலும் வேலைக்காக வருடத்தில் ஒன்பது மாதங்கள் வழக்கமாக வெளியிடங்களுக்குச் சென்றுவிடுவார்கள் மக்கள். இடையில் மூன்று மாதங்கள் பயிர் செய்வதற்காக ஊரில் வந்து இருப்பார்கள். பழங்குடியினர் நலத்துறையால் திறக்கப்பட்ட ஆஷ்ரம் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. மீனாவின் தந்தை காலுராம் தோதடே பால்கரில் சோசலிச இயக்கத்தைக் கூட்டியெழுப்பிய மூத்த தலைவர்களில் ஒருவர். அவரது இயக்கம் பூமி சேனா என்றழைக்கப்பட்டது. நிலத்தகராறுகள் மற்றும் விவசாயிகளின் கடன் பிரச்சினைகள் ஆகியவற்றை முன்னெடுத்துப் போராடி வந்தார் அவர். இயக்கத்தில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்ட அவரால் குழந்தைகளின் படிப்பில் கவனம் காட்ட முடியவில்லை. மீனா ஒரு ஆஷ்ரம் பள்ளியில் கற்றார். அங்கேயே வளர்ந்து வந்த அவரைப் பின்னர் ஷிராஸ் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு கல்வி அளித்து வந்தார்.

சக்குபாய் மீனாவுக்கும் ஷிராஸிற்கும் மிகவும் நெருங்கியவர். பல கல்லூரிகளைச் சேர்ந்த முக்கியமான இருபத்தைந்து மாணவியரும், மாணவரும் கலந்து கொண்ட ஸ்பாரோ பயிலரங்கு 1998 ஜுலை 26ல் நடந்தது. மீனா மற்றும் ஷிராஸ் இவர்களுடன் சக்குபாய் தயக்கமின்றி கலந்துரையாடினார். அவர் அதிகமாகப் பேசுபவரல்ல என்றாலும் தன் வாழ்க்கை, தொழில் பற்றி எந்தத் தடையுமின்றிப் பேசினார். அது ஒரு மழை நாள். அவரைப் பொறுத்த வரையில் நடவு செய்வதற்கு ஏற்ற நாள். இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் அவர் நடவு செய்ய விரும்புவாரா அல்லது உரையாடுவதற்கு விரும்புவாரா என்று அவரிடம் கேட்டபோது, நடவு செய்வதுதான் பேசுவதைவிட எளிய வேலை என்றார். அன்று மாலை அவர் மிகவும் சோர்வுற்றுக் காணப்பட்டாலும், நடவு செய்ய அருமையான நாள் ஒன்றை எங்களுக்கு மனமுவந்து ஒதுக்கித் தந்ததில் எந்த வருத்தமும் அவர் முகத்தில் தென்படவில்லை.

சக்குபாயின் விவரணை வடிவத்தில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேர்த்துள்ள நாட்டார் கதைகள் அஞ்சலி மான்டேரோ மற்றும் பி. ஜயசங்கர் இணைந்து இயக்கிய கஹாண்கார் – அஹாண்கார் என்ற குறும்படத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

அக்டோபர் 1998 சி. எஸ். லக்ஷ்மி

***

மஹாதேவனும் கங்காகௌரியும்

மொழிபெயர்ப்பு: அருண்மொழி நங்கை

தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்ட ஆதி தம்பதியினர் மஹாதேவரும் அவரது துணைவியான கங்கா கௌரியும். மஹாதேவன் என்றால் `கடவுள்களுக்கெல்லாம் கட வுள்’ என்று அர்த்தம். அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தையும் மற்றச் சிறிய கடவுள்களையும் படைத்து அவர்களுக்கு வெவ்வேறு ராச்சியங்களையும் கொடுத்தனர். எல்லாம் சுமுகமாகவே நடந்தது. ஆனால் அவர்களில் சிலர் மஹாதேவரின் அழைப்பை அலட்சியம் செய்து அவருடைய அவைக்குச் செல்லவில்லை. எனவே மஹாதேவர் மிகவும் கோபமடைந்து இந்தப் பிரபஞ்சத்தை நீரில் முழ்கச் செய்தார். சிலர் மட்டும் பிரளயத்தில் எஞ்சினர். புலி (வாக்)யின் குகைக்குள் அடைக்கலம் புகுந்தவர்கள் `வாகட்’ என்ற குடும்பப்பெயரால் அழைக்கப்பட்டனர். கத்தரிக்காய்(வாங்கி)யை பிடித்து மிதந்து கரையேறியவர்கள் `வாங்கட்’ என்று அழைக்கப்பட்டனர். `குராடஸ்’ எனப்படுபவர்கள் மிதக்கும் கோடரி (குராட்)யைப் பிடித்துக் கரையேறியவர்கள். தங்கிவிட்டவர்கள் (தாக்கா) `தாக்கரே’.

***

சக்குபாய்: நான் சுகதம்பா என்ற இடத்திலிருந்து வருகிறேன். அங்குதான் என் பெற்றோர் வசிக்கின்றனர். நாங்கள் எட்டு குழந்தைகள். நான் ரொம்பச் சின்னவளாக, ஐந்தோ ஆறோ அதற்கும் குறைவான வயதில் இருக்கும்போதே, என்னுடைய மூத்த சகோதரிகள் மூவருக்கும் திருமணமாகிவிட்டது.

என்னுடைய தாய் தந்தையர் ஏழை விவசாயிகள். அதனால் அவர்கள் என்னையும் என்னுடைய சகோதரனையும் பிற வீடுகளுக்கு பொராய் வேலை செய்ய அனுப்பி வைத்தனர். பொராய் என்றால் மற்றவர்களின் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் நபர் என்று அர்த்தம். நான் தெஹேராவில் உள்ள என்னுடைய சகோதரியின் வீட்டில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள அனுப்பப்பட்டேன். நான் மிகச் சிறியவளாக இருந்ததால் அவள் குழந்தையைத் தூக்க முடியவில்லை. அதற்காக என் சகோதரியிடம் அடி வாங்கினேன். ஒருநாள் என் பெற்றோர் வீட்டுக்குக் கிளம்பிவிட்டேன். நாள் முழுவதும் நடந்தால்தான் எங்கள் வீட்டுக்குப் போக முடியும். ஆனாலும் நான் நடக்கத் தொடங்கினேன். பாதி நாள் நடந்து பாதி தூரம் வந்தபோது என்னுடைய அக்காளின் கணவன் என்னைப் பிடித்துவிட்டான்.

என் கையைப் பிடித்து திரும்பி வருமாறு வற்புறுத்தினான். நான் மறுத்தேன். என்னை அடித்துத் திரும்பக் கூட்டிச்சென்றான். பிறகு வெகுகாலம் கழித்து நான் என் பெற்றோரிடம் திரும்பினேன்.

நான் திரும்பி வந்தபோது, மழைக்காலம் தொடங்கியிருந்தது. வீட்டிலிருந்த எல்லா தானியங்களையும் என் பெற்றோர் தீர்த்து விட்டிருந்தனர். ஆகவே திரும்பவும் நான் தீபாவளி வரைக்கும் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் வேலைக்காக இன்னொரு வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். இதற்காக என் பெற்றோர் இரண்டு அல்லது ஒன்றரை மணங்கு அரிசியைப் பெற்றுக்கொண்டனர். அது அவர்களுக்குத் தீபாவளி வரைக்கும் போதுமானதாக இருந்தது. நான் வேலை பார்த்த வீட்டில் எனக்கு உணவும், தீபாவளிக்குத் துணியும் கிடைத்தன. நான் அப்போதும் ஒரு குழந்தையைத் தூக்க முடியாத அளவு சிறியவளாயிருந்தேன். ஆனால் என்னால் தொட் டிலை ஆட்ட முடிந்தது. அதைச் செய்தேன். தீபாவளி முடிந்ததும் நான் வீடு திரும்பினேன். பிறகு மாடு மேய்க்க அனுப்பப்பட்டேன்.

தலைச் சும்மாடு

வெகுகாலம் முன்பு ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். கணவன் காலையில் வயலுக்குச் செல்வான். மனைவி, தானியங்களைக் குத்துவது, குழந்தைகளைக் குளிப்பாட்டிச் சோறூட்டுவது, சமைப்பது, தண்ணீர் எடுப்பது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளை செய்து முடிப்பாள். பிறகு கணவனுக்கு மதியச் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வயலுக்குச் சென்று வயல் வேலைகளில் அவனுடன் சேர்ந்துகொள்வாள்.

அவள் கணவன் அவள் எப்போதும் உணவைத் தாமதமாக எடுத்துக்கொண்டு வருகிறாள் என்று குறை கூறுவது வழக்கம். அவள் சலிப்படைந்து “ஒருநாள் என் வேலையைச் செய்; உன் வேலையை நான் செய்கிறேன்” என்றாள். அவனும் சம்மதித்தான். மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து அவள் மக்காச்சோளத்தை பொடித்து மாவாக்கி குழந்தைக்கு ஊட்டிவிட்டு அதையும் தூக்கிக்கொண்டு வயலுக்குச் சென்றாள். அவள் கணவன் மீதி வீட்டுவேலைகளை முடித்த போது மிகவும் தாமதமாகியிருந்தது. துரிதமாக அவன் ஒரு துணியை எடுத்துச் சும்மாடாக்கித் தலையில் வைத்தான். அதன்மீது பாத்திரங்களை அடுக்கிக்கொண்டு கிளம்பினான்.

வழியில் நிறைய மனிதர்களைச் சந்தித்தான். அவன் அவர்களைக் கடக்கும்போது அவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு சென்றனர். ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று அவனுக்கு ஒரே வியப்பு. கடைசியாக அவன் ஒரு கிழவியைச் சந்தித்தான். அவள் “மகனே, உன் தலையில் என்ன சுமந்துகொண்டு போகிறாய்?” என்று கேட்டாள். “மதிய உணவுக்கு பாக்ரி (ரொட்டி) கொண்டு போகிறேன்” என்றான் அவன். “அதற்கும் கீழே?” என்று கேட்டாள் அவள். “பருப்புக்கறி” என்றான் அவன். “அதற்கும் கீழே?” என்றாள் அவள். “என்னுடைய சும்மாடு”. “சரி, அதற்கும் கீழே?” என்றாள். தன்னையே கீழ்நோக்கி பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. முழு நிர்வாணமாக இருந்தான் அவன். வீட்டு வேலை அவசரத்தில் தன்னுடைய கோவணத் துணியை எடுத்துத் தலைமேல் சும்மாடாக வைத்திருக்கிறான். பிறகு அவன் வயலுக்குப் போய்ச் சேர்ந்தபோது அவன் மனைவி அவனைப் பார்த்துவிட்டு அமைதியாகத் தொடுவானத்தைச் சுட்டிக்காட்டினாள். அங்கே சூரியன் மறைந்து கொண்டிருந்தான்.

சக்குபாய்: பத்து வயதில் திருமணத்தைப் பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. தினமும் மாடுகளை மேய்த்துவந்தேன். ஒரு பெண்மணி பந்த்கரிலிருந்து கட்சிரோலிக்கு தினமும் சென்று தன் மகனுக்கு உணவு கொடுத்துவந்தாள். ஒருநாள் அவள் போகிற வழியில் என் வீட்டுக்கு வந்தாள். என்னைப் பார்த்தாள். பிறகு ஒருநாள் அவள் நான்கைந்து பேர்களுடன் வந்து என்னை அவள் மகனுக்கு மணப்பெண்ணாக நிச்சயித்துவிட்டுச் சென்றாள். என்னுடைய மாமாவும் மாமியும் இத்தனை சிறிய வயதில் எனக்குத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் என் தந்தை மிகுதியாகக் குடித்திருந்ததால் அதைக் கேட்கும் நிலையில் இல்லை. எனக்குத் திருமணம் நிச்சயம் ஆனதுகூட எனக்குத் தெரியாது. நான் திருமணம் புரியப்போகும் ஆளையும் நான் பார்த்திருக்கவில்லை.

அவன் என்னைவிட வயதில் ரொம்ப பெரியவன். எத்தனை வயது என்னைவிட அவன் அதிகம் என்றுகூட எனக்குத் தெரியாது. அவனுடைய தங்கைக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். அப்போதும் அவன் பள்ளி சென்று கொண்டிருந்தான். அவன் பள்ளிக் கல்வியை முடித்தபிறகு சிறிதுகாலம் மாடுமேய்க்கச் சென்றான். அதன்பிறகு ஒரு பள்ளி ஆசிரியன் ஆனான். அவன் இருபது அல்லது இருபத்தைந்து வயது என்னைவிட பெரியவனாக இருக்கலாம். ஊனமுற்றவனும் கூட. அவனுடைய ஒரு கையும் ஒரு காலும் சற்று குட்டையானவை. என்னை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார்கள்.

இந்தத் திருமண வாழ்க்கையில் பல வேதனைகள். ஆனால் என்னுடைய மாமியார் தங்கமானவள். அவள் எனக்குத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டிவிடுவாள்; என்னுடைய புடவைகளைத் துவைத்துப்போடுவாள்; என்னை அலங்கரிப்பாள். “என் மகனைவிட்டு எங்கேயும் போய்விடாதே” என்று அடிக்கடி சொல்லுவாள். தினமும் அவள் என்னை ஆற்றுக்கு அழைத்துச் சென்று, குளிப்பாட்டிவிடுவாள். சாப்பிடும்போது என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வாள். திருமணத்துக்கு வேறு ஓர் அர்த்தமும் இருந்தது. என் கணவனோடு `பேசுவது’. கணவன் என்னுடன் `பேச’ விரும்பும்போது என்னை ஓர் அறையில் போட்டு அடைப்பதும் நான் இணங்க மறுப்பதும் வழக்கமாக இருந்தது. அவன் என்னை அடிப்பான். காலையில் கதவு திறந்ததும் நான் பாய்ந்து வெளியேறுவேன். என்னைவிட மிகவும் வயதில் மூத்த அவன் வற்புறுத்திய அந்த நாட்களில் நான் வயதுக்குக்கூட வந்திருக்கவில்லை.

ஒருநாள் நான் காட்டுக்குப் போய் ஒளிந்து கொண்டேன். என்னுடைய கணவனின் மைத்துனனும், எனக்கு ஒருவிதத்தில் சொந்தக்காரனுமான மேகே, விளக்கை எடுத்துக்கொண்டு என்னைத் தேடி வந்தான். அவன் என்னைக் கண்டுபிடித்தபோது “ ஓடினால் துப்பாக்கியால் உன்னைச் சுட்டு விடுவேன். வீட்டுக்கு வந்து ஒழுங்காக இரு. இல்லாவிடில் கொன்று விடுவேன். உன் அப்பா அம்மாவிடம் எனக்குப் பயமில்லை” என்றான். என்னுடைய பெற்றோரிடமும் என்னால் திரும்பி போக முடியவில்லை. காரணம் அவர்கள் நான் இருக்க வேண்டியது கணவனுடைய வீட்டில்தான் என்றார்கள். நான் ஓடிப்போவதும் திரும்ப அழைத்துவரப்படுவதும் அடிக்கடி நடந்தது.

என்னுடைய மாமியார் இறந்ததும் நிலைமை இன்னும் மோசமாகியது. நான் பெரியவளான அதே வருடம், எனக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. குழந்தை மிகவும் பலவீனமாக இருந்ததால் இறந்துபோயிற்று. என்னுடைய மாமியார் இறந்த பிறகு என்னுடைய பவலானி (என் கணவனின் மூத்த சகோதரனின் மனைவி) என்னை நல்ல வேலை வாங்கிவிட்டு நிறையத் தண்ணீர் சேர்த்த ஆம்பில் (கேழ்வரகுக்கூழ்) கொடுப்பாள். அவர்கள் சப்பாத்தி சாப்பிடும்போது எனக்கு ஆம்பில்தான் கிடைக்கும். நான் அழுவேன். வேறு வழியில்லையாதலால் பொறுத்துக்கொள்வேன். எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன : ஒரு மகளும், இரண்டு மகன்களும்.

ஜம், மரணதேவன்

முன்பு ஒரு காலத்தில் ஒரு பிராமணன் தன் மனைவி மகளுடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை (கர்_ஜவாய்) ஒருவன் வேண்டும் என்று விரும்பினர். தரகன் ஒருவனோடு ஓர் ஆதிவாசி மாப்பிள்ளையைப் பார்க்கக் கிளம்பினர். ஏனென்றால் ஆதிவாசிகள் கடின உழைப்புக்குப் பேர்போனவர்கள். இறுதியில் ஓர் ஏழை ஆதிவாசி விதவையின் மகனைக் கண்டுபிடித்து, கல்யாணமும் நடந்தது. அந்த ஆதிவாசி மணமகன் மாமனார், மாமியாரை ஒருபோதும் விட்டுப் போவதில்லை என்று சத்தியம் செய்தான். அதை சத்தியவாக்குபோல வைத்து கொண்டு அவன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். விரைவிலேயே வயதான பிராமணனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம் மருமகனின் சோம்பேறித்தனத்தைப் பற்றிக் குறைகூறத் தொடங்கினர். மகள் இதைக் கணவனிடம் தெரிவித்தாள். உடனே அவன் “உன் தந்தையை ஒரு கொல்லனிடம் போய் தச்சனுக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் வாங்கி வரச் சொல்” என்றான். எல்லா உபகரணங்களோடும் ஆதிவாசி காட்டுக்குள் சென்று ஓர் அழகான, நவீனமான அலமாரி ஒன்றைச் செய்தான். இதே நேரம் மரணத்துக்கு அதிபதியான ஜம்மின் அவையில் இன்னொரு கதை நடந்துகொண்டிருந்தது. கால், வேல் என்ற தன்னுடைய இரு தூதர்களிடமும் அந்த பிராமணனின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாக ஜம் கூறினான். கால், வேல் என்ற இரண்டு தூதர்களும் பிராமணனை அவைக்கு அழைத்துவரச் சென்றனர். அப்போது பிராமணன் வீட்டில் இல்லை. மருமகன் அவர்களை எளிதில் மரணதேவனின் தூதர்களெனக் கண்டுகொண்டான். மருமகன் அவர்களிடம் “பிராமணன் காட்டிற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான். நான் உங்களை அங்கே அழைத்துப் போகிறேன்” என்றான். தூதர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர். அங்கு சென்றதும் அவன் அந்த அலமாரியை அவர்களுக்குக் காட்டினான். அதனுள் பிராமணன் ஒளிந்திருப்பதாகக் கூறினான். அவனைப் பிடிப்பதற்கு அலமாரியின் உள்ளே அவர்கள் நுழைந்ததும் மருமகன் இரு தூதர்களையும் உள்ளே வைத்துப் பூட்டிவிட்டான்.

தூதர்களிடமிருந்து எந்தத் தகவலும் வராது போகவே, என்ன நடந்திருக்கும் என்று அறிய ஜம் தானே பூமிக்கு வர முடிவு செய்தான். ஒரு பார்சி மது வியாபாரியாக தன்னை வேடம் மாற்றிக்கொண்டு ஒரு மதுக்கடையை அந்த கிராமத்தில் திறந்தான். அவன் வாடிக்கை பெருகும் பொருட்டு அங்கு மதுவருந்த வருபவர்களுக்கு முதல் கோப்பை மது இலவசம் என்று அறிவித்தான். இது கடையை மிகவும் பிரபலப்படுத்தியதோடல்லாமல் நிறையக் குடிகாரர்களின் உளறல்களும், உரையாடல்களும் காதில் விழ வழி செய்தது. ஆதிவாசியும் அவனது மாமனாரும் அங்கே போய் இலவசமாகக் குடித்தனர். கொஞ்சம் குடித்து முடிந்ததும் அவர்கள் இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். மருமகன் அலமாரி ரகசியத்தை உளறிவிட்டான். மது வியாபாரியாக இருந்த ஜம் எல்லாவற்றையும் உற்றுக் கேட்டான். இந்தக் கதையை நம்பாதவன்போல் நடித்தான் ஜம். இறுதியில் ஜம்மை மருமகன் காட்டிற்கு அழைத்துச் சென்றான்.

ஜம் அலமாரியைத் திறந்தான். காலும், வேலும் விடுதலை செய்யப்பட்டனர். “நாம் இந்த இளைஞனின் உயிரை எடுத்துக்கொண்டு போகலாம். இவன் பிராமணனைவிட புத்திசாலியாக இருக்கிறான்” என்று ஜம் சொன்னான். இப்படியாக மது வியாபாரியாக வந்த ஜம் ஆதிவாசியின் மரணத்துக்குக் காரணமானான்.

சக்குபாய்: என்னுடைய மகள் சவிதாவுக்கும் எங்கள் வழக்கப்படி பனிரெண்டு வயதில் திருமணம் நடந்தது. ஆனால் அவளது மாமனார் அவளை மோசமாக நடத்தினார். நான் என் மருமகனிடம் “வேண்டுமானால் உன் தந்தையுடன் தங்கியிரு. என் மகளை என்னுடன் தங்கவைத்து நான் கவனித்துக் கொள்வேன்” என்று சொன்னேன். என் மகளின் மாமனார் அடிக்கடி அவள் சீதனம் எதுவும் கொண்டுவரவில்லை என்று குறை கூறிக்கொண்டிருந்தார். என் மருமகன் எந்த வேலையும் செய்யவில்லை. அவனுக்கு விவசாயம் செய்யவும் தெரியவில்லை. அதனால்தான் `உன் தந்தையுடன் இரு’ என்று சொன்னேன். ஆனால் என் மருமகன் என்னுடன் வந்து தங்குவதற்கு விருப்பமிருப்பதாகத் தெரிவித்தான். எனவே என் மகளும் மருமகனும் என்னுடன் வந்து தங்கினர். விவசாயமே தெரியவில்லை அவனுக்கு. ஆனால் நான் படிப்படியாகச் சொல்லிக்கொடுத்தேன். இப்போது அவனுக்கு எப்படி அறுவடை செய்வது என்று தெரியும். என்னுடைய மகளுக்கு இரண்டு குழந்தைகள்.

நான் என்னுடைய மகன்களை அவர்களின் சிறப்பான எதிர்காலத்துக்காகப் படிக்கவைத்தேன். ஆனால் அவர்கள் நன்றாகப் படிக்கவில்லை. மூத்தமகன் பனிரெண்டாம் வகுப்பிலும் இளையவன் பத்தாம் வகுப்பிலும் தோற்றனர். அவர்கள் எந்த வேலையும் செய்யமாட்டார்கள். கெட்ட சகவாசம் வைத்துக்கொண்டு வீடியோ படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நான் ஏதாவது சொன்னால் என்னைத் திட்டுவார்கள். அவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. என்னுடைய கணவரும் இப்போது வேலை செய்வதில்லை. வேலை செய்யாவிட்டால் அவர்களுக்குச் சோறு போட என்னால் முடியாது என்று அவர்களிடம் சொல்லக்கூட முடியாது. காரணம் நான் நாள் முழுவதும் வயல்வேலைக்குப் போயிருப்பேன். அவர்கள் தாங்கள் விரும்பியதைச் சமைத்து உண்பார்கள். இப்பொழுது என்னுடைய மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. என்னுடைய மகள் மட்டும்தான் எனக்கு வயலிலும் மற்ற வேலைகளிலும் உதவுகிறாள். ஏன் மக்கள் ஆண் குழந்தைகளை விரும்புகிறார்கள், பெண் குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மகள்தான் என்றைக்கும் அம்மாவுக்கு உதவுவாள்.

எலி

ஒரு காலத்தில் ஒரு எலி இருந்தது. அதற்கு வாலில் ஒரு முள் குத்திவிட்டது. அது யாரை உதவிக்குக் கூப்பிடலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தது. விறகைத் தலைச்சுமையாகச் சுமந்துசெல்லும் ஒரு பெண்ணை அது பார்த்தது. “சகோதரியே, இந்த முள்ளை எடுத்துவிடு, தயவு செய்து எடுத்துவிடேன்” என்றது எலி.

அவள் அரிவாளால் அதன் வாலைச் சிறிது பிளந்து அந்த முள்ளை எடுக்க முயன்றாள். அந்த அரிவாள் கை தவறி விழுந்து வாலின் நுனியை அறுத்துவிட்டது. எலிக்குக் கோபம் வந்தது. “என்னுடைய வாலைத் திருப்பிக்கொடு அல்லது உன்னுடைய அரிவாளை எனக்குக் கொடு” என்றது. அந்த ஏழைப்பெண் தன் அரிவாளை இழந்தாள். எலி அரிவாளை எடுத்துக்கொண்டு போய்விட்டது. வாலில் முள்ளுடன் இருந்த எலி அரிவாள் உள்ள எலியாக மாறியது.

அரிவாளைச் சுமந்து கொண்டு வந்த எலி கூடை முடைபவர்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. அவர்கள் மூங்கிலைத் தங்கள் பற்களால் பிளந்துகொண்டிருந்தனர். “என்னுடைய அரிவாளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலை எளிதாகப் போய்விடும்” என்றது எலி. இந்த உபகாரத்திற்கு அவர்கள் நன்றி சொன்னார்கள். விரைவிலேயே அரிவாள் உடைந்தது. உடனே எலி “என்னுடைய அரிவாளைத் திருப்பித் தாருங்கள் அல்லது உங்கள் கூடைகளைத் தாருங்கள்” என்று நிபந்தனை போட்டது. அவர்களுடைய கூடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றது. வாலில் முள்ளுடன் இருந்த எலி சில கூடைகள் உள்ள எலியாக மாறியது.

எலியின் அடுத்த விஜயம் குயவர்கள் நிரம்பிய கிராமம். குயவர்கள் களிமண்ணைக் கைகளில் சுமந்து சென்று கொண்டிருந்தனர்.  “என்னுடைய கூடைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலை எளிதாகப் போய்விடும்” என்றது. அவர்களும் நன்றி தெரிவித்தனர். அன்றைய தினம் அவர்கள் நிறைய பானைகள் செய்தனர். விரைவிலேயே கூடைகள் எல்லாம் நைந்துவிட்டன. உடனே எலி “என்னுடைய கூடைகளைத் திருப்பித் தாருங்கள் அல்லது பானைகளைத் தாருங்கள்” என்றது. இப்படியாக வாலில் முள்ளுடன் இருந்த எலி பானைகள் உள்ள எலியாக ஆகியது.

அடுத்தக் கிராமத்தில் மக்கள் காய்கறிகள் பயிரிட்டனர். செடிகளுக்கு அவர்கள் நீர் இறைக்கச் சிறிய பாத்திரங்களைப் பயன்படுத்தினர். நிறைய பானைகளுடைய இந்த எலி “என்னுடைய பானைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலை எளிதாகப் போய்விடும்” என்றது. அவர்கள் உதவிக்கு நன்றி தெரிவித்தனர். பானைகள் உடைந்தன. “என்னுடைய பானைகளைத் திருப்பித் தாருங்கள் அல்லது உங்களுடைய காய்கறிகளைத் தாருங்கள்” என்றது எலி. இப்படியாக வாலில் முள்ளுடன் இருந்த எலி காய்கறிகள் உள்ள எலியாக மாறியது.

பிறகு எலி பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மாடு மேய்ப்பவர்களின் கிராமத்திற்கு வந்தது. அவர்களிடம் “என்னுடைய காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல விருந்து சாப்பிடுங்கள்” என்றது எலி. விருந்து முடிந்தவுடன் “என்னுடைய காய்கறிகளைத் திருப்பித் தாருங்கள் அல்லது உங்களுடைய மாட்டைத் தாருங்கள்” என்றது. வாலில் முள்ளுடன் இருந்த எலி ஒரு காளை மாட்டுக்குச் சொந்தக்காரனான எலியாக ஆனது.

எலி காளைமாட்டுடன் வரும் வழியில் ஆதிவாசி விவசாயி ஒருவனைப் பார்த்தது. அவனிடம் இளைத்த ஒரேயொரு காளை மட்டுமே இருந்தது. உழும்போது இன்னொரு நுகத்தில் மாட்ட காளையில்லாததால் தன் மனைவியை மற்ற முனையில் கட்டியிருந்தான். அதை பார்த்த எலி “இப்படியா உன்னுடைய நிலத்தை உழுகிறாய்? என்னுடைய காளையை எடுத்துக் கொள். உன்னுடைய வேலை எளிதாகும்” என்றது. விவசாயி எலிக்கு நன்றி சொன்னான். ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்டிருந்த எலியின் காளை சீக்கிரமே இறந்துபோயிற்று. எலியும் வழக்கம்போலவே “என்னுடைய காளையைத் திருப்பித் தா அல்லது உன் மனைவியைத் தா” என்று சொல்லி அவனுடைய மனைவியைப் பெற்றது.

இ படியாக வாலில் முள்ளுடன், அரிவாளுடன், கூடைகளுடன், நிறைய பானைகளுடன், நிறைய காய்கறிகளுடன், பெரிய காளைமாட்டுடன் இருந்த எலி கடைசியில் ஆதிவாசியின் மனைவியை உரிமையாக்கிக்கொண்ட எலியாக மாறியது.

சக்குபாய்: `கஷ்டகரிசங்கட்டனா’ என்னுடைய சொந்த ஊரான சுகதம்பாவில் பழங்குடியினருக்காக சேவை செய்து வந்தது. என்னுடைய சகோதரனும் மற்ற உறவினர்களும் அதன் உறுப்பினர்களாக இருந்தார்கள். என்னையும் அதில் பங்கெடுக்கச் சொன்னார்கள். ஆனால் என் கணவன் அரசு ஊழியன், ஆசிரியன். நான் சங்கட்டனா நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் வேலையை இழக்க நேரிடும் என்று பயந்தான். அதனால் அவன் என்னைச் சேர அனுமதிக்கவில்லை.

பந்த்கரில் ஓர் ஆள் இருந்தான். அவன் வனத்துறைக்குச் சொந்தமான ஓரிடத்தில் வீடு கட்டியதால் அவர்கள் அவனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். அவன் என்னிடம் வந்து “நாம் சுகதம்பாவிற்குப் போய் சங்கட்டனா ஆட்களிடம் பேசிப் பார்க்கலாம்” என்று சொன்னான். அங்கிருந்த சங்கட்டனாவின் உறுப்பினர்கள் சங்கட்டனாவை அவரவர் சொந்தக் கிராமத்தில் உருவாக்குவதே சிறந்தது என்று சொன்னார்கள். நாங்களும் ஒத்துக்கொண்டோம். பிஜுர்பாடாவில் ஆறு நாட்கள் முகாம் ஒன்றிற்கு காலுராம்பாவும், பிரதீப்பாவும் ஏற்பாடு செய்தார்கள். இந்த முகாமில் என்ன நிகழ்ந்தது என்று சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் சங்கட்டனா எங்கள் கிராமம் ஒன்றில் உருவானது. வனத்துறை ஊழியர்கள், காவல் நிலையம் ஆகிய இரண்டுக்கும் எதிராக நாங்கள் நடத்திய போராட்டங்கள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளன.

எங்களுடைய சாதியில் பெண்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. சில ஆண்கள் இருதாரமுடையவர்கள். ஆண் உயிருடன் இருக்கும்வரை எல்லாம் சரியாக இருக்கும். அவன் இறந்த கணமே பெண்கள் ஒருவரோடொருவர் சண்டைபோட ஆரம்பித்துவிடுவார்கள். இந்த மாதிரியான திருமணங்களைத் தடுக்க நாங்கள் போராடினோம். இரண்டு ஆண்களை இரண்டாம் திருமணம் வேண்டாம் என்று கூறி இணங்க வைத்தோம். இன்னும் மூன்று ஆண்கள் எங்களை மீறி திருமணம் புரிந்துகொண்டார்கள். அவர்கள் என் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எல்லா ஆண்களும் நாங்கள் சொல்வதைச் செவிமடுக்கவில்லை. “நீங்கள் ஒன்றும் எங்களுக்குச் சோறு போடவில்லை” என்பார்கள் சிலநேரம்.

பந்த்கரில் ஒருவன் இருந்தான். திருமணமாகி ஐந்து வருடம் கழிந்தவுடன் அவன் தன் மனைவி சவிதாவிடம் “உன்னால் ஒரு குழந்தையைப் பெற்றுத் தர முடியவில்லை. நான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்” என்று சொல்ல ஆரம்பித்தான். இருவருமே மருத்துவமனைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிப் பார்த்தாள் அவள். ஆனால் அவள் கணவன் அவளால் கருத்தரிக்க முடியாது என்றே சொல்லி வந்தான். உண்மையில் அவன் இன்னொரு பெண்ணைப் பார்த்து வைத்திருந்தான். ஒருநாள் அவன் போய் அந்த புதிய மணப்பெண்ணைத் தன்னோடு கூட்டி வந்தான். எங்களுடைய கொங்கணி சாதியில் ஒரு வழக்கமுண்டு. புதிதாகத் திருமணமாகி வரும் பெண் கணவன் வீடு புகும்போது முதல் மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும்.

சவிதா உண்மையில் நிறையத் துன்பப்பட்டாள். நாங்கள் அவள் கணவனிடம் வீட்டிலும் நிலத்திலும் அவளுக்குப் பங்கு கேட்டோம். அவன் “உங்களுக்கு என்ன ஆயிற்று? இதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள். நான் இரண்டு என்ன, பத்து பெண்களைக் கூடத் திருமணம் செய்து கொள்வேன்” என்றான். சவிதா அவனுடனேயே தங்கினாள். அவளுடைய வீட்டிலிருந்து எந்த ஆதரவும் இல்லை. ஒருமுறை அவன் அவளை அடித்தான். அவள் கீழே விழ மண்டை உடைந்து ரத்தம் பெருக ஆரம்பித்தது. ஆனாலும் அவள் அவனை விட்டுப் போக முடியவில்லை. என்னைப் போலவே அவளுக்கும் அவள் சகோதரனிடமிருந்து எந்த உதவியும் இல்லை. எனவே அவள் அவனுடைய அடிகளையெல்லாம் பொறுத்துக்கொண்டாள். அவள் கணவன் சங்கட்டனாவில் உறுப்பினராக இருந்தான். இறுதியில் அவன் இயக்கத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டான்.

நியாயவிலைக் கடை ஒன்றை வைத்திருந்தான் ஒருவன். வியாபாரத்தின் போது அவனுக்கு ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டது. அவள் கருவுற்றாள். பிறகு அவன் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தான். இதற்கு முன்னால் பலமுறை அவன் முதல் மனைவி சுனிதாவிடம் அவளால் கருத்தரிக்க இயலாது என்று கூறியிருக்கிறான். அவள் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்று யோசனை கூறிய போதெல்லாம் அவன் அவளைக் கிராமத்தில் உள்ள நாட்டுவைத்தியனிடம் கூட்டிப் போவான். பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் அவள் வயிற்றில் சூடு போட்டான் அந்த வைத்தியன். கொப்பளம் கட்டிச் சீழ் பிடித்தால் அவள் உடம்பிலுள்ள கெடுதல் எல்லாம் வெளியேறிவிடும் என்றும் சொன்னான். அதை நாங்கள் சூட்டுத் தழும்பு (டாம்ப் ) என்போம். சுனிதாவுக்கு அதுபோல் பதினாறு தழும்புகள் வயிற்றின் மேல் பகுதியில் இருந்தன. சுனிதா அதைத் தாங்கிக்கொண்டாள். அவளுடைய தினசரி வேலைகளையும் அவள் இந்தப் புண்களுடனேயே கவனிக்க வேண்டியிருந்தது. இடுப்பில் சேலையைக் கூடக் கட்டமுடியாது அவளுக்கு. அதனால் மார்பில் பாவாடையைக் கட்டிக்கொண்டு வேலை செய்வாள். அவன் இன்னொரு பெண்ணைக் கூட்டி வந்தபோது அவள் தன் பெற்றோரிடம் போய்விட்டாள். ஆனால் அவன் அவளைத் திரும்ப அழைத்து வந்தான்.

சுனிதா திரும்பி வந்தபோது, நாங்கள் அவள் கணவனுக்கு எதிராக செக்ஷன் 498 அ _ வின் கீழ் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தோம். அவனுக்கெதிராகப் புகார் கொடுத்ததால் அவள் அவனுடன் தங்கக் கூடாது என்று ஊர்மக்கள் சொன்னார்கள். ஆனால் அவள் பெற்றோர் அவளைத் திரும்ப அழைக்க மறுத்துவிட்டதால் அவள் அவனுடனே தங்கவேண்டியிருந்தது.

சங்கட்டனாவின் மற்றப் போராட்டங்களில் நானும் பங்கெடுத்தேன். முக்கியப் போராட்டம் நிலம் குறித்துத்தான். வனப் பகுதியில் உள்ள நிலங்களை எங்களில் சிலர் விவசாயம் செய்துவந்தனர். ஆனால் அது எங்களுக்குச் சொந்தமில்லை என்று கூறப்பட்டது. நாங்கள் கையில் கல்லெடுத்துக்கொண்டு வன அதிகாரிகளை அடித்து விரட்டுவோம்.

ஷிராஸ் : இவ்வனப் பகுதி முன்பு தரிசுநிலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதிக உணவு உற்பத்தி இயக்கத்தின்போது அவர்கள் அந்நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர். பிறகு வனத்துறை அவர்களை அந்நிலங்களிலிருந்து கிளப்ப விரும்பியது. ஏற்கனவே அவர்கள் கணிசமான உழைப்பைச் செலுத்தி வரப்புகள் அமைத்து நிலங்களைப் பண்படுத்தியிருந்தனர். 1978 இல் மகாராஷ்டிர அரசு பிறப்பித்த உத்தரவின்படி 1972-1978 கால அளவில் இந்நிலங்களை விவசாயம் செய்தவர்களுக்கு நில உரிமைப் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது நடைபெறவில்லை. நில அளவை நடத்தப்படவோ ப

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 30, 2022 11:31

April 14, 2022

ஆகுதி அமைப்பு ஒருங்கிணைத்த நூல் விமர்சன அரங்கு

கடந்த 09-04-2022 அன்று என்னுடைய ’பனி உருகுவதில்லை‘ நூலுக்கு ஒரு விமர்சன அரங்கை ஆகுதி பதிப்பகத்தின் சார்பில் எனது நண்பர் திரு. அகர முதல்வன்  ஒருங்கிணைத்து நடத்தினார். அதை எழுத்தாளர் அ. வெண்ணிலா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். எழுத்தாளர் ஜா. தீபா, எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி, எழுத்தாளர் பிகு, பண்பலை தொகுப்பாளர் அருந்தமிழ் யாழினி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நான் இறுதியில் ஏற்புரை வழங்கினேன்.

***

அருந்தமிழ் யாழினி உரை:

***

பி.கு உரை:

***

கார்த்திக் புகழேந்தி உரை:

***

ஜா. தீபா உரை

***

அ. வெண்ணிலா தலைமை உரை:

***

என் ஏற்புரை:

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2022 11:31

March 31, 2022

எரிக் க்ளாப்டன்: அத்தனை மேலே அத்தனை கீழே

எரிக் பாட்ரிக் க்ளாப்டன் [Eric Patrick Clapton]

காதலி ஒரு விருந்துக்கு செல்ல தயாராகிறாள். காதலன் காத்திருக்கிறான்.  குறுகிய அக்கால அவகாசத்தில் அவன் எழுதிய பாடல் பெரும் புகழ்பெறுகிறது. மிக, மிக எளிமையான வரிகள். கணவன் தன் மனைவியிடம் ஆத்மார்த்தமாக பேசும் வரிகள் போன்றவை. அப்பாடல்தான்  ’வொண்டர்ஃபுல் டுநைட்”. மென் ராக் இசை வகைமையை சார்ந்தது. அதை எழுதி பாடியவர் எரிக் பாட்ரிக் க்ளாப்டன் [Eric Patrick Clapton]. உலகின் புகழ்பெற்ற ராக்-ப்ளூஸ் இசை நட்சத்திரங்களில் ஒருவர். அவருடைய கிடார் இசைக்காகவும், குரலுக்காகவும் அறியப்பட்டவர்.

ஒரு பின்மாலை,

அவள் எந்த ஆடையை அணிவது என்ற குழப்பத்திலிருக்கிறாள்.

தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள்..

தன் பொன்னிறக் கூந்தலை அழகுபடுத்துகிறாள்.

’’நான் நன்றாக இருக்கிறேனா?’’ அவள் கேட்கிறாள்.

’’மிக அழகாக இருக்கிறாய் ,என் அன்பே’’ என்கிறேன்.

நாங்கள் விருந்துக்கு செல்கிறோம்.

அனைவரின் பார்வையும் என் இனியவளை மையம் கொண்டிருக்கின்றன.

அவள் கேட்கிறாள்.’’ நீ நன்றாக இருக்கிறாய்தானே?’’

’’மிகவும் மகிழ்வோடு இருக்கிறேன்’’ என்கிறேன் நான்.

அதற்கு காரணம் ’உன் கண்களில் நான் காணும் காதலின் ஒளி’

’இதைவிட அதிசயம் என்னவென்றால் நான் உன்னை எந்த அளவிற்கு காதலிக்கிறேன் என்பதை நீ உணர்வதில்லை’.

வீடு திரும்பும் நேரமாகிவிட்டது. தலை கனத்து வலிக்கிறது எனக்கு.

கார் சாவியை உன்னிடம் தருகிறேன். வீடு திரும்பி என்னை படுக்க வைக்கிறாய்.

படுக்கைவிளக்கை அணைக்கும் முன் உன்னிடம் சொல்கிறேன்.

என் அன்பே, நீ இன்றிரவு அவ்வளவு அழகாக இருந்தாய்.

என் கண்ணே, நீ இன்றிரவு அவ்வளவு அழகாக இருந்தாய்.

எரிக் க்ளாப்டன் பாடிய இப்பாடலின் அழகிய மெட்டும், இசையும் , இலகுவான வரிகளும் கேட்கும் போது நம் மெல்லுணர்வைத் தூண்டுகின்றன.  கணவனோ, காதலனோ ஆண்  என்பவன் சொல்லிக் கொண்டே இருக்கிறான் இடைவிடாமல் அவள் அழகை, அவள் மேலுள்ள காதலை. ஒரு கட்டத்தில் அவள் அதை பொருட்படுத்தவில்லையெனினும், அதன் உண்மையான மதிப்பை உணரவில்லையென்றாலும் சொல்லிக்கொண்டே இருப்பான். தனக்குத் தானே. கடவுள் தன் பக்தியை ஏற்கிறாரா, இல்லையா என்று அறியாமல் தன்னிச்சையாக சரணடையும் பக்தன் போல.

இப்பாடலில் ஒற்றை இழைபோல் வரும் கிடார் இசை முதலில் நம்மிடம் உரையாடுகிறது. வரிகளும் இசையும் மிகவும் ஒத்திசையும் இப்பாடலின் கிடார் பகுதி எப்பொழுதும் என்னை வசீகரிக்கும் ஒன்று.

பாடலின் கடைசியில் வரும் ஹார்மனீஸ் எனப்படும் ஹம்மிங் பாடியவரின் குரலும், பாடும் முறையும் இப்பாடலுக்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன.

இந்தப் பாடலில் மிக எளிமையான, மிகமிக இனிமையான உன்னதம் ஒன்று உள்ளது. அன்றாட வாழ்க்கையின் உன்னதம் என்று அதைச் சொல்லலாம். சிறிய வெள்ளைப்பூக்களுக்கு ஓர் அழகு உண்டல்லவா, அந்த அழகு.

ஆனால் அந்த உச்சத்திற்குச் சென்ற எரிக் க்லாப்டன் அதேவிசையில் இருண்ட பாதாளங்களுக்குச் சரிவதையும் நாம் காண்கிறோம். இரண்டும் ஒருவரா என்றே நமக்கு தோன்றுமளவுக்கு அந்த முரண்பாடு இருக்கிறது.எரிக் லாப்டன் இந்த அழகிய வாழ்வுத்தருணத்தின் உச்சத்திற்கு இளமையில் அவர் அடைந்த ஆழ்ந்த மனச்சோர்வில் இருந்து ஏறி வந்து சேர்ந்திருக்கலாம்.

அவர் 1945 ல் இங்கிலாந்தில் சர்ரே என்னும் இடத்தில் பிறந்தார். பதிமூன்று வயது முதல் அவர் பாட்டி, தாத்தாவிடம் வளர்ந்தார். அவர் அன்னை வேறொருவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால் இளமையிலேயே தாயுடன் வாழும் வாய்ப்பு அமையவில்லை.

பதிமூன்று வயதில் எரிக்குக்கு ஒரு அக்கொஸ்டிக் கிடார் பரிசாக கிடைத்தது.  அதில் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். ப்ளூஸ் இசை அவரை மிகவும் ஈர்த்தது. சிறிய சிறிய நிகழ்ச்சிகளை நடத்தி பின்னர் தன் பத்தொன்பதாவது வயதிலேயே லண்டன் ராயல் ஆல்பெர்ட் ஹாலில் தன் இசைநிகழ்வை நடத்தினார்.

லண்டன் ராயல் ஹாலில் நடத்துவது என்பது பெரிய அங்கீகாரம். இருநூறு முறை அவர் தன் இசை நிகழ்ச்ச்சிகளை அந்த ஹாலில் நடத்தியுள்ளார். பல இசைக்குழுக்களில் மாறி மாறி இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார். முதலில் யார்ட் பேர்ட்ஸ், ப்ளுஸ்பிரேக்கர்ஸ், கிரீம், ராக் ப்ளூஸ், இப்படி.. பதினெட்டு  முறை கிராமி அவார்ட் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த நூறு கிடார் இசைக்கலைஞர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெறுபவர் என்று ரோலிங் ஸ்டோன் இவரை பெருமைப் படுத்தியுள்ளது. டைம் பத்திரிகை உலகின் தலைசிறந்த பத்து எலெக்ட்ரிக் கிடார் கலைஞர்களின் வரிசையில் இவரைக் குறிப்பிடுகிறது. இதுவரை இவருடைய 280 மில்லியன் ரெக்கார்டுகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.

அந்த உச்சத்தில் இருந்து எரிக் பாதாளத்தை நோக்கி விழுந்தார். அவரே குப்புறப் பாய்ந்தார் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். தீவிர ஹெராயின் போதை அடிமையாக மாறினார். அதீத குடிப் பழக்கமும் ஆட்கொண்டது. 2017 வரை இசை நிகழ்ச்சிகள் செய்து கொண்டுதான் இருந்தார். இப்போது நரம்பு சம்பந்தமான நோய் தாக்கி அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த இருண்ட ஆழங்களில் அவர் முந்தைய உன்னதங்களுக்காக துழாவிக்கொண்டே இருந்தார். சில பாடல்களில் அந்த தவிப்பும் கண்டடைதலும் உள்ளது.

1970 ல் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியடைந்த ஒரு ஆல்பம் லைலா [layla] . பதினெட்டு பாடல்கள் அடங்கிய அந்த தொகுப்பு இங்கிலாந்து- அமெரிக்க டெரிக்- டொமினோஸ் பாண்ட்டின் பாடலாக எரிக் லாப்டனின் பெரும் சாதனையாக  கருதப்பட்டது. 

ஏழாம் நூற்றாண்டின் அரேபியக் கதைகளில் ஒன்றான லைலா- மஜ்னு கதையை பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் நிசாமி கஞ்சாவி என்ற கவிஞர் நூலாக எழுதினார். அதன் ஒரு வடிவம் எரிக் லாப்டனுக்கு படிக்கக் கிடைத்தது. மஜ்னு, லைலா என்ற அழகியிடம் மனதைப் பறிகொடுத்து அவளை அடைய முடியாமல் பித்தனாகும் அக்கதை அவர் மனதை உருக்கியது.

அக்கதையால் தூண்டப்பட்டு அந்த ஆல்பத்துக்கு லைலா[Layla] என்ற பெயரை சூட்டினார். ஒருதலைக்காதலால் ஒரு ஆண் தன் காதலியிடம்  இறைஞ்சுவது போன்ற அப்பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் பனிரெண்டு ட்ராக்கில் கிட்டார் இசைக்கப் படுகிறது. அதை லைவ் எனப்படும் நேரடி ஒலிபரப்பில் இசைப்பது கடினம் என்கிறார் எரிக். ஏழு ட்ராக்கை டூயூவன் ஆல்மன் என்ற புகழ்பெற்ற கிடார் கலைஞர் இசைக்க , மீதி ட்ராக்கை எரிக் இசைக்கிறார். பியானோ பகுதியை கார்டன் வாசிக்கிறார். அப்பாடல் பிற்பாடு மார்ட்டின் ஸ்கார்சேசியின் குட் ஃபெல்லாஸ் [Good Fellas] என்ற படத்தில் இடம் பெற்றது.

பேட்டி பாய்ட், ஜார்ஜ் ஹாரிசன்

அச்சமயம் எரிக், பேட்டி பாய்ட் [Pattie Boyd] என்னும் மாடல் அழகியிடம் ஒரு தலையாக காதல் கொண்டிருந்தார். இளம் வயது பேட்டிய் பார்ப்பதற்கு பார்பி டால் போல மிக அழகாக இருந்தார். ஆனால் துரதிருஷ்ட வசமாக பேட்டி எரிக்கின் நண்பரும், சிஷ்யனுமான பீட்டில்ஸ் குழுவின் ஜார்ஜ் ஹாரிசனின் மனைவி. எரிக் அவள் மீது காதல் பித்தின் உச்சத்தில் இருந்தார். நண்பனிடமே ’உன் மனைவியை நான் காதலிக்கிறேன்’ என்றும் தெரிவிக்கிறார். அதற்கு ஜார்ஜ் ஹாரிசன் “உன் விருப்பம்போல் செய். எனக்கு கவலையில்லை” என்கிறார்.

1977 ல் ஜார்ஜ் ஹாரிசன், பேட்டி இருவரும் மணமுறிவு பெறுகின்றனர். 1977 ல் இருந்து பேட்டி, எரிக் க்ளாப்டன் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். 1979 ல் மணம் புரிந்து கொண்டு பத்து வருடம் சேர்ந்து வாழ்ந்தனர். ஒரு சிறு விலக்கத்துக்குப் பிறகு ஜார்ஜ் ஹாரிசன் எரிக்கின் நண்பராக கடைசிவரை நீடித்தார். அவர்களின் திருமணத்தில் ஜார்ஜ் கலந்து கொண்டார். பேட்டியை மணம் புரிந்தவுடன் போதைமருந்து பழக்கத்திலிருந்து விடுபட்டார் எரிக். ஆனால் குடியை கடைசிவரை விடவில்லை. 1989 ல் விவாகரத்து. இருவருக்கும் குழந்தையில்லை. குடித்துவிட்டு வந்து, போதையில் தான் செய்த தவறுகளை பிறகு ஒரு பத்திரிகை பேட்டியில் பட்டியலிட்டார் எரிக்.

பேட்டி மீதுள்ள காதலின் கொந்தளிப்பில் அவர் 1970 ல் ஜிம் கார்டனுடன் சேர்ந்து எழுதிய பாடல்தான் லைலா.  எரிக் தன் சுயசரிதையில் “நான் பேட்டியின் மேல் பித்தாக இருந்தேன். ஆனால் அவள் ஜார்ஜை  விட்டு என்னுடன் வருவதற்கு எந்த நியாயமும் இல்லை. நான் எப்படியெல்லாம் இருக்க விழைந்தோனோ அதுபோல் எல்லா விதத்திலும் அவன் சிறந்தவனாக இருந்தான்’’ என்று எழுதுகிறார்.

எரிக், பேட்டி பாய்ட்

பேட்டி பிற்பாடு தன் நினைவுக் குறிப்புகளில் “எரிக்கின் என் மீதான காதலை நான் அறிந்திருந்தேன். அதைப் பொருட்படுத்தாது இருந்தேன். ஒரு சந்திப்பில் நான், எரிக், ஜார்ஜ் ஹாரிசன் மூவரும் இருந்தபோது அப்போதுதான் பதிவு செய்யப்பட்ட புதிய பாடலான ’லைலா’ வை ரெகார்டரில் இட்டு எரிக் எங்களை கேட்க செய்தான். பாடலை மூன்றுமுறை ஒலிக்கவிட்டு என் முகத்தை கூர்ந்து நோக்கியவாறு இருந்தான். அது நிபந்தனையற்ற காதலைத் தெரிவிக்கும் ஒரு மன்றாட்டு.’’

’’எனக்கு முதலில் வந்த எண்ணம் ’கடவுளே, இது என்னைப் பற்றியதென்று உலகமே அறியும் என்பதுதான். ஆனால் நான் அதில் உள்ள பெருங்காதலினாலும், அப்பாடலின் வல்லமையாலும் கவரப்பட்டேன். பிறகு என் மனதை என்னால் பற்றி நிறுத்த முடியவில்லை’’ என்று எழுதுகிறார்.

’லைலா’ வுக்கு பிறகு வந்த ’வொண்டர்ஃபுல் டுநைட்’  தான் கடைசி காதல் பாடல். எரிக் எங்கள் ஆரம்ப நாட்களில் இனிமையானவனாக இருந்தான். பிறகு வந்த நாட்களில், எனக்கு இக்காதல் பாடல்களை கேட்கும் சந்தர்ப்பங்கள் எல்லாமே இதயத்தை கிழிப்பதாக இருந்தது.

நான் எரிக்கின் மீது அவ்வளவு காதலுடன் இருந்த நாட்களில் அவன் மனநிலை உச்சங்களும், தன்னைத் தானே அழித்து கொள்வது போன்ற தாழ்நிலைகளுக்கு அவன் செல்வதும் என்னை அவனிடம் திரும்பத் திரும்ப மன்றாட வைத்தன. ஒரு கட்டத்தில் ஜார்ஜை பிரிந்தது தவறோ என்று கூட நினைத்தேன்.

இத்தாலிய மாடல் டெல் சாண்டொ, எரிக் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்ததை நான் அறிந்தபோது ’’நான் மன நலம் பாதிக்கப்படுமளவு நோயுற்றேன். என்னால் சரியாக மூச்சுவிட முடியாத அளவு என் நெஞ்சில் எடை ஏறியிருந்தது. தேவதைக் கதைகளை நம்பும் குழந்தைபோல அன்பு சாஸ்வதமானது என்று நினைக்கிறோம். அதன்மீது அடி விழும்போது எல்லாம் விளங்கிவிடுகிறது. ஆண்கள் உணர்ச்சியால் வீழ்வதில்லை. அவர்கள் பிடித்து நிற்கிறார்கள். பெண்கள் உணர்ச்சியால் அடித்துசெல்லப் படுகிறார்கள்” என்று எழுதினார் பேட்டி.

இருவரின் திருமண உறவின் போதே எரிக் வேறு ஒரு மணமான பெண்ணுடன் உறவில் இருந்தார். அவளுக்கு இவரில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை பேட்டியிடம் மறைத்து விட்டார். பிறகு  இத்தாலிய மாடல் டெல் சாண்டோவுடன் சேர்ந்து வாழ்ந்ததில் அவர்களுக்கு 1986 ல் கானர் என்ற  ஆண் குழந்தை பிறந்தது.

மனம் வெறுத்த பின்னரே பேட்டி விவாகரத்து முடிவை எடுத்தார். லைலா ஆல்பத்தில் எவருக்காக எரிக் தீப்பற்றி எரிவதுபோல தன் தாபத்தையும் சமர்ப்பணத்தையும் வெளிப்படுத்தினாரோ அந்தப்பெண். அவருடைய லைலா. எது எரிக்கை அலைக்கழித்தது? வெறும் காமவெறியா? அடிப்படை இச்சைகள் மட்டும்தானா?  

கானர் க்ளாப்டன், எரிக் க்ளாப்டன்

1991ல் அமெரிக்க பயணம் ஒன்றில் நியூ யார்க் மன்ஹாட்டனின் அப்பார்ட்மெண்ட்டின் 53 வது மாடி ஜன்னலில் இருந்து எரிக்கின் ஐந்து வயது ஒரே ஆண் குழந்தை கானர் தவறி விழுந்து இறந்தான். அது எரிக்கை மிகக் கடுமையாக பாதித்தது. ஒருவருடம் இசைநிகழ்ச்சி எதுவுமே செய்யாமல் இருந்தார். பிறகு 1992 ல் அவர் மகன் நினைவாக அவர் எழுதிய பாடல் ’டியர்ஸ் இன் ஹெவன்’ [Tears in Heaven] மிகப் பெரும் புகழை அடைந்தது.

நிவர்த்தியேயில்லாமல் விதியின் கரங்களில் தலை வைத்து மன்றாடும், வேறு உலகத்தில் மகனை பார்க்க விழையும் ஒரு தந்தையின் வலி அப்பாடல் முழுவதும் தெரியும்.

நான் உன்ன சொர்க்கத்துல

பார்த்தா

என் பேரு உனக்கு

தெரிஞ்சிருக்குமா?

நான் உன்ன சொர்க்கத்துல

பார்த்தா

முன்ன போல இருக்குமா?

நான் திடமா இருக்கணும்.

உடையக் கூடாது

ஏன்னா எனக்குத் தெரியும்

எனக்கு சொர்க்கத்துல இடம்

இல்லன்னு. 

நான் உன்ன சொர்க்கத்துல

பார்த்தா

என் கைய பிடிச்சுக்குவியா?

நான் உன்ன சொர்க்கத்துல

பார்த்தா

எனக்கு எழுந்து நிக்க உதவி

பண்ணுவியா?

பகலோ, இரவோ

என் வழிய நான்

கண்டுபிடிச்சுகுறேன்.

ஏன்னா இங்க சொர்க்கத்துல

என்னால இருக்கமுடியாதுன்னு தெரியும்.

காலம் நம்மள வீழ்த்தும்.

காலம் நம்மள மண்டியிடச் செய்யும்.

காலம் இதயத்த நொறுக்கும்.

ப்ளீஸ்! ப்ளீஸ்! ன்னு கதற வைக்கும்.

கதவுக்கு அந்தப்பக்கம்

கண்டிப்பா சாந்தி இருக்கு.

எனக்குத் தெரியும்.

நான் உன்ன சொர்க்கத்துல

பார்த்தா

என் பேரு உனக்கு

தெரிஞ்சிருக்குமா?

நான் திடமா இருக்கணும்.

உடையக் கூடாது.

ஏன்னா எனக்குத் தெரியும்

எனக்கு சொர்க்கத்துல இடம்

இல்லன்னு.

எரிக் அலைந்துகொண்டே இருந்தார். அவருடைய ஐம்பத்தி மூன்றாவது வயதில் 22 வயது பெண்ணை மணந்தார். மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. மிக வசதியாகத் தான் வாழ்கிறார். இங்கிலாந்தில் இத்தாலிய முறையில் கட்டப் பட்ட பல மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள வில்லாவில் வாழ்கிறார். அவர் ஒரு கார் பிரியர். விலை உயர்ந்த ஃபெராரி கார்களே அவர் விருப்பம்.

வீழ்வதென்றால் கலைஞன் எந்த ஆழத்திலும் சென்றமைய முடியும். எரிக் லாப்டனின் அரசியல் கருத்துக்கள் 1976 ல் இங்கிலாந்தில் சர்ச்சையை கிளப்பின. அவர் ஒரு தீவிர வலதுசாரி. இனவெறிக் கொள்கை உள்ளவர். கறுப்பர்களையும் பிற இன மக்களையும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பவேண்டும் என்று குறிப்பிடுபவர். Keep Britain white என்று வெளிப்படையாக தெரிவிப்பவர்.

எரிக் ஒரு ஹாலில் இசை நிகழ்ச்சி நடத்தும்போது “இங்கு யாரெல்லாம் வெள்ளையர் அல்லாதோர் இருக்கிறீர்கள்? கையை உயர்த்துங்கள். நீங்கள் இங்கு வேண்டாம். ஹாலை விட்டு வெளியேறுங்கள். அப்படியே நாட்டை விட்டும் வெளியேறி விடுங்கள். நாம் நம்முடைய எனோச் பாவெல்லை ஆதரிப்போம். [எனோச் இனவெறி கொள்கை கொண்ட அப்போதைய வலதுசாரி அரசியல்வாதி]. அவர் சொல்வதுதான் சரி. எல்லா கறுப்பர்களையும் அனுப்பிவிட்டு நம் நாட்டை தூய வெள்ளையாக்குவோம். நம் நாடு கறுப்பர்களின் குடியேற்ற நாடாவதை தடுத்து நிறுத்த வேண்டும். நான் முன்பு போதையடிமையாக இருந்தேன். இப்போது இந்த இனவெறியென்னும் போதைக்குள் இருக்கிறேன். இது அதைவிட கடுமையானது. வீரியம் மிக்கது. நாம் இந்த கேடுகெட்ட ஜமாய்க்கர்களையும், அராபியர்களையும் , கறுப்பர்களையும் வெளியேற்றுவோம்’’ என்று வெளிப்படையாக அறிவித்தார்.

அக்கூற்று சர்ச்சையைக் கிளப்பி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார் எரிக். ’’எனக்கு அரசியல் அவ்வளவாகத் தெரியாது. அந்த இரவில் நான் உளறியதாகவே அதை நீங்கள் கணக்கில் கொள்ளவேண்டும்’’ என்றார். தனிப்பட்ட முறையில் பி.பி.கிங் போன்ற ஆப்பிரிக்க- அமெரிக்க பாடகர் மேலும், அந்த இசைக்கலைஞர்கள் மேலும் மிகுந்த நட்பும் மரியாதையும் உள்ளவர்.  

எரிக் பல போதை மறுவாழ்வு நிலையங்களுக்கும், பல அமைப்புகளுக்கும் நிதியுதவி செய்திருக்கிறார். அவரது புகழ்பெற்ற ஆல்பங்கள் Sunshine of your love, While my guitar gently weep, Let it be, Can’t find my way home, Have you ever loved a woman?, Layla, Wonderful tonight, No reason to cry . சொல்லிக்கொண்டே போகலாம். அவர் அப்போதைய ரோலிங் ஸ்டோன் முதல் எல்லா பாண்ட்களின் புகழ்பெற்ற அனைத்து இசைக் கலைஞர்களுடனும் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். பாப் மார்லி, டுயூவன் ஆல்மன், ஜான் லெனான், பீ.பீ. கிங், பால் மெக்கார்தினி, பாப் டிலன் இன்னும் பலர். தற்போது இங்கிலாந்தில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்துவருகிறார்.

’’நான் என்  மனம் என்னைக் கைவிடும் தருணங்களில் தற்கொலையைப் பற்றி யோசித்திருக்கிறேன். நான் அதைச் செய்யாததற்கு ஒரே காரணம் நான் இறந்துவிட்டால் என்னால் குடிக்கமுடியாது என்பது மட்டும்தான். நான் வாழ்வதற்கு ஒரே தகுதியான காரணமும் அதுதான். என்னை மீட்பதற்கு மக்கள் முயற்சிப்பது எனக்கு மிக கொடுமையாக இருக்கிறது. நான் குடித்து, குடித்து, குடித்து இருக்கும் ஒரு கட்டத்தில் என்னை அப்பிடியே தூக்கிசெல்கிறார்கள் மருத்துவமனைக்கு’’. இவ்வாறு தன் சுயசரிதையில் எழுதுகிறார் எரிக்.

தனக்கென ஒரு இலக்கோ பாதையோ அற்ற எடையே இல்லாத சருகு லாப்டன். இருண்ட உலகின் எல்லா காற்றுகளும் அவரை சுழற்றி அடித்தன. அவ்வப்போது உன்னதங்களிலும் சென்று நின்றிருந்தார். எவ்வளவு மேலே சென்றாரோ அவ்வளவு கீழேயும் சென்றார். உடலோ அறிவோ இல்லாத வெறும் உள்ளம் அவர் என்று தோன்றுவதுண்டு.

***

பின் இணைப்பு:

எரிக் தன் எழுபதாவது வயதில் ராயல் அல்பர்ட் ஹாலில் நடத்திய இசை நிகழ்ச்சி

***

பின் குறிப்பு

நண்பர்களுக்கு,

இந்த வலைப் பக்கத்தை நான் தொடங்கி சரியாக ஓராண்டாகிறது. இன்று முதல் பதிவுகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வலையேற்றப்படும். மாத முதல் தேதியும், பதினைந்தாம் தேதியும். தொடர்ந்து வாசித்த, கருத்துக்கள் தெரிவித்த, கடிதங்கள் இட்ட அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் நன்றி.

***

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2022 11:31

March 24, 2022

நான்கு பூங்கொத்துகள்

ஸ்கார்பரோ சந்தைக்கு போகிறீர்களா?
பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள்.
அங்கே வசிக்கும் ஒருத்திக்கு என்னை ஞாபகப்படுத்துங்கள்.
என் உயிரினும் மேலான காதலியாக இருந்தவள்.

(வனத்தின் அடர்பச்சை நிறத்தில்)
மெருகுடைய ஒரு காம்பிரிக் சட்டையை
எனக்காக தைக்கச் சொல்லுங்கள்.
பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள்,
(பனி போர்த்திய நிலத்தில் சிட்டுக்குருவியின் தடங்களை)
மடிப்புகளும், தையல் வேலைப்பாடுகளும் இல்லாத ஓர் ஆடையை
(மலைக் குழந்தைக்கு இரவாடைகள்…)
பிறகு எனது உண்மைக் காதலியாக ஆவாள்.
(போருக்கான அழைப்புமணியை உணராமல் உறங்கிக் கொண்டிருக்க…)
எனக்காக ஒரு ஏக்கர் நிலத்தை கண்டு வைக்க அவளிடம் சொல்லுங்கள்.
(இலை உதிர்ந்து மூடிய….)
பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள் ,
(அந்த கல்லறையை கழுவும் வெள்ளிக் கண்ணீர் இழைகள்… )
உப்பு நீருக்கும் கடலால் சூழப்பட்ட நிலத்துக்கும் நடுவிலே

(துப்பாக்கியை பளபளப்பாக துடைக்கின்றன…)
பிறகு எனது உண்மைக் காதலியாக ஆவாள்.
தோல் அரிவாளால் அறுவடை செய்யச் சொல்லுங்கள்.
(பளீர் சிவப்பு ராணுவங்கள் ஒளிகொண்டு மின்ன…)
பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள் ,
(தலைவர்கள் சிப்பாய்களை கொலைபுரிய ஆணையிட…)
அதை காட்டுப்பூவின் நாணல்களால் கட்டிவரச் சொல்லுங்கள்.
(காரணமெல்லாம் எப்போதோ மறந்துபோய் விட்டது…)
பிறகு எனது உண்மைக்காதலியாக ஆவாள்.
ஸ்கார்பரோ சந்தைக்கு போகிறீர்களா?
பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள் ,
அங்கே வசிக்கும் ஒருத்திக்கு என்னை ஞாபகப்படுத்துங்கள்.
என் உயிரினும் மேலான காதலியாக இருந்தவள்.

ஐரோப்பிய மத்திய காலகட்டத்தில், ஸ்காட்லாந்த். அயர்லாந்த் பகுதிகளில் ஸ்கார்பரோ என்னும் கடலால் சூழப்பட்ட சிறு நகரத்தில் நடைபெறும் ஒரு புகழ்பெற்ற சந்தையை பின்புலமாகக் கொண்ட ஒரு நாடோடிப் பாடலின் சாயலைக் கொண்டது இந்தப் பாடல். தன் இழந்த காதலை அல்லது ஒருபோதும் அடைய இயலாத காதலை, அதன் இனிமையை ஒருவன் உயிர்ப்புடன் மீட்டிக் கொள்வதை பற்றியது.

இப்பாடல் உண்மையில் ஒரு நாடோடிப் பாடலின் வரிகளிலிருந்து பெறப்பட்டதாகவும், பதினாறாம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்களால் [bards] பாடப் பட்டதாகவும் அறியப்படுகிறது. அங்கு பயணம் சென்ற சைமன் , கார்ஃபென்கல் என்னும் இசை இரட்டையர்கள் அங்கிருந்த புகழ்பெற்ற நாடோடிப் பாடகரான மார்ட்டின் கார்தி என்பவரிடம் இப்பாடலை கேட்டு, கற்று வந்து மேலும் அதை செறிவாக்கி புகழ்பெற்ற ’ஸ்கார்பரோ ஃபேர்’ பாடலாக்கினார்கள் என்றும் கூறப்படுகிறது.

பிற்பாடு1968 ல் வெளியிடப்பட்ட இப்பாடலால் அவர்கள் ஈட்டிய புகழையும், செல்வத்தையும் கண்டு அவர்கள் மீது மார்ட்டின் வழக்கு தொடுத்ததாகவும் பின்னர் அதை பேச்சு வார்த்தை மூலம் அவர்கள் சமரசம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

நாடோடிப் பாடல் வடிவமாக அங்கு நிலவிய இப்பாடல் (ballad) ஸ்காட்டிஷ் நாடோடிக் கதையைத் தழுவி எழுதப்பட்டது. எல்ஃபின் நைட் எனும் அதிமானுட இயல்புகளை உடைய இளைஞன் ஓர் அழகிய பெண்ணை கவர்ந்து செல்லமுயல்கிறான். அதற்கு அவள் உடன்படவில்லை.அவள் சில பணிகளை செய்தால் அவளைக் கவர்ந்து செல்ல மாட்டேன் என்கிறான் எல்ஃபின் நைட். பின்னவே முடியாத மெல்லிய இழைகளால் ஒரு சட்டை தைக்குமாறும், நடுக்கடலில் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு, அதை தோலால் செய்யப்பட்ட அரிவாளை வைத்து அறுவடை செய்து, நாணல் போன்ற இழைகளால் கட்டி எடுத்துவருமாறும் பணிக்கிறான்.அதற்கு பதிலாக அவள் அவனிடம் சில செய்யவே முடியாத வேலைகளைச் செய்யுமாறு சொல்கிறாள்.

இது நம் ஊரின் தெம்மாங்கு அல்லது கண்ணி என்று சொல்லப்படும் வடிவத்தை ஒத்தது. கேள்வியாகவும் பதிலாகவும் மாறி மாறி பாடப்படுவது. நாமும் இது போல இளவரசியைக் கவர வரும் மந்திரவாதிக்கு அவன் ஒருபோதும் செய்யவே முடியாத சவால்களை அவள் அளிப்பது போன்ற கதைகளை நம் பாட்டிகளிடமிருந்து கேட்டிருப்போம்.

ஆனால் ’ஸ்கார்பரோ ஃபேரில்’ சைமன் அப்பாடலை மேலும் சிக்கலானதாக, நவீன மனம் கொள்ளும் சலனங்களை, அலைக்கழிப்புகளை வெளிக்காட்ட பயன்படுத்திக் கொள்வதே என்னை மிகவும் ஈர்க்கிறது. குறிப்பாக இதில் ஊடாடும் இரு இழைகள். ஒரு இழை கனவு, மற்றது நிஜம். போர் நிஜம், காதல் கைகூடாத கனவு. ஆனால் போருக்கு செல்லும் முன் உறக்கத்தில் இருக்கிறான் அவ்வீரன். இன்னும் போருக்கான அழைப்பு மணி ஒலிக்கவில்லை. அதற்குமுன் அவனுடைய உறக்கமும் விழிப்புமற்ற மயங்கிய சில கணங்களின் காட்சித் துணுக்குகள், நினைவுகள் என நான் விரித்துக் கொண்டேன்.

அவன் தன் உயிரினும் மேலான காதலியை நினைக்கும்போதே எப்போதோ அவன் கேட்டு தன்னுடைய நனவிலியில் பதிவான அந்த நாட்டுப் புறப் பாடலின் சாயலில் தன் உணர்வுகளைச் சொல்கிறான்.

ஒரு கணத்தில் அக்கால விழுமியமென அவர்கள் சொல்லும் போர், வீரம், வெற்றி எல்லாமே அபத்தக் கனவாக அவனுக்குத் தெரிகிறது. எப்படியோ தன் மரணத்தை அவன் முன்னுணர்கிறான். போர், மரணம் எனும் வெளிறிய நிஜத்தில் காதல் என்ற அடர்பச்சைக் கனவு மேலும் துலக்கமாகிறது அவனுக்கு.

அக்காதல் உணர்வாலேயே அவன் அத்தனை மென்மையான இழையில் அடர் வண்ணப் பச்சையில் சட்டை தைத்து தன் கல்லறையில் போர்த்த சொல்கிறான். காட்டின் பசுமையில் மூழ்கி இறக்கும் ஒரு ஆன்மாவின் கடைசிவிருப்பம் அதுவாகவே இருக்கும். இலைகள் உதிர்ந்து மட்கும் ஒரு கல்லறை. பனியின் வெண்பரப்பில் ஒரு சிட்டுக்குருவியின் காலடித்தடம் போன்ற காதலியின் நினைவு. மரணத்தின் அருகாமையில் அருமணியென ஒளிரும் காதல்.

ஒரு மென் திரையை விலக்கி ஊடுருவுவது போல ஒற்றை கிடாரின் வருடும் இசை முதலில் ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து சைமன்-கார்ஃபன்கல் இரட்டையர்களின் தணிந்த அழகிய குரல்கள் மிக அழகிய மெட்டில், பாவ வெளிப்பாட்டுடன் ஒலிக்கிறது. போதமனமும், அபோத மனமும் மயங்கும் வரிகளும், அதற்கு பின்னணியாக ஒலிக்கும் கனவுத் தன்மை வாய்ந்த, நம்மோடு அந்தரங்கமாக உரையாடும் மென்மையான கிடார் இசையும் ஒத்திசைவோடு இயைகின்றன. நம்மால் சரியாக பற்ற முடியாத ஒரு உணர்வை அது இசை வழியே கடத்தி விடுகிறது.

பதினாறாம் நூற்றாண்டிலிருந்து மாறி, மாறி பல வடிவங்களில் இந்தப்பாடல் கைமாறி வந்தபோதும் இப்போதும் கொண்டுள்ள அந்த காதலுணர்வின் எளிமை, தூய்மை, சமர்ப்பணத்தன்மை ஆகியவை ஒரு துடிக்கும் இதயத்தின் ஒருபக்க காதலின் வெளிப்பாடாக உள்ளன.

போரும், காதலும். இவை இரண்டும் அக்கால சமூகத்தின் இன்றியமையாத நிகழ்வுகள். இதிலுள்ள கதைத்தன்மையும் ,ஒருவகை உரையாடல்தன்மையும் இப்பாடல் அதன் ஆதிரூபமான நாடோடிப் பாடலின் ஆன்மாவைக் கொண்டிருப்பதற்கான சான்றுகள். உரத்த இசைக்கோவைகள் அதிகமாக வந்து கொண்டிருந்த அக்காலகட்டத்தில் இப்பாடல் ஒரு புதுமையான மாற்று. இவ்வகைமைக்கும் அங்கு முன்னோடிகள் இருக்கலாம்.

ஐரோப்பிய மரபில் ஒவ்வொரு பூவுக்கும் ஒரு உணர்வை ஏற்றும் சொல்முறை உண்டு. ஒரு உணர்வின் குறியீடாக ஒரு பூ. நம் மரபில் ஒவ்வொரு திணைக்கும் ஒரு பூவினை குறிப்பது போல. இதில் வரும் நான்கு பூக்களுக்குமே அவ்வாறான உணர்வுத் தொடர்பு உள்ளது. ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டில் வரும் ஒஃபீலியா ஒரு கள்ளமற்ற பெண்.  அவள் தந்தையை ஹாம்லெட் கொன்றுவிடுவான். அப்போது  மனப் பிறழ்வு அடைந்த நிலையில் அவள் ஒரு மன்றத்தின் முன் வந்து  சொல்லும் வரிகளில் பல பூக்கள் இடம்பெறும். புலம்பலாக வரும் ஓலம் அது. ஏன் அதைச் சொல்கிறாள் என்று படிப்பவர்கள் பலரும் வியக்கும் ஒரு இடம். ஆனால் அவர்கள் நனவிலியில் அது அப்படி பதிவாகியிருக்கிறது. இது நான் கேட்ட ஒரு தகவல் தான். 

பார்ஸ்லி சுகத்தையும், சேஜ் வலிமையையும், ரோஸ்மேரி காதலையும், தைம் தைரியத்தையும் குறிப்பதற்கான பூங்கொத்துகள். இந்நான்குமே கல்லறையில் வைப்பதற்கான பூக்கள் எனும்போது இவ்வரிகள் துணுக்குறச் செய்கின்றன. மானுடனின் எக்காலத்திற்குமான காதலெனும் விழைவும், போரின் அபத்தமும் மரணமும் அருகருகே வைக்கப்பட்ட இப்பாடல் என்றும் என் மனதிற்கினியது. காட்டின் ஆன்மாவிலிருந்து வந்த ஒரு மெல்லிய முணுமுணுப்பு இது.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2022 11:31

March 17, 2022

நெடுஞ்சாலையில் ஓர் இடம்

மார்ச் 21, 1977, காப்பிடல் செண்டர், லார்கோ, மேரி லாண்ட் , அமெரிக்கா. பித்துநிலையில் இருக்கும் இசைரசிகர்கள் முன்னிலையில்  ’ஈகிள்ஸ்’ பாண்ட் முதல் ஆல்பத்தின் ’ஹோட்டல் காலிஃபோர்னியா’ இசைக்கப் பட்டது. அக்காற்றில் இசையின் அதிர்வுகள், கிடாரின் மீட்டல்கள், பித்தாக்கும் ட்ரம்ஸ் இசையுடன் குரல் ஒலிக்க மக்கள் திரள் கட்டுண்டு வயப் பட்டது. ஃபெப்ரவரி, 1977 ல் வெளியிடப்பட்ட அந்த ஆல்பம் அந்த வருடத்திற்குள் ஒரு மில்லியன் கிராமஃபோன் ரெக்கார்டுகள் விற்கப்பட்டு  அதுவரையிலான இசை வரலாற்றில் சாதனை படைத்தது. கப்பல்களில் அவை ஏற்றப்பட்டு இதர நாடுகளுக்கும் சென்ற சாதனை வரலாற்றை பலர் அறிந்திருக்கலாம். அவர்களுக்கு இணையான புகழுடன் ’பீட்டில்ஸ்’ இசைக் குழுவினரும் அறியப்பட்டனர்.

இன்று ’ஹோட்டல் காலிஃபோர்னியா’ ஒரு துணைவரலாறு. பலர் அதை நிறைய தடவை கேட்டிருக்கலாம். நான் அப்பாடலை முதன்முதலில் கேட்டது 2009 ல். ஜெயனுக்கு ஒரு ஐபாட்[I pod] அமெரிக்காவிலிருந்து பரிசாகக் கிடைத்தது. அதில் அதிகமும் சினிமா பாடல்கள், ஒன்றிரண்டு ஆங்கில ஆல்பம் பாடல்களும் இருந்தன. அதில் ஓரிரவில் இப்பாடலை நான், அஜி, சைதன்யா மூவரும் கேட்டோம். முதலில் பாடலின் துடியான தாளமும், கிடாரின் இன்னிசையும் ,பாடலின் டுயூனும், பாடுபவரின் குரலும் மிகவும் ஈர்த்தன.

இதில் மிகவும் விரும்பப்பட்டு அத்தனை ஜனத்திரளையும் பித்தாக்கியது  பாடல் முழுவதும் இழையோடும் கிடார் இசையும் அதன் துடிப்பான தாளமும். கடைசி மூன்று நிமிடங்கள் ஜோ வால்ஷின் டபுள் ஸ்ட்ரிங் கிடாரும், டான் ஃபெல்டர், க்ளென் ஃப்ரே, ஆகியோரின் கிடாரும் இணைந்து செய்யும் மாயம் ஒரு துர்க்கனவின் சுழல்தன்மையை நமக்கு நினைவுறுத்தியபடி இருப்பதுதான். அந்த நேரடி இசை நிகழ்ச்சியில் அவர்கள் வாசிப்பது எலெக்ட்ரிக் கிடார் தான். பிற்பாடு அக்கொஸ்டிக் கிடார் இசையுடன்  அது மீண்டும் வெளியிடப்பட்டது.  ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டே டான் ஹென்லே பாடுகிறார். அது அசாத்திய முயற்சி என எனக்குப் பட்டது.

திரும்பத் திரும்ப கேட்கையில் பாடலின் வரிகள் மேல் என் கவனம் சென்றது. அதை உன்னிப்பாக கேட்கத் தொடங்கியதும் அதன் அர்த்தம் என்னை ஈர்த்தது. அவை மிகுந்த உருவகத்தன்மையுடன் கூடிய வரிகள். பெரிய கவித்துவம் இல்லையெனினும்  துர்க்கனவொன்றின் காட்சி சித்தரிப்பின் மொழி அதிலுள்ளது . அதன் புதிர்த்தன்மையே என்னை சுழற்றியடிக்கும் ஒரு மாயத்தைக் கொண்டுள்ளது என அறிந்தேன்.

இருட்டான பாலைவனச் சாலை. 

குளிர்ந்த காற்று என் தலைமயிரைக் கோதியது.

கோலீட்டாஸ்* அரும்புகளின் வெப்பமான மணம் 

காற்றில் எழுந்து படர்ந்தது.

அங்கே, தூரத்தில், மினுமினுக்கும் ஒரு வெளிச்சம்.

என் தலை கனத்தது, கண் மங்கியது

இரவுக்கு நிற்க வேண்டி வந்தது.

அங்கே அவள் நின்றாள், கதவருகே.

மிஷன் சர்ச்சின் மணி ஒலித்தது.

“இது சொர்க்கமாகவும் இருக்கலாம், நரகமாகவும் இருக்கலாம்”

என்று நான் நினைத்தேன்.

அவள் மெழுகுவர்த்தி ஏற்றி, உள்ளே வழி காட்டினாள்.

பாதை நெடுகக் குரல்கள் அழைப்பதுபோல் ஒலித்தன…

“ஹோட்டல் காலிஃபோர்னியாவுக்கு வருக!

அருமையான இடம் இது (அருமையான இடம்!)

அருமையான முகம்!

இங்கே எப்போதும் இடமிருக்கும்

எந்த பருவத்திலும் (எந்த பருவத்திலும்!)

அறைகள் திறந்தே இருக்கும்”

செல்வச் செழிப்பின் அத்தனை கோணல்களையும்

கொண்ட மனம் அவளுக்கு, 

மெர்சிடீஸ் பென்ஸ் வைத்திருக்கிறாள்.

அவள் பின்னால் அழகழகான பையன்கள், 

அவர்களை ‘நண்பர்கள்’ என்று அழைக்கிறாள்.

எல்லோரும் முற்றத்தில் கூடி ஆடுகிறார்கள்

இனிய வேனில் வேர்வை நனைக்க – 

சிலர் எதையோ நினைவுகூர ஆடுகிறார்கள், 

சிலர் மறக்க.

நான் காப்டனை அழைத்தேன்.

“என் ஒயினை கொண்டுவாருங்கள்” என்றேன்.

“1969 முதல் அந்த ஸ்பிரிட்** இங்கே இல்லை,” 

என்று அவர் சொன்னார்.

இப்போதும் அந்தக்குரல்கள் தூரத்திலிருந்து அழைக்கின்றன.

நடு இரவிலும் நம்மை  எழுப்புகின்றன…

“ஹோட்டல் காலிஃபோர்னியாவுக்கு வருக

அருமையான இடம்! (அருமையான இடம்!)

அருமையான முகம்!

ஹோட்டல் காலிஃபோர்னியாவில் 

கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

என்ன ஆச்சரியம்! (என்ன ஆச்சரியம்)

இங்கே நீங்கள் இல்லை என்பதற்கான 

சான்றுடன் வரவும்…”

கூரையில் பதிக்கப்பட்ட கண்ணாடிகள்

ஐசில் வைக்கப்பட்ட பிங்க் நிற ஷாம்பேன் புட்டிகள்

“இங்கே நாம் எல்லாரும் கைதிகள், நம் சந்தர்ப்பங்களின் கைதிகள்,” 

என்று அவள் சொன்னாள்.

தலைவரின் தனியறையில்

அவர்கள் விருந்துக்காக கூடினார்கள். ஆனால்,

கூர்கத்திகள் மின்ன எவ்வளவுதான் குத்தினாலும்

அந்த வன்மிருகத்தை அவர்களால் கொல்லவே முடியவில்லை.

என் கடைசி நினைவு. நான்

கதவை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன்

தொடங்கிய இடத்துக்கே.

திரும்பும் பாதையை கண்டு பிடிக்கவேண்டும்.

“ரிலாக்ஸ்” என்றான் இரவு கண்காணிப்பாளன்.

“நாங்கள் வரவேற்க மட்டுமே பணிக்கப்பட்டவர்கள்.

எப்போது வேண்டுமென்றாலும் நீ வெளியேற முடிவெடுக்கலாம்.

ஆனால் ஒருபோதும் உன்னால் வெளியேபோக மட்டும் முடியாது” என்றான்.  

* கோலீட்டாஸ் – கஞ்சா செடியின் அரும்புகளை குறிக்கும் ஸ்பானிஷ் மொழிச்சொல். ‘குட்டி வால்’ என்பது நேரடியான அர்த்தம். பாலியல் சார்ந்த கொச்சை வார்த்தையாகவும் பயன்படுத்தப்படுகிறது.  

** 1969-ன் வியட்நாம் போர் எதிர்ப்பு சார்ந்த ஹிப்பி கலாச்சாரத்தின் ‘ஸ்பிரிட்’ (உணர்வு) இங்கே சிலேடையாக குறிப்பிடப் படுகிறது.

இப்பாடலில் ஒரு உருவகமோ அல்லது ஒரு படிமமோ அதன்மேல் ஏற்றப்படும் அனைத்து அர்த்தங்களையும் மீறி நின்று கொண்டு நம்மை சவாலுக்கு அழைக்கிறது. சீண்டுகிறது. என்னை முடிந்தால் புரிந்துகொள் என்கிறது. எனக்கு மிகப் பிடித்தமான விளையாட்டு இது. நான் எனக்கு தெரிந்தவற்றை வைத்து அதை உணர முயன்று ஆடை அணிவித்து அழகுபார்க்கிறேன்.

அது அமெரிக்காவில் ஹிப்பி கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருந்த காலகட்டம். மாபெரும் நுகர்வு கலாச்சாரத்தில் அமெரிக்கா அடியெடுத்து வைத்ததும் அப்போதுதான். ஹெடோனிசம் ஹிப்பிகளின் தாரக மந்திரம். எல்.எஸ்.டி , கோகெய்ன் போன்ற போதை வஸ்துக்களின் பெருக்கம், ராக் இசை போன்ற பல்வேறு இசைக்குழுக்களின் பிடியில் அமெரிக்க மக்கள் இருந்த காலம். கூடவே அப்போது முளைவிட்ட தனிமனித சுதந்திரம், இருத்தல் பற்றிய கேள்விகள் எல்லாமாக சேர்ந்து அமெரிக்காவை ஆட்டிப் படைத்தன. வியட்நாம் போரை ஒட்டிய மக்களின் மனநிலையையும் இது பிரதிபலிக்கிறது. பல வருடங்கள் நீண்ட அப்போரில் 1969 ல் முழுமூச்சாக ஐந்து லட்சம் வீரர்களை அமெரிக்கா களமிறக்கியது. அந்த வருடம் இப்பாடலில் ஒரு குறிப்பாக இடம்பெறுகிறது.

இசைக்குழுவின்  டான் ஹென்லேயும், க்ளென் ஃப்ரேயும் சேர்ந்து எழுதிய பாடல். வெளிவந்தவுடன்  ஹோட்டல் காலிஃபோர்னியா என்ற உருவகம்[ metaphor ] அப்போதைய  சாத்தான் வழிபாடு நடந்ததாகக் கூறப்படும் ஒரு தேவாலயத்தை குறிப்பிடுகிறது என்றும், மனநல விடுதி ஒன்றைக் குறிப்பதாகவும், போதையின் பிடிக்குள் செல்பர்களை சுட்டுகிறது என்றும் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் இதை எழுதியவர்களில் ஒருவரான டான் ஹென்லே ’’நாங்கள் அமெரிக்காவின் மிட் வெஸ்ட் பகுதியின் சிறு நகரத்திலிருந்து வந்தவர்கள். எங்கள் பார்வையில் லாஸ் ஏஞ்சல்ஸின் பகட்டும், மின்னும் ஒளிவெள்ளத்தில் அதன் அழகும், மேல்தட்டு நாகரிகத்தின் வசீகரமும் எங்களை ஈர்த்தன. அது ஒரு அழகிய வசீகரப் பொறி. இப்பாடல் ஒன்றுமறியா கபடமின்மையை எப்போதைக்குமாக இழப்பதை சுட்டுகிறது.  அமெரிக்கா என்ற கனவிற்கும் அமெரிக்கா என்ற துர்க்கனவிற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை உணர்த்துகிறது.  மரபார்ந்து சொல்லப்பட்டுவரும் முரணைக் குறிக்கிறது… நன்மை, தீமை, ஒளி, இருள், இளமை, வயதடைதல், ஆன்மீகம், மதங்களைக் கடத்தல்  இன்னபிற.

ஆனால் உள்ளே புக மட்டுமே முடியும். ஒருபோதும் வெளியேற முடியா ஒரு இடம் என்பது நாம் அனைவருமே அறிந்தது. நம் கனவுகளில் மீண்டும் மீண்டும் வருவது.

சில பாடல்களை நினைக்க விரும்புவோம், இதை மறக்க விரும்புகிறேன். ஆனாலும் இது நினைவில் நீடிக்கிறது. உடைந்த துண்டுகளாக. துண்டுகள் ஒவ்வொன்றும் முளைப்பதாக.

ஆடுகிறார்கள் சிலர் நினைவுகூர, சிலர் மறக்க,

”1969 முதல் அந்த ஸ்பிரிட் இங்கே இல்லை”.

”எத்தனை கூர் கொண்ட கத்தியால் குத்தினாலும் நமக்குள் இருக்கும் மிருகத்தை நம்மால் கொல்லமுடிவதில்லை”

எத்தனை வீசியெறிந்தாலும் திரும்ப வரும் வரி

எப்போது வேண்டுமானாலும் நீ வெளியேற முடிவெடுக்கலாம்

ஆனால்  ஒருபோதும் போக மட்டும் முடியாது.

***

பின் இணைப்பு:

ஆங்கில வரிகளில் பார்க்க:

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2022 11:30

March 13, 2022

கண் மலர்தல் – கடிதங்கள்

பலதடவை கேட்டேன்.
கண்மலர்தல் அருமையான தலைப்பு.
கேரள இளைஞர் பச்சை மாமலை பாடுவதும். மலர்களே பாடுவதும் ஆச்சரியமாக இருக்கிறதே. ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் கேள்விப்பட்டதே இல்லை. இனிய காலையாக்கிவிட்டீர்கள்.
அன்புடன்,

எழுத்தாளர் ஆ.முத்துலிங்கம்.

***

மேடம்,

சாதாரணமாக எழும் அந்த நாள் துலங்கத் துலங்க பொன்னாக ஒளிர்கிறது. ஒரு நாள் மலர்தல் என்பது நம் அகம் துலங்குதல் தான். இருள் நீங்கி கோயில் கோபுரங்கள் தரிசனம் ஆகி உள்செல்லும் காட்சியும் அருகே காவிரியின் அந்த தண்மையும் விழித்து எழுந்தவுடன் மீண்டும் கனவுக்குள் செல்வது போல இருந்தது. குதிரை யானை பசு முக்குணத்தையும் குறிப்பது போல இருந்தது, விடியும் போது நம்முள் முக்குணமும் எழுகிறது. இதுவே ஒரு அற்புத தரிசனம், பின்னர் கரிய தெய்வத்தைப் பார்ப்பது ஒரு இரட்டை தரிசனம். பின்னர் கோயில் வீதியில் காப்பிக் கடையும், வயல் வெளியிலும் அத் தரிசனம் நீடித்து நிற்கிறது. உங்கள் தந்தை நாதிகர், இப்படி ஒரு காலையை அருளி அவரையும் தெய்வம் ஆசீர்வதித்து விட்டது. தெய்வம் தன்னை மறுப்போருக்கும் தரிசனம் வழங்கும்.

விஷ்ணுபுரம் படித்த யாருக்கும் இந்த தரிசனம் முக்கியமானது. நான் உண்டவள்ளியில் கண்ட ராணி கி வாவில் கண்ட காளிச்சரன் கட்டுரையில் கண்ட அதே பெருமாள் கண்மலர்தலில்.

ஊர் நீங்கும் இறுதி நாளில் அம் மண்ணை ஆளும் தெய்வத்தை முதன்முறை தரிசித்தல் என்கிற வடிவம் துலங்கியவுடன் தோன்றியது இது ஒரு கலையமைதி பெற்ற படைப்பு, அனந்த சயனர் போலவே. கட்டுரை வளர்ந்து சென்று பாடலில் முடிவது ஒரு ஓவியக் காட்சிக் கூடத்தில் செல்லும் போது எதிர்பாராமல் ஒரு இசைக் கச்சேரி நிகழ்வது போல. பச்சைமாமலை ஒரு காட்சி வடிவம், கூடவே அது ஒரு இசை வடிவம்.

மெல்ல மெல்ல ஒரு கம்பத்தில் கொடியேறி உச்சியில் விரிந்து பட படத்து பறக்கும் அனுபவம் இக் கட்டுரை.

கிருஷ்ணன்,
ஈரோடு.

***

வழக்கம் போல் அபாரமான கட்டுரை.

நீங்கள் ஆரம்பிக்கும் போது எந்த இடத்தில் பாடல்களைக் கொண்டுவ்ரப் போகிறீர்கள் என்பதை உய்த்துணரவே முடிவதில்லை.

கட்டுரையை திறந்ததுமே என்ன பாடல்கள் இணைத்திருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டாலும் கூட அதை நீங்கள் அனுபவத்தோடு இணைக்குமிடம் அருமை
பூரண கொழுக்கட்டைக்கு மேல் மாவு போல அழகிய இணைவு
அளவான உப்பிட்டு, பதமாய் கிளறிய மாவுதான் அழகாய் பூரணத்தை அடக்கிக் கொள்ள முடியும். பதம் உணர்ந்த கரங்கள் உங்களுடையது🌺🌺🌺

எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன்,

சென்னை.

***

பிரமாதம் அக்கா.

நானும் அஜிதனும் இப்படிப்பட்ட பயணம் ஒன்று செய்து அரங்கனை பார்த்தோம்.

எழுதி பார்த்து சரியாக வராமல் நான் தூக்கி போட்ட பல பதிவுகளில் அதுவும் ஒன்று.

ஆகவே உங்களின் இந்த பதிவு பொறாமை கொள்ள வைக்கிறது.

பதிவுக்குள் வரும் பொழுது வர்ணனையும் (அதன் ஆர்க்) அரங்கனின் பள்ளி எழுச்சியும்
இசையும் பதிவின் தலைப்பும் இணைகயில் அது அடையும் கவித்துவ உச்சம் அலாதியானது.

Akka
Once again you have proved, that you are a complete writer.

கடலூர் சீனு

***

//இசைக்கு நம்மை காலப்பிரயாணத்தில் முன்னும் பின்னுமாக கொண்டுசெல்லும் ஒரு வல்லமை உண்டு. //

இதை நான் உணர்ந்ததுண்டும்மா… சில பாட்டு… சில வாசனை… ஒரு காலத்தை நமக்கு ஞாபகப் படுத்துகிறது… ஒட்டுமொத்த நினைவுகளையும் மீட்டிக்கொள்ள ஒரு பாட்டை காலமென்னும் பரிமாணத்திற்குள் பத்திரப்படுத்திய அருணாக்குட்டிக்கு அன்பு முத்தங்கள்❤

நீங்கள் கொடுத்த பாடல்களை இந்த நாள் முழுவதும் தவழவிட்டுக் கொண்டிருப்பேன்😍
உங்கள் இசைக் கட்டுரைகள் வழி… நல்ல இசையை தெரிந்து கொள்கிறேன்… அதோடு நீங்கள் கடத்தும் உணர்வு இன்னுமின்னும் அதை அணுக்கமாக்குகிறது

இரம்யா,

கழுகுமலை

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2022 23:37

அருண்மொழி நங்கை's Blog

அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அருண்மொழி நங்கை's blog with rss.