கமலதேவி's Blog
November 28, 2025
உடன்போக்கு சிறுகதையின் மொழியாக்கம்
என்னுடைய உடன்போக்கு என்ற சிறுகதை மொழிபெயர்ப்பாளர் சஹாவால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள முதல்கதை.
கதைக்கான சுட்டி
https://vishnupuramusa.org/2025/11/28/elopement/
November 26, 2025
மலர்வு
ஆறாம் வகுப்பு காலாண்டு விடுமுறையில் என்னுடைய அத்தை மகள் கமலவேணி எனக்கு முதன்முதலாக சைக்கிள் ஓட்டுவதற்கு பழக்கிக்கொடுத்தாள். நீச்சலும். நீச்சல் அடிக்க கடைசி வரை வரவே இல்லை. ஒரு முறை அவ்வா பிடித்து கிணற்றில் தள்ளிவிட்டும் முழுகிவிட்டேன். அத்தை சட்டென்று தூக்கிவிட்டார். அதற்கு பிறகு சுரை குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு ஜாலியாக கிணற்றில் மிதந்து கொண்டிருப்பேன். தம்பி தங்கை நீச்சல் பழகி என்னை கேலி செய்தாலும் கண்டு கொள்ளாமல் சுரைகுடுக்கையுடன் அந்த பெரிய கிணற்றுக்குள் மணிகணக்கில் சுற்றி வருவேன். சின்னய்யா என்னை முதுகில் அமர்த்திக் கொண்டு நீச்சல் அடிப்பார். 'இப்போ அப்படியே தண்ணிக்குள்ள தள்றேன் பாரு' என்றாலும் பயப்பட மாட்டேன். நான் விழக்கூடாது என்று அவர் அடிக்கடி ஒருகையால் முதுகில் அமர்ந்திருக்கும் என்னை சரியாக தள்ளி தள்ளி அமர வைப்பார்.
யாராலும் எனக்கு நீச்சல் கற்று தர முடியவில்லை. இறுதியாக அய்யா கழுத்து வரை தண்ணீர் நிற்கும் படியில் நின்று கொண்டு தண்ணீருக்குள் கைகளை நீட்டியிருப்பார். கைகளில் படுத்தபடி நீச்சல் பழக வேண்டும். கையை கொஞ்சம் மாற்றினாலும் சட்டென்று அய்யாவை பிடித்துக்கொள்ளவேன். சில நாட்கள் கழித்து அய்யா இதுக்கு நீச்சல் வராது என்று விட்டுவிட்டார்.
அதனால் எனக்கு சைக்கிள் பழக்குவதில் யாருக்கும் ஆர்வம் வரவில்லை. ஆனால் கமல்அக்கா கோபமாக சைக்கிள் பழகனும் என்று என்னை இழுத்துச் சென்றாள். அய்யாவின் சின்னய்யாவின் சைக்கிள்களில் எது வீட்டிலிருக்கிறதோ அதில் உள்ள முக்கோணத்தில் கால் விட்டு அடித்து ஏறி ஓட்ட வேண்டும். கால் எட்டாத பிள்ளைகள் அப்படி ஓட்டுவதை குரங்கு பெடல் [ Crank bedel] என்று சொல்வது.
வீட்டில் அனைவரும் கேலியும் கிண்டலும் செய்ததால் கமலக்காவிற்கு எனக்கு சைக்கிள் பழக்கித்தர வேண்டும் என்று பிடிவாதம்.
'பெரியகமல் சின்னகமலுக்கு சைக்கிள் பழக்குது' என்று வீட்டில் உள்ளவர்கள் கேலி செய்து கொண்டிருந்த மூன்றாவது நாள் நான் சைக்கிள் ஓட்ட பழகிவிட்டேன். இடுப்பை வளைத்தால் சைக்கிள் சரியாக ஓட்ட முடியாதில்லையா? அப்போது முதுகில் ஒரு அடி வைப்பாள். பிறகு முதுகைத் தொடும் போதே சரியாக நிமிர்ந்து ஓட்டினேன்.
கொஞ்சம் பலகீனமான ஆள் என்பதால் முதுகு கை கால் வலி இருந்தது. நாளாம் நாள் அத்தை மகன் எனக்கு சைக்கிள் பழக்கி தர வந்தது. பின்னால் கேரியரை மட்டும் பிடித்துக்கொண்டு 'ஓட்டு' என்றதும் சட்டென்று ஓட்டத்தொடங்கினேன். அந்த மூன்று நாளும் கனவில் கூட சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தேன்.
காய்கறி கடையை தாண்டும் போது கடைக்கார தாத்தா சிரித்தபடி 'பழகிடுச்சே' என்றார். பின்னால் தூரத்திலிருந்து மாமா 'ஆமா தாத்தா' என்று சொல்வது கேட்டது.
'மாம்ஸ்... மாம்ஸ்.. வந்து சைக்கிள பிடி...எங்க மாம்ஸ கூப்பிடுங்க' என்று தெருவே கத்திக்கொண்டு ஓட்டினேன்.
எல்லாரும் சிரித்தார்களே தவிர யாரும் கூப்பிடவில்லை. பள்ளியில் படிக்கும் கரிகாலன் அண்ணா மட்டும் 'அப்படியே மாதாகோயில் வழியா போய் உங்க வீட்டு சந்துல போ' என்றார். இறங்கத்தெரியாமல் அவர் சொன்ன வழியில் வீட்டிற்கு வந்தால் வாசலில் மாமா சிரித்துக்கொண்டு நின்றது. எனக்கு சரியான கோபம். மாமாவிற்கு பின்னால் மல்லிகை பந்தலின் கீழ் அய்யா சின்னய்யா அவ்வா இருந்தார்கள்.
"ஒம்பதாவது படிக்க கோட்டபாளையத்துக்கு லேடி பேர்டில் பறந்து போற...நான் வாங்கித்தரேன்," என்று சின்னய்யா சொன்னார்.
பின்பு எப்போது சைக்கிள்கள் வீட்டில் நின்றாலும் உடனே எடுத்து சுற்றத்தொடங்கினேன். ஆனால் டபுள்ஸ் அடிக்க கடைசி வரை வரவே இல்லை. தனியாக ஓட்டுவது மட்டும் தான். அப்போதெல்லாம் பிள்ளைகள் விதவிதமாக ஸ்டைலாக சைக்கிள் நிறுத்துவார்கள். வந்த வேகத்தில் ஒருகால் ஊன்றி நிறுத்துவது. சைக்கிளில் அமர்ந்து ஒரு மிதியில் சைக்கிளை ஓட்டுவது என்று பலமாதிரி செய்வார்கள்.
நான் கடைசி வரை பெடல் அடித்து ஏறுவது, ப்ரேக் பிடித்து மெதுவாக இறங்குவது தான். நிதானமாக ஓட்டுவது வழக்கம். நான் செய்த ஓரே சகாசம் என்பது...மழை நாட்களில் கண்கண்ணாடியை மழைநீர் மறைக்கும் என்பதால் கண்ணாடியை இடதுகையில் பிடித்தபடி வலது கையால் ஓட்டுவது மட்டுமே. அதுவும் மழை பெய்தால் மட்டும்.
இந்த சைக்கிள் எனக்கு காட்டிய உலகம் இன்று வரை அழகானது. பள்ளிக்கு செல்லும் வழி நெடுக நெல்வயல்கள்..தென்னை வாழை மரங்கள். பாசன ஓடைகள். இரண்டு இடங்களில் ஆற்று பாலங்கள். செடி கொடிகள். எங்கள் பள்ளியும் ஊருக்குள் இல்லை. வயல்காடுகளுக்குள் இருந்தது.
லேடி பேர்ட் கிடைக்கவில்லை. நான் கேட்ட மெரூன் ஹெர்குலஸ் அப்போது டிமேண்ட் அதிகம். கிடைக்கவில்லை. அய்யாவிற்கு பிடித்த ஊதா நிற அட்லஸ் தான் எனக்கான சைக்கிள். குட்டியான சீட்..பள்ளி சைக்கிள் ஸ்டேண்டில் மற்ற பிள்ளைகளில் சைக்கிளை விட என்னுடையது குட்டியாக தெரியும். ஆனால் எனக்கு வசதியான அளவிற்கு அய்யா பார்த்து வாங்கியிருந்தார் என்று இப்போது புரிகிறது. அப்போது அவரிடம் கோபித்துக்கொண்டேன். அதற்கும் எப்போதும் போல சிரித்தார்.
சைக்கிளில் தனியாக செல்வேன். எனக்கு நண்பர்கள் குழு இல்லை. முதல் ஒரு வாரம் அய்யா என் பின்னால் சைக்கிளில் வந்தார் என்று கல்லூரி படிக்கும்போது தான் சொன்னார். எங்கள் ஊர் வயல்வெளி,கள்ளுக்கடை முடக்கு,வயல்வெளி,ஐய்யாற்று பாலம், அக்ரஹாரம்,வயல்வெளி,வடக்கு விசுவை,வயல்வெளி, கோட்டப்பாளையம் கடந்து வயல் பாதையில் ஏறி லட்சுமி தியேட்டர் தாண்டி நெல்லங்காட்டு பாதையில் ஏறினால், வயல்களுக்கு நடுவில் பள்ளிக்கூடம்.
ஊர்களுக்குள் சைக்கிள் செல்லும் போதெல்லாம் பார்வை நேர் இடவலது மட்டும். வயல்பாதைகளில் மிக மெதுவாக வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்வேன்.
ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலபாடத்தில் பூ பற்றிய ஒரு கவிதை பாடமாக இருந்தது. ஒரு சிறிய பூ கிளைகளுக்குள் மறைவாக இருந்தது..யாரும் பார்க்கும் தொலைவில் இல்லை. பறிக்கும் இடத்தில் இல்லை. அது வேடிக்கை பார்த்தபடி இருந்தது. மற்ற பூக்களெல்லாம் பறிக்கப்பட்டு பூச்செண்டாகும் கர்வத்துடன் கூடைகளில் சென்று கொண்டிருந்தன. அந்த பூ வாடி இந்த செடியோடு உதிர்ந்து உரமாகி மீண்டும் பூக்கும். இந்த கவிதை நீண்ட கவிதை. இலைகளுக்குள் இயற்கை அந்த பூவை ஏன் ஔித்து வைக்க வேண்டும் என்று கவிதை முடிந்ததாக ஞாபகம். யார் எழுதியது என்று தெரியவில்லை.
அந்தக்கவிதை என்னை என்னவோ செய்தது. பதினான்கு வயதில் மனம் எதை உள்வாங்கியது என்று தெரியவில்லை. பள்ளி விட்டு வரும் வழி நெடுக பூச்செடிகளை பார்த்துக்கொண்டே வருவேன். பாதை ஓரத்தில் சின்னஞ்சிறு பூக்களை சைக்கிளை நிறுத்திவிட்டு பார்ப்பேன். நெல்லம் காடு பூப்பதை..தென்னம்பாளை பூப்பதை என்று எதையும் தவற விடாமல் பார்ப்பது வழக்கம்.
கோடை மழை பனி காலங்களில் மாறும் இயற்கை என்னையறியாமல் மனதில் பதிந்தது அந்த காலகட்டம் என்று தோன்றுகிறது. சாயுங்காலம் கொல்லி மலையை ,மறையும் சூரியனை, செவ்வானத்தை ,வயல்காடுகளை பார்த்தபடி மெதுவாக வீட்டிற்கு வருவேன். எப்போதாவது உப்பிலியபுரம் என்ற ஊரில் உள்ள AEO அலுவலகத்திற்கு சென்று திரும்பும் அய்யா என்னை பார்ப்பார். அப்போது சைக்கிளை நிறுத்திவிட்டு எதாவது பார்த்துக்கொண்டிருப்பேன். அய்யா 'என்னப்பா இங்க நிக்கற..பிள்ளைகளெல்லாம் எப்பவோ போயிடுச்சே' என்பார். அவருக்கு நான் இருட்டுவதற்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அம்மா தான் பதறிக்கொண்டே இருப்பார். சின்னய்யாவிற்கு எப்போதும் கேலி.
'இன்னிக்கு வரும் போது ரோட்டுல சைக்கிள் மட்டும் நிக்குது..ஆளக்காணுன்னு பாத்தா பாலத்துலே நின்னு தண்ணி பாக்குது..' என்று எதாவது சொல்வார். இருவரில் யார் என்னை வழியில் பார்த்தாலும் 'இருட்றதுக்குள்ள வரனும்' என்று தான் சொல்வார்கள். அப்போது இந்த ஊர்களில் எல்லாம் எந்த பயமும் இல்லை. பையன்கள் இல்லாமலும் இல்லை. என்னிடம் யாரும் பேசியதில்லை. [அது ஒரு புட்டிடா என்று நிச்சயம் கேலி செய்திருப்பார்கள். அப்போதெல்லாம் என் கண்ணாடியை கேலி செய்யாதவர்கள் அரிது] . அய்யா, சின்னய்யாவிடம் படித்தவர்களாக இருப்பார்கள். மேலும் நான் பசங்களை கண்டுகொண்டதில்லை. நமக்கு பூ இலை தழை ஆறு பார்க்கவே நேரம் போதாது..இதையும் சின்னய்யா கேலி செய்வார். 'ஊருக்குள்ள வந்தா குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி போகவேண்டியது. அந்தப்பக்கம் வயக்காடு வந்தா கடிவாளத்தை காத்துல விட்றது' என்பார்.
ஊர்க்காரர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள், பள்ளி ஆசிரியைகள் என்று பல பேர் அய்யாவிடம் நான் அங்கங்கே வேடிக்கை பார்ப்பதை ,தனியாக வருவதை சொல்லியிருக்கிறார்கள். அய்யா என்னிடம் 'சைக்கிள் ஓட்றப்ப கவனமா இருக்கனும்...பசங்க யாராவது வம்பு பேசினா எங்கிட்ட சொல்லனும்' என்று மட்டும் சொல்வார். ஆனால் நல்ல பயல்கள்..கேலி மட்டும் தான். கேலி பற்றி எனக்கு கவலையில்லை.
யாரும் என்னிடம் வம்பு பேசாததால் தான் நான் சுதந்திரமாக இருக்க முடிந்தது. அதற்காக இப்போதும் அவர்களை பற்றி பெருமிதமாக நினைக்கிறேன். அன்றும் பிள்ளைகளுக்குள் காதல் இருந்தது. வம்புகள் இருந்தன. ஆனால் தன் போக்கில் இருக்கிற பெண்ணை யாரும் தொல்லை செய்யவில்லை.
அப்போதுதான் நான் தலைக்கு பூவைத்து கொள்வதை நிறுத்தினேன். பூவை பறிப்பதில் எனக்கு விருப்பமில்லை. பதினான்கு வயதிலிருந்து இன்று வரை பூ பறிப்பதில்லை...தலையில் சூட்டுவதில்லை. விளக்க முடியாத ஒரு உணர்வு அது. ஆனால் நடைமுறையில் மத்தியதர குடும்பத்தில், கிராமத்தில் வசிக்கும் பெண் பூ வைக்காமல் இருப்பது அவ்வளவு எளிதானதில்லை. மென்மையாக மறுத்துக்கொண்டே இருக்கிறேன்.
இன்று காலையில் மாடியில் உள்ள முல்லை செடி தொடர்ந்த மழையால் செடி முழுக்க பூத்திருப்பதை கண்டதும் சட்டென்று கண்கள் கலங்கிவிட்டது.
ஏசியன் பெயிண்ட்வாளியில் நிரப்பப்பட்ட மண்ணில் இந்த செடி இருக்கிறது. சிறிய செடி. மற்ற செடிகளுக்குள்ள இடவசதி இதற்கில்லை. மண் குறைவு. ஆனாலும் ஒரு மழைக்கு இத்தனை மலர்வு.
சங்ககாலத்தில் கார்காலத்தில் மலரும் முல்லையை பற்றி கணிசமான பாடல்களில் உள்ளது. முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்ற கையறு நிலை பாடல்களில் இருந்து முல்லை எயிராக நகுமே தோழி என்று காதல் பாடல்கள் வரை.
முல்லை பூப்பது என்பது கார்காலத்தில் அத்தனை அழகான இயற்கை நிகழ்வு. அதன் பசுமையான கொடியும் இலைகளும் அத்தனை வெண்மையான மலர்களும் மனதை மலர்த்துகிறது. அதுவும் மலர்தல் என்பது ... வெண்இதழ்கள் அனைத்தையும் விரித்து வானத்தை நோக்கி மலர்ந்திருக்கும் முல்லை பூ ஒரு அப்பட்டமான சமர்ப்பண நிலை போல தோன்றுகிறது.
கொத்தாக மலர்ந்திருக்கும் முல்லை மலர்கள் படைப்பூக்க மனநிலையை தூண்டவல்லது. இது அழகா..Pleasure ஆ...இயல்பா என்றெல்லாம் பிரிக்கமுடியவில்லை. ஆனால் வெறும் மகரந்த சேர்க்கைகானவை மட்டுமல்ல மலர்கள். இயற்கை பூக்களில் சமன்பட்டு நிற்கிறது என்று தோன்றுகிறது. அந்த தன்மை தான் நம்மை ஈர்க்கிறது... நம்மையும் மலர்த்துகிறது.
November 24, 2025
அகத்தின் வெளிச்சம்
மூன்று நாட்களாக சூரியனே தென்படவில்லை. வெளிச்சம் மட்டும் மங்கலாக. எனக்கு அடைமழை மிகவும் பிடிக்கும். அம்மாவிற்கு பிடிக்காது. ஏனெனில் வீடு நசநச வென்று இருக்கிறது என்பார். வீட்டில் மேற்குபக்கம் மூக்கால் வாசி சுவர் இரும்பு கம்பிகளால் மூடப்பட்டது என்பதால் வரவேற்பறை மழையும் வெயிலும் வெளிச்சமும் பனியும் காற்றும் புழுதியுமாக காலநிலைக்கு ஏற்ப இருக்கும். தங்கை வரவேற்பறையும் வாசலும் ஒன்று தான் என்பாள்.
திரைசீலையை ஒதுக்கினால் மழை அழகாக தெரியும். கிட்டத்தட்ட நூறு வயதை நெருங்கும் அவ்வாவின் மிகப்பெரிய எதிரியே இந்த திரை சீலை தான். அதை நாங்கள் இழுத்துவிடுவதும், அதை அவர் மறுபடி விலக்கி விடுவதுதான் நாள் முழுவதும் வேலை. நாம் ஒரு வயதில் அசௌகரியமாக உணர்வதே இன்னொரு வயதில் சௌகரியமாகவும் இருக்கும் போல.
ஆனால் நான் வாசிக்கும் எழுதும் இடம் அகத்தளம் என்று சொல்லும் அளவுக்கு உள்ளடங்கியது. சமையல் அறைக்குள் சென்றால்.. அதற்கும் உள்ளே உள்ள மிக சிறிய அறை. வெளியே அப்படி ஒரு அறை இருப்பதே தெரியாது.
அண்மையில் ஒரு கட்டுரையில் பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்ட்டின் பற்றி வாசித்தேன். சமையலறைக்கு அருகில் அவருடைய எழுதும்மேஜை இருந்தது என்று அறிந்த போது வியப்பாக இருந்தது. ஆனால் என் சிறிய அறையை ,சிறிய அறை என்று உணரமுடியாதபடி செய்வது பெரிய ஜன்னல்.
நல்ல வெளிச்சமும் காற்றும் உள்ள வீடு. வீட்டின் வெளிச்சமிக்க அமைப்பு எனக்கு மிகவும் பிடித்தது. ஒவ்வொரு ஜன்னலிலும் உள்ள வெளிச்சமும் சின்னய்யா தந்தது என்று நினைத்துக்கொள்வேன். எழுதும் அறையில் ஜன்னலில் பாதியை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறேன். பின்பக்க சந்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகம். அப்படியிருந்தும் வெளிச்சம் குறையாத அகத்தளம் என்னுடைய வாசிப்பறை.
காலையில் வாசித்துக்கொண்டிருக்கும் போது சட்டென்று வெளிச்சம் புத்தகத்தின் மீது விழுந்தது. மூன்று நாட்களின் அடைமழை முடிந்த வெளிச்சம். உடனே மாடிக்கு சென்றேன். குளிர்காற்றில் சூரிய வெளிச்சத்தில் முல்லைச்செடி குதூகலமாக பூத்து அசைந்து கொண்டிருந்தது. நெல்லம் வயல்களில் தேங்கிய தண்ணீரை சூரிய வெளிச்சம் பெரிய தகடு போல காட்டியது. நெல்லம்பயிர்கள் வேர்பிடித்திருக்கக்கூடும்.தெருவில் உள்ள சிறு கோயிலில் இருந்து இசை கடிகாரத்தில் ஏழு மணிக்கான பாசுரம் ஒலிக்கத்தொடங்கியது. இன்று மூன்று ஊர்களுக்குப்பொதுவான எதுமலையானுக்கு பொங்கல் வழிபாடு. குதிரை ஏறிய மீசை வைத்த பெருமாள்.
எப்போதும் உள்ள கார்த்திகை மாத மனநிலையில் புதிதாக ஒரு கூடுதல் அம்சம் இந்த இசைக்கடிகாரம். முதலில் இந்த இசைக் கடிகாரம் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் காலை ஏழுமணிக்கு ஒலிக்கும் பாடல்கள் இலக்கியத் தரமானவை. ஒரு நாளின் கூடுதல் சுவையாக சேர்கிறது.
வீட்டின் மூலை முடுக்குகளில் இருள் உண்டு. ஆனால் வீண்மீன்களை காட்ட ஜன்னலும் உண்டில்லையா...கீழே இறங்கினால் அன்றாட வாழ்வும் கஸ்ட்ட நஷ்டங்களும் உண்டு. இரவு உறங்கப்போகும் போது கூட வீட்டை பற்றிய பலமான யோசனை இருந்தது. ஆனால் இலக்கியமும், இந்த வெளிச்சமும் உயிர்ப்பளிப்பவை. வாழ்க்கையில் அனைவருமே எல்லாவிதமான எதிர்மறை விஷயங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அடைத்து கட்டிய வீடு போல. ஆனால் நம் ஜன்னல்கள் எவ்வளவு பெரியவை. மனதை போல. அதிலிருந்து கொஞ்சம் இலக்கியம் வழியாக ஏறி சென்றால் வானம்.
[இதுதான் நான் எடுத்து பதிவேற்றும் முதல் காணொளி துண்டு. இப்போது தான் வலைப்பூவில் நம்முடைய சொந்த காணொளிகளை பதிவேற்றலாம் என்று கண்டுபிடித்தேன். புகைப்படங்களை பதிவேற்றும் இடத்திற்கு அடுத்ததாகதான் இதற்கான வசதியும் இருக்கிறது. அன்றாடம், அரசியல்,உறவு சிக்கல்கள்,வேற்றுமைகள்,கசப்புகள் என்று எல்லா எதிர்மறை அம்சங்களும் எல்லோருக்கும் உண்டு. அதை கடந்து நமக்கு கொஞ்சம் மனம் விரியவேண்டியதிருக்கிறது.
இலட்சியம் நேர்மறை எல்லாமே க்ரின்சா?
போரே வாழ்வாக இருந்த சங்ககாலத்திலும் தலைவியின் மாமை நிறமுள்ள மாங்கொழுந்தை தலைவன் கண்டான். தன் தேர் மணி ஒலிக்காது தேரை செலுத்த சொன்னான். குறிஞ்சி பூப்பதை கண்டான். பொருள் தேடி பாலைவழி நடக்கும் போதும் தாழை மணத்தை ரசித்தான்.
ஆனால்உண்மையான கசப்பிற்கு மதிப்பு உண்டு. கசப்பை எல்லா கனிகளிலும் இயற்கையே சேர்ப்பதில்லை. குறிப்பிட்ட வெகு சிலவற்றில் மட்டுமே கனிகளில் கசப்புண்டு. உண்மையில் எட்டிக்காய்க்கு மதிப்புண்டு. அதை வேறு எதிலும் போலியாக இயற்கை கலப்பதில்லை.
உதாரணத்திற்கு இன்று ஒரு பள்ளிக்கூட வாத்தியார் பையன்கள் தன்னை பேசும் அசிங்கமான வார்த்தைகளை நேரடியாக கேட்க வேண்டியுள்ளது. அதற்காக அவர் அப்படியே எரிச்சலாக இருந்தால் உண்மையில் சீக்கிரம் சாக வேண்டியது தான். இன்று மதீப்பீடுகள் விழுமியங்கள் மிகவும் அவல நிலையில் உள்ளன. ஒரு உச்சத்திற்கு பிறகு மீண்டும் மாறலாம்.
தனிமனிதனின் மனநிறைவிலிருந்து தான் மதிப்பீடுகளும் விழுமியங்களும் உயிர் கொள்ள முடியும். நிறைவு என்பது அறுபது வயதில் இல்லை. அன்றாடத்தில் உள்ள சின்னஞ்சிறியவற்றில் உள்ளது. நாம் இன்று இழந்து சிரமப்படுவது இதைத்தான் என்று தோன்றுகிறது ]
November 23, 2025
அன்னை அமர்ந்திருந்த பீடம்
மழையுடன் கார்த்திகை தொடங்கிவிட்டது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கறேன் என்று கண்ணன் சொல்கிறான்.
எனக்கு கார்த்திகை மிகவும் பிடித்த மாதம். அடை மழையும் பின் வெயிலுமாக மாறி மாறி வானம் விளையாடும் மாதம்.
இந்த மாதம் ஊர் முழுவதும் நடைபறும் பயிர்பொங்கலால் ஊரே மகிழ்ச்சியாக இருக்கும். சிறு வயதிலிருந்தே இந்த மாதம் மழையுடன் பயிர் பொங்கலுடன் மனதில் பதிந்துவிட்டது.
இதை பற்றி நிறைய முறை எழுதியிருக்கிறேன். என் முதல் கதையே அந்தக் களம் சார்ந்தது தான்.
முதலில் ஊர் காவல் தெய்வமான மாரியம்மன் வழிபாடு. ஒவ்வொரு வீட்டிலும் தேவியை அழைப்பது. சூரியன் கொல்லிமலைக்குப்பின் மறைந்த பின் சாமி கும்பிடுவோம். பயிர் நடவு முடிந்து நடைபெறும் வழிபாடு. நன்றி சொல்லவும் நட்ட பயிரை காக்கவும் ஒரு சேர நிகழும் வழிபாடும் கொண்டாட்டமும்.
தானியத்தின் மீது அன்னையை அமரசெய்து வழிபடுவது இந்த வழிபாட்டின் அடிப்படை. காலையில் வழிபட்ட வேப்பம் குழைகளை வாசல் நிலையில் கட்டியப்பின் தேவி அமர்ந்திருந்த பீடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.
முனைவர் வேதாசலம் அவர்களின் நூல்களை மிக மெதுவாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். வரிக்கு வரி நிறைய தகவல்கள். இந்திய கலை வரலாற்றில் அறுவகை தெய்வ வழிபாடு என்ற புத்தகத்தில் சக்தி வழிபாடு பற்றி வாசித்ததை திரும்ப எடுத்துப்பார்த்தேன். இந்த நிலத்தின் மாரியம்மனை ..கொல்லிப்பாவையை பற்றி உள்ள பகுதிகளை மறுபடி வாசித்தேன்.
ஆழ் மனதை திறக்கும் திறவு கோல் வரலாறு என்று சொல்லலாம்.
அன்னை அமர்ந்திருக்கும் பீடம் நம் ஆழ்மனம் இல்லையா...
விடிந்தும் இதழ் விரிக்காது மழையில் உறங்கிக்கொண்டிருக்கும் பூத்தளத்தில் ..காக்கை தன் சிறகுகளில் இருந்து சிதறடிக்கும் மழை துளிகளில்...ஐயாற்றின் புது நீராய் இருப்பதும் ..பயிர் உயிராவதும்..கருவின் நீராவதும்...அவள். நீரெல்லாம் கங்கை.
November 5, 2025
விளையாட்டு
கலைத்து விளையாட
ஒரு கோலம் கூட இல்லை.
துரத்தித்தியோட யாருமில்லை.
தலைகொடுத்து மரங்களும் செடிகளும்
தேமே என்று நிற்க..
தனியே தெருவில்
விளையாடிக் கொண்டிருந்தது
மழை.
October 30, 2025
ஔியை மறந்து விட்ட பயிர்
காலையில் சூரியனை பார்ப்பதற்காக மாடிக்கு சென்றேன். உதிக்க நேரமிருந்தது. கீழே வந்து தி.ஜாவின் 'சிலிர்ப்பு' சிறுகதை வாசித்தேன். தி.ஜா வை தேடுவது என்பது ஒரு கன்றின் தவிப்பு போல.
ஒரு மாதத்திற்கு முன்பு துளசி செடியை வாடிவிட்டது. ஆழஊன்றிய வேரால் பிடுங்கும் போது மண் புரண்டு குலைந்தது. அடிமண் மேலே வந்தது. நல்லது தான்.
புரண்ட மண் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பக்குவமாகியிருந்தது. தம்பி கொடுத்த குட்டி துளசி செடிகளை நடுவதற்காக மீண்டும் மாடிக்கு சென்றேன். வேர் பிடித்த சின்னஞ்சிறு செடிகள். குட்டி காக்கை இறகு ஒன்று, செடிகளுடன் காற்றில் சிலிப்பிக்கொண்டு கூடவே வந்தது.
நேற்று தோழி ஒருத்தியுடன் பேசும்போது அவள் Invitro fertilization சரிவராமல் உடலும் மனமும் சோர்வுற்றிருப்பது தெரிந்தது. பதினொன்றாம் வகுப்பில் pure science group எடுத்து படிக்கத் தொடங்கும் போதே உடல் ஒரு பேசுபொருளாக இயல்பாக ஆகிவிட்டது. உடல் சார்ந்த பேச்சு வீட்டில் வந்த போது நான் அவசரக்குடுக்கை தனமாக பேச முயன்றபோது அய்யா நாசுக்காக தடுத்தார்.
பின்னர் 'இதை பத்தியெல்லாம் நீ படிக்கற இடத்துல பேசினா போதும்...' என்றார். இலக்கியம் பற்றி நான் ஆர்வக்கோளாறாக அடிக்கடி பேசும் போதும் இதே போல தடுப்பார். 'எங்கிட்ட பேசறப்ப புத்தகம் பத்தி பேசு 'என்பார். எங்கள் வீட்டில் பத்து ஆட்கள். அப்படியும் இலக்கியம் பற்றி எதாவது தவறி பேச நேர்ந்து விடுகிறது. இருந்தாலும் தவறிவரும் போதே சுதாரித்துவிடுவேன்.
இப்படி IVF பற்றி தோழி சொல்லும் போது கேட்டுக்கொண்டேன். நடைமுறை சார்ந்து இதுபற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. புத்தகமாக படிப்பதற்கும், நடைமுறையிலும் இது மாதிரி விஷயங்களில் பாரதூரம் உண்டு. அப்படித்தான் எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் காயாம்பூ நாவலை வாசிக்கும் போது ஒரு நடுக்கம் இருந்தது.
'வசுதேவர் தேவகிக்கு கண்ணனா வந்தான்ல்ல. கைவிட்டு போனதெல்லாம் கண்ணனா வரதுக்கு தானே..ஏழும் சேர்ந்து ஒன்னா வரப்ப சமாளிக்கனுல்ல...உடம்ப பாத்துக்க ' என்று சொன்னேன். இப்படி சொல்லும் போது சிரித்தாள். என்னால் அவளின் கண்ணீர் நிறைந்த அகல கண்களை கண்முன்னே காணமுடிந்தது. IVF பற்றி பரிட்சையில் கேள்வி வந்தால் 5mark ஒன்று உறுதி என்று பேசிய நாட்கள் உண்டு. முதல் புள்ளியிலிருந்து கோலத்தை கணிப்பதைப்போல, பொதுவாக சில நாட்கள் அனைத்து பெண்களுக்கும் உள்ள கால் உளைச்சலில் இருந்து என்னால் அவளை உணரமுடிந்தது. அவளுக்கும் நுண்ணுயிரியல் சார்ந்து ஒரு கனவு இருந்தது. இப்போது ஆண்டுகள் கணக்காக நோயில்லாமல் மருத்துமனைக்கு செல்கிறாள்.
ஏனோ அந்த சோர்வு காலையிலும் இருந்தது. இது மட்டுமல்ல சில சமயங்களில் விட்டு போன தந்தைகள் மனதில் வந்து கொண்டே இருப்பார்கள். ஒரு வாரம் இரண்டு வாரம் போல. இதெல்லாம் காரணங்கள் என்றாலும் ஆழத்தில் ஒன்று அசையாமல் நிற்பது. ஆதி காரணம்.எழுதுவதும் ஒரு வகையில் அப்படித்தானே.
மனத்திற்குள் சூழ்ந்து கரைந்து போவதெல்லாம் பெருமழைக்காகக்கூட இருக்கலாம். கண்ணன் வர ஏழு படிகள் தாண்ட வேண்டுமில்லையா..
எங்கள் தெருவில் மாதா கோவில் என்ற பெண்தெய்வக் கோவில் உண்டு. ஒரு வகையறாவின் குலதெய்வம். இந்த புரட்டாசியில் அங்கு ஒரு அலாரம் வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கூலிவேலை செய்பவர்கள் என்று அனைவரும் சேர்ந்து வாங்கியது.
காலை ஐந்து மணிக்கு வேங்கடேச சுப்ரபாதம் தொடங்கி இரவு பத்து மணிக்கு கீதை வாசகத்துடன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மணி சொல்லும். மிக அமைதியான பொழுதுகளை இந்த அலாரம் குலைத்து விட்டது என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. இருந்தாலும் நினைத்தது போல அதிக தொந்தரவில்லை. காலை மாலை பொழுது சந்திகளில் ஒரு பாடல். மற்றபடி மணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் தொட்டியகருப்பும், கன்னிமார்களும், நாராயணரும் வந்து போவார்கள். புரட்டாசி ஐப்பசி மாதங்களில் ஊர் மிக அமைதியாக இருக்கும். அறுப்பு,நாற்றுவிடுதல்,நடவு,மழை,வெயில் என்று வயலே கதி என்று ஆகிவிடும். காலை ஆறு மணிக்கே தெரு அரவம் குறைந்து அமைதியாகத்தொடங்கும். வயல்காட்டு பாதைகளும் வயல்களும் கலகலப்பாகிவிடும்.
பாரதியின் 'ஆசை முகம் ' என்ற கவிதை காலை ஆறு மணி அமைதியில் ஒலிக்கத்தொடங்கியது. மாடியின் குளுமையில் மெல்லிய மயிலிறகு போல முதல் வரி தொட்டதுமே உடலும் மனமும் சிலிர்த்தது. யார் தினமும் வெவ்வேறு பாடல்களை தேர்வு செய்து பதிந்து வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. செடிகளை நட்டுவிட்டு தொட்டியை வெளிச்சம் குறைவாக விழும் மறைவில் வைத்தேன்.
அனுமனின் சிவந்த கனி பச்சை மலை விளிம்புகளில் தோன்றியது. வானத்தை பார்த்து கொண்டே நின்றேன். கையில் மிச்சமாக சின்னஞ்சிறு காக்கை இறகு. ..பாரதி..
வானை மறந்திருக்கும் பயிரும்
வானை மறந்திருக்கும் பயிரும்
என்று உள்ளுக்குள் ஒடியது.
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)
கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி
_ சி.சுப்ரமணிய பாரதி
கண்ணனில்,காதலில் தொடங்கும் பாரதி வானை மறந்துவிட்ட பயிர் என்று பிரபஞ்சத்திற்கு தாவிவிடுவார். காதலில் இருந்து பிரபஞ்சத்திற்கு. முதலில் இது காதல் பாடலாக தன்னை காட்டியது. இன்று கண்ணன் சொல்லாக கேட்கிறது.
இதில் வரும் கண்ணன்... கண்ணன் மட்டுமா?. காதல் என்பது காதல் மட்டுமா? இந்தக்கவிதையை காதல் பாடலாக புரிந்து கொள்வது வைரத்தின் ஒருபக்கம் மட்டும் தான். பெண்களின் தன்னறம் என்று எடுத்துக்கொண்டால் அதிக வீச்சை கொண்டதாக இந்தப்பாடல் மாறும். கண்ணனை தன்னறமாக, காதலை செயலாக மாற்றிப்பார்த்தால் ...?
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதுமில்லை என்று சொல்லுவதன் மூலம் உயிர்கள் தன்னறத்தை இயல்பாக கொண்டுள்ளன என்கிறார் பாரதி.
உண்மை தான் . ஔியை மறந்துவிட்ட பயிர் இங்கு இல்லை. கண் எதிரே நாற்று நட்ட வயல்கள். மெல்லிய காற்றில் நாற்றுகள் அசைவது காலை ஔியில் துல்லியமாகத் தெரிகிறது. நீர்தேக்க தொட்டியின் மறைவில் வைத்த செடியை நகர்த்தி வைத்தேன். சூரியவெளிச்சத்தில் குளிர் காற்றில் இலைகள் சிலிர்த்து அசைந்தன. விரல் இடுக்கில் இருந்த இறகும்.
October 26, 2025
இருக்கை
சிறுவயதில் பெரும்பாலும் நீண்ட விடுமுறைகளில் நாவல்கள் வாசிப்பது வழக்கம். நீள்கதைகள் என்று சொன்னாலும் கூட மனதளவில் அவை நாவல்கள். வாசிப்பே விடுமுறையின் இனிமை. அப்போதிருந்து தற்போது வாசிக்கும் நாவல் வரை இந்த இனிப்பு மனதில் இருக்கிறது. மனதின் மாறாத சுவை. அல்லது வாழ்வில் எஞ்சி நிற்கும் மதுரம். முதன் முதலாக கல்கியின் அலையோசை வாசித்தேன். வர்தமானன் பதிப்பகத்தில் அப்போது மலிவு பதிப்பாக கல்கியின் நாவல்கள் வெளியாயிற்று. எங்களுக்காக அய்யா அலையோசை,சிவகாமின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்திபன் கனவை தபாலில் [VPP யில் ] வாங்கினார். பொன்னியின் செல்வன் ஆறு புத்தகங்கள்,அலையோசையும் சிவகாமியின் சபதமும் நான்கு,பார்த்திபன் கனவு ஒரு புத்தகம்.
அலையோசைக்கு பச்சை கலந்த ஊதா நிறத்தில் கடல் போன்ற அட்டை. எனக்கு ஏனோ அலைஓசை என்ற தலைப்பு பிடித்ததால் முதலில் அதை வாசிக்கத் தொடங்கினேன்.
இந்தக்கல்லில் அமர்ந்து தென்னையில் சாய்ந்து கொண்டு நிறைய நாவல்கள், புத்தகங்கள் வாசித்தேன். நானாக தேர்ந்தெடுத்த இடம். பெரியவர்களுக்கு பெண்பிள்ளைகள் கண்முன்னே இருக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட இடம் மீது விருப்பம். அம்மாச்சிவீட்டிற்கு முன்பு இருந்த களத்தின் முன்னால் இருக்கும் தோப்பு இது. அம்மாச்சி இந்த இடத்தை எனக்காக அடர்ந்து போகாமல் சீர் செய்து வைத்திருப்பார். கால்களை நீட்டினால் வயலிற்கு தண்ணீர் பாயும் வாய்க்கால். நேரடியாக குடிக்கக்கூடிய தூய தண்ணீர். கண் முன்னால் பச்சை மலை குன்று.
இந்த இடத்தில் எழுத்தாளர் நீலபத்மநாபனின் தேரோடும் வீதி,பள்ளிகொண்டபுரம் வாசித்தேன். பள்ளிகொண்டபுரம் இன்று வரை மனதிற்கு பிடித்த நாவல். அலையோசையிலிருந்து விஷ்ணுபுரம்,துயில் நாவல்கள் வரை நிறைய நாவல்களை இங்கு வாசித்தேன். லா.சா.ராவின் அபிதா என்று பல நாவல்கள். பதிமூன்று வயதிலிருந்து,என் முதல் புத்தகமான சக்யை சிறுகதை தொகுப்பு வெளியாவதற்கு சில மாதங்கள் முன்பு வரை இங்கு அமர்ந்து வாசித்திருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக.
இன்று அதிகாலையில் இந்த இடம் கனவில் வந்தது. மனதிற்குள் அத்தனை பரவசம். இந்த இடம் எனக்கான இடம். இதை யாரும் பயன்படுத்தியதில்லை. வாய்க்கால் ஓரத்தில் தென்னை அடியில் எப்போதோ போடப்பட்ட கல். நான் வாசிக்கும் போது மதிய உணவிற்காக அம்மாச்சி களத்தில் நின்று அழைப்பார்.
அந்த கல்லில் புத்தகத்தை வைத்துவிட்டு ஓடி வந்து சாப்பிட்டப்பின் களத்தில் குதித்து ஓடி வாய்க்காலை தாண்டி கல்லில் அமரும்போது அம்மாச்சி சிரிப்பார்.
" இந்த பிள்ளைக்கு சோறு தண்ணிக்கு மேல ருசிப்பட்டது," என்பார். அங்கங்கே நான் போட்டு வைக்கும் புத்தகங்களை அத்தனை பவ்யமாக எடுத்து வைப்பார். ஒரு விடுமுறையில் மறந்து விட்டு வந்த புத்தகத்தை எடுத்து அவருடைய இரும்பு பெட்டிக்குள் வைத்திருந்தார்.
[பச்சைமலையின் மம்மலை குன்று]
என்னுடன் வாசிக்கத் தொடங்கியவர்கள் முதல் ,கல்லூரி வயதில் என்னுடன் போட்டிப்போட்டு வாசித்த மூவர் வரை யாரும் இன்று வாசிப்பதில்லை. அனைவருமே பொருளாதாரத்தில், இடவசதியில்,நேர வசதியில் என்னை விட மேம்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எதுவோ அவர்களை விட்டு போய் விட்டது. இசையரசிக்கு வெளிநாட்டு வாழ்க்கை,கலைக்கு அரசியல் சார்ந்த வீட்டு சூழல்,சுகுணாவிற்கு நம்பிக்கை இழப்பு என்று காரணங்கள்.
வாசிப்பதில் இன்றுவரை அந்த சுவை குறையவில்லை என்பது காலம் எனக்கு அளித்த ஆசி என்று தோன்றுகிறது.
இலக்கியம் என்பது எந்த வயதிலும் மாறாத ருசி கொண்டது இல்லையா...
September 21, 2025
மொட்டு மலர் அலர்
[வாசகசாலை இணைய இதழ் 2025 ஆகஸ்ட் இதழில் வெளியான சிறுகதை]
மொட்டு மலர் அலர்
பௌர்ணமி அதிகாலை. வாசல் தெளிக்க கதவை திறக்கும் போது மேற்கே கொல்லிமலைத்தொடரின் சிகரம் ஒன்றில் முழுநிலா அமர்ந்திருந்தது. நிலாவை மெல்ல மெல்ல மலை விழுங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று எழுந்த உடுக்கை ஒலியில் என் கைகளிலிருந்து தண்ணீர் வாளி நழுவியது. கிழக்கு பக்கம் அந்த இரண்டாம் வீட்டின் வெளிமுற்றத்தில் உடுக்கை அடிக்கிறார்கள்.
வாளியை எடுத்து எதிரே இருந்த கிணற்றடி தண்ணீர் குழாயின் கீழ் வைத்துவிட்டு நின்றேன். மேற்குவீட்டு அக்கா அடுத்த குழாயடியில் வாளியை வைத்தாள்.
“உடுக்கு சத்தத்துல திடுக்குன்னு நெஞ்சு பதறி போச்சு..அது என்னமோ நம்ம நெஞ்சுக்குள்ள அடிக்கறாப்ல,”
“ம்,”
“ நேரங்கெட்ட நேரத்துல வயலுக்கு போறதுனால பயந்துருப்பாளோ ,”
“முல்லையும் ஒத்தையாளவே எல்லாத்தையும் பாக்கனுல்லக்கா..”
பெருமூச்சுவிட்டவாறு வாளியை தூக்கிக்கொண்டு சென்றாள்.
வயல்காட்டிற்கு செல்லும் பசுக்கள், ஆடுகள், காகங்கள் ,சிட்டுகள் ,குயில்கள் தவிர வாசல்களை பெருக்கும் தென்னம்விளக்குமாறுகளின் ஓசைகள். வாளியிலிருந்த தண்ணீர் துளிகள் தரையில் விழ விழ காலைநேரத்து இருட்டும் வெளிச்சமும் மாறிமாறி விளையாடியது.
சாமியாடிஅய்யாவின் கனத்த குரலால் தெரு அதிரத்தொடங்கியது. அவர் குரலை சிறு பிள்ளையிலிருந்து கேட்கிறேன். அது எங்கோ தரையிலிருந்து வருவதைப்போல உடலை அதிரவைக்கும். சிறுவயதிலிருந்து இதுபோல காலைசந்தி பொழுதிலும், அந்தியின் சந்தியிலும் அவர் குரலை கேட்டுக்கேட்டு அதற்கென்று மனதில் ஒரு இடம் உருவாகிவிட்டது. அவர் பாடும் போது யாரிடமும் பேசத் தோன்றாது. மனதை அழுத்தும் எடை போல அவர் குரலுக்கு ஒரு தன்மை. இதுவரை அவர் யாருக்கும் எதிராக எதையும் சொல்லி கேட்டதில்லை. அவரின் குரலும் உடுக்கையும் சேர்ந்து எதிரில் சோர்ந்து அமர்ந்திருப்பவரை விழிக்க வைப்பதற்கு முயற்சி செய்வதை போல இருக்கும். அவர் பாடும் வரிகளுமே அப்படித்தான். உடுக்கை அடித்துக்கொ ண்டே அவர் எப்போதும் பாடும் பாடலை பாடத்தொடங்கினார்.
யாருக்கும்
தாயுமுண்டு
தகப்பனுமுண்டு…
ரெண்டுமாய் ஈசனுண்டு.
ஈசன் வந்திருக்கான்
உடுக்கையாய் வீடுதேடி..
வீடு தேடி வந்திருக்கும்
அப்பனிடம் மனச சொல்லு..
சொல்லமுடியாதத
ஆயிக்கிட்ட சொல்லு..
அப்பனும் ஆயிமான அவன்
நீ கேட்டத தருவான்..
நீ பயந்தது எதுக்கு
உடுக்கை உடனிருக்கு.. என்று பாடி உழவுகாட்டின் ஏர் போல அவள் மனதை கிண்டி எடுத்தார்.
தம் தம் தம் என்று உடுக்கை தலைக்குள் சத்தமிடுகிறது. கம்பீரமான அழுத்தமான கை ஒன்று தலைஉச்சியை தொடுகிறது. தலையை உலுக்கிக்கொண்டேன். அவர் எப்போதாவது கோவிலில், தெருவில் திருநீரு வைத்துவிடும் போதும் இதே உணர்வு ஏற்படும். குரலும் விரலும் ஒரே உணர்வை ஏற்படுத்தும் விதிர்ப்பான உணர்வால் எதிரில் உள்ளவர்கள் மனதில் உள்ளதை சொல்லிவிடுவார்கள்.
ஈசனிடம் பரோட்டா கேட்ட ஆட்கள் உண்டு..பச்சை கல் மூக்குத்தி கேட்ட பெண்களும் உண்டு. அப்படி கேட்கும் போது மற்றவர்கள் சிரித்தால் ‘ அப்பனாத்தாக்கிட்ட தானே இதெல்லாம் கேக்க முடியும்’ என்பார். அப்படியாப்பட்டவரே மலைத்து போவது போல முழுகெடாதின்னி வீட்டுப்பிள்ளை முத்தம் கேட்டது. அது குழந்தையும் இல்லை..பெரிய பெண்ணும் இல்லை. அன்று தான் அய்யா ஆவேசமாக எழுந்து ‘பிள்ளைய கொஞ்சாம.. பேசாம.. அப்பனாத்தா என்னடா பண்றீங்க’ என்று கத்தினார்.
அவரிடம் முல்லையின் சொந்தக்காரர்கள் சத்தமாக கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
“சொந்த சாதியில இல்ல வேத்து சாதியில ஏதாச்சும் செய்வினை வச்சிருக்கா,”
“நேந்துக்கனுமா..வெளக்கு போடனுமா,”
இன்னும் மாறி மாறி குரல்கள்.
“எல்லாம் வெளியாளாலதான் வரனுமா…வூட்ல ஒங்களால ஒன்னும் வராதா?” என்று அவர் அதட்டியதும் யாரின் குரலும் வெளிவரவில்லை.
“எம் மவ பேசட்டும்..’என்றார்.
முல்லையின் சன்னக்குரல் வெளியே கேட்கவில்லை.
மீண்டும் உடுக்கை அடித்தபடி கர்ஜனை போல ஒரு சத்தம். “அவக்கிட்ட ஒரு தப்புமில்ல ஒன்னுமில்ல..தலமேல வச்சிருந்து கீழ போட்டு உடைச்சா என்ன பண்ணும் பச்சப் பிள்ளை,” என்றப்பின் மீண்டும் உடுக்கை சத்தம்.
வெளியூர் வேலைக்கு பேருந்துக்கு செல்லும் ஆட்களும் பயிர்நடவுக்கு செல்பவர்களும் பேசிக்கொண்டே நடக்கும் சலசலப்பு. தெற்கு தெரு முத்தாத்தா அத்தை என்னைப் பார்த்து, “மாமியால்லாம் சோறாக்கி வச்சுட்டு போறோம்..இப்ப தான் மருமவ கோலம் போடறதா,”என்று சிரித்தாள். சிலர் சாமியாடி குறி சொல்வதை கேட்பதற்காக தயங்கி நின்றார்கள்.
“இந்த முல்ல கொஞ்சம் மனச தெடமா வச்சுக்கப்பிடாது..”
“அவங்க மேல குத்தம் வரக்கூடாதுன்னு இன்னிக்கு சாமி பாப்பானுங்க..நாளைக்கு பேயோட்டுவானுங்க,”
“இவ மாமங்காரன் இந்தப்பிள்ளைய ஊருக்கே வேடிக்கைக் காட்டி ,கெடா வெட்டி ,கறிசோறு திங்காம முடிக்கமாட்டான்,” என்று அவர்களுக்குள் பேசி கலைந்தார்கள்.
அங்கே,“என்ன பண்ணுன்னு சொல்லு,” என்று முல்லையின் மாமாவின் குரல். கதவை வேகமாக சாத்திவிட்டு உள்ளே சென்றேன். “காலங்காத்தல காதவ சாத்திக்கிட்டு,”என்று அப்பாயி பின்பக்கமிருந்து அதட்டினாள்.
தேநீருக்காக பாலை அடுப்பில் வைத்துவிட்டு கண்களை ஜன்னல் பக்கமாக திரும்பினேன். ஊதா நிறத்தில் வானம். கண்களை கீழே இறக்கினால் ஜாதிமல்லிக் கொடியின் தண்டுகள் தளதளவென்று காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. இன்னும் பூக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் பூக்கலாம்.
முல்லை சாமியாடிஅய்யாவிடம் என்ன சொல்லியிருப்பாள்? என்று யோசனையாக இருந்தது. முல்லையை தாவணி அணிந்த வயதிலிருந்து எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவளுடைய அம்மாயியின் தங்கை வீடு இது. மே மாத விடுமுறை ஒன்றில் திருவிழாவிற்கு வந்திருந்தாள். பச்சை தாவணியும், மஞ்சள் பாவாடையும் சட்டையும், தலைநிறைய பூ வைத்திருந்தாள். நீண்ட கோரை முடியை சைடு பின் குத்தி பின்னியிருந்தாள். ஒற்றைக்கல் மூக்குத்தி..சந்தன நிற முகத்தில் மின்னும் மஞ்சள் பூச்சு. குதி வைத்த செருப்புக்கு மேல் ஜதங்கை கொழுசு. நான் அப்போதெல்லாம் இரண்டு ஊர் தள்ளியிருந்த பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளிலில் அலைந்து திரிந்து கருவாடு போல இருப்பேன்.
திருவிழாவில் கூட்டமாக கோயிலுக்கு மாவிளக்கு எடுத்து போகும் போது என் கை தாங்காமல் தாம்பாளம் சாய்ந்தது. தாம்பாளத்தை தலையில் வைப்பது அந்தவயதில் மானக்கேடு. அது கனமான கெட்டி பித்தளை தாம்பாளம். கரகம் என்று கிண்டலடிப்பார்கள். பக்கத்தில் நடந்து வந்த முல்லை தட்டிலிருந்து எதுவும் விழுந்து விடாமல் ஒரு கை கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.
“தாம்பாளத்தை நல்லா பிடிப்பா..எத்தனாப்பு படிக்கற,”
“பத்தாவது பரிட்சை எழுதியிருக்கேன்,”
“நானுந்தேன்..நீ என்ன எட்டாப்பு படிக்கற பிள்ள கணக்கா இருக்க,”
நான் திரும்பி முறைத்தேன்.
“கோச்சுக்காத..தாவணில்லாம் போட மாட்டியா,”
“எனக்கு தாவணி இல்ல..”
“வயசுக்கு வந்தப்ப மாமாவூட்ல சீர் வைக்கல,”
“மாமா இல்ல..தாத்தா சுடிதார் வாங்கித் தந்தாரு,”
“சுடிதாரா..”என்று சிரித்தாள். என் சுருட்டை முடியை தொட்டு ‘முடியும் குட்டியா இருக்கு’ என்றாள். நான் பள்ளி உயர் நிலை முடிக்கும் போதே எங்கள் தெருவிற்கு மருமகளாக வந்துவிட்டாள். விடுதியிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த போது ரோஸ் நிற சேலையுடன் ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.
“பாத்தியா ஒங்க வூட்டுக்கே வந்துட்டேன்..இனிமே அண்ணின்னுதான் கூப்பிடனும் பாத்துக்க,”
“போ..முல்ல,”
“சரி..சரி…போனாப்போது பேரு சொல்லிக்க,”
கல்லூரி முதலாமாண்டு சேர்ந்து விடுதிக்கு கிளம்புவதற்கு முதல் நாள் மதியம் அவள் வீட்டு மாட்டுத்தொட்டிக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு இடது பக்க உருளையில் வாளிகயிற்றை போட்டு கிணற்றுக்குள் வாளியை விட்டேன்.
நிறுத்தி நிறுத்தி இறைத்தவள் என் பக்கமாகத் திரும்பி, “இந்நேரத்துல எதுக்கு,”என்றாள்.
“அம்மா எழவுக்கு போயிருக்காங்க..வந்ததும் குளிக்க..”
கிணற்று கட்டையில் வாளியை வைத்து தண்ணீரை இருகைகளாலும் அள்ளி குடித்துவிட்டு முகம் கழுவிக்கொண்டாள்.
“ஒடம்பு சரியில்லையா.. கயிறு இழுக்க இவ்வளவு கஸ்ட்டப்படுற,”
அவள் முந்தானையை உதறி செருகிக்கொண்டு சிரித்தாள்
“ஒனக்குத் தெரியாதா,”
“என்னா..”
வியர்த்த முகத்தில் ஒரு சோபை இருந்தது. நாவல்களில் வருணிப்பதைப்போல அவளிடம் எல்லாமே மென்மையாய் ..
“உங்க அம்மாவுக்கு தெரியுமே…நீ இன்னும் பள்ளிக்கூட பையோடவே திரிஞ்சா எப்படி சொல்வாவ,”
என் கையை இழுத்து ஈரமான அவள் நாடியில் வைத்தாள்.
“என்னா,”
“துடிப்பு ரெண்டா கேக்குதா,”
“இல்லியே,”
“ச்..நல்லா கேளு பிள்ளன்னா,”
சத்தமில்லாத அமைதியான நடுப்பகல். கண்களை மூடி நன்றாக கூர்ந்து கவனித்தேன். ஒரு துடிப்புடன் இணைந்து இன்னொன்று. பின்னால் ஔிந்து கொண்டு நிற்பதை போல. சட்டென்று என் பாதங்கள் நின்ற ஈரத்தில் இன்னும் அழுத்தி ஊன்றிக்கொண்டன.
“இனிமே நீ அத்தையாம்,” என்றவளை அடிக்க கை ஓங்கினேன்.
“என்னிய அடிக்கக்கூடாது பிள்ள..உங்க அண்ணனே எதுக்கெடுத்தாலும் ஓங்குற கையை சுருட்டி வச்சிருக்கு,” என்றபடி குடத்தை தூக்கிக்கொண்டு நடந்தாள்.
நான் கல்லூரி முடிந்து வீட்டிலிருந்து வேலைக்கு செல்லும் போது முல்லை காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வயலுக்கு சென்றுவிடுவாள். அந்தியில் வந்து சமைக்கவும் ,பிள்ளைகளை பார்க்கவும் என்று பரபரப்பாக இருப்பாள். நேருக்கு நேராக பார்த்தால் பக்கத்தில் யாரும் இல்லை என்றால்,“என்ன இப்படியே இருக்க உத்தேசமா,” என்பாள். கோபமாக முறைக்கும் என் தோளை பிடித்துக்கொள்வாள். அதற்குள் மூன்றாவது வீட்டிலிருந்து பிள்ளைகளோ அண்ணனோ அழைக்கும் குரல் கேட்கும்.
அண்ணன் முழு குடிகாரன். அதை மறைக்க வேகமாக பேசுவது வழக்கம். ஒரு நாள் வண்டியில் போய் எங்கேயோ விழுந்துவிட்டு வந்தது. ஒரு மாதம் சென்று தலைசுற்றி விழுந்து மருத்துமனைக்கு சென்றார்கள். தலையில் இரத்தம் உறைந்துவிட்டது என்றார்கள். அப்படி இப்படி என்று மூன்றாம் நாள் நடு இரவு கடந்து பிணமாக வந்த போது முப்பத்தைந்து வயது என்பதே அனைவரையும் துன்புறுத்தியது. அவசரஊர்தி தெருவில் நுழையும் போது ஓங்கி கன்னத்தில் அறைபட்டது போல தெருவே அமைதியாக இருந்தது.
அந்த முன் அதிகாலை முல்லையின் குரலால் பதறி விழித்தது. அங்கு சென்ற என்னை பாய்ந்து இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். கொடி போல அவளின் ஒவ்வொரு அங்கமும் நடுங்கிக்கொண்டிருந்ததை கண்களை மூடினால் இப்போதும் உணர முடிகிறது. பின் யாரோ உறவுக்காரர்கள் அவசரமாக அவளை பிய்த்து எடுத்துக்கொண்டு போனார்கள்.
எல்லாம் முடிந்து உறவுகள் ஊருக்கு சென்றார்கள். கூட்டமும் பந்தலும் கலைந்து தெரு இயல்புக்கு திரும்பிவிட்டது. பள்ளிக்கு செல்லும்இரண்டு பிள்ளைகளையும் அனுப்பிவிட்டு முல்லை வயலுக்கு செல்வாள். அவளுக்கு வயலை பங்கு பிரித்தார்கள். காலையில் ஆண்கள் வயலிற்கு செல்லும்நேரத்தில் முல்லையும் வயலுக்கு மடைவாய் அடைக்க போவாள். பகலில் மற்றவர்களின் வயல்களுக்கு பயிர் நடவோ, களையெடுக்கவோ செல்லத் தொடங்கினாள்.
தெருவில் எங்கள் குறுக்கு சந்தில் நேரும் எதிருமாக பதினான்கு வீடுகள். இதில் அத்துவீடுகளில் இரண்டு படுகிழவிகள். மற்ற பெண்களெல்லாம் பதின்வயதும் மத்திம வயதும் சிறு பிள்ளைகளும். எங்களில் முல்லை நல்ல உயரம். அண்ணன் இறந்த பிறகு அவள் உடலை குறுக்கியபடி குனிந்து நடப்பதை பார்ப்பதற்கு முதுகில் வலியுடன் நடப்பதைப் போல இருக்கும். நாட்கள் செல்லச்செல்ல தெருமத்தியில் நடக்காமல் ஓரமாக நடக்கத்தொடங்கினாள்.
அவள் பார்வையில் உடலில் பதுங்கல் போல ஒரு பாவனை வந்துவிட்டது. பயந்த முயல் போல. யார் வீட்டு முன்னால் வண்டி வந்து நின்றாலும் வீட்டிற்குள் சென்றுவிடுவாள். பொட்டு வைக்காமல் கொண்டை போட்டுக்கொண்டு சீலையை இழுத்து செருகிக்கொண்டு வயலிற்கு போனாலும் அவள் அப்படியே தான் இருந்தாள்.
குழந்தைகளை தவிர்த்து பெரும்பாலும் நல்லது கெட்டது தவிர நாங்கள் யாரும் யார் வீட்டிற்குள்ளும் செல்லும் வழக்கமில்லை. பேச்சும் சிரிப்பும் விசனமும் வாசலோடு முடிந்துவிடும். எனக்கு உடல் நலம் சரியில்லாத ஒரு நாள் மதியம் முல்லை வீட்டிற்குள் வந்து உட்கார்ந்தாள். அம்மா வயல் விஷயங்களை விசாரித்துவிட்டு படுத்துக்கொண்டார்.
“இன்னும் அண்ணனையே நெனச்சுக்கிட்டு இருக்கியா முல்ல,” என்று கேட்டேன்.
“ஆமா.. குடிகாரன் வம்படியா போவான்..அவனையே நினச்சுக்கிட்டு இருக்கோம் ..”
“அப்பறம் ஏன் இப்டி இருக்க..முடியை சடை பின்னலால்ல..இன்னிக்கெல்லாம் யாரு இப்படி இருக்கா,”
அவள் முகம் மாறியது.
“இந்த மனுஷங்கல்லாம் பாம்பு..நெதம் நெதம் ஊசி குத்தறாப்ல..”
“யாரு..”
“எல்லாரும் தான்..”
“எல்லாருமா..”
சற்று நேர அமைதிக்குப்பிறகு,“நீ பாட்டுக்கு உன்னோட வேலையப் பாரு.அவங்களுக்கு வேணுன்னா அவங்க நேரத்துக்கு போவட்டும்,” என்றேன்.
“இதெல்லாம் சொல்லிக்குடுக்கறதே அவங்க வீட்டு பொம்பளைக தான்,”
“அப்டின்னாலும் அவங்க முகத்ததானே கலையில முதல்ல பாப்பாங்க,” என்ற என் கன்னத்தை சொடுக்கி சிரித்தாள். இப்போதெல்லாம் அவளுக்கு ஒருவித பெரியமனுசி தனம் வந்துவிட்டதை நினைத்து புன்னகைத்தேன்.
“ஒனக்கு இன்னுமா புரியலையா..ட்யூப் லைட்டு..அதுக்குதானே என்னைய கோத்துவிடறது..இவனுங்களுக்கும் ஒரு காரணம் இருந்தா போதும்,” என்று சிரித்தாள். பிறகு அவளே, “குனிஞ்சுக்கிட்டே கோலம் போட்டுட்டு போவாம …நாளைக்கு காலையில நிமிந்து நம்ம வீதியில நடக்கிற கோலாகல காட்சிய பாருபிள்ள..”என்று கேலியாக சிரித்துவிட்டு போனாள். இந்த கேலி பாவனை சிற்பத்திற்கு சிவப்பு பச்சை பெயிண்ட் பூசியது போல இருந்தது.
அடுத்த நாள் காலை வீட்டுவாசலில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். முல்லை வயலுக்கு கிளம்பி வாசலில் நின்றபடி பிள்ளைகளிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.
பக்கத்து வீட்டு அண்ணன் தன்னுடைய அதர பழைய டி.வி.எஸ்ஸின் ஆக்சிலேட்டரை திருகிக்கொண்டிருந்தார். அது டூர்…டூர் என்று பொதிதாங்காத மாடு போல முனகிக்கொண்டிருந்தது. பக்கத்தில் அந்த அண்ணி, “ கொஞ்ச நின்னு போலாம்..”என்று செயற்கையாய் சிரித்தாள். இந்தப்பக்கம் ஜோட்டுப்பயல் வயலுக்கு கிளம்பிக்கொண்டிருக்க அவன் வீட்டுக்காரம்மா வாசலில் இரண்டு புறமும் பார்த்துவிட்டு, “ கிழக்கமா போங்க,” என்றாள். நான் குனிந்து புன்னகைத்தப்படி வீட்டிற்குள் சென்றேன்.
அடுத்தநாளும் அதே நாடகம். கொஞ்சம் கூடுதலாக தலையை திருப்பினேன். கிழக்கு திசையில் போகச்சொல்லியவளின் மூன்றாம் வீட்டுப்பெண் அவள் வீட்டுக்காரரை மேற்காக போகச்சொன்னாள். இருவருமே அவரவர் வயல்களுக்கு எதிர்திசையில் சுற்றிக்கொண்டு போனார்கள். இப்படியே வரிசையாக…அதிகாலையின் என் கருநீல வானமும், வெள்ளியும் ,ஆரஞ்சு கீற்றும் காணாமல் போனது. முடக்கில் கோரமாக ஒரு பொம்மையின் முகம் ஆடியது. வரிசையாக அத்தனை வீடுகளிலும் கோர பொம்மையின் முகங்கள் எதிரேயுள்ள கோர பொம்மைக்கு முகம் திருப்பியிருந்தது. எங்கள்வீட்டு முனையில் இருந்த பொம்மை என்னை பார்த்து பெரிய மீசையுடன் சிவந்த விழிகளை விரித்தது. சட்டென்று குனிந்துகொண்டேன். கீழே குட்டி கானகாம்பரச்செடி கொத்தாக மலர்ந்திருந்தது.
முல்லை தன் வழக்கப்படி வயலுக்கு கிளம்பி ஓரமாக நடந்தாள்.
மார்கழி வந்துவிட்டது. முல்லை வீட்டில் அந்த அண்ணன் இறந்து இரண்டுஆண்டுகள் முடிந்திருந்தது. அதிகாலைகளில் வீட்டுவாசல்களில் அகல்கள் சுடர்ந்தன. பெரியகோலங்கள்.. அதன் கொண்டையில் பூக்கள் எல்லாம் அழகுதான். பூ செருகியிருக்கும் சாணத்தின் நாற்றம் தான் தாங்கமுடியவில்லை. சில சமயம் அதில் புழுக்கள். தினமும் அந்த அகல் வெளிச்சங்களின் ஓரத்தில் அவள் தயங்கித் தயங்கி வயலுக்கு நடந்து கொண்டிருந்தாள். அவள் வீட்டிலும் பிள்ளைகள் அகல் ஏற்றி வைக்கிறார்கள்.
ஒரு நாள் அவள் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களைப் பார்த்து மனம் அதிர்ந்தது. சின்ன பிள்ளைகளுக்கு பெரிய பொட்டாக வைத்துவிட்டிருந்தாள். பெரிய கோடாக குங்குமம். திடீரென்று வயலில் இருந்து ஒரு கல்லை எடுத்துவந்து வீட்டிற்கு முன் நாட்டி பட்டை பட்டையாக குங்குமும் மஞ்சளும் விளக்கும் வைத்தாள். கதவில் வட்டமாக மஞ்சளும் குங்குமும் என்று தீட்டி வைத்தாள். கவனித்தால் அவள் மட்டுமல்ல ஊரே தான் மாறி போயிருக்கிறது.
நாங்கள் சிறுபிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊரில் இத்தனை சடங்குகள் இருக்கவில்லை. வயலிற்கு அலையும் ஆண்கள் பெண்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். அன்றும் கூட பேய் ஓட்டும் சடங்கு, சாமி பார்க்கும் சடங்கு என்று எல்லாம் உண்டு. நான் கல்லூரி படிக்கும் போது அலைபேசி வந்தது. அதற்கு முன்பே டீசலில் ஓடும் உழவு வண்டிகள் வந்துவிட்டன.
களத்தில் நெல்லடிக்கும் ஆட்கள் ,ஆடு மாடு ஓட்டி செல்பவர்கள் எல்லாம் கொஞ்சம் நிம்மதியாய் வீட்டில் அமர்ந்ததும் தான் சாமிகள் பெருகின. ஊரை சுற்றி பல ஆண்டுகளாக அமர்ந்திருக்கும் சிறுதெய்வங்கள் திகைக்கும் அளவிற்கு இந்த பத்தாண்டுகளில் தெய்வங்கள் பெருகின. வீட்டிற்கு முன்பு அமர்ந்து எங்கிருந்து எந்த திசை பார்ப்பது என்று தெரியாத குழம்பலில் விழித்துக்கொண்டிருக்கின்றன.
அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி ‘டப்’ என்றது. அந்த சத்தத்தில் நினைவை மாற்றிக்கொண்டு தேநீரை கைகளில் எடுத்தேன். ஆறிப்போயிருந்தது.
உடுக்கை சத்தம் ஓய்ந்து தெரு இயல்பாகியிருந்து. சற்று நேரத்தில் திடீரென்று ஆட்களின் சத்தங்கள். வெளியில் ஓடிப்பார்த்தால் முல்லை தெருவில் கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்திருந்தாள். அவள் மாமா அவளை நோக்கி கையை ஓங்கிக்கொண்டு வந்தார். இரண்டு ஆட்கள் அவரை பிடித்திருந்தார்கள்.
“என்ன செஞ்சிருக்கா..” என்று அடித்தொண்டையிலிருந்து கத்தினார். பெண்கள் அவளை முறைத்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெயில் ஏறிக்கொண்டிருந்தது. தெருவிலிருந்து எழுந்திருக்காமல் குத்துக்கால் போட்டு உட்கார்ந்தாள். ஐெயாக்கா அவளுக்கு பாதுகாப்பாக குறுக்கே நின்றாள்.
“ஆளுங்க தண்ணிக்கு என்ன பண்ணுவாங்க..கரண்டு வேற நின்னு போச்சு.. ஓக்காந்திருக்கற தோரணைய பாரு…”என்றாள் ஒருத்தி.
முல்லை யாரையும் பார்க்கவில்லை.
“நாளைக்கு இருக்கு ஒனக்கு…இழுக்குற இழுப்புல பிடிச்சிருக்க எல்லா பேயும் ஓடிப்போயிரும்,” என்று சொல்லிவிட்டு காறி துப்பிக்கொண்டு அவளின் மாமா வீட்டிற்குள் சென்றார்.
முல்லை தெரு குழாயின் இணைப்பை வெட்டி விட்டிருந்தாள். சிறிய நீர் தேக்க தொட்டியிலிருந்த நீர் முழுவதும் சாக்கடையில் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது.
“ என்னோட வீட்டு வழியா போற தண்ணி மட்டும் இவங்க வீட்டு வழியா போலாமா,” என்று கத்திய முல்லை தரையிலிருந்து எழுந்து வாசல்படியில் அமர்ந்தாள்.
“ உங்க வீட்டுக்கும் ஒரு நாளு விதி வந்து நடக்குல்ல,”
அவளின் மாமா வேகமாக எதிர் வீட்டிலிருந்து வந்தார்.
“நாளைக்கு எவனாச்சும் பேயோட்ட வந்தான்னா..மம்பிட்டியால வெட்டி மடவாய்ல அவன மண்ணா வச்சு தண்ணியடைக்கிறேன் பாரு,” என்றாள். அவர் வந்த வேகத்தில் உள்ளே சென்றார்.
அவள் பேச்சிற்காக சொல்லவில்லை என்று எங்கள் அனைவருக்குமே தெரியும். ஆளை வெட்டி மடைவாயில் வைத்து அடைத்த கதை எங்களூரில் உண்டு. அவள் கன்னம் சிவந்து தசைகள் துடித்துக்கொண்டிருந்தது.
அம்மா என்னிடம் மெதுவாக, “முல்லைக்கும் ஒனக்கும் ஒரே வயசு தானே... பொதுவா மனுசன்னா முப்பது வருஷக்கு ஒருக்கா மாறனுல்ல,”என்று புன்னகைத்தாள். மீண்டும் என் முகத்தை பார்த்து , “எத்தன பொண்ணுங்க இப்படி..இவ கொஞ்சம் நாசூக்கு..அதான் ரெண்டு வருஷமாயிருக்கு,”என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
அந்த வழியே வந்த அத்தை, “பூ பூத்திருச்சு போலயே மருமவளே..இனிமே கவலையில்ல,”என்று என்னை பார்த்து கண்சிமிட்டினாள். வலது காலை மேல்படியிலும் மறுகாலை கீழ்ப்படியிலும் வைத்து கால்முட்டி மேல் கையை தொங்கவிட்டு உட்கார்ந்திருக்கும் முல்லையை பார்த்துக்கொண்டிருந்தேன்.
September 19, 2025
அந்தராளம்
[ ஆகஸ்ட் 2025 ஆவநாழி இதழில் வெளியான சிறுகதை]
அந்தராளம்
இன்னும் விடியவில்லை. கிழக்கே விடிவெள்ளி வரும் நேரம். மொட்டை மாடியில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தேன். வலது கை தானாகவே மனதில் ஓடும் தாளத்திற்கு ஏற்ப தொடையில் தட்டிக்கொண்டிருந்தது. முடியிலிருந்து சொட்டிய ஈரம் முதுகில் நனைத்திருந்த இடத்தில் காற்று பட்டு உடல் சிலிர்த்துக் கொண்டது. தாளமிடும் கைகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். தவிப்பு தொண்டையை அடைத்தது. கூடாது..மனதை அடக்கிக்கொண்டேன். அலைபேசியில் ஏதோ விளம்பர குறுஞ்செய்தி மடக் என்றது.
மனதை மாற்றுவதற்காக எழுந்து நடக்கத் தொடங்கினேன். அந்தப்பக்கம் கொட்டிலில் விளக்கெரிந்தது. ரங்கனிற்கு தானமாகக் கொடுக்கப்படும் சிறுகன்றுகள் வளரும் கொட்டில். அந்த செம்புநிறக் கன்றை இப்போதுதான் பார்க்கிறேன். இங்கும் அங்கும் மருள விழிப்பது நன்றாக தெரிகிறது. பட்டையாக மையெழுதியது போன்ற தடம் கொண்ட மணிக்கண்கள். அது நிற்கும் இடத்திலிருந்த கல்தூணை தலையால் இடிக்கிறது. சிறிது நேரம் கழித்து முகவாயை தூணில் தேய்க்கிறது. பின் நெற்றி. மீண்டும் தலையால் தூணை முட்டிவிட்டு இருகால்களால் மண்டியிட்டு நாவால் தடவுகிறது.
கண்களை மூடி மனதில் ஓடும் கீர்த்தனைகளை கவனிக்கத் தொடங்கினேன். பின் பாசுரங்கள்... இப்போதெல்லாம் பாசுரங்களை மனதில் ஓட்டுவது மனதை பரவசமாக்குகிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். என்ன மாதிரியான வரிகள்..
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே
கண்களைத் திறந்தேன். வடகிழக்குப் பக்கமாக கருகருவென மழை மேகங்கள் திரண்டிருந்தன. தென்கிழக்குப் பக்கமாக சூரிய வெளிச்சம் மேகங்களுக்குள் நசிந்து வந்தது. மழை பொழியக் காத்திருக்கிறது. ஐப்பசி என்பதால் நசநசவென்று நினைத்த நேரமெல்லாம் பெய்கிறது.
மீண்டும் கொண்டல் வண்ணன் மனதிற்குள் சதங்கை ஒலிக்க ஓடினான். விரல்கள் தத்தின. சத்தமில்லாத தாளம். ஸ்ரீராம் மாமாவுடன் சேர்ந்து முதன்முதலாக ரங்கனை சேவிக்கச் சென்ற அன்று ஆண்டாள் சந்நிதி மண்டபத்தில் இந்தப் பாசுரத்தை சட்டென்று பாடச்சொன்னார். இந்தப் பாசுரத்தை நான் முதன்முதலாகப் பாடின அன்று மாமா தன்னுடைய தம்பில்ஸ் கைகளை என் தலையில் வைத்தார். சம்மணமிட்டு நிமிர்ந்து அமர்ந்திருந்த அவரை, தரையில் நெற்றி தொட குனிந்து வணங்கினேன். என்னை கையமர்த்திவிட்டு மாமியை அழைத்தார்.
“எதானும் தித்திப்பு கொண்டு வா..”
உள்ளே மாமி பாத்திரங்களை எடுக்கும் சத்தம்.
“சுருக்க.. இந்த வருஷம் பப்ளிக் எழுதறாளோ இல்லியோ... பொழுது பத்தாது,”
கிளிகள் பறக்கும் திரைச்சீலையைத் தள்ளிக்கொண்டு மாமி வெல்லமிட்ட உளுந்து வடையை எடுத்து வந்தார்.
“சாப்பிடு தீபூ.. இன்னிக்கு ரங்கனுக்கு தித்திப்பு வடை”
“உங்களுக்கு மாமா..”
“கேக்கறாளோன்னோ..நேக்கும் கொண்டு வாயேன்டீ,”
“இந்தப் பாசுரத்தை பாடினது யார்ன்னு தெரியுமோ..”
நான் அவர் முகத்தையே பார்த்தேன்.
“திருப்பாணாழ்வார்ன்னு ஒரு ரங்கநேசர் பாடினது.. நம்ம உறையூர்ல பிறந்தவா..அவா நாமமெல்லாம் மனனம் பண்ணிக்கனும்.. நாழியாறது,” என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்.
மாமா திருச்சியில் உள்ள அஞ்சலகத்தில் வேலை செய்கிறார். மாமி கொண்டு வந்த வடையைப் பிட்டு முதல் விள்ளலை மாமியிடம் நீட்டினார்.
“அமுது.. நீ என்ன சொல்ற?”
மாமி புன்னகைத்து, “பின்ன இல்லியா?” என்று என்னைப் பார்த்தார். மாமியின் வட்ட முகத்தின் கன்னத்தில் விழும் குழியைப் பார்த்தபடி, “ஆமாம் மாமி..வடை நல்லாருக்கு..” என்றேன். இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
மாமா அப்பாவின் நண்பர். அவர் என்னைத் தவிர வேறு யாருக்கும் பாட்டு சொல்லிக்கொடுப்பது இல்லை. வீட்டில் தவிர வேறு எங்கும் பாடுவதும் இல்லை. அவரிடம் பாட்டு கற்றுக்கொள்ள அமர்ந்தபோது எனக்கு எட்டு வயது.
பத்தாம் வகுப்பு மே விடுமுறையில் அனுதினமும் காலையில் மாமா வீட்டில் சாதகம், அந்தியில் அவருடன் காவிரிக் கரைக்கு நடந்து சென்று ஆளோய்ந்த மரங்களின் நிழல்களில் அமர்ந்து நான் பாடுவதுமாக கழிந்தது. காலையில் எழுந்ததும் மாமாவின் முகம்தான் கண்களுக்குள் வரும். அவரின் தாளம் தட்டும் விரல்களையும், கண்களை மூடி ஸ்ருதி சேர்க்கும் விதத்தையும் நினைப்பது பரவசம். எப்போதாவது திடீரென்று காவிரிக் கரையில் அமர்ந்திருக்கும்போது பாடுவார். இதை அப்பாவிடம் சொன்னால், “ஸ்ரீராம் காவிரிக்கரையில பாடினானா?” என்று மட்டும் கேட்பார்.
அடுத்து வந்த மார்கழியிலிருந்து ஆண்டுதோறும் மார்கழி மாதம் அவருடன் கோயிலிற்குச் சென்று ஆண்டாள் சன்னிதி மண்டபத்தில் பாசுரங்களைப் பாடுவது வழக்கமானது.
“தீபூ... மார்கழிக்குன்னு பட்டு தாவணி சல்வார் குர்தா எடுத்து வச்சுக்கோ... எதாவது சரி பண்ணனுமானா தைக்கனுமானா கொண்டு வந்து கொடுடீ,” என்று மாமி முன்கூட்டியே நினைவுபடுத்துவார்.
மார்கழியின் பனிக்கு, பட்டுப்பாவாடை சட்டை இதமாக இருக்கும். அம்மா மதிலோரப் பூ சந்தையில் ஏலம் எடுக்கும் மல்லிகையையும் கனகாம்பரத்தையும் நெருக்கிக் கட்டிய நீண்ட சரத்தைப் பின்னலில் சூட்டிக்கொண்டு கைகள் இரண்டையும் குளிருக்கு இறுக்கிப் பிடித்துக்கொண்டு மாமாவுடன் டிவிஎஸ் 50யில் சென்று இறங்கினால் கோயில் பட்டப் பகல் போல இருக்கும். அங்கு எப்போதாவது அரங்கன் முன் நின்று பாட வாய்க்கும். அப்போதெல்லாம் மாமா திருக்கண்டேன் பாடு.. பச்சை மாமணி.. இல்லாட்டா ஆரா அமுதே பாடு என்று பரபரப்பார்.
கழிந்த மார்கழியின் முதல் நாள் நானாகவே ஆண்டாள் சன்னிதியில் கொண்டல் வண்ணனைப் பாடினேன். அந்தப் பாசுரத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாடியது. மாமா குனிந்தபடி தலையாட்டிக்கொண்டார். பட்டர் குங்குமம் தரும்போது ஆண்டாளின் கழுத்திலிருந்து துளசி மாலைகளில் ஒன்றை மாமாவிடமும், பாதத்திலிருந்த செந்தாமரைகளில் ஒன்றை என்னிடமும் கொடுத்தார்.
“நோக்கு வாரிசு..”என்று பட்டர் மாமாவின் முதுகில் பட்டும் படாமலும் மெல்ல தட்டினார்
துளசிமாலையைக் கையில் பிடித்தபடி கோவிலிலிருந்து திரும்பி வரும் வழியில் மாமா என் தோளில் கைபோட்டுக் கொண்டார். அத்தனை மின்விளக்குகள் இருந்தாலும் அதிகாலை இருள் அங்கங்கே தூண்களில் திருப்பங்களில் தேங்கி நின்றது. பட்டரின் வார்த்தைகளை நினைக்கும்போது அழுகை வந்து முட்டிக்கொண்டு நின்றது. இத்தனை வருடங்களில் அவரை நமஸ்காரம் செய்யும் போது மட்டும் தலை உச்சியில் கை வைப்பார்.
“பட்டுப் புடவையெல்லாம் உடுத்தி பெரியவளாயிட்டே” என்று சிரித்தார்.
“அம்மாவோடது மாமா... மாம்பழக் கலர் நேக்குப் பிடிக்கும்”
“நல்லாருக்கு”
பனியில் ஈர கல்தரையில் கால் வைத்து நடக்க நடக்க சில்லிப்பு பாதங்களைத் தொடுவது சிந்துபைரவியில் ஆலாபனை செய்வதுபோல இருந்தது.
கல்லூரியில் இரண்டாமாண்டில் சாதகத்திற்கு அதிக நேரம் ஒதுக்கினேன். பாசுரங்களைப் பாடும் போது குளிர்ச்சியில் மனம் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. காலையில் காவிரித் தண்ணீரைத் தொடுவதைப்போல ஓர் இனம் சொல்ல முடியாத துள்ளல் மனதுக்குள். பாசுரங்கள் மீது ஒரு இனம் தெரியாத ஈர்ப்பு. தினமும் கல்லூரிப் பேருந்து திருச்சிக்குள் நுழையும்வரை காவிரியையும், கொள்ளிடத்தையும், மலைக்கோட்டையையும் பார்க்கும் போது ராகஸ்வரங்கள் மட்டும் மாறிமாறி உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அண்ணா சிலை நிறுத்தம் வந்ததும் வலுக்கட்டாயமாக மனதைத் திருப்பி கல்லூரிக்குள் நுழைவேன்.
“இப்பதான் நார்மலாயிருக்கா..பஸ் ஜன்னல் வழியா வானத்துல மிதப்பா.. என்னமோ ரங்கனையே காதலிக்கறாப்ல..பாசுரம் பாறதுன்னா இவளுக்கு பாசிபருப்பு பாயாசம்” என்று காவேரி எப்போதும் கிண்டலடிப்பாள்.
“ஸ்ரீராம் மாமா சின்ன வயசிலே அப்படி தேனா... பாகா... கச்சேரி பண்ணுவாராம். அப்பா சொன்னார்” என்று காவேரி ஒருமுறை சொன்னாள். இப்போது அவர் பாடும்போது இருக்கும் வெட்டும் அழுத்தமும் பற்றி அவ்வப்போது யோசனை வரும்.. அப்படி உருகி பாகா இருந்த குரல் கெட்டித்தட்டி இப்படியாகுமா என்று.
“ஆண்டாளாவே மாறிடப் போறடீ... இன்னிக்கெல்லாம் ரங்கனுக்கு இறங்கி வர காலமில்ல பாத்துக்கோ” என்று வினோ மண்டையில் கொட்டுவாள்.
வகுப்பில் கவனத்தை இழுத்துப் பிடித்து பாடத்தைப் பற்றிக்கொண்டாலும் அவ்வப்போது மனம் தவறி தாளத்தில் விழுந்துவிடும். அனிச்சையாக விரல்கள் டெஸ்க்கில் சத்தமில்லாமல் தத்தும்போது ஆசிரியர்கள் அதட்டுவதுண்டு. இமைகளைத் திறக்காமலேயே இருந்துவிடலாம் என்ற பைத்தியக்காரத்தனமான திளைப்பு இருந்த நாட்களில்தான் தாத்தாவிற்கு முடியாமல் ஆனது.
நரம்புச் சிக்கல் என்று சொன்னார்கள். தலையில் அறுவை சிகிச்சை நடந்தது. அன்று கண் விழித்ததும் மருத்துவர் இராமசந்திர ஈஸ்வரன், அம்மாவைச் சுட்டிக்காட்டி, “இது யாருங்கய்யா,” என்று கேட்டபோது, “எங்க பிள்ளைங்க,” என்றார்.
அப்பாவைக் காட்டியபோது பதில் சொல்லாமல் திரும்பி கொண்டார். மீண்டும் கேட்டபோது தெரியவில்லை என்றார். அப்பா மீது ப்ரியம் கொண்ட தாத்தா அப்படி சொன்னதும் அப்பா முதலில் முகம் வாடினாலும் சட்டென்று மாற்றிக்கொண்டு “நான் உங்க மருமகப்பிள்ளை மாமா,” என்று சிரித்தார். படிப்படியாக நினைவு தெளிந்து வீட்டிற்கு அழைத்து வந்தபின், அனைவருக்கும் தூக்கத்தின் மீது ஒருவித பயம் ஏற்பட்டுவிட்டது. தாத்தாவை கீழே விழுந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தார்கள். அதனால் தூக்கத்திலிருந்து திடீர் திடீரென்று அப்பாவும் அம்மாவும் விழித்துக் கொள்வார்கள். தாத்தா இருந்த பெரிய அறையில் அம்மாவும் அப்பாவும் மாறி மாறிப் படுத்துக்கொண்டார்கள். படுக்கையறைக் கதவு திறந்தே இருக்கும். அதற்கு எதிரே உள்ள சிறிய அறை என்னுடையது. அவ்வப்போது எழுந்து தாத்தாவின் படுக்கையைப் பார்த்துக் கொள்வேன். இருபது நாட்களுக்கு மேலாக சரியான உறக்கமில்லாத ஒருநாள் இரவில் மூவரும் நன்றாக உறங்கிய வேளையில், தாத்தா மெதுவாக எழுந்து நடந்து கதவுப்பக்கம் வரும் போது விழுந்துவிட்டார். தலையில் நல்ல அடி. சட்டென்று எழுந்த அம்மாவின் குரல் ஒரு கத்தியை போல மண்டைக்குள் நுழைய பதறி எழுந்து அமர்ந்தேன். என்னால் சட்டென்று எழும்ப முடியவில்லை. அப்படியே பாயில் அமர்ந்திருந்தேன். கைகால் முதுகு என்று சகலமும் அதிர்ந்து நடுங்கியது. சட்டென்று உடல் சொடுக்கியதில் மாத சுழற்சி தவறான நாளில் வந்தது.
தாத்தாவின் காரியம் முடியும் வரை மெதுவாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஸ்ரீராம் மாமா “மனசு சமாதானமாகி பாடனுன்னு தோன்றப்ப வா,” என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஒருநாள் காலையில் அப்பா என்னை உறக்கத்திலிருந்து எழுப்பினார்.
“சாதகம் பண்ணலியா தீபூ?”
“இல்லப்பா... பண்ணனுன்னு தோணல”
“அப்படியே விட்றபிடாது... மாடியிலேந்து ரங்ககோபுரத்தை சேவிச்சுட்டு சாதகம் பண்ணு...” என்று முதுகில் தட்டி கையைப் பிடித்துக்கொண்டு போய் குளியலறையில் விட்டார்.
குளித்துவிட்டு மொட்டை மாடியில் நின்றேன். இருள் விலகாத வெளிச்சத்தில் கோபுரங்கள் குன்றுகள் போல அங்கங்கே நின்றன. பக்கத்து வீட்டு மாமி செம்மண் கோலம் வரைந்து கொண்டிருந்தாள். கீழ் வானத்தில் வெளிச்சம் ஆரஞ்சுக் கோடுகளைத் தீற்றிக்கொண்டிருந்தது. காகங்களின் கரகர சிட்டுகளின் கிச் கிச். தொண்டையை செறுமிக்கொண்டு கண்மூடி அமர்ந்தேன். மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு ஸ்வர பயிற்சிக்கு வரும்போது தொண்டையிலிருந்து சத்தம் வரவில்லை. எதுவோ தொண்டையின் அடியில் தத்தி நின்றது. சாதகம் செய்யாததால் அப்படி இருக்கும் என்று நினைத்து மெதுவாக செய்யலாம் என்று முயற்சி செய்து எதிலும் சேராமல் குரல் கிரிக் கிரிக் என்று தயங்கித் தயங்கி நின்று நின்று நகர்ந்தது.
சடாரென்று கீழே இறங்கி சீக்கிரமே கிளம்பி கல்லூரிப் பேருந்து நிற்கும் நிறுத்தத்திற்கு அப்பால் ஐந்தாம் சுற்றுக்குள் உள்ள நாதமுனிகள் சன்னிதியின் பக்கவாட்டு மண்டபத்தில் கண்மூடி அமர்ந்தேன். கணீர் என்ற குரலில் ஒருவர் பாசுரங்களைப் பாடுவதைக் கேட்டநொடி சடசடவென்று எழுந்து வேகமாக நடந்து மூச்சுவாங்க பேருந்து நிறுத்ததில் நின்றேன். கிட்டத்தட்ட ஓடி வந்தேன். எதையாவது பிடித்துக்கொண்டால் தேவலை. பக்கத்தில் ஒன்றுமில்லை. துப்பட்டா நுனியை சுற்றி கைகளுக்குள் வைத்தேன்.
அன்றைக்கு சாயங்காலமாக அப்பா மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் கழுத்துப் பகுதியை பல இடங்களில் தொட்டு வலி இருக்கா என்று கேட்டார். ஒரு எக்ஸ்ரே பின்னர் ஸ்கேன் எடுத்தோம்.
“எப்போ இருந்து இப்டி இருக்கு..”
“காத்தாலேந்துதான் பாட முடியலே,”
“பாடி எவ்வளவு நாளாகறது,”
“ஒரு மாசத்தக்கு மேல இருக்கும் டாக்டர்... தாத்தா இறந்ததுலேந்து பாடல...” என்றேன்.
“பாடறவாளுக்கு இப்படி ஆகறது சகஜம்தானே... சரியாயிடும்,” என்று அப்பாவைப் பார்த்து சொல்லிவிட்டு என்னிடம் பேசத் தொடங்கினார்.
“ஏதாச்சும் பாட முடியுமா?”
“என்னால பாட முடியல டாக்டர்”
“எனக்கு சங்கீதம் தெரியாது... பாட்டு கேக்க மட்டும்தான் புத்தியிருக்கு... பாடுங்க”
அமைதியாக இருந்தேன். அவர் என் தோளில் தட்டினார்.
“பாடறதுக்கு பயம் வரக்கூடாது... நீங்க தனியா இருக்கச்சே மெதுவா பாடனும்”
“இன்னிக்கு நாள் முழுசும் பாட்டுக்குன்னா குரல் எழும்பல”
“இப்போ நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணாம பாடுங்க”
பாசுரங்களை மனம் துளாவியது.
வாரா அருவாய் வரும் என்மாயா... என்று பாடத் தொடங்கினேன். முதல் வரியிலேயே குரல் கம்பி போல தடுக்கியது. மருத்துவர் நிறுத்த வேண்டாம் என்று சைகை காட்டினார். உடைந்து உடைந்து வந்தது பாசுரம்.
கடைசி வரி குரலாக வராமல் காற்றாய் மாறி தொண்டைக்குள் புதைந்தது. இதமான வெந்நீர் தொண்டையில் இறங்கும் போது டாக்டர் சிரித்தபடி, “சினிமா பாட்டெல்லாம் பாட மாட்டீங்களா... சிரமப்படுத்திக்காம மெதுவா பிடிச்ச பாட்டு ஒன்னு பாடுங்க...” என்றார்.
நான்கைந்து வரிகள் பாடி நிறுத்தினேன். மருத்துவர் சில மருந்துகளை எழுதினார். இப்போதைக்கு சாதகம் செய்ய வேண்டாம் என்றார். “தாத்தாவின் மரணம் தந்த அதிர்ச்சியா?” என்று அப்பா கேட்தற்கு “அப்டில்லாம் எதுவும் கான்க்ரீட்டா சொல்லிட முடியாது” என்று சொல்லி அனுப்பினார்.
மனதிற்குள் நான் சொல்லிக்கொள்ள மறுத்த விஷயத்தை மருத்துவர் சொல்லிவிட்டார். ஸ்ரீராம் மாமாவின் வீட்டிற்குப் பக்கத்தில் பாட்டு பழக பிள்ளைகள் வருவார்கள். அவர்களுடன் எனக்கு பழக்கமுண்டு. ‘குரல் போயிடுச்சு’ என்று பாட்டுக்காரர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். ஒரு வாரமோ பத்து நாளோ ஒரு மாதமோ கழித்து திரும்பி வருவார்கள். வாய்ப்பாட்டு பழகும் எல்லோருக்கும் அந்த பயம் நினைக்க விரும்பாத தூரத்தில் இருக்கும்.
“எப்போ போகுன்னு தெரியாது... எப்போ வருன்னு தெரியாது” என்று ஒருமுறை மாமியிடம் மாமா யாருக்கோ நடந்ததை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
மருத்துவரிடம் சென்று வந்த அடுத்தநாள் சாயுங்காலம் மாமா வெளியில் அழைத்துச் சென்றார். காவிரிக் கரைப் பக்கம் வந்ததும் அமைதியான இடத்தில் மரம் முழுவதும் இரத்தச் சிவப்புப் பூக்களால் நிறைந்திருந்த இயல்வாகை மரத்தடியில் நின்றார். காய்ந்த பூக்கள் மிதிபடும் மெல்லிய சத்தம். காவிரி மணலில் காலடிகள் பதியும் சத்தம். அப்பால் கரை பக்கத்திலேயே ஒரு சிறு மணல் திட்டில் செங்காகம் கத்திக்கொண்டிருந்தது.
“மருந்து எடுத்துக்கிறியா தீபு?”
“எடுக்கறேன் மாமா”
“சரியா எடுக்கனும்... சாதகம் வேணாம்... சரியா? சும்மா வீட்டுக்கு வாயேன்...” என்று சொல்லிவிட்டு என்னிடமிருந்து பார்வையைத் திருப்பி ஆற்றைப் பார்த்தார்.
சட்டென்று நான் யோசிக்காமல், “நேத்து காலையில காவிரியில குதிச்சிடலான்னு தோணுச்சு மாமா” என்றேன்.
“ச்சே... ச்சே... வீட்ல இதை சொல்லி வைக்காதே...”
“பாடமுடியலேன்னா அப்புறம் எதுக்கு...”
“அப்டில்லாம் நினைக்கப்பிடாது.. எனக்கும்தான் குரல் போச்சு.. எனக்கும் இருவது வருஷத்துக்கு முன்னுக்க அப்படிதான் தோணினது.. அந்த நினைப்பை மழுங்க அடிச்சுடு”
“திரும்ப வரவே இல்லல்ல மாமா..”
“எனக்கு ஒருத்தனுக்கு வரலேன்னா என்ன? எத்தனையோ பேருக்கு திரும்ப வந்திருக்கே...”
“உங்களுக்கு வரலல்ல...”
“நீ அதையே மனசுல பிடிச்சுண்டு இருக்கப்படாது... உங்க அப்பாக்கு நல்ல குரல் வளம்... நீ அதை நினைக்கனும்,” என்று காவிரியைப் பார்த்தபடி சொன்னார். நடந்துவிட்டு திரும்பி வரும்போது வலுவாக வீசிய காற்றில் இரத்த சிவப்புப் பூக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.
“காவிரியை பாரு... இப்ப சீரான ஓட்டம்... வெய்ய காலம் வந்தா குட்டையா அங்கங்க தேங்கி நிப்பா... ஆடி வந்தா கூலம் கொப்பு குலையெல்லாம் அடிச்சுட்டு போவா... அப்படித்தான் எல்லாமும்...”
“.......”
“நீ சின்ன பொண்ணு.. உனக்கு இது முதல் அடியாக்கூட இருக்கலாம். பயந்தறக்கூடாது. குரல் போனதால பாட முடியாம ஆனவாளைவிட பயத்தால விட்டவா அதிகம். மெதுவா பாடிண்டே இருக்கலாம்... விட்றக்கூடாது தீபு..”
மௌனம். மரங்கள் அடர்ந்த பாதை இன்று என்னவோ நடக்க நடக்க முடியாமல் நீளமாக இருந்தது.
“நீ மட்டுந்தான் எனக்கு வாரிசு” என்று சொல்லிவிட்டு தோளில் கை போட்டு நடந்தார். நான் நடக்க நடக்க குர்தா பூ பூப்பது போல காற்றில் உப்பிப் பறந்தது.
அடுத்தநாள் சாயுங்காலம் மாமா வீட்டு வாசல்முற்றம் வரை சென்று துளசிச் செடி அருகே நின்றேன். காலெடுத்து வைக்க முடியவில்லை. அங்கே போய் என்ன செய்வது என்ற எண்ணம் உள்ளுக்குள் சுழன்றது. நெற்றியில் கழுத்தில் என்றுமில்லாத வியர்வை. ஒருவித நடுக்கம். அப்படியே திரும்பி விடுவிடுவென்று நடந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். அன்று இரவு அப்பாவை எழுப்பி “அப்பா எங்கேயாவது போகலாம்” என்றேன். முதலில் புரியாமல் விழித்த அப்பா சட்டையைப் போட்டுக்கொண்டு வந்தார். இருவரும் நடந்தோம். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஐந்தாம் மதில்சுற்றில் உள்ள கம்பராமாயண மண்டபம் வந்ததும் கால்கள் களைத்து அமர்ந்து கொண்டோம்.
அன்று கல்லூரிலிருந்து சாயுங்காலம் திரும்பி வந்தபோது ஜன்னல் வழியே அம்மா பேசுவது கேட்டது.
“இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்... அவருக்கே பாட்டு, குழந்தைன்னு எதுவுமே அமையல... அங்க கொண்டு விடாதீங்கோன்னு... கச்சேரி பண்ண காலம் வந்தாச்சு... இப்ப போய் இப்படியாச்சே”
“நமக்குன்னு சிக்கல் வந்ததும் அவன் ராசியில்லாதவனாயிட்டானா... நமக்கு மட்டும் எதுவுமே வராதோ..அவ நமக்கு மட்டுமில்ல அவனுக்கும் பிள்ளை தான்” என்று அப்பா ரௌத்திரமானார்.
இன்றோடு ஒரு மாதமாகிவிட்டது. ஒரு வாரத்திற்கு முன்பே மருந்துகள் முடிந்துவிட்டன. இன்று மாமா வீட்டிற்கு வந்தாலும் வருவார். அலைபேசியை எடுத்து முடுக்கினேன். நன்கு விடிந்திருந்தது. கொட்டில் கன்றுகள் நீர் அருந்திக்கொண்டிருந்தன. கீழிருந்து அம்மா அழைக்கும் குரல்.
சாயுங்காலமாக மாமாவுடன் கோவிலுக்கு சென்றேன். ஆண்டாள் சந்நிதியில் குங்குமப் பிரசாதம் வாங்கிக்கொண்டு மண்டபத்தில் அமர்ந்தோம். மேற்கூறையில் அந்தியின் இருள் தேங்கத் தொடங்கும் நேரம். ஆட்கள் இல்லாததால் பட்டரும் எங்களைப் பார்த்து நின்றார்.
“ஏதானும் பாடு தீபு” என்றார் மாமா. நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.
“மெதுவா பாடு,” என்று என் கண்களைப் பார்த்தார்.
கங்கையிற் புனிதம் ஆய
காவிரி நடுவு பாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும்
எங்கள் மால் இறைவன் ஈசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன்...
என்று பாடிக்கொண்டிருக்க இடையில் குரல் வெட்டி நின்றது.
“போறும்” என்றார் மாமா.
பட்டர் நெற்றியை சுருக்கி பார்த்துவிட்டு, “இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்தியில இந்த சமயத்துக்கு வந்து கோதையை சேவிச்சுட்டு நாலு வரி பாடறியா?” என்று கேட்டார்.
நான் குனிந்து கொண்டேன்.
“ஏன் சொல்றேன்னா...அடுத்த மாசம் ரங்கனுக்கு முன்னால நின்னு நீ பாடற..அவன் கேக்கறதுக்கு முந்தி நாச்சியார் கேட்டு ருசி பாக்கனுமோ இல்லியோ...” என்று சிரித்தார். நான் குனிந்தே அமர்ந்திருந்தேன்.
“சரியான பேச்சு... சூடிக்கொடுத்தவ முதல்ல கேக்கட்டும்..”
“அதுக்குள்ள சரியாகுமா? எப்படி பாடறது,”என்று கேட்டேன்.
“மனுஷாளுக்குதான் கணக்கு. ரங்கனுக்கு அதெல்லாம் ஒன்னுமில்ல... மனசுதான்... அவன் முன்னுக்க உடையாத எதுக்கும் ஒரு அர்த்தமும் இல்லை,” என்றது மாமாவின் குரல்.
என் மனதிற்குள் மீதிப் பாடல் ஓடிக்கொண்டிருக்க விரல்கள் தொடையில் தத்தின. குனிந்தபடியே கண்களைத் திருப்பினேன். மாமாவின் விரல்கள் தரையில் தத்தின... சத்தமில்லாத தாளம். பட்டரின் கால்கள் ஒரே லயத்தில் அசைந்து கொண்டிருக்க, அவர் சுற்று மதிலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வீட்டிற்கு வரும் போது நன்றாக இருட்டி விட்டது. மழை நாட்களின் தண்மை. மாடிக்குச் சென்றேன். வாகனங்களின் மனிதர்களின் சத்தங்கள் குறைந்து கொண்டிருந்தன. கைப்பிடிச் சுவரில் விரல்கள் தத்தின. கன்று கொட்டிலில் மின்விளக்குகளின் வெளிச்சம். நடுவில் எந்த காலத்திலோ ஊன்றி வைத்திருந்த கல் தூணில் நுனியில் அகல் போல குழி செய்த கல் விளக்கு சுடர்ந்தது. அதனடியில் அந்த செப்பு நிறக் கன்று முன்னங்கால்களை மடக்கி தலையை நிமிர்த்தி அமர்ந்திருந்தது. வாய் அசைந்து கொண்டிருந்தது. நான் கீழே இறங்கி வந்து படுத்துக்கொண்டேன்.
மாமாவின் குரலில் நீலாம்பரி மனதிற்குள் காற்றை போல மிதந்தது. அம்மாவின் விரல்களைப் போல வருடியது. கண்களை மூடிக்கொண்டேன். அந்த சிவப்பு மரம் நிறைய பூக்கள். காவிரியின் சலசலப்பு. இலகுவான மூச்சிற்குள் எந்த கனமும் இல்லை. தொண்டைக்குள் ஒரு காவிரி ஓடுவதைப்போல ஒரு தண்மை. கை குரல் வளையை தடவியது. மெல்ல மெல்ல நினைவல்லாது ஒரு தித்திப்பு மட்டுமாக ஒரு உணர்வு. சட்டென்று எழுந்து மாடிக்கு சென்றேன். கல்தூணில் தீபம் அணையாமல் மாமாவின் கண்களைப் போல பாடு என்று சொன்னது. சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடினேன்.
September 13, 2025
பொய்த்தேவு [வாசிப்பனுபவம்]
[ 2020 தில் பதாகை இணைய இதழில் வெளியான வாசிப்பனுபவம்]
என்னதான் வேண்டும்!
நாவல்:பொய்த்தேவு
ஆசிரியர்:க.நா.சுப்ரமணியம்
பணத்தை தேடி சேர்த்தால் வாழ்வில் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்று மிகசிறுவயதில் மனதில் பதிந்து கொள்ளும் ஏழை சிறுவன் சோமுப்பயலின் முழுவாழ்வும் நாவலின் பேசுபொருள்.
கும்பகோணத்தின் அருகில் காவிரிக்கரையின் சாத்தனூர் கிராமத்தின் கதை.ஊரின் மையத்தில் மேட்டுநிலத்தில் சிவன் கோயில்.காவிரியை ஒட்டிய மேட்டுத்தெருவும்,சர்வமாணிய அக்ரஹாரமும் நாவலின் முக்கியமான கதைக்களம்.குறியீடும் கூட என்று எனக்குத்தோன்றுகிறது.மேட்டுத்தெரு× சர்வமாணியஅக்ரஹாரம்.
தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியாக சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.
நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.
பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.
ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட்,இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.
சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.
பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான். அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.
கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமானது.
நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் உள்ளார்ந்த நட்பும் அன்பும் வெளிப்படுகிறது.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.
இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.
சாம்பமூர்த்திராயர் பணத்தை, சுமைகளை உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்று உணர்வதுடன் முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்கும் இடம் இது.
நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில், நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.
வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.
நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.
சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம்.பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.
நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது,பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். அது நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி... நீ அடைய வேண்டிய இடம் அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.
நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.
மனிதர் எதிலும் போய் அமைவதில்லை.அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது.பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு.இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார்.
கமலதேவி's Blog
- கமலதேவி's profile
- 1 follower

